அன்பு நண்பர்களே,
வணக்கமும் வாழ்த்தும்……
வாழ்வைப்பற்றி நிறையப் பேசிய நான் இப்போது அதன் உச்சக்கட்ட அனுபவமான மரணம் பற்றி பேச விரும்புகிறேன்.
மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுப்பது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது. பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித்தான். எதிர்காலத்தில் அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப்போவது மரணம் மட்டுமே. அது மட்டுமல்ல. அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.
என்னடா, ஒரேயடியாக பயமுறுத்துகிறானே என்று நினைக்காதீர்கள். இது பயமுறுத்துவதாக நமக்கு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதனால் பயம் வருகிறது. அது மனம் தூண்டும் பயம். உடலின் பயமல்ல. உடலுக்கும் மரண பயம் உண்டு. அது ஆபத்தான உயரத்தில், ஆபத்தான கடல் கொந்தளிப்பில், இப்படி ஆபத்தான சமயங்களில் எழும் உணர்ச்சி. அதனால் பாதுகாப்பாக நாம் செயல்படுவோமேயன்றி தேவையற்ற பதட்டமும், இறுக்கமும் கவலையும் வேகமும் ஏற்படாது. ஆனால் இப்போது மனிதனுக்கு ஏற்படும் பயம் மனப்பிராந்தி. இதை இழந்துவிடுவோமோ, அதை இழந்து விடுவோமோ, இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ இது கிடைக்காமல் போய்விடுமோ, அது கிடைக்காமல் போய்விடுமோ இதை அனுபவிக்காமல் போய்விடுவேனோ அதை அனுபவிக்காமல் போய்விடுவேனோ என்ற பிடிப்புகள், பேராசைகளால் தூண்டப்படும் பயம். மனதின் பயம் உண்மையில் மரண பயம் அல்ல. அது முன்னறியாத எதற்குமே மனம் ஏற்படுத்தும் பயம். புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை, புது வேலை இப்படி புதிது எதற்குமே பயப்படும் மனதின் பயமே இது.
முதலில் ஒரு குழந்தைக்கு பிடிப்புகளும் ஆசைகளும் ஊட்டப்படுகின்றன. பிறகு அதை இழந்து விடுவோமோ அது கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி அது பயப்பட ஆரம்பித்தவுடன் நமக்கு நம் இஷ்டம் போல ஆட்டுவிக்கக் கூடிய ஒரு அடிமை கிடைத்து விடுகிறான். நாம் அந்த குழந்தைக்கு இவ்வுலக பிடிப்புகளும் ஆசைகளும் வெறும் ஒரு விளையாட்டு. அதை உன்னால் இயன்ற அளவு விளையாடி அனுபவித்து பக்குவப்படு என்று சொல்லித்தருவதில்லை. அதனால் எப்போதும் பயம், ஆதலால் பாதுகாப்பு தேடல், மற்றவர் மேல் சந்தேகம், அப்படி ஆகி விடுமோ என்ற கவலை, நடக்காவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம், இவைகளால் தொற்றிக் கொள்ளும் வேகமும் பரபரப்பும் மட்டுமின்றி வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கும் மூட பழக்கங்கள், பிரச்னையை தீர்த்து விடுவதாகக் கூறும் கொள்கைகள், நான் காப்பாற்றுகிறேன் எனும் தலைவர்கள் இப்படி தாறுமாறாக தவித்துப் போய் கிடக்கிறான் இன்றைய மனிதன்.
ஆகவே முதல் விஷயம் நமது பயம் மரண உணர்ச்சி பயம் அல்ல. மன உளைச்சலின் விளைவு. மரணம் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆதலால் பயப்பட வாய்ப்பே இல்லை. அது உ.டல் சம்பந்தப்பட்டது. உடலுக்கு அந்த அனுபவம் இருக்கிறது. ஆகவேதான் அது அதற்கான ஆபத்தான சூழ்நிலையில் பயத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. தேவையற்ற மரணத்தை தவிர்க்க எழும் ஒரு எச்சரிக்கையுணர்வு. ஆனால் வாழ்ந்து வயதாகி
பக்குவப்படும் உடல் இறக்க தயாராகவே இருக்கிறது. சிறிது சிறிதாக உருவாகும் உடல் சிறிது சிறிதாக இறக்கவும் ஆரம்பிக்கிறது. பிறப்பின் அனுபவம் போல இறப்பின் அனுபவத்தையும் ஏற்கவே செய்கிறது. மேலும் பிறக்கும்போது இருப்பதைவிட இறக்கும்போது நமது உணர்வுக்கூர்மை அதிகரித்திருக்கிறது. ஆகவே நாம் மரணத்தை ஆழ்ந்து அனுபவித்து ஆச்சரியப்படும் வாய்ப்பு உள்ளது.
ஓஷோ மரணத்தை வாழ்வின் உச்சம் என்கிறார். மேலும் மரணம் இருப்பதால்தான், வாழ்வு ஒரு சவாலாக, சுவை கூட்டுவதாக இருப்பதை புரிந்து கொள் என்கிறார். மனதின் பிடியில் சிக்காமல் இயல்பாக இயற்கையாக உள்ளுணர்விலிருந்து வாழும் ஒரு மனிதன் மரணத்தைப் பற்றி பயம் கொள்ள மாட்டான். மாறாக அதை வரவேற்பான்.
இந்த உடல் நுண்ணிய சக்தியை { பிராணா என்று இதை அழைப்பர் } உள்வாங்கி இயங்கும் இயங்குதிறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறது. மின்சாரத்தை உள்வாங்கி இயங்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் இயந்திரம் போல ஒரு கட்டத்தில் சக்தியற்று இயக்கம் நின்றுவிடுகிறது. இதுதான் மரணம். இயங்காத உடலை புதைத்தோ எரித்தோ விடுகிறோம். அப்போது இந்த இயந்திரப் பொருளான உடல் உருக்குலைந்து மீண்டும் அடிப்படைப் பொருள்களாக மாறிவிடுகிறது.
இதில் இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால் அடிப்படைப் பொருள்களிலும் நுண்ணிய சக்தி புதைந்தே இருக்கிறது. நுண்ணிய சக்தி இறுகிய நிலையே பொருள். இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய சக்தியே இப்பிரபஞ்சத்தின் பெரும்பகுதியாக இருக்கிறது. நுண்ணிய சக்தி சில சமயங்களில் இறுகி பொருளாக உருவாகிறது. அதுவும் நுண்ணிய சக்தியால் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. பல அடிப்படைப் பொருள்கள் சேர்ந்து மென்மையான நுண்ணிய சக்தி ஓட்டத்தை உள்வாங்கும் ஒரு மையம் கொண்ட வாழ்வை தொடங்குகின்றன. நகரவும் இனவிருத்தி செய்யவும் கூடிய அதன் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக வருகிறான் மனிதன். இவன் இயங்கிக் கொண்டிருக்கையில் உணர்வை மேன்மேலும் கூர்மை படுத்திக்கொண்டே போய் அந்த நுண்ணிய சக்தியை உணரலாம். அப்படி அந்த நுண் உலகத்திற்குள், உணர்வின் உணர்வாய் நுழைகையில் ஒரு மாபெரும் புதிய அனுபவம் ஏற்படுகிறது. புலன்களால் உணர்ந்த உலகம் உடைந்து போகிறது. அங்கு பெறும் அனுபவத்தை மௌனம் என்றும், குளிர்ந்த ஒளி என்றும், சாட்சி பாவம் என்றும், அசைந்தாடும் சக்தி நடனம் என்றும், சூன்யம் என்றும், தானாயிருத்தலென்றும், உணர்வின் உணர்வென்றும், பரவசம் என்றும், விழிப்புணர்வென்றும், மெய்யுணர்வென்றும், அழகென்றும், சத்தியமென்றும், சாசுவத நிலையென்றும், சிவமென்றும், பரமானந்தமென்றும், என ஒவ்வொருவரும் விதவிதமாய்
வர்ணித்துள்ளனர். இந்த ஞானம் மனிதனுக்கு மட்டுமே எளிதில் சாத்தியம். இதை பெற்றவனது உடலிலிருந்து தற்காப்பு பயம் விலகிவிடுகிறது. வாழ்க்கை விளையாட்டாக மாறிவிடுகிறது.
மற்றொரு விதத்தில் ஞானத்தில் ஒருவன் இறந்துவிடுகிறான். மன இயக்கம் முதலில் இறக்கிறது. இதனால் சொந்த உலகமும், பிறப்புகளும், திட்டங்களும் போய்விடுகிறது. பிறகு உடலாக இயங்கும் இயந்திரத்தனம் தாண்டி நுண் உலகத்தை உணர ஆரம்பிக்கும் போது உடலால், புலன்களால் தோற்றமளிக்கும் இந்த பொருளுலகமும் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. மரணமடையும் உடல் வெறும் விளையாட்டுப் பொருளாகிவிடுகிறது. உடல் கடந்த நுண் உலக அனுபவம் கிடைத்துவிடுவதால் மரணமடைந்து விடுவோம் என்ற எண்ணம் மறைந்துவிடுகிறது. ஆனால் இந்த அனுபவத்தேடலின் ஆரம்பம் கூட மரணம் என்ற மனித வாழ்வின் முற்றுப்புள்ளிதான். இன்றைய மனிதனின் நிலை என்ன? மரணம் மற்றவர்க்கு தான், நமக்கில்லை என்ற மாயையான மனப்போக்கு. மரணமில்லா உடல் இல்லை. இதை மறந்து எண்ணிலடங்கா சொத்து சேர்ப்பதும், அதற்காக எத்தகைய லஞ்சம், ஏமாற்றுதல், பொய், தந்திரம், சூழ்ச்சிசெய்வதும், அதை திறமை என போற்றுவதுமான இழிந்த மனப்போக்கு, மரணத்தை வாழ மறந்துவிட்டதால் அதைப்பற்றிய தவறான பிடிக்குள் மனிதன் சிக்கிவிட்டதால் மனிதன் இழந்துவிட்ட வீரமும், துணிவும் தான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை.
கடைசியாக தியானிக்கும் நமக்கு அடிப்படையாக இரண்டு விஷயங்களைக் குறித்த ஆராய்ச்சியுடன் கூடிய தெளிவு தேவை.
1. மனஇயக்கம் கொண்டுள்ள என்சொந்த உடமைகள், உறவுகள் என்ற உலகம் ஒரு மாயை, பொய் தோற்றம், கற்பனை. இதை விழிப்புணர்வில், உணர்வோடு கூடிய வாழ்வில் ஈடுபடும்போது உணர்ந்து கொள்ளல்.இதன் பொருள், இந்த உலகம் பொய்யல்ல, நமது பிடிப்பு பொய் என்பதே.
2. உடல் மரணமடையும், அதுவே அதன் வரையறை. அதன் புலன்களின் வழியாய் நான் இப்போது காணும் உலகும் மரணத்தோடு மறைந்துவிடும். ஆகவே அதைத் தாண்டி ஏதாவது உள்ளதா என்ற ஆராய்ச்சியே ஆன்மீகம்.
இப்படி ஆராய்ந்து அறிய உதவுவதுதான் தியானயுக்தி. அதில் நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறோம். விடையாய் நாம் தியானத்தில் கரைகிறோம். பின் அதிலிருந்து மீண்டு வந்தவுடன் இந்த உலகம் விளையாட்டு மைதானமாய் இருக்கிறது நமக்கு. ஓஷோவின் ஜோர்புத்தாவாக நாம் வாழ ஆரம்பிக்கிறோம்.
வாருங்கள் இந்த மனிதனுக்கு மட்டுமே உரிய வாழ்வின் பாக்கியத்திற்கு.
உள்ளுணர்வில், நுண்ணுலகில் கரைந்து இயற்கையின் இயல்பாய் தன்னை உணர்வதே தியானம்.
ஆகவே தியானிப்போம், கரைந்து அனுபவிப்போம்.
திரும்ப பிறப்போம், திரும்பவும் அடுத்த கணத்தில் கரைந்து போவோம்.
மறுபடி பிறப்போம் கரைவதற்காக.
இப்படிக் கொண்டாடுவோம் வாழ்வை.
வாழ்க விழிப்புணர்வுடன்
அன்பு
சித்.