ஜோர்பாவெனும் புத்தா

புத்தகங்களாக வெளிவந்துள்ள ஓஷோவின் பேச்சுக்களிலிருந்து

1.     நான் நேசிக்கும் புத்தகங்கள் – அத்தியாயம் – 6 – லிருந்து

ஜோர்பாவெனும் கிரேக்கன் – என்ற புத்தகத்தின் ஆசிரியர் கசன்ய்சாகிஸ். இவர் ஒரு கிரேக்கர். அவரது பெயரை எப்படி உச்சரிப்பது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் ஜோர்பாவெனும் கிரேக்கன் என்ற இந்தப் புத்தகம் மிகச் சிறப்பானது. அதை எழுதியவர் புத்தரோ, மகாவீரரோ அல்ல. ஆனால் எந்த வினாடியும் அவர்களைப்போல் ஞானமடையக் கூடியவர். அவர் கிட்டத்தட்ட தயாராகிவிட்டார், கனிந்துவிட்டார். காலத்திற்காக காத்திருக்கிறார்.

ஜோர்பா எனது பிரியத்துக்குரியவர்களில் ஒருவர். நான் வித்தியாசமான மனிதர்களை விரும்புகிறேன். ஜோர்பா மிக வித்தியாசமான ஒருவர் – அவர் வெறும் ஒரு கதாபாத்திரம்தான், உண்மையல்ல. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட ஒரு உண்மையானவர்தான், ஏனெனில் அவர் எபிகோரஸ், சார்வாகா மற்றும் உலகத்திலுள்ள எல்லா பொருள்முதல்வாதிகளுக்குமான பிரதிநிதியாய் இருக்கிறார். அவர் அவர்களின் வெறும் பிரதிநிதியாய் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த விதத்தில் அவர் அவர்களைப் பிரதிபலிக்கிறார்.

புத்தகத்தின் ஒரு இடத்தில் ஜோர்பா அவருடைய முதலாளியிடம் சொல்கிறார் – முதலாளி, உங்களுக்கு எல்லாம் இருக்கிறது, ஆனாலும் நீங்கள் வாழ்வைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் உங்களிடம் கொஞ்சம்கூட பயித்தியக்காரத்தனம் இல்லை. கொஞ்சம் பயித்தியக்காரத்தனத்தை உங்களால் சமாளிக்க முடிந்தால், அப்போது உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியும்.

என்னால் ஜோர்பாவைப் புரிந்துகொள்ள முடிகிறது, அவரை மட்டுமல்ல, காலங்காலமாக இருந்த ஜோர்பாக்கள் எல்லோரையும், அவர்களின் கொஞ்சமான பயித்தியக்காரத்தனத்தோடு. ஆனால் எதிலுமே கொஞ்சம் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பயித்தியம், முழுமையான பயித்தியம் ஆகு என்பவன் நான். நீ கொஞ்சம் மட்டுமே பயித்தியம் என்றால், அப்போது வாழ்க்கையின் கொஞ்சத்தை மட்டுமே நீ புரிந்துகொள்கிறாய். இது எதுவுமே புரிந்துகொள்ளாமலிருப்பதைவிட மேல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஜோர்பா ஏழை, ஜோர்பா பாமரன், ஜோர்பா தொழிலாளி……… அவன் நிச்சயமாக கட்டுடலோடு, பெரிய தோற்றத்தோடு, சிறிதே பயித்தியக்காரனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவனால் தனது முதலாளிக்கு ஒரு சிறிது பயித்தியமாக இரு என அறிவுரை கூற முடிந்திருக்கிறது. ஒரு சிறிது பயித்தியமாக இருப்பது போதாது என நான் கூறுகிறேன். முழுமையான பயித்தியமாகு. ஆனால் நீ தியானத்தில் மட்டுமே முழுமையான பயித்தியக்காரத்தனத்தை அனுமதிக்க முடியும். இல்லாவிடில் நீ நிலை தவறி விடுவாய். உன்னால் அதை உபயோகிக்க முடியாது, மாறாக அது உன்னை உபயோகித்துக்கொள்ளும். தியானம் என்பது என்னவென்று உனக்குத் தெரியாவிடில் நீ எரிந்து போய் விடுவாய். அதனால்தான் நான் ஜோர்பாவெனும் புத்தா என்ற புது வார்த்தையை கொடுத்திருக்கிறேன்.

ஜோர்பாவெனும் புத்தா நான் கண்டு பிடித்த கலவை. ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கியதற்காக நான் கசன்ட்சாகிஸை நேசிக்கிறேன். ஆனால் அவர் இன்னும் இருளில் இருப்பதால் அவருக்காக மிகவும் பரிதாபப்படுகிறேன். கசன்ட்சாகிஸ்க்கு ஒரு சிறிதளவு தியானம் தேவைப்படுகிறது, இல்லாவிடில் அவருக்கு வாழ்க்கை என்பதே இன்னதென்று தெரியாமல் போய்விடும்.

2.     பிடிப்பிலிருந்து சுதந்திரத்திற்கு – அத்தியாயம் – 13 – லிருந்து

1. ஜோர்பாவெனும் புத்தா இந்த உலகத்திற்கு புதிதான ஒன்று. ஜோர்பாக்கள் இருந்திருக்கின்றனர், புத்தாக்களும் – புத்தா என்றால் ஞானமடைந்தடைந்தவர் – கெளதம புத்தர் அவர்களில் ஒருவர் – புத்தாக்கள் இருந்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் எதிராகவே இருந்திருக்கின்றனர். ஜோர்பா பொருள்முதல்வாதிகளைப் பிரதிபலிக்கிறார், ஜோர்பா மேற்கைச் சேர்ந்தவர். புத்தா ஆன்மீகவாதி, கிழக்கைச் சேர்ந்தவர்.

ரூடுயார்ட் கிளிப்லிங் என்ற ஆங்கிலக்கவி மேற்கு மேற்குதான், கிழக்கு கிழக்குதான், இந்த இரண்டும் ஒரு போதும் சந்திக்காது எனப் பாடினார். நான் கவிதை எழுதுவதில்லை, எனக்கு வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. வார்த்தை விளையாட்டு நான் விளையாடுவதில்லை. நான் இருப்பின் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். ரூடுயார்ட் கிளிப்லிங் க்கு தைரியமிருந்தால் தன்னுடைய கல்லறையிலிருந்து எழுந்துவந்து கிழக்கும் மேற்கும் சந்திப்பதை இங்கே பார்க்கட்டும். ஜோர்பா புத்தாவிலிருந்து தனியானவர் அல்ல. மேற்கு கிழக்கிலிருந்து வேறுபட்டதல்ல. ஆன்மீகத்திற்கு மதிப்பளிக்காத பொருள்முதல்வாதம் எல்லாமும் உள்ளீடற்றதாக, வீணானதாக, அசிங்கமானதாக போய்விடும். ஆகாயத்தில் பறந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்ல சிறகுகள் இருக்காது. மலர்ந்து மணம் பரப்பாது. வெறும் ஒரு பாறைபோல இருக்கும். பொருளற்ற ஆன்மீகத்திற்கு அழகான உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும். அடித்தளமிருக்காது. நட்சத்திரத்தைச் சென்றடையக்கூடிய அளவு மிகப்பெரிய மாட மாளிகைகளை அது எழுப்பும். ஆனால் அஸ்திவாரம் இல்லாத அவை மாயைகளே. உண்மையல்ல. உண்மையாக இருக்க முடியாது.

2. ஜோர்பா அடித்தளமாக இருப்பார், புத்தர் கோவிலாக இருப்பார். ஒருவர் இல்லாவிடில் மற்றவர் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒருவர் இல்லாமல் மற்றொருவரைக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. அதன் பலன்தான் நீ பார்க்கும் இந்த நிலைதடுமாறும் மனிதகுலம்.

3. ஜோர்பா புத்தாவை தாங்கிப் பிடிக்கும் அடித்தளமாகத்தான் இருக்க வேண்டும் – புத்தா நிலைதான் இருப்பின் இலக்கு.

4. ஜோர்பாவெனும் புத்தா என்பது ஒரு ஒருவழிப்பாதை அல்ல. ஏனெனில் மலர்கள் வேருக்கு சூரிய ஒளியையும் காற்றையும் பெற்றுத்தருகின்றன. அவைகள் ஒன்றாக இணைந்தவை, உண்மையில் அங்கு பிரிவென்பதே இல்லை. அவை ஒரே விஷயம்தான். வேரிலிருந்து மலருக்கு, மேற்கிலிருந்து கிழக்கிற்கு, ஜோர்பாவிலிருந்து புத்தாவிற்கு என அவை ஒன்றாய் இணைந்தவையே. அனைத்து மதங்களும் இதை மறுக்கின்றன. அதனால்தான் அனைத்து மதங்களும் மனித குலத்திற்கு எதிராக உள்ளன.

5. ஜோர்பா ஆடுவார், பாடுவார், குடிப்பார், காதலிப்பார், உணவை ரசித்து சாப்பிடுவார். அவர் வாழ்க்கையை வாழ்கிறார், ஆனால் அவருக்கு அவர் யாரெனத் தெரியாது, இருப்பின் அர்த்தம் தெரியாது. அவரது இருப்பின் அழிவற்ற தன்மையைப்பற்றித் தெரியாது, வாழ்வின் இறப்பற்றதன்மை அனுபவத்தை அவர் அறியமாட்டார். அவர் எப்போதும் இங்கே இருந்துகொண்டே இருப்பார், இருந்துகொண்டே இருந்தார், வடிவங்கள் மட்டுமே மாறும் என்பது அவருக்குத் தெரியாது. அவர் அவருடைய சொந்த மையத்தில் நுழையவே இல்லை. அவர் வெளிவட்டத்திலேயே, அவரைத்தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவராக, புயலில் பங்கெடுப்பவராகவே இருக்கிறார்.

புயலின் மையம் மனித தன்ணுணர்வின் உச்சகட்ட அனுபவம். அது மிகவும் ஆனந்தமான அனுபவம். அதைத்தாண்டியது வேறு ஒன்றும் இல்லை. நீ வீட்டை வந்தடைந்துவிட்டாய். மேலும் அதனால் பிரச்சனைகளோ, முரண்பாடுகளோ வந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. நீ வீடு வந்து சேர்ந்துவிட்டாய், நீ உன் மையத்தில் இருக்கிறாய் – நீ சிரிப்பதை எது தடுக்கிறது, உண்மையில் நீ ஒருவன் மட்டுமே சிரிக்க முடியும், சிரிப்பாகவே மாற முடியும். உன்னால் அன்பு செலுத்த முடியும் என்பதோடு அன்பாகவே மாற முடியும் – அங்கு நேசிப்பவர் மறைந்து நேசம் மட்டுமே இருக்கும். நடனமாடுபவர் மறைந்து அங்கு நடனம் மட்டுமே இருக்கும் – அந்த அளவு நடனமாடுபவனாய் நீ இருப்பாய்.

ஜோர்பாவெனும் புத்தாவை இவ்வுலகிற்கு கொண்டு வருவதே என் முயற்சி.

6. ஜோர்பாவெனும் புத்தா மனிதனுள் உள்ள பிளவை மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள பிளவையும் அழித்துவிடும்.

3.     எழுச்சியாளன் – அத்தியாயம் – 8 – லிருந்து

1. மேற்கு தனது ஆன்மாவை, அகத்தை இழந்துவிட்டது. வேதனையோடு, சலிப்போடு, அர்த்தமற்ற விஷயங்களால் சூழப்பட்டுள்ளது. அது தன்னை கண்டுணரவில்லை. விஞ்ஞானத்தின் வெற்றி பயனற்றதாகிவிட்டது, ஏனெனில் வீடு முழுவதும் பொருட்கள் நிறைந்துள்ளது, ஆனால் வீட்டின் சொந்தக்காரரைத்தான் காணவில்லை.

இங்கே கிழக்கில் வீட்டின் சொந்தக்காரர் இருக்கிறார், ஆனால் வீடு காலியாக உள்ளது. பசியோடு, பிணியோடு, இறப்பு உன்னை சூழ்ந்திருக்கும்போது கொண்டாடுவது கடினம். தியானம் செய்வது சாத்தியமற்றது. அதனால் தேவையின்றி நாம் இழப்பவர்கள் ஆகிறோம்.

அனைத்து சந்நியாசிகள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள், மேலும் பொருள்முதல்வாதிகள் எனப்படும் அனைவரும்தான் மனிதனுக்கு எதிரான இந்த மிகப்பெரிய கொடுமைக்கு பொறுப்பு.

ஜோர்பாவெனும் புத்தா தான் இதற்கு தீர்வு. அது ஆன்மா, பொருள் இரண்டின் ஒருங்கிணைப்பு. பொருள் மற்றும் தன்ணுணர்வுக்கிடையே எந்தச் சச்சரவும் கிடையாது என்பது உறுதி. ஆகவே நாம் இரு முனைகளிலும் வளமாகலாம். இந்த உலகத்திலிருந்து பெற முடியக்கூடிய, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தரக்கூடிய எல்லாவற்றையும் புறவுலகில் பெறுவதோடு, அகவுலகிலும் கௌதம புத்தர், கபீர், நானக் போன்று நமது உள் இருப்பை – சந்தோஷ மலர்களை, இறை மணத்தை, சுதந்திர சிறகைப் பெறுவோம்.

ஜோர்பாவெனும் புத்தா தான் புதிய மனிதன், என் எழுச்சியாளன்.

2. ஜோர்பாவெனும் புத்தா தான் மிகச்சிறந்த சாத்தியம். அவன் தனது இயல்பில் முழுமையாக ஒன்றி வாழ்க்கையை வாழ்வதோடு, இந்த பூமியின் பாடலையும் பாடுவான். அவன் பூமிக்கோ, வானுக்கோ துரோகம் செய்ய மாட்டான். அவன் மலர்களோடு, சந்தோஷங்களோடு கூடிய இந்த பூமியையும், நட்சத்திரங்களோடு கூடிய ஆகாயத்தையும் சொந்தம் கொண்டாடுவான். அவன் இந்த முழு பிரபஞ்சத்தையும் தனது வீடென்பான். கடந்த கால மனிதன் ஏழை, ஏனெனில் அவன் இருப்பை பிளவு படுத்திவிட்டான். புது மனிதன், எனது எழுச்சியாளன், ஜோர்பாவெனும் புத்தா, இந்த உலகம் முழுவதையும் தனதென்பான். இந்த உலகம் கொண்டுள்ள அனைத்தும் நமக்காகவே, நமதே. அதை நாம் எந்த குற்றவுணர்வும் இன்றி, தவிர்த்தல் இன்றி, பிளவு படுதல் இல்லாமல் இயன்ற அனைத்து வழிகளிலும் நாம் உபயோகிக்கலாம். தேர்ந்தெடுக்காமல், முடிந்ததையெல்லாம் இவ்வுலகில் அனுபவி, தன்ணுணர்வினால் முடிந்ததையெல்லாம் அங்கும் அனுபவி, உனது அனுபவித்தல் முழுமையானதாக இருக்கட்டும்.

ஜோர்பாவாக இரு, ஆனால் அங்கேயே நின்றுவிடாதே. ஒரு புத்தாவாக இருப்பதை நோக்கி முன்னேறு.

3. ஜோர்பாவெனும் புத்தா என்பது புது மனிதனின் ஒரு புதுப்பெயர், புது வருங்காலத்திற்கு ஒரு புதுப்பெயர், புது ஆரம்பத்திற்கு ஒரு புதுப்பெயர்.

4. நான் புத்தாவிற்கு நடனமாட சொல்லிக் கொடுக்கிறேன், வானத்தையும் கடந்த பிரபஞ்ச இருப்பின் லீலைகளைப் பார்க்க ஜோர்பாவுக்கு கண்களைக் கொடுக்கிறேன். என்னுடைய எழுச்சியாளன் ஜோர்பாவெனும் புத்தாவைத் தவிர வேறுயாருமல்ல.