அன்பு நண்பர்களே!

ஓஷோவைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், அதனால் பாதிக்கப் படுபவர்கள், அவர் கூறும் உண்மையின் தாக்கத்தில் அதைப் பின்பற்ற முயல்பவர்கள், அதை உடனே பின்பற்ற ஆரம்பிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் சொல்ல விரும்பும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அதற்கு முன் சில விஷயங்கள்……… ஓஷோவால் ஈர்க்கப்பட்ட அவரின் புது சந்நியாசியாக 1980  – 90 ல் மாறிய பல என் அருமை நண்பர்களின் நடைமுறை வாழ்க்கை இன்று சிதைந்து கிடக்கிறது. அவர்களின் அன்புக்கும், நேர்மைக்கும், துணிவுக்கும் உகந்ததாக ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்காமல், பலரின் வாழ்க்கையிலும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் தோல்வி, மனக்கசப்பு, பிரச்னை.

அவர்களின் சமூக வாழ்க்கையிலும் அதற்கு தேவையான போட்டியும், பொறாமையும், வெறியும், பேராசையும், ஆணவமும் அவர்களிடம் இல்லாமல் போனதால் அல்லது மிகவும் குறைந்து போனதால் அவர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இந்த சமுதாயத்தில் ஒன்று உன்னால் ஏமாற்ற முடிய வேண்டும் அது அவர்களால் முடியாது அல்லது ஏதாவது ஒரு துறையில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் சக்தியை உள்நோக்கி திருப்பிக் கொண்டவர்கள். இரண்டும் இல்லாவிட்டால் அடிமைத் தொழிலில் அடிவருடியாய் நடித்து காரியம் சாதிக்க தெரிய வேண்டும். அதுவும் சாத்தியமில்லை. அவர்கள் எளிமையான, நேர்மையான, சுதந்திரமான, அதே சமயம் மிகவும் பொறுப்போடும், நேர்த்தியோடும் செயல்புரியும் தன்மைகொண்ட வேலைகளுக்குதான் உகந்தவர்கள். ஆனால் அப்படிப் பிழைக்க நம் சமூகத்தில் வாய்ப்பு ஏதும் இல்லாமல் அல்லவா இருக்கிறது.

அப்படி இருக்கும் ஒரு சில வாய்ப்புக்களுக்கும் போட்டி மிக அதிகம். ஆகவே சிரமப் படுகின்றனர்.

இப்படி குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் பிரச்னைகளை சந்திக்கும் ஓஷோ சந்நியாசிகள் பலர் என்னைச் சுற்றி தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதும் உள்ளனர். பெண்கள் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இது மேலும் தொடர்கிறது. புதிதாக வரும் இளைஞர்களும், பெண்களுக்கும் எப்படி வாழ்வைச் சந்திப்பது என்பதில் தடுமாற்றம் ஏற்படுவதை நான் பார்க்கிறேன். ஓஷோ கூறும் உண்மை புரிந்ததால் வாழ்வை உண்மையாக வாழ முயற்சிக்க விரும்புகின்றனர். ஆனால் அதனால் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன.

இதையெல்லாம் பார்த்ததின் விளைவுதான் இப்போது நான் சொல்லவிரும்பும் விஷயம்.

அன்பர்களே

முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஓஷோ தனிமனிதர்களுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை.

அரசியல்வாதிகள், மதவாதிகள், சாமியார்கள், பூசாரிகள் என்று ஓஷோ கண்டிக்கும்போது, தோலுரித்துக் காட்டும்போது அவர் இப்போது அந்த பொறுப்பில் உள்ளவர்களை வெறுக்கிறார், பகைவனாகக் கருதுகிறார் என்று அர்த்தமல்ல.

போப்பாண்டவரை ஓஷோ கிண்டல் செய்யும்போது கிறிஸ்துவையோ, கிருஷ்ணரையோ கிண்டல் செய்யும்போது அவர்களுக்கு அவர் எதிரானவர் என்று அர்த்தமல்ல.

குடும்பத்தையும், கல்விமுறையையும், அரசியலமைப்பையும், உறவுகளையும், சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆண்களையும், ஓஷோ கண்டிக்கும்போது, அதன் இறந்துபோன நிலையை, பழமைத்தனத்தை, உதவாத்தனத்தை எடுத்துரைக்கும்போது அவர் ஆண்களுக்கோ, குடும்பத்தில் வாழ்பவர்களுக்கோ, கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கோ, சடங்கைக் கடைபிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் பகைவனோ, விரோதியோ அல்ல. அவர்கள் மோசமானவர்கள், இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமுமல்ல.

ஓஷோ கண்டிப்பது அமைப்பு இயந்திரத்தைத்தான். வீணாக போய்விட்ட, காலங்கடந்த, சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே இப்போது உதவி செய்யும் அமைப்புக்களைத்தான். இந்த சமூகம், அதன் நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள், மதிப்பீடுகள், தர்க்க நியாயங்கள், உறவின் அடிப்படைகள் ஆகிய எல்லாம் நம்மால் நமது நன்மைக்காக, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உதவும் பொருட்டு உருவாக்கப்பட்டவைதான். நமது நாடு, மொழி, இனம், மதம், கலாசாரம், பண்பாடு, சாதி ஆகிய அனைத்தும் தனிமனித வளர்ச்சியின் பொருட்டு ஏற்படுத்தப் பட்டவைதான்.

அப்படி இல்லாவிட்டால் அவை ஆரம்பிக்கப் பட்ட காலத்திலேயே நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் அவை இன்று நமக்கு இறந்து போன பிணம்போல சுமையாக இருக்கின்றன. காலத்திற்கு தகுந்தாற் போல மனித வளர்ச்சிக்கு தகுந்தாற் போல உலகின் இன்றைய சூழலுக்கு ஏற்றாற் போல இவையெல்லாம் புதிதாய் உண்டாக்கப் பட வேண்டும்.

நமது தன்னுணர்வோடு நாம் வாழும் வாழ்க்கையை ஆழ்ந்துணர்ந்து நாம் புதிய மனிதனுக்குத் தகுந்த புதிய வாழ்வியலை வகுக்க வேண்டும். அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மனிதனுக்காகத் தான் நாடு, மொழி, இனம், சமூகம், மற்றும் அதன் சிந்தனைகளேயன்றி அவைகளுக்காக மனிதர்கள் மடிவது மடத்தனம்.

இதுவே ஓஷோவின் பார்வை.

ஆனால் ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அவனுக்குக் கிடைத்த வாழும் வாய்ப்பை புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல், தான் தன்வழியே பழமைச் சமூகத்திலிருந்து எவ்வளவு விலகி புது மனிதனாக வாழ முடியுமோ அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல், அமைப்பை எதிர்ப்பது துன்பத்தையே கொண்டுவரும்.

மேலும் அமைப்பில் உள்ளவர்களும், அவர்களின் அறியாமையால், உண்மையை உணரும் சக்தியும், தெளிவும், பார்வையும் இல்லாமல் அமைப்பினால் உறிஞ்சப்பட்டு உழல்பவர்களேயாவர். அமைப்பை விட்டு வெளியே சிந்திக்க முடியாத நிர்ப்பந்தமும், பயமும், நெருக்கடியும் ஆன சூழலில் வாழ்பவர்களேயாவர்.

ஆகவே அவர்கள் செய்யும் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பாளியல்லர். சாதாரண திருடன் முதல் ஹிட்லர் வரை உருவாவதற்குக் காரணம் நமது சமூக அமைப்பு. ஆகவே ஹிட்லரை குறை கூறியோ, எந்த ஒரு தனிமனிதனை குறை கூறியோ, குற்றம் சாட்டியோ பேசுவது சரியல்ல. தனிமனிதர்களிடம் அன்பாக இருப்பதே தியானிப்பவனின் இயல்பாக இருக்க வேண்டும்.

தன்னுணர்வு பெறப்பெற அமைப்புகளை விட்டு விலகி செல்வதே சரி. அப்படி விலகி வந்த நாம் ஒரு புதிய கம்யூனை உருவாக்கி வாழ்வதே சரி.

தனிப்பட்ட யாரையும் எதற்கும் பொறுப்பாக சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுமளவு சுதந்திரமாகவும், தன்னுணர்வோடும், தெளிவோடும் யாரும் அமைப்பிற்குள் இல்லை.

மேலும் ஓஷோ ஓரிடத்தில் கூறும்போது, இந்த சமூகம், இந்த உலகம், இந்த அமைப்புகள், இங்கு எனக்குமுன் வாழ்ந்த ஞானிகள், கயவர்கள், இதற்குப் பின் பிறக்கப் போகும் புதிய மனிதன் ஆகிய எல்லாமே எனது பாகம்தான் அல்லது என்னைச் சேர்ந்ததுதான். ஆகவேதான் உரிமையோடு எல்லாவற்றையும் மிக மோசமாகவும் மிக உயர்வாகவும் என்னால் விமர்சிக்க முடிகிறது. நான் விலகி நின்று யாரையும், எதையும் விமர்சிப்பதில்லை. ஒருவகையில் திட்டினாலும், புகழ்ந்தாலும் அது என்னை நானே செய்து கொள்வதே. ஏனெனில் நான் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்தவனல்ல, என்கிறார்.

ஏன் நம்மையே எடுத்துக் கொண்டால் ஓஷோவிடம் வந்தபின் சமூகத்தின் பல போலித்தனங்களை நம்மால் உணர முடிந்தாலும், அதற்கு முன் நாமும் இந்த கட்டமைப்புக்கு அடிமையாகத்தானே இருந்தோம்.

எனவே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஓஷோ அன்பர்கள் தங்கள் சக்தியை, தங்கள் புரிதலை, தங்கள் தியான அனுபவத்தை, தன்னுணர்வுச் சுவையை தங்களது வாழ்வின் உரமாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய, அவசரப் பட்டு அள்ளி வீசக் கூடாது.

மேலும் மேலும் அமைதியும், மெளனமும், அன்பும் தழைக்கும் உரமாகத்தான் உங்கள் புதிய உணர்வுகள், தியான அனுபவங்கள், அன்பின் ஆழங்கள் இருக்க வேண்டும்.

அவசரப் பட்டு வெளிக் காட்டவோ, வெளி வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவோ, அடுத்தவருக்கு, குடும்பத்தாருக்கு, மனைவி அல்லது கணவனுக்கு புரிய வைக்கவோ முயற்சிக்காதீர்கள்.

உங்கள் புரிதலில் நீங்கள் வேர்விட்டு வளருங்கள். வளர்ந்து மலருங்கள். மணம் பரப்புங்கள். அந்த மலரும், மணமும், ஒரு புதிய உலகை, புதிய சூழலை, புதிய புரிதலை, புதிய உணர்வை உங்களைச் சுற்றிலும் கொண்டுவரும். அப்போது அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

அதற்குமுன் அவசரப் பட்டு அமைப்பின் எதிரியாக, உறவுகளின் எதிரியாக, ஜாதி,  மதம், சமூகம் ஆகியவற்றின் விரோதியாக மாறி கஷ்டத்திற்கு உள்ளாகாதீர்கள்.

நீங்கள் வளர்ந்து வலிமை பெற்றபின், மலர்ந்து மணம் பரப்பும்போது, உங்களைச் சுற்றிலும் எல்லோரையும் எல்லாவற்றையும் பாதிப்பீர்கள், மாற்றுவீர்கள். ஆனால் அது வேறு.

ஆகவே அதுவரை பொறுமையுடன் இருங்கள். மிகக் கவனமாக உங்கள் வளர்ச்சி எதனாலும் பாதிக்கப்படாதவாறு செயல்படுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

 

அன்பு,

சித்.