அன்பர்களுக்கு வணக்கம். 

இருபுறமும் தீபம் ஏற்றப்பட்ட தன்னுணர்வோடு நீ ஒளிர வேண்டும். இதுதான் ஓஷோவின் புதிய பரிமாணம், புதிய மனிதன், ஜோர்புத்தா, ஓஷோவின் மனித குலத்திற்கான பங்களிப்பு. 

இதன் பாதிப்பு ஓஷோவிற்குப் பின் வந்த அனைத்து குருமார்கள், போலிகள், உண்மைகள், அரைகுறைகள் என எப்படிப்பட்டவர்களாயினும் அவர்கள் கூட ஓஷோவின் இந்த செய்தியை கடைபிடிக்கின்றனர், மக்களிடம் பேசுகின்றனர். வறட்டு வேதாந்தமே ஆன்மீகம் என்பதை ஓஷோ உடைத்துப் போட்டு விட்டார். இனி அது மக்களிடம் செல்லுபடி ஆகாது. பிச்சை எடுப்பதும், பிரம்மச்சரியம் மேற்கொள்வதுமே ஆன்மீகம் என்ற நிலையை ஏற்கனவே ஓஷோ உடைத்துவிட்டார்.

இப்போதுள்ள எல்லா சாமியார்களும் இதைப் பின்பற்றி வாழ்வோடு இயைந்த ஆன்மீகம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதன் பாதிப்பாகத்தான் பழமை சாமியார்களான சங்கராச்சாரியார் போன்றவர்களின் மதிப்பு குறைந்து புதுச்சாமியார்கள் வியாபாரம் வெற்றிநடை போடுகிறது.

ஆனால் ஓஷோவின் பங்களிப்பை சரியாகப் புரிந்து நம் வாழ்வை அப்படி வாழ ஓஷோவின் அன்பர்கள் இதயபூர்வமாக ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ஜோர்புத்தா எனும் புதிய மனிதனும், தன்னுணர்வின் வெளிச்சத்தில் செயல்படும் ஒரு புதிய கூட்டமைப்பும், அதனால் சொர்க்கமாக மாறும் ஒரு புதிய உலகமும் சாத்தியமாகும்.

இந்த உடலே புத்தர், இந்த புமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. ஆம், அப்படி வாழ்வும், பூமியும் மலர முடியும்.

அதற்கு செய்ய வேண்டியது என்ன, ஆன்மீக நாட்டம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் தன்னுணர்வை வளர்க்க தியானமுயற்சி கடுமையாகச் செய்கின்றனர். ஆனால் அதே தன்னுணர்வோடு தங்கள் உடலில் வாழ்வதில்லை. புலன்களையும், மூளையும் தன்னுணர்வின் வெளிச்சத்தில் முழு வீச்சோடு செயல்படுத்துவதில்லை. வெளி உலகின் நிகழ்வுகளை தன்னுணர்வு வெளிச்சத்தில் பார்த்து ஈடுபாட்டோடு பங்கேற்பதில்லை. உதாரணமாக ஒரு தொழில் செய்வது, ஒரு படைப்பில் ஈடுபடுவது, ஒரு அழகுணர்ச்சியோடு செயலாற்றுவது என்பதில் எல்லாம் தன்னுணர்வு வளர முடியும், அதோடு கூட பழமை மனதின் கட்டுதிட்டங்களை உடைத்து எறிந்து தன்னுணர்வின் வெளிச்சத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சேவகம் செய்வதாக அந்த மனம் மாற வேண்டுமென்றால் வெளிஉலகில் தன்னுணர்வோடும், விழிப்புணர்வின் கூர்மையோடும் வாழ வேண்டியது அவசியம். இப்படி வாழும்போது வெளி உலகும் சொர்க்கமாகிறது, மனமும் சேவகனாகிறது. தன்னுணர்வும் வளர்கிறது.

இந்த உடலும், உலகமுமே தன்னுணர்வை வளர்த்திக் கொள்ளும் வாய்ப்பு என்பதை தியானிப்பவன் மறந்துவிடக் கூடாது.  

இதேபோல தொழிலில் வெற்றிக்கொடி நாட்டும் பலருக்கு வெளி விஷயங்களில் விழிப்புணர்வு கூர்மையாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திசைதெரியாமல் ஓடிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர். முதலிடத்தை நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியே வாழ்க்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கடைசியில் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. பயித்தியக்காரத்தனமான ஈகோவின் பிடியில் சிக்கி பாழ்பட்டதாக வருத்தப்படுகின்றனர்.

ஆனால் அது அப்படியல்ல. தங்களது விழிப்புணர்வுக் கூர்மையோடு தியானத்தில் அவர்கள் ஈடுபட்டால் உள்ளொளியை அவர்கள் பெற முடியும். தன்னுணர்வின் அமைதியையும் ஓய்வையும், சாந்தத்தையும் அனுபவிக்க முடியும்.

 தன்னுணர்வு வெளியே சிதறியே போகும், இறப்பே மிஞ்சும். அதையே உள்ளே திருப்பினால் அது வைரமாகும், ஸ்படிக கல்லாக ஒளிவீசும்.

அப்போது உலகம் அழகான மனிதர்களால் நிறையும். இப்படி விழிப்புணர்வை தீயை இருபுறமும் பற்ற வைத்துக்கொண்டு வாழ்வின் சக்தியை எல்லாப் பரிமாணங்களிலும் வெளிப்படுத்தி வாழும் மனிதனே ஓஷோவின் கனவு. இது அவரது கடைசி வாக்கியம், “நான் எனது கனவை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

அவரது கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு நெஞ்சினிலே உறுதி வேண்டும், நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், இயற்கையோடு இணைப்புணர்வு வேண்டும், தியானம் வேண்டும், திறந்த இதயம் வேண்டும், அவ்வளவுதான்.

வாழ்வோம். விழிப்புணர்வோடு வாழ்வோம்.

உள்ளும் புறமும் விழிப்புணர்வோடு வாழ்ந்தால் அந்தப் பிரிவினை மறைந்துபோகும்.

உள்ளே, வெளியே, அகம், புறம் என்ற பிரிவினையே மனித மனத்தின் மாயைதான். அப்படியொரு பிரிவினையே கிடையாது. இப்படி மனிதன் பிளவுபட்டதே இன்றைய உலகத்தின் வீழ்ச்சிக்கு, மனிதனின் சிதைந்த நிலைக்குக் காரணம். இதை உணர்ந்துதான் ஓஷோ இதை இணைக்கும் ஒரு புதிய மனிதனை, இந்த பிளவே இல்லாத ஒரு புதிய மனிதனை, ஒரு புதிய வாழ்க்கை முறையை, ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதில் தன் சக்தியைக்
கொடுக்கிறார்.

விழிப்புணர்வை உள்ளும் வெளியும் இதயத்திலும், செயலிலும், ஒரு சேரப் பற்றவைத்து வாழும்போது வெகு சீக்கிரமே இந்தப் பிரிவினை உடைந்து வெறும்
விழிப்புணர்வாய், தன்னுணர்வாய், சக்தியாய், அன்பாய், அழகாய், ஒளி வெள்ளமாய் வாழும் வாழ்வின் சுவை நமக்குக் கிடைக்கும். அப்படி வாழும் வாழ்க்கைக்கு உடலும், மனமும், தொழிலும், படைப்பும், கலையும், தியானமும்  சேவகம் செய்து உயர்த்திப் பிடிக்கும்.

மனம் தாமரையாய், தன்னுணர்வு அதின் நடுவில் ஒளிவீசும் வைரக்கல்லாய்………

ஓம் மணி பத்மீ ஹம் 

அன்பு

சித்.