அன்பு நண்பர்களே, வணக்கமும் வாழ்த்தும்.

ஞானம் எப்படி அடைவது?

தியானமில்லா ஞானம் ஏன் பெறக் கூடாது?

இவ்வுலகமே வெறுத்துவிட்டது, எனக்கு ஞானம் மட்டுமே வேண்டும்.!

தியான யுக்திகளைச் செய்வதே முழு நேர வேலையாக முயற்சிக்க விரும்புகிறேன்.!

ஞானம் அடைந்தால் அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? ஞானமடைந்தவரைப் பார்க்க வேண்டும்.!

இப்படி பலர் வருகிறார்கள்.

இவர்களின் பிரச்னைதான் என்ன? ஏன் இவர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

இருக்கும் வாழ்வை, இக்கணத்தை, கிடைத்த வாழ்வை, அனுபவிக்க முடியாமல் சிறுமைப்பட்டு கிடப்பதே காரணம். தன்னை உயர்த்திக் கொள்ள வழி தேடும் இவர்களுக்கு இந்த ஞானப்பிரச்னைக்குள் நுழைந்து கொள்வது சாதகமாகவும், பாதுகாப்பாகவும் மதிப்பாகவும் போய்விடுகிறது.

ஞானம் யாருக்கு வேண்டும், மக்களை ஒவ்வொருவராக உண்மையைச் சொல்லச் சொல்லிக் கேளுங்கள். துன்பமும் பயமும் வரும்போது தப்பிக்கவே ஞானம்
தேவைப்படுகிறது. நிராதரவான நிலையிலேயே ஆறுதலாக ஞானத்தை தேடுகின்றனர். பிறகு அதுவே ஒரு சமூக அந்தஸ்து கொடுப்பதைப் பிடித்துக்
கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர்களே பலர். வேறு நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்துவிட்டால் ஞானம் மறந்து போகும், மறைந்து போகும். வேலையிருக்கிறது அப்புறம் பார்க்கலாம் என்று ஆகி விடும்.

இல்லாவிட்டால் ஞானத்தைத் தேடுபவதாக பேர் பண்ணிக் கொண்டு ஒரு பாதுகாப்பான பஜனைக் கூட்டத்தில் ஐக்கியமாவதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது.

இல்லையென்றால் டென்ஷனும், உடல் உபாதையும் தலைவலியும் துரத்தும்போது தப்பித்துக் கொள்ள பக்கவிளைவு இல்லாத உடனடி நிவாரணத்துக்காக ஞான கூடாரம் பக்கம் போக விரும்புகின்றனர்.

இது சரிதான் என்றே நான் சொல்கிறேன். ஏனெனில் முதலில் ஞானம் என்றால் என்ன என்று தெரியாதபோது அதை எதற்கு தேடி அலைவதாக பாவ்லா பண்ண வேண்டும். ஏனெனில் பாவ்லா மட்டும்தான் நம்மால் பண்ணமுடியும். தெரியாததை எப்படி உண்மையாகத் தேட முடியும்?

அப்படியானால் நாம் ஏன் நேர்மையாய் இருக்கக் கூடாது ? நேர்மையாய் நம்முடைய பிரச்னைகளை சிந்திக்கவும், சந்திக்கவும் கூடாது ? ஏன் ஞானத்தை, ஆன்மீகம் என்ற கற்பனைக் குப்பையை உள்ளே இறக்க வேண்டும் ?

ஓஷோவின் வழி ஞானத்தை அளிக்கிறேன் என்பதல்ல.

நம்மை உண்மையாக நாமே பார்ப்பது, அலசுவது, ஆராய்வது, தெளிவு பெறுவது, அதற்கு விஞ்ஞான பூர்வமான உடல், மன இயல்களைப் பயன்படுத்தி செயல்திட்டம் வகுப்பது.

நம்முடைய பிரச்னை, வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. மகிழ்ச்சியாக செயல்பட முடியவில்லை, வாழ முடியவில்லை, அமைதி இல்லை, விளையாட்டுத்தன்மை இல்லை. பிறக்கும்போது இருந்த குழந்தைத் தனமும், கொஞ்சு முகமும், குதூகலமும் மறைந்து விட்டது. சாவுக்கு பயம், புதுமைக்கு பயம், மாறுதலுக்கு பயம், சோம்பேறித் தனமும், தூக்கமும், கனவுமே சுகமாகத் தோன்றுவதால் வாழ்க்கையை சந்திக்க சிரமமாய் இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இதில் ஞானமில்லையே என்பது எங்கு இருக்கிறது.? செல்வமில்லையே என்பதே மனிதன் பிரச்னையாக இருக்கிறது. செல்வமிருப்பவனுக்கு அதனால் கிடைக்கும் சுகங்கள் போதை போலவே இருக்கின்றன. சிறிது நேரத்தில் இறங்கி விடுகின்றன என்ற பிரச்னை.

ஆகவே ஓஷோ சொல்வது நாம் வாழ்க்கையிடம் தவறான அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதே. பயமும் பதட்டமும் பேராசையும் பாதுகாப்பும் நமது சமூகத்தின் அடித்தளங்களாக இருந்து வந்திருக்கின்றன என்பதே. சுரண்டலும் சுயலாபமும் கொண்ட அரசன் போன்ற ஆதிக்க நிலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள், போட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழக்கங்கள், நாகரீகங்கள் கொண்டதாகவே இதுவரை நமது சமூகம் இருந்து வந்துள்ளது. இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

ஆகவே அறியாத ஞானத்திற்கு ஆசைப்பட சொல்வதில்லை ஓஷோ.

கிடைத்துள்ள வாழ்வை அனுபவிக்கும் கொண்டாடும் ஆனந்தப்படும் வழி சொல்பவர் ஓஷோ.

இந்தக்கணம் மட்டுமே இருப்பது என்ற நிசர்சனத்தில் நிலை கொண்ட வாழ்வை வலியுறுத்துபவர் ஓஷோ.

எனவே ஓஷோ இன்றைய மனிதனின் நோய்களை ஆராய்ந்து மருந்தாக தியான யுக்திகளைக் கொடுத்து அவன் இக்கணத்தை இனிமையாய் வாழ வழி செய்பவர். வறட்டு வேதாந்தம் பேசுபவரல்ல. கதா காலேட்சேபம் செய்பவரல்ல.

ஆகவே நண்பர்களே

எப்படி வாழ்வது என்று கேளுங்கள். ஆழமாக, ஆனந்தமாக, கொண்டாட்டமாக, அழகாக, எப்படி வாழ்வது என்று தேடுங்கள்.

அதுதானே மனிதனின் தேடல்.

அதற்கு முதல் படியாய் உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை அனுபவியுங்கள். கொண்டாடுங்கள். உங்களை
நீங்களாக உங்கள் நிறை குறைகளோடு முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்காக பெருமைப் படுங்கள். அந்த சுய மரியாதையை எதற்காகவும் இழக்காதீர்கள்.

ஓஷோவின் ஏற்றுக் கொள்ளல் அடுத்தவர்களை, அமுக்கும் அதிகாரங்களை, கட்டளைகளை, ஏற்றுக் கொண்டு அடிமையாய், போலியாயம், பாசாங்காய் வாழ்வதல்ல. தன்னை ஏற்றுக் கொள்ளலே. தன் தனித்தன்மையை இழக்காமல் இருத்தலே.

ஆனால் இது முதல்படிதான். இரண்டாம்படி ஏற்றுக் கொண்ட உங்களை குறித்து உணர்வோடு இருங்கள். தன்னுணர்வு கொள்ளுங்கள். இந்த
தன்னுணர்வு கொள்ளல் ஏற்றுக் கொண்ட பிறகே, முதல்படிக்குப் பிறகே சாத்தியம். தன்னுணர்வோடு வாழ்தல்தான் வாழ்க்கை. உணர்வோடு இருப்பதுதான் நாம் இருக்கிறோம் என்பதன் பொருள். தன்னுணர்வோடு வாழும்போதுதான் உங்களை நீங்கள் தூய்மையாக, நேர்மையாக, தூசும் மாசும் படியாமல் போற்றி வாழ முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக்கொண்ட உங்களில் அடுத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட அழுக்குகளை, நம்பிக்கைகளை, கருத்துகளை களைந்தெறிய முடியாது. உங்களது உண்மையான உங்களை கண்டுபிடிக்கவும், அதன்பின் பேணி வளர்க்கவும் தண்ணுணர்வு அவசியம்.

இன்றைய தன்னுணர்வு அற்ற நிலை போதை நிலை. மத போதை, கூட்ட போதை, இன போதை, மொழி போதை, சினிமா, டிவி போதை இப்படி தன்னுணர்வு இல்லாமல் கற்பனைக்குள் கூட்டிச் செல்லும் எத்தனையோ போதைகள் சமூகத்தில் உள்ளன. இந்த போதைகளுக்கு முன்னால் ஒருவன் தானே தெரிந்து செய்து கொள்ளும் சிகரெட், மது, கஞ்சா போன்ற போதைகளின் தீமை மிகக் குறைவே.

அடுத்த மூன்றாவது படி நீங்கள் உங்களை அனுபவிக்க, குதூகலிக்க்க் கற்றுக் கொள்ள வேண்டும். ஒப்பிடலாலும், மற்றவர் கருத்தாலும் சிறுமையாய் உணர்வதிலிருந்து வெளிப்பட்டு சந்தோஷிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மந்தையாய் நம்மை அடிமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் குருக்களும் போதகர்களும், அதிகாரம் படைத்தவர்களும் பின்னியுள்ள – சரியான மனிதன் – என்ற சூழ்ச்சி வலைக் கருத்துகளில் அடங்கி விடாமல் அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி சொல்வதால் சமூக ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் என்று கூப்பாடு போடும் கும்பலொன்று எப்போதும் இருக்கிறது. அதற்கு பதில் இதோ. இந்த முழு பிரபஞ்சமும் எந்தப் போலிஸும் சமூக கட்டுதிட்டமும் இல்லாமல் மிகச் சரியாக இயங்கும்போது ஏன் தன்னுணர்வோடு வாழும் மனிதனால் ஒழுங்கு
கெட்டுப் போகும் ? ஆகவே இது மறுபடியும் ஏமாற்று வேலையே,! ஆளை அடிமைப்படுத்தும் வேலையே.!

ஆகவே அனுபவி, சந்தோஷப்படு, குதூகலி, இக்கணத்தை, இந்த உடலை, இந்த பூமியை, கொண்டாடு. ஆடு, பாடு, ஆனந்தப்படு. இது உனது பிறப்புரிமை. உன்னை கொண்டாடப் பிறந்தவனே நீ. நீ அடிமைப்பட்டுப் போனதன் காரணம் தன்னுணர்வை தவறவிட்டது. ஆகவே தன்னுணர்வு கொண்டு, விழிப்புணர்வு கொண்டு உன்னை ஆடிப் பாடி உன் மண்ணை, காற்றை, நீரை அனுபவி. உடலை அனுபவி. ஆனந்தப்படு.

இதற்கு உதவிபுரிய, தன்னுணர்வு தரிசனம் பெறத்தான் தியான யுக்திகளை ஓஷோ உருவாக்கியிருக்கிறார். தியானம் என்பது மருந்து. அதுவே சாப்பாடு அல்ல. மருந்தை உண்டு தன்னுணர்வு பெற்று தன் வாழ்வை மலரும்படி வாழ வேண்டியது நம் பொறுப்பு. அப்படி நமது தனித்தன்மையை தன்னுணர்வோடு வாழ்ந்து கொண்டாடுவதே ஓஷோவின் வாழ்க்கை, வழி, இலக்கு, எல்லாமே. அடைய வேண்டிய இடமோ, இலக்கோ, உச்சியோ வாழ்வில் இல்லை என்பதே அவரின் செய்தி.

யாருக்கு வேண்டும் ஞானம் அப்படியொன்று இருந்தால் அது நாம் வாழும் வாழ்வின் முழுமையில், ஆனந்தத்தில் தானாய் பிறக்கும். அப்படி பிறப்பது வளர்ச்சி. அப்படி அடைவதே உயர்நிலை. தேடி அடைவது அல்ல. மலர்ந்து மணப்பது அது.

ஆகவே நண்பர்களே

நம்மை ஏற்போம்

தன்னுணர்வு கொள்வோம்

நம்மைக் கொண்டாடுவோம்

அரட்டையில் ஆறுதல் தேடுவோர் தேடிக் கொண்டே இருக்கட்டும்.

 

அன்பு,

சித்.