அன்பு நண்பர்களே!

வணக்கம்! வாழ்க விழிப்புணர்வுடன்!

பல நண்பர்களின் என் செயல்பாடு, நிலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

முதலில் ஓஷோ. ஒரு மனிதன், ஆனால் மனிதன் மட்டுமல்ல. அந்த மனிதனுக்கு ஒரு மிகப்பெரிய நிகழ்வு நிகழ்ந்தது. ஆகவே ஓஷோ ஒரு நிகழ்வு. ஒரு சூரிய உதயம். ஒரு கதிர்வீச்சின் ஆரம்பம். அது நடந்த உருவம் ஒரு மனித உருவம்.

ஆகவே ஓஷோ என்ற மனிதன் இறந்துவிட்டான். ஓஷோவின் கூற்றுப்படி அவர் ஞானமடைந்த, வாழ்வில் முழுதாய் கரைந்துவிட்ட அந்த நாளிலேயே அவன் இறந்துவிட்டான். ஆனாலும் நமது கண்களுக்கு ஒரு மனித உருவம் மேலும் சில காலம் இருந்து, அதற்குள் நிகழ்ந்தேறிய நிகழ்வைப் மனித உருவத்தின் சாத்தியத்திற்குள் எவ்வளவு வெளிப்படுத்தமுடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தி வந்தது. ஒருநாள் அந்த உருவம் இல்லாமல் போய்விட்டது. அதுதான் இயற்கை.

ஆகவே இப்போது இருக்கும் ஓஷோ, அந்த ஓஷோ எனும் நிகழ்வுதான். அந்தக் கதிர்வீச்சு நிகழ்வு அணு கதிர்வீச்சை விட ஆழமானது. தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது. மனிதன் ஒவ்வொருவரையும், இயற்கை முழுவதையும் தொடுவது. தொட்டுக்கொண்டிருப்பது. ஊடுருவிகொண்டிருப்பது. அந்த நிகழ்வின் வீச்சின் வீரியம் குறைய குறைந்தது 5000 வருடமாகும்.

இந்த முழு மனித குலத்தின் எதிர்காலத்தையும், சிந்தனையையும், பரிமாண பாதையையும் இது பெருமளவில் ஏற்கனவே ஊடுருவ ஆரம்பித்துள்ளது.

இந்த வீச்சில் எனது பாதுகாப்பு கவசங்களாக, தற்காப்பு ஏற்பாடுகளாக இருந்த எனது கருத்துகள், உணர்ச்சிகள், இயந்திரத்தனம், கட்டமைப்பு ஆகிய எல்லாவற்றையும் கழட்டி எறிந்துவிட்டு முழுதாக என்னை அனுமதிக்க எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது.

கொஞ்சம் கொஞ்சமாகவே ஓஷோ நிகழ்வின் ஒளி வட்டத்திற்குள், சக்தி மண்டலத்திற்குள் நான் சங்கமிக்க தைரியம் கொண்டேன்.

ஆனால் எப்போது அது 51 சதவீதமாக ஆகியதோ அதிலிருந்தே ஒரு புதிய தரிசனம் கண்டேன், கொண்டேன். அந்த தரிசனம் வாழ்வின் பாதையை, என் கருத்துகளை, என் உணர்வுகளை புரட்டிப் போட்டுவிட்டது என்பதே உண்மை.

ஞானமடைதல் என்பது வாழ்வில் கரைந்துபோதல்தான். ஆனால் அப்படி ஒரு உருவம் பிரபஞ்ச இருப்பினுள் ஆழமாக கரையும்போது ஏற்படும் அந்த நிகழ்வு, அந்த கதிர்வீச்சு, அந்த சக்திமண்டல நிகழ்வு ஒரு மாபெரும் பிரபஞ்ச நிகழ்வுதான். இந்த நிகழ்வு என்னை முழுதாய் விழுங்கிவிட்டது. அதனால் இந்நிகழ்வின் தாக்கமாகவே நான் என்னை உணர்ந்து வருகிறேன். ஓஷோ நிகழ்வின் தாக்கத்தால் புதிய பாதையில், புதிய பரிமாணம் கொண்டு ஆனந்தப் பயணத்தில் இருப்பவன் என்று வேண்டுமானால் என்னைச் சொல்லிக்கொள்ளலாம்.

மேலும் பயணமே என்னைக் கரைத்துவிட்ட பாதையாகவும் இருக்கிறது. ஆகவே என் வாழ்வு பாதை மாறா பயணம் தான். நிகழ்வுகள் பிரபஞ்சத்தின் லீலை. அதில் நான் இல்லை.

ஓகே. நான் சொல்லவந்ததை சொல்லாமல் வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, ஓஷோ கூறுகிறபடி ஓஷோவின் ஒவ்வொரு அன்பர்களும், அவர் நிகழ்வால் தாக்கப்பட்ட ஒவ்வொருவரும் அந்த நிகழ்வின் ஒரு சுவை கொண்டவர்களே. ஆகவே எனக்கு எல்லா ஓஷோ அன்பர்களின் செயல்களுமே உடன்பாடானவையே. ஆனால் என் சுவையை மட்டுமே ஆணித்தரமாக, எனது இருப்பிலிருந்து என்னால் பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

மேலும் எந்த அமைப்புக்கும், எந்த மனிதருக்கும், எந்த கருத்துக்கும், எந்த ஆசைக்கும் உட்பட்டு எனது வாழ்க்கை திசை திரும்பிவிடாது. அப்படி தடுமாறும் எல்லை தாண்டி முழுக்க மூழ்கிவிட்டவன் நான். ஓஷோ நிகழ்வின் வீச்சு காட்டும் பாதை மட்டுமே என்னை வழி நடத்தி செல்வதாய் இருக்கும், அதுவே வாழ்வாய், நானற்று என் வாழ்வு கரைந்து போனதை கண்டு வியக்கும் தெளிவு பிறந்திருக்கிறது எனக்கு.

ஓஷோ தியானப் புத்துணர்வூட்டுமிடம், பூனே மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது. ஆனால் பயம் இல்லை. நான் உணரும் ஓஷோ நிகழ்வின் வீச்சை, சக்தி மண்டலத்தை பகிர்ந்துகொள்வதும், அதை உணர தடையாய், அதில் கரைய தடுப்பாய் எவை எவை இருந்தன என்றும் உணர்ந்ததை பகிர்ந்து உதவுவதே எனது தியானப்பட்டறைகள்.

இதனால் நான் குருவாகி கூட்டம் சேர்க்க ஆசைப்படுகிறேன் என்று சொல்பவர்கள் பேசுமுன் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்.

தேடுபவர்களுக்கு ஓர் இடம் என்ற அளவிலேயே ஓஷோ சாஸ்வதம் நிறுவப்பட்டது. 10 முதல் 15 நபர்களுக்கு மேல் கூட்டம் சேர்வதை நான் வரவேற்பதில்லை. கட்டணங்கள் ஆளுக்குத் தகுந்தபடி, அவரவர் சக்திக்குத் தகுந்தபடியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வளர்ச்சிக்கு, தனிநபர் சுதந்திரத்திற்கே முன்னுரிமை. தானாயிருக்கவும், தன்னை உணரவுமான ஓர் இடம் என்ற அடிப்படையில் முயற்சிக்கப்படுகிறது. யாரும் கணிக்கப்படுவதில்லை. எதுவும் வற்புறுத்தப்படுவதில்லை, ஆனால் எல்லோரும் தங்கள் பிரதிபலிப்பை இங்கு கண்ணாடியாய் பார்க்க உதவி செய்யப்படுகிறது.

இது ஓர் ஓஷோ நிகழ்வின் தாக்கத்தால் நடக்கும் நிகழ்வுதான். இது ஓஷோ அன்பர்களின் தனித்தன்மை வாய்ந்தவர்களின் வளர்ச்சிக்கான வாழ்விடமாக மாறலாம். இது உங்களின் முடிவில் உள்ளது. இது காணாமலும் போகலாம். வளராமலும் போகலாம். அதனால் எனது வாழ்வு பாதிக்கப்படப் போவதில்லை. எனக்கு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் வாழ்வை நான் வாழ்கிறேன் என்ற நிறைவு இக்கணமே இருக்கிறது. அதில் மூழ்கி கரையும் ஆர்வத்தில் முளைத்ததே இந்த ஓஷோ சாஸ்வதம்.

துணிச்சல் உள்ளவனுக்கே மதத்தன்மை சாத்தியம். எழுச்சியாளனே எனக்கு வேண்டும்,யாரையும் எதையும் பின்பற்றுபவனல்ல என்று முழங்கியவர் ஓஷோ.

நான் ஒரு குருவோ, கடவுளோ, அவதாரமோ, வழிகாட்டுபவனோ அல்ல என்று முழங்கியவர் ஓஷோ. ஒவ்வொருவர் வளர்ச்சிக்கும் அவர்களே பொறுப்பு. நான் ஒரு சாதாரண மனிதன். நான் உங்களுக்கு உற்சாகமூட்டுபவனாக மட்டுமே இருக்கமுடியும், என்றவர் ஓஷோ.

கண்டிப்பாக ஓஷோவின் முகம் ஒரு உற்சாகத்தை ஊட்டுகிறது. கண்கள் நம்மை கட்டிப் போடுகின்றன. அசைவுகள் நம்மை ஆழத்திற்கு எடுத்துச் செல்கின்றன. பேச்சு நம்மை மனம் கடந்த நிலைக்கே எடுத்துச் செல்கிறது. அவரை பயன்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனம். அவரில் நிகழ்ந்த ஓஷோ நிகழ்வின் வெளிப்பாடுகளில் ஆழ்ந்து அனுபவம் பெறுவது எளிதான வழி. ஆனால் அடிமைத்தனம் கொள்வதோ, நம்பிக்கையில் மூழ்குவதோ, மனதின் சாதாரண ஆசைகளுக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்வதோ நமக்கு புத்திசாலித்தனம், பொறுப்புணர்வு, வளரும் தாகம் போன்றவை இல்லாததையே வெளிப்படுத்தும்.

நான் சொல்கிறேன், ஓஷோவை சாப்பிடுங்கள். ஓஷோவை அவர் உள்ளே போய் உணரத் தலைப்படுங்கள். ஓஷோ நிகழ்வில் சங்கமியுங்கள். அதே சமயம் ஓஷோ என்ற மனித உருவத்தை பிடித்துக் கொள்ளாதீர்கள். ஆனால் அதில் வெளிப்பட்ட ஓஷோ நிகழ்வை விட்டுவிடாதீர்கள்.

ஓஷோ என்ற தனிமனிதன் ஒரு சுதந்திர சிந்தனையுள்ள, சிரிப்பும் கேலியும் போக்கிரிதனமுமான, பேச்சாற்றல் மிக்க ஒரு மனிதன். அந்த வகையிலும் அவரது வாழ்க்கை இரசிக்கத்தக்கதே. ஆனால் அவரது வாழ்வின் சாறு அதுவல்ல, ஓஷோ நிகழ்வுதான். ஏனெனில் அது நமது சாத்தியத்தை சுட்டிகாட்டுகிறது. அதன் வீச்சில் நமது சாத்தியத்தின் தரிசனம் கிடைக்கிறது. அதனில் சங்கமிப்பதே நமது விடுதலைக்கான எளிதான வழியாகவும்
இருக்கிறது.

ஓஷோவின் பேச்சுக்களை, அது அவர் நம் மனதை உடைக்க பயன்படுத்தும் ஒரு யுக்தி என்பதை மறக்காமல் கேளுங்கள். அதன் மூலம் அவர் தன் கருத்து, கொள்கை என்று எதுவும் சொல்வதில்லை. மேலும் அவரது முழு வாழ்வுமே, அவரது செய்கைகள் அனைத்துமே நம் மனதை உடைக்க அவர் பயன்படுத்திய கருவிகளே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவருக்கு சொந்த ஆசையோ விருப்பமோ இருக்க சாத்தியமில்லை, ஏனெனில் அந்த குழந்தைத்தனமான நான் என்ற கற்பனையை விட்டுவிட்டு உண்மையான, சத்தியமான நிதர்சனத்தில் வாழ்பவர்.

இதன் பொருள் அவருக்கு தனித்தன்மையில்லை என்பதோ நமது தனித்தன்மையை வாழக்கூடாது என்பதோ அல்ல. முதலில் நான் தனித்தன்மை என்றால் என்ன என்று சொல்லிவிட விரும்புகிறேன். ஒவ்வொரு உடலுக்கும் மனதிற்கும் அதற்கே உரித்தான ஒரு வாழ்வியல் வெளிப்பாடு பிறப்பிலேயே அமைந்துவிடுகிறது. இந்த தனித்தன்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து வாழ ஆரம்பிக்கும்போதுதான் அவனுள் இருந்து ஒரு ஆனந்தத்தையும் ஒரு நிறைவையும் உணர ஆரம்பிக்கிறான். அந்தத் தனித்தன்மையை வாழும்போதுதான் வாழ்வோடு ஒன்றிப் போகும் ஒரு அனுபவம், முதல் அனுபவம் அவனுக்கு கிடைக்கிறது. ஆகவேதான் ஓஷோ தனித்தன்மையோடு வாழ்வதே வாழ்வு, உன் தனித்தன்மையை விட்டுக்கொடுத்து வாழ்வது வாழ்வே அல்ல, அது வெறும் இயந்திர வாழ்வு, சவ வாழ்வு என்கிறார். பேச்சாற்றல், கவிஞன், சிற்பி, கலைஞன், முதல் பெரும் பணத்தை உருவாக்கும் வியாபாரி வரை எல்லோருமே தனித்தன்மையின் வெளிப்பாடுகளே என்கிறார் ஓஷோ.

இப்படி உடலில் வெளிப்படும் தனித்தன்மை தவிரவும், ஒவ்வொரு தனிமனிதனும் பிரபஞ்ச இருப்பின் ஏதோ ஒரு குணத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்தத் தனித்தன்மை அவனது சொந்தப் பாதை. அவன் பிரபஞ்ச இருப்பில் கரையும் பாதை அது. அதுதான் ஒருவனின் ஆன்மீகப் பாதை, உள்முகப் பாதை. திறந்தவனாய் இருத்தல், இணைப்புணர்வோடிருத்தல், மாறிக்கொண்டேயிருத்தல், கொண்டாட்டம், சாட்சியாகவேயிருத்தல், கரைந்துவிடல், இப்படி ஏதாவது ஒரு பிரபஞ்ச இருப்பின் வெளிப்பாடு நமது உள்நிலையாக இருக்கிறது.

ஆகவே நண்பர்களே, பயணம் முக்கியம், பாதை முக்கியம், விழிப்புணர்வுப் பயணமே அடைய வேண்டிய இலக்கு. அதை நோக்கி வளர உதவிக்கொள்வோம். ஒருவருக்கொருவர் போற்றிக்கொள்வோம்.

ஓஷோவின் கதைகளை, கருத்துகளை தியானப்பயிற்சிகளை மட்டும் எடுத்து காப்பியடித்து துண்டு துண்டாக்கி ஆன்மீக குருவாக வியாபாரம் செய்து சொத்தும் சுகமும் புகழும் அடையும் குருக்களை கூட நான் ஒரு சமுதாய விளைவாக பார்க்கிறேனே அல்லாமல் அவர்களைப் பற்றிய எந்த கருத்தும் எனக்கு இல்லை. அப்படியிருக்கையில் ஓஷோ நிகழ்வனுபவம் பெற்று திளைத்து, அதன் விளைவாய் நடக்கும் எல்லா முயற்சிகளும் மேலும் மேலும் வளரவும், செழிக்கவும், முடிந்தால் அவைகளுக்கு துணை நிற்கவுமே விரும்புகிறேன்.

ஓஷோவிற்கு பின் இனி யாரும் அடுத்தவருக்கு குருவாக முடியாது. ஞானமடைதல் கூட ஒரு கிளர்ச்சியூட்டமுடியாது. ஏனெனில் அதற்குப் பின்னும் மிகப்பெரிய வாழ்வும், வளர்ச்சியும், உண்மையில் மிகப்பெரிய பொறுப்புணர்வும் கொண்ட வாழ்க்கை ஓட்டத்தை வாழ வழிகாட்டியாய், முன்னோடியாய் ஓஷோ ஒளிர்கிறார். ஓஷோவின் பெயரைச் சொல்லி எந்த ஒரு அமைப்புக்கும் அடிமையாக்கமுடியாது. சமூகத்தாலும், விதிகளாலும், கட்டிப்போடமுடியாது. அப்படிப்பட்ட முயற்சி செய்பவர்கள் ஓஷோ நிகழ்வின் வீச்சிலிருந்து விலகிவிட்டவர்களாகவும், பாதுகாப்பையும், புகழையும், பொருளையும், பற்றியிருக்கும் அறியாமை சூழ்ந்த கூட்ட மனப்பான்மையில் சிக்கிவிட்டவர்களாகவுமே இருக்கக் கூடும்.

ஓஷோ நிகழ்வின் அதிர்வுகள் என் இதயத்தில் ரீங்காரமிடுகின்றன. புதிய மனிதனின் புதிய பாதைப் பயணம் சுமையற்றும் சுதந்திரமாகவும் கண் முன்னே விரிகிறது.இவ்வளவு ஆனந்தப் பயணத்திற்கு வழிகாட்டியவன்பால் அன்பே விரிகிறது. நன்றியில் விழ உதவியவனுக்குத் தானே முதல் நன்றி போய்ச்சேரும்.

இந்த சமயத்தில் நான் இன்னொன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நண்பர்களே நான் தவறு செய்யாதவனல்ல.சாதாரணன். தவறுகள் மட்டுமே செய்துகொண்டிருந்தவன். பேராசையும், பொறாமையும், பயமும், காமமும் என்னை ஆட்டிப்படைத்தவைதான். மேலும் நான் பணபலமோ, அதிகாரமோ, அந்தஸ்தோ பெற்றவனல்ல. ஆனால் இழப்பதற்கு எதுவுமில்லாதவன். இன்பமும், ஆனந்தமும் எந்தத் தகுதியும் இல்லாமல் பெற்றவன். நண்பர்களே. அதனால் எதையோ சாதிக்கும் முயற்சி எனக்கு இல்லை. ஓய்வாய், தளர்வாய், ஒதுக்கமாய் வாழ்வை வாழவும், ஓஷோ நிகழ்வை வருபவர்களுடன் பகிர்ந்துகொள்ளவுமாய் இருப்பவனே நான்.

வாருங்கள்.

விழிப்புணர்வோடு தனித்தன்மையை வாழ ஆரம்பிப்போம்.

பின் ஒருநாள்

வாழ்விலே கரைந்துபோவோம்.

வாழ்விருக்கும். நிகழ்விருக்கும்.

நாமிருப்போம்

நான் என்ற தலைவலி மட்டும் தொலைந்துபோகும்.

அன்பு,

சித்.