அன்பர்களுக்கு வணக்கம்.

பலர் என்னைப் பார்க்க வருகிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். பார்க்க அழைப்பவர்களும் பலர். இவர்கள் எல்லாமே ஒரே வார்த்தையில் ஓஷோ அன்பர்கள்தான்.

ஆனால் நான் பலரையும் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆர்வம் காட்டாமல் என் அன்பை பொழியாமல் ஒதுக்க வேண்டியிருக்கிறது. சிலரை கட்டாயமாக ஒதுக்க வேண்டியிருக்கிறது.

இப்படி நான் நடந்து கொள்வது பல சமயங்களில் என்னுடன் இருப்பவர்களுக்கு தர்ம சங்கடமாகவும், எதிர்பாராததாகவும், என் இயல்புக்கு மாறாகவும், நான் பேசும்படி நடக்காமல் போவது போலவும் தெரிகிறது, தெரியும்.

ஆனால் எனது இந்த 34 வருட ஓஷோவின் அன்பர்களுடனான பயணத்தில் அவரது அன்பர்களை நான் இருவகையில் பார்க்கிறேன். அப்படிப் பார்க்காமல் பழகியதால் பயனில்லை என்பதையும் இப்போது உணர்ந்தவனாய் இருக்கிறேன். ஆகவே அப்படி பார்த்து பழகுவதை இப்போது எனக்கு நானே
கட்டாயப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரு பிரிவினர் ஓஷோவைபோ படிப்பவர்கள், ரசிப்பவர்கள், கைதட்டுபவர்கள், பாராட்டுபவர்கள், புகழ்பவர்கள், சமூகத்திற்கு சொல்பவர்கள், கலந்துரையாட விரும்புவர்கள், அவரது பேச்சாற்றலை, புத்தி கூர்மையை, கல்வியறிவை, மேதா விலாசத்தை, தைரியத்தை சிலாகிப்பவர்கள், மெச்சுபவர்கள். அவரது எழுத்தைப் படித்ததால், கருத்தும் சிந்தனையும் மாறியுள்ளவர்களும் இதில் அடங்குவர்.

தங்களின் வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு, அமைதியான ஒரு வாழ்க்கைக்கு தாங்கள் தந்திரமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டை நியாயப்படுத்திக் கொள்ள ஓஷோவை பயன்படுத்திக் கொள்ளும் ஏராளமானவர்களும் இதில் அடக்கம். ஒரு கண நேர தரிசனத்தில் ஓஷோவிடம் நெருங்கி அவரது புது சந்நியாசம் பெற்று, அதன்பின் நழுவி பழையபடி மனதின் தந்திரத்திற்கே ஓஷோவை உபயோகிக்கும் ஓஷோ சந்நியாசிகளையும் நான் இதில்தான் சேர்க்கிறேன்.

ஓஷோ புத்தகங்கள் ஏராளமாய் படித்திருக்கிறேன். ஓஷோவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஓஷோ ரொம்ப பெரிய ஞானி. ஓஷோ தியானம் செய்து பார்க்க விருப்பம். இப்போது நான் ஈஷா தியானம் செய்கிறேன், நித்யா தியானம் செய்கிறேன், வேதாந்த மகரிஷி தியானம் செய்கிறேன், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏதாவது புரோகிராம் நீங்கள் நடத்தினால் சொல்லுங்களேன், நான் வர முயற்சிக்கிறேன். உங்க இடத்தில் தியானம் செய்ய ஓரளவு ஆட்கள் வராங்களா என்று கேட்கும் பத்தாம் பசலி ஆன்மீகம், சமூக கௌரவ ஆன்மீகம், அறிவு நிறைந்த ஆன்மீகம் பேசுபவர்களையும் நான் இதில்தான் வகைப் படுத்துகிறேன்.

இவர்கள் எல்லோரைக் கண்டும் நான் ஒதுங்குகிறேன். அவர்கள் மேல் எனக்கு கோபம் என்பதல்ல. அவர்களை நான் நேசிக்கவில்லை என்பதல்ல. அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் எனக்கு எதிரிகளோ பிடிக்காதவர்களோ அல்ல. அவர்கள் மேலும் எனக்கு பிரியமும் மரியாதையும் உள்ளது. ஆனால் எனக்கு அவர்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளும் அளவு நேரமுமில்லை, காலமுமில்லை. இன்னும் இந்த உடலில் இருக்கப்போகும் குறுகிய காலத்தில் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உயிர்த்துடிப்பானவர்கள் தேவை. அவர்களையே நான் நாடியும் தேடியும் போய் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். இதுவே காரணம்.

அப்படி உயிர் துடிப்புள்ளவர்களாக நான் பார்க்கும் ஓஷோ அன்பர்களின் அளவுகோல் எனக்கு அவர்கள் தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது தியானம் செய்பவர்களா என்பதுதான். தியானமுறையில் ஏதாவது ஒன்றை தினசரி முயற்சிக்கும் தேடுதல் வேட்கை கொண்டவர்களையே நான் தேடவும் நாடவும் செய்கிறேன். அவர்களுக்கே தன்னுணர்வு மலரவும் சத்தியத்தை தரிசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாலேயே மற்றவர்களை விலக்கி இவர்களை நாடுகிறேன்.

இதனால்தான் ஓஷோவும் தன்னிடம் சந்நியாச தீட்சை கேட்டு வருபவர்களிடம், அவர்களின் ஒரே தகுதியாக அவர்களால் தினசரி ஒரு மணி நேரமாவது தியானத்திற்கு என்று ஒதுக்கக் கூடிய வைராக்கியம் இருக்க வேண்டுமெனக் கேட்டார்.

ஒரே வரியில் கூறினால் ஆறுதலும் தேறுதலும் நாடுபவர்களை விட தேடுபவர்களுக்கும் தியானம் செய்ய விரும்புவர்களுக்கும் இடையே இருப்பதிலேயே என் குறி இருக்கிறது.

தியானத்தின் மூலம் மட்டுமே பிரபஞ்ச இணைப்புணர்வை (TRUST)  ஒருவன் பெற முடியும். அந்த இணைப்புணர்வு நிகழ்ந்து விட்டால் பிறகு இந்த உலகம் மாயையாய் விளையாட்டு லீலையாய் மாறிப் போகும். கனவுகளை கனவுகள் எனப் புரிந்து கொள்ள அப்போதுதான் முடியும். உடல், மன எல்லைகளை அப்போதுதான் அறிய முடியும். அதுதான் விழிப்புணர்வு. நான் என்ற உறக்கத்திலிருந்து எழுவது. இது ஒரு அனுபவ அறிவு. இந்த அனுபவம், இந்தப் பிரபஞ்ச அனுபவம் -நான்- என்பதன் கடைசி அனுபவம் எனலாம்.

மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் பின்னும் எதுவும் மாறுவதில்லை. மாறாது. உடலும், மனமும், மூளையும் அதனதன் எல்லைக்குள்தான் செயலாற்றும். என்ன, அதிகபட்ச எல்லைவரை செயல்படும். ஆற்றல் வரும். அவ்வளவுதான். அது ஒன்றும் முக்கியமானதல்ல. முக்கியம் அதை வேடிக்கை பார்க்க முடிவதுதான். இதன்பின் வேடிக்கை விளையாட்டு நிலையாமையின் நடனம் இப்படி பூமியே சொர்க்கமாய் ஆகிப் போகும்.

அனைவரும் வந்து தியானம் புரிந்து மகிழ்க.

அன்பு,

சித்.