அன்பு நண்பர்களே, 

திருமணமான பல ஆண்களும் என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்கையில், தங்கள் மனைவிகளைக் குறித்த ஆதங்கம் பெரிதும் வெளிப்படுகிறது. தாங்கள் அவர்களுக்காக பணம்,புகழ், அந்தஸ்து, வசதி எல்லாம் சேர்க்க இரவும் பகலும் உழைத்தும் அவர்கள் அனுசரணையாக இல்லை என்று குற்றம் கூறுகின்றனர். தங்கள் நிம்மதியை வீட்டில் குலைப்பதாகவும் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையான பிரச்னையை சொன்னால் ஏற்க முடியுமா இவர்களால் 

உண்மையான பிரச்சனை இன்னும் ஆண்கள் மனைவிகளை தங்கள் உடமைகளாக கருதுவதுதான். அந்த சொந்தம் கொண்டாடுதல்தான். அதனால் எழும் எதிர்பார்ப்புதான். தங்களின் கெளரவத்தை வெளிக்காட்டும் உடமையாக மனைவியை நடத்துவதுதான். 

நீங்கள் நீங்களாக மட்டும், சுதந்தரமாக, உங்களைப் பற்றி முதன்மை அக்கறை உள்ளவனாக மட்டும் இருப்பீர்களேயானால், யாரும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது, உங்கள் நிம்மதியை குலைக்கவும் முடியாது. 

அன்பாக இருங்கள், ஆனால் தனித்தன்மையுடன் இருங்கள், குறிப்பிட்ட இடைவெளியை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் இருப்பதுடன் இதைப்போல மற்றவர்களும் இருக்க அனுமதியுங்கள்.

இது இன்னொரு பிரச்சனை 

சில மனைவிமார்கள் கணவனை மீறி நடக்கிறார்கள். இந்த ஆண்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இது எதனால் 

முதல் காரணம் காலங் காலமான ஆண் ஆதிக்க சமுதாய அமைப்பு. 

இரண்டாவது காரணம் தனித்தன்மை கொண்டு வாழும் வாழ்வின் சுவையே இல்லாத வளர்ப்பு. 

மூன்றாவது காரணம் தற்போதய சமூகத்தில் ஆண்களிடம் தைரியம் இல்லாதது

ஆண்கள் கோழைகளாக, தந்திரசாலிகளாக, வெறும் வியாபாரிகளாக, நேர்மையற்றவர்களாக மாறிவிட்டது.

ஆண்களிடம் இருந்த நேர்மையும் தைரியமும் மறைந்து விட்டது.

முன்பெல்லாம் ஆண்மகன் என்றால் அதிக வாழ்வு அனுபவம் இருக்கும். ஆகவே தைரியமும், நேர்மையும், அந்த நேர்மை வாழ்வால் வரும் சுயமரியாதையும் இருக்கும்.

இப்போது வெறும் புத்தகப் படிப்பால் ஆண்கள் அந்தகால பெண்கள் போலவே ஆகிவிட்டனர்.

வீரம் என்பதும் தைரியம் என்பதும் வாழ்க்கையை நேருக்கு நேர் சந்திப்பது என்பதே. ஆனால் பின்னர் அவை வன்முறையோடு சம்பந்தப் பட்டு விட்டன.

வன்முறை என்பது துன்புறுத்துவது, காயப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது, தீங்கு விளைவிப்பது. இன்றோ வீரம் தொலைந்துவிட்டது, வன்முறை மட்டுமே இருக்கிறது. ஆனால் வீரம் என்பதும் தைரியம் என்பதும் எது நடந்தாலும், எது நடக்கும்போதும் தனது தனித்தன்மையை, நேசத்தை விடாமல் நேர் கொள்வது, இறப்பே வந்தாலும் அதனைக் கண்டு அஞ்சி, பயந்து தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் வாழ்வது என்றே இருந்தது. இன்னும் ஒருபடி மேலே வர்த்தமானர் என்ற ஜைன தீர்த்தங்கரர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார்.

உலகின் துன்பங்களையும், துயரங்களையும் தனது தவ வலிமையால் வென்றவர் என்று இதற்குப் பொருள். பொய்யும், சூதும், தந்திரமும், ஏமாற்றலும், பித்தலாட்டமும், வஞ்சகமும், சோம்பேறித்தனமும், அரசியலும் இல்லாமல் வாழ்வில் எது வந்தாலும் சந்தித்து தான் மாறாமல், வைராக்கியத்துடன் தன் வழியில் நின்று வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெறும் தன்மையை குறிப்பதுதான் நெஞ்சுறுதி, வீரம், தைரியம் ஆகியவை. இது ஆணின் லட்சணமாக புருஷலட்சணம் என்று போற்றப் பட்டது. அக்காலத்தில் பெண்கள் இதற்கு நேர்மாறானவர்களாக சித்திரிக்கப்பட்டனர். உறுதியும், வீரமும், தைரியமும் இல்லாமல் தந்திரம் செய்பவர்களை பெண்களைப் போல என குறிப்பிடுவது போல பொட்டைப் பயல் என்று கூறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பெண்களும் எல்லோரும் அப்படி இருக்க வேண்டியதில்லை.

அவர்களுடைய உடல் பலவீனமானது, அதுவும்கூட அக்காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால். ஆகையால் அவர்கள் ஆண்களால் அடிமைப் பட்டு கிடந்தனர். அது மட்டுமல்ல, நாம் அடிமையாய் வாழ்வதே நமக்கு சிறந்தது. அடிமையின் குணங்களாகிய பணிவு, எஜமானனை தெய்வமாய் மதித்தல், கடும் உழைப்பு, தியாகம், அடக்கம் போன்றவையே பெண்களின் குணங்களாக சித்தரிக்கப்பட்டு பெண்களும் அவற்றை ஏற்று வாழ பழக்கப் படுத்த பட்டனர். பெண் ஆணின் முன் வருவதே அடக்கமின்மை. பேசுவது அத்துமீறல் என்ற அளவிற்கு அடக்கி வைக்கப் பட்டனர். 

ஆனால் இன்று பெண்களின் நிலை பெரிதும் முன்னேறியுள்ளது. என்னிடம் தனது அந்தரங்கம் பகிர்ந்துகொள்ளும் பெண்கள் கணவன் பற்றி பெரிதாக குறை படுவதில்லை. அதிக அறிவு, அதிக செல்வம், பிள்ளைகளின் உயர்ந்த எதிர்காலம், தங்கள் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் என பெரிதும் உண்மையான பிரச்னைகளை பேசுகின்றனர்.

ஜோசியம் மட்டுமே நம்பி உள் அறையில் உட்கார்ந்து ஆண்களை மயக்கும் தந்திரம் பேசும் பெண்ணுலகம் மறைந்துவிட்டது. கல்வி பெண்களுக்கு விடுதலை கொடுத்து வருகிறது. 

உலகத்தை வென்று செல்வமும், புகழும், பேரும், பெருமையும், உயர்வும் அடைய வாய்ப்பு கிடைத்தவுடன் அதிவேகத்தில் இருக்கின்றனர் நம் பெண்கள். அப்படித்தான் இருப்பார்கள் ஆரம்பத்தில். இதுவரை கிடைக்காத பணம், அதனால் கிடைத்த சுதந்திரம் என்று வாழ்வை தொடங்கும், தன் தனித்தன்மையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ள பெண்கள். சுதந்திரத்தில் தவறு செய்வதும் நிகழும்தான். ஆனால் அதற்காக சுதந்திரமே தவறல்ல. 

பெண்களிடம் தன்னம்பிக்கையும், அறிவும் பெரிதும் வளர்ந்துள்ளன. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைத்திருந்த ஆசைகள் வெளி வருகின்றன. அவர்கள் ஆசையோடு வாழ்கிறார்கள் இன்று. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் ஆண்கள் அதிகம் சலிப்பும், குறையும், லஞ்சமும், பொய்யும், தொந்தியும், குடியும், அரசியலும் என வாழ்விலிருந்து விலகி சென்று விட்டனர். நல்லவைகளான தைரியம், விவேகம், நேர்மை, அனுபவம் போய் அதேசமயம் தீயவையான போலி கெளரவம், அந்தஸ்து, பேராசை, உழைக்காமல் வாழ வழி பார்ப்பது, ஏமாற்று, அரசியல் என்பவை ஆணிடம் அதிகரித்துவிட்டன. 

பொது அறிவில் கூட இன்று பெண்கள் பெரிதும் முன்னேறி வருகின்றனர். அவர்கள் வளர்ச்சியில் வருத்தமளிக்கும் விஷயம், அவர்கள் ஆணைப் பார்த்து அதே பாதையில் வெற்றியடைய பாடுபடுவதுதான். அவர்களது சக்தி முழுவதையும், கிடைக்கும் சுதந்திரம் முழுவதையும் வெறும் வெளி விஷயங்களுக்கே பயன்படுத்தாமல், தங்கள் தனித்தன்மையை கண்டுகொண்டு தங்களது சிறப்பு குணங்களாகிய பொறுமை, நேசம், தாய்மை ஆகியவற்றை பயன்படுத்தினால் அது நல்லுலகைப் படைக்கும். ஆண் சிக்கிக்கொண்ட அதே போலிகெளரவம், போலி அந்தஸ்து, ஆணவம், அடுத்தவரை சொந்தம் கொள்ளுதல் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டால் பிறகு அவனது சலிப்பும், பொய்யும், போலித்தன வாழ்வுமே அவர்களுக்கு மிஞ்சும்.

அன்பு

சித்.