அன்பு நண்பர்களே,
வணக்கமும் வாழ்த்தும்.
இந்த தலையங்கத்தில் மூன்று தலைப்புகளில் எழுதப் போகிறேன்.
1. வரும் நண்பரிகளிடம் நான் முதலில் சோதிக்க வேண்டியிருப்பது அவர்கள் தன்னைப் பார்க்க தயாராய் இருக்கிறார்களா என்பதைத்தான்.
அது இல்லாதவர்கள் தியானம் செய்வதில்கூட சமூக மனத்தின் பேராசையும், பாதுகாப்புத் தேடுதலுமே ஓங்கி நிற்பதை நான் பார்க்கிறேன்.
உதாரணமாக ஒரு நண்பர் நான் அந்த சாமியாரிடம் போனேன், அதற்குப் பின்பு கஷ்டம் நீங்கி நன்றாக இருக்கிறேன் என்கிறார். இன்னொருவர் அந்தக் கோயிலுக்குப் போய் அங்கு ஓரிடத்தில் நின்றால் அங்கு ஒரு சக்தியிருப்பதை உணர்கிறேன். அதற்காகவே அங்கு தவறாது போகிறேன். அது எனக்கு அமைதி கொடுக்கிறது என்கிறார்.
ஓஷோவையும் படிக்கிறார்கள், தியானம் செய்கிறார்கள். ஆனால் ஈர்ப்பு வேறொங்கோ இருப்பது ஏன்,? மேலும் ஓஷோவிடமும் அப்படி ஒரு பயன்பெறவே வர
விரும்புகிறார்கள். ஓஷோவும் அப்படி பயனளிப்பார், தனது நோயைத் தீர்ப்பார், வியாபாரத்தைப் பெருக்குவார், ஆரோக்கியம் தருவார் என்று நம்ப விரும்புகிறார்கள்.
நண்பர்களே, தயவுசெய்து ஓஷோவையாவது அவர் வழியே விட்டுவிடுங்கள்.
உங்களது ஆசைகளை, பேராசைகளை, பயத்தை, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓஷோவை பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். சாமியாரிடம் போனால் கஷ்டம் நீங்கி விட்டது என்றால் இங்கு எல்லோரும் ஏன் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சாமியாரின் முகவரி தெரியாத ஒன்றுதான் பிரச்னையா? மடத்தனம் இது.!
ஒரு முறை நான் பல வருடங்களுக்கு முன்பு தற்செயலாக மகரிஷி மகேஷ்யோகி அவருடையதேயான சேனலில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவின் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் நமது பார்லிமெண்டின் வாஸ்து சரியில்லை என்பதுதான் என்று. இவருக்கு என்று ஒரு தனி தொலைக் காட்சி சேனல்.! இதைப் பார்த்து ஏமாறும் மக்கள் கூட்டம்.! என்ன சொல்வது நமது சமூகத்தை?
நான் கூறவந்தது என்னவென்றால், இப்படி நம்புகிறவர்கள், ஏமாறுகிறவர்கள் அனைவரின் பொதுகுணமாக இருப்பது தன்னைப் பார்க்க பயப்படும் தன்மைதான்.
ஆனால் ஓஷோ உன்னைப் பார்ப்பதுதான் ஆரம்பம் என்பவர். உன்னை அப்படியே ஏற்றுக் கொள், அப்படியே பார், எல்லா அசிங்கங்களையும், சேர்த்து வைத்துள்ள எல்லா குப்பைகளையும் பார். பார்க்க முடிந்த பின்பு தானே சுத்தம் செய்வது, எப்படி சுத்தம் செய்வது என்பதெல்லாம் வருகிறது. சுத்தம் செய்த பின்பு தானே தியான வாய்ப்பு வருகிறது.!
ஒரு செடி உள்ளிருந்து வளர்கிறது. வெளியே உள்ளவைகளை வாழ்க்கைச் சூழ்நிலையை பயன்படுத்தி வளர்கிறது. வளர்ந்து மலர்கிறது. மணம்
பரப்புகிறது. காயாகி, கனியாகி உதிர்கிறது. மேலும் இந்த முழுவதையும் அழகோடு, ஆனந்தத்தோடு செய்கிறது.
மனிதனுக்கு என்ன ஆனது? முதலில் உள்ளிருந்து வாழ்வதை நிறுத்தி விட்டான். வெளி விஷயங்களை உணரவும் முடிவதில்லை. உள்ளிருந்து வாழும் உடலோடு ஆன தொடர்பும் கொஞ்சமே இப்போது மிச்சமிருக்கிறது.
2. நாம் இயற்கையின் தொடர்பை மதிப்பதில்லை. அதன் அவசியத்தை நாம் மறந்து விட்டோம்.
ஒரு மான் கூட்டமும், அதை கொன்று வாழும் புலியும் ஒரே காட்டில் ஒரே இடத்தில்தான் வாழ்கின்றன. எந்த மான் கூட்டமும் புலியில்லாத காட்டிற்கு தப்பி ஓடிவிட முயற்சிப்பதில்லை. புலி துரத்தும்போது ஓடுகிறது. ஏதாவது ஒரு மானை புலி பிடித்தவுடன் புலி நின்று விடுகிறது. மான் கூட்டமும் ஓடுவதை நிறுத்திவிட்டு மேய ஆரம்பிக்கிறது. புலியும், எதற்கு தினமும் இந்த துரத்தல் சில நாள் எதுவும் கிடைப்பதில்லை, மான் லாவகமாக தப்பி ஓடி விடுகிறது. ஆகவே ஒரு பத்து மான்களை அடித்து ஒரு குகையில் சேர்த்து வைக்கலாம் என்று திட்டமிடுவதில்லை. பசிக்கும்போது தேட ஆரம்பிக்கிறது. உண்டவுடன் இளைப்பாற ஆரம்பித்து விடுகிறது.
இப்படி இயற்கையில் எதிரெதிர் ஆனவை என்று நாம் நினைக்கும் அனைத்தும் சேர்த்து வாழ்கின்றன. மான் பெருகி பஞ்சம் வந்து விடாமல் புலி காக்கிறது. புலி உணவின்றி இறந்துவிடாமல் மான் காக்கிறது.
ஆனால் மனிதனின் நிலை என்ன? எதிரானது என்று தோன்றுவதை எல்லாம் அழித்து சமநிலையைக் குலைக்கிறான்.
வெள்ளம் வராது இருக்க அணை கட்டுகிறான். வெள்ளம் வந்தால்தான் அது கொண்டு வரும் வண்டல் மண் நிலம் முழுவதும் பரவி, நிலத்தின் வளம் அழிந்துவிடாமல் காப்பாற்றப் படும். ஆனால் அணையில் ஆறு அடித்து வரும் வண்டல்மண் எல்லாம் பயனற்று அணையின் அடியில் சேகரமாகிறது படிந்துவிடுகிறது. மேலேதான் நீர் வெளியேற திறக்கப்படுவதால் வண்டல்மண் வீணாவதே நடக்கிறது.
உதாரணத்திற்கு ஒன்று இது. இப்படி சமநிலையைக் கெடுப்பதால், காடுகளை அழித்து, பெட்ரோல் சேமிப்புகளைக் குடித்து, காற்றை மாசுபடுத்தி, தற்கொலைப் பாதையில் செல்வதே இன்றைய நாகரீகத்தின் விளைவாக இருக்கிறது.
விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் வாழ்வதை விட்டுவிட்டு அதை வெற்றி கொள்ளும் வெறியில் மனிதன் அழிவுப் பாதையில் செல்கிறான்.
மலைகள் தகர்க்கப்படுகின்றன. சேலம் பக்கத்தில் பல மலைகளைக் காணோம். பூனாவைச் சுற்றி மலைகள் சமமாக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கப்பட்டு விட்டன. எதற்கு இந்த தற்கொலை முயற்சி? ஏன் இந்த தற்கொலை முயற்சி?
இதன் காரணம் மனிதன் தனது உள்ளுணர்வை இழந்து விட்டதுதான். இயற்கையோடுள்ள இணைப்புணர்வை இழந்து விட்டதுதான். ஒரு உதாரணம் சொல்கிறேன். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது இது. நான் பார்க்கவில்லை. ஒரு நண்பர் கூறிய தகவல். ஆனால் இது உண்மைதான், மேலும் இது போன்ற உதாரணங்களை கோடிக்கணக்கில் கொடுக்கமுடியும். அதாவது ஒரு மரம் கொஞ்சம் பெரிய காயாக காய்த்து வெடிக்கிறது. அப்போது அதனுள்ளிலிருந்து விதைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அந்த விதைகளுக்கு ஹெலிக்காப்டரைப் போல மெல்லிய இறக்கைகள் உள்ளன. மேலும் அவை வெளிப்படுகையில் ஒரு விசை போன்ற துடிப்பை விதைகள் பெறுகின்றன. அதன் மூலம் அது காற்றில் பறக்க ஆரம்பித்து வெகுதூரம் செல்கிறது. அந்த இறக்கைகள் காற்றில் சுழன்று வெகுதூரம் விதையை எடுத்துச் செல்கின்றன. இதைப் பார்த்து நண்பர் ஆச்சரியப்பட்டு போனார். எவ்வளவு அறிவோடு எல்லாம் இருக்கிறது என்ற ஆச்சரியம் அவருக்கு. இதைக் கேட்ட நான் சொன்னேன். இந்த அறிவுக்கே ஆச்சரியப் படுகிறீர்களே! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அந்த மரம் ஒரு அடி கூட அதன் வாழ்நாளில் நகர்ந்ததில்லை. பிறகு எப்படி பறப்பது பற்றி அதற்கு தெரிந்தது,? மரம்தான் காயை உருவாக்கியது, அதன் விதைகளை அது தான் அவ்வாறு உருவாக்கிறது. ஆனால் அதற்கு காற்றில் பறக்க இப்படி இறக்கையோடு நமது விதையை ஏற்படுத்த வேண்டும். அதன் ஆரம்பத்திற்கு ஒரு விசை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு எப்படித் தெரிந்தது? அதன் சொந்த அனுபவம் என்ன? சொந்த அனுபவமும் இல்லை, படித்ததும் இல்லை, கல்லூரி சென்று கற்கவும் இல்லை, ஆனால் மிகச் சரியாகத் தயாரித்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறது.! எப்படி – இந்த ஆச்சரியத்தை யோசியுங்கள் என்றேன். நீங்களும் யோசியுங்கள்.
நமது சொந்த அனுபவம், பார்த்தது, கேட்டது, படித்தது, கற்றது என்ற ஐம்புலன் அனுபவத்தை அறிவென்று எண்ணி அல்லல்படும் நாம் இதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இயற்கையின் இணைப்புணர்வே நமது உண்மையான வழிகாட்டி, அந்த உணர்வே நமது வாழ்வின் சாரம்.
3. இன்றைய மனிதன் நோக்கம், பார்வை, இலக்கு, இலட்சியம், கொள்கை, கோட்பாடு, நெறிமுறை, கருத்து, உறுதி, ஆகிய எல்லாமே சரியான திசையில், சரியான கண்ணோட்டத்தோடு இல்லை என்பது அடிப்படை சமூக பிரச்சனை.
இந்த சமூகம் பணத்தை முன்னிறுத்தி விட்டது. பாதுகாப்பை முன்னிறுத்தி விட்டது. சுயநலத்தை முன்னிறுத்து விட்டது. போலி கௌவரத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை முன்னிறுத்தி விட்டது. வீண் பெருமையை, அடுத்தவர் புகழ்ச்சியை முன்னிறுத்தி விட்டது. பயத்தையும் சந்தேகத்தையும், முன்னிறுத்தி விட்டது. பேராசையை
முன்னிறுத்தி விட்டது. தன் குடும்பம், தன் இனம், தன் மொழி என்பதை முன்னிறுத்தி விட்டது.
ஆனால் நமது சமூகம் பணத்திற்கு பதிலாக குணத்தை முன்னிறுத்துவதாக, பேராசைக்கு பதிலாக பகிர்ந்து கொடுப்பதை, பொறாமைக்கு பதிலாக அன்பை, அதிகாரம் தேடுவதற்கு பதிலாக அருளை, கருணையை, போட்டிக்கு பதிலாக அமைதியை, வறட்டு கெளரவம் தேடுவதற்கு பதிலாக கடவுள் நிலை தேடுதலை முன்னிறுத்தியதாக இருந்தது. முழு வாழ்க்கை முறையும் கடவுள் நிலை பெறுவதை முன்னிறுத்தியே இருந்தது. அதற்கான ஒரு முழு மனவியலும் இங்கே ஓங்கி வளர்ந்திருந்தது.
நடுவில் என்ன ஆனது. மேற்கு நாடுகளைப் பார்த்து பணப்பேய், அதிகாரப்பேய், அதற்காக எந்த சூழ்ச்சியும், சுரண்டலும் செய்வது, மது, மாது, சூதுவே
மகிழ்ச்சி என்ற மயக்கம் நம்மைப் பிடித்துக் கொண்டது. ஆகவே நாம் திசை மாறினோம். இலக்கு மாறினோம். இதுவே நம் சமூகத்தின் இன்றைய அவலம்.
பாதுகாப்பை முன்னிறுத்திய சமூகமாக நம்முடையதும் மாறி விட்டது. அடிமையாய் வறுமையாய் இருந்ததன் விளைவால் நாம் மேற்கத்திய வாழ்க்கைக்கு அதிகம் ஈர்க்கப்பட்டோம்.
இதனால் இன்று பாதுகாப்பான வாழ்வை எட்டிவிட்டவர்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்ள முயல்கிறார்கள்.! அரசாங்க உத்தியோகம் பெற்றவர்கள், புதுப் பணக்காரராய் மாறி விட்டவர்கள், வாடகையும் வட்டியும் வாங்கி வாழ்பவர்கள் இவர்களெல்லாம், வரவுக்குள் வாழ்வைச் சுருக்கி பாதுகாப்பான வாழ்வை தவறவிட்டுவிடாமல் வாழும் போக்கு நமது சமூகத்தில் இருக்கிறது.
மேலும் இவர்கள் இதில் பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள், வாழ்வில் வெற்றி அடைந்துவிட்டதுபோல. ஆனால் உண்மை என்ன?
பாதுகாப்பு எதற்கு? வாழ்வதற்கு, பயமின்றி வாழ்வதற்கு.! ஒரு செடி வளர்வதற்கு அதைச் சுற்றிப் போடும் வேலி ஒரு பாதுகாப்பு. ஆனால் வேலியை முதலில் முள்வேலி, பிறகு கம்பி வேலி, பிறகு காம்பவுண்ட் சுவர் என்று அதிகரித்துக் கொண்டே போய்விட்டு விதையை மண்ணில் விதைக்காமல் வைத்திருந்தால் என்ன பயன்? ஆனால் ஒருவருக்கும் இதைப் பற்றிய உணர்வே இல்லை. பாங்க் இருப்பை, சொத்து மதிப்பை, அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் வாழும் தைரியம் வருவதில்லை.
இதற்கும் காரணம் இருக்கிறது. சுற்றிலும் இந்தப் பாதுகாப்பை அடையாமல், இந்தப் பாதுகாப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம் இருக்கிறது. அதைப் பார்க்கையில் நாம் அடைந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கிறது. இது பொய்யானதுதான். நமது கற்பனைதான்.
உண்மையான உணர்வு எதுவுமே உள்ளிருந்து வர வேண்டும். பசி, தாகம் போல. ஆனால் இந்தப் பொய்யான உணர்வு கொடுக்கும் அகங்கார போதையில் அனைவரும் மகிழ்ந்து கொள்கிறார்கள். காலை எழுந்தவுடன் பேப்பர் படித்து, எங்கெங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, கலவரம் என்றெல்லாம் தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் இது எதுவும் நடக்காமல் நான் நன்றாக இருக்கிறேன் என்று மகிழ்ந்து கொள்ள இது மிகவும் அவசியமாக இருக்கிறது. நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப உணர்வதன் மேல் இன்றைய மனிதனுக்கு விருப்பம் ஏற்படுகிறது.
ஆனால் இது ஒரு மனநோய்தான். மற்றவர்களின் துன்பமே நமது மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பது ஒரு நோயல்லாமல் வேறென்ன? அடுத்த வீட்டுக்காரனின் வெற்றியும் தோல்வியுமே உனது கோபத்தையும் மகிழ்ச்சியையும் தீர்மானிப்பதாய் இருப்பது ஒரு அவலம்தான்.
மேலும் நாம் இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறோம். இதன் அடியில் உள்ள பயத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை நாமும் தெரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் பயத்தை உணரும்போதும் அதைக் கடப்பதற்கு நாம் சொல்லியும் தருவதில்லை. அதை அமுக்கி வைக்கும், மறைத்துக் கொள்ளும் வழிகளையே சொல்லித் தருகிறோம்.
நமக்கு வாழ்வின் இலக்கே மாறிப்போனது அல்லது மறந்துபோனதுதான் இந்நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தால், நமக்கு உறைத்தால் அப்போதுதான் விடிவு பிறக்கும். நிறைவு கிடைக்கும். நாம் திரும்பவும் வாழ ஆரம்பிப்போம். போதையை நோக்கியல்ல, சத்தியத்தை நோக்கி.
அன்பு,
சித்.