உள்ளுணர்வு தரும் செய்தியை கவனித்தல்
ஆழ்ந்த உறக்கத்திற்குப்பிறகு உன்னுடைய இருப்பின் அடித்தளத்தில் இருந்து தகவல்கள் வருவது சில நேரங்களில் நிகழும்.
முதல் படி – காலை எழுந்தவுடன் உன்னுள் எழும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பி. உறக்கத்தின் போது நீ உனது இருப்பின் அருகாமையில் இருப்பாய்.
எழுந்த இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் சில தகவல்கள் உனது இருப்பின் அடித்தளஅனுபவத்தில் இருந்து நீ பெறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. இரண்டு மூன்று நிமிடங்களில் அந்த தொடர்பு அறுந்து விடும். நீ திரும்பவும் இந்த உலகத்திற்கு வந்துவிடுவாய். இந்த உலகத்தினுள் வீசப்பட்டு விடுவாய்.
மனப்பதிவை திரும்பி பார்த்தல்
எப்போது – உறங்கப் போகுமுன்
முதல் படி – திரும்பிப்பார் – அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார். காலையில் இருந்து ஆரம்பிக்காதே. எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி. கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார். அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.
உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு. அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே. கோபப்பட்டு விடாதே. அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய். தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய். அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான். ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை. நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய். வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை. அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.
காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய். பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.
இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல். இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம். இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள். எதுவும் விடுபட்டுவிடாது. கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது.
தியான முறைகளை பற்றிய விளக்கங்கள்
வாழ்வே ஒரு சினிமாதான்
“……….மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிவகைகளை தேடாதே. நோக்கும் விதத்தை மாற்றிக் கொள். பார்வையை மாற்றிக் கொள். தீவிரமான மனதினால் சந்தோஷமாக இருக்க முடியாது. குதூகலமான மனதுடன் சந்தோஷமாக இருக்க முடியும். வாழ்வை ஒரு கதையாக, இதிகாசமாக எடுத்துக் கொள். இப்படி பார்க்க கற்றுக் கொண்டு விட்டால், பின் உன்னால் சந்தோஷமற்று இருக்க முடியாது. மகிழ்ச்சியற்ற தன்மை தீவிரமான தன்மையால் வருகிறது. ஏழு நாட்களுக்கு முயற்சி செய். ஒன்றை மட்டுமே நினைவில் வை. அதாவது இந்த உலகமே ஒரு நாடகம் என்பதை நினைவில் வைத்திருந்தால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். ஏழே நாட்கள்! நீ எதையும் இழக்கப் போவதில்லை. ஏனெனில் இழப்பதற்கு உன்னிடம் எதுவுமில்லை.
நீ முயற்சி செய்யலாம். ஒரு நாடகம் போல வாழ்வே ஒரு சினிமாதான் என்பது போல ஏழு நாட்கள் இருந்துபார். உனது உள்ளார்ந்த மாசற்ற தன்மையின், உனது புத்த இயல்பின் சிறிய அனுபவங்களை இந்த ஏழு நாட்கள் உனக்கு கொடுக்கும். ஒருமுறை நீ அனுபவம் பெற்று விட்டால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். நீ சந்தோஷமாக இருப்பாய். ஆனால் இது எந்தவகையான சந்தோஷம் என்று நீ அறியமாட்டாய். ஏனெனில் சந்தோஷம் என்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. மகிழ்ச்சியற்ற நிலைகளின் பல படிகள் உனக்குத் தெரியும். சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியற்று இருப்பாய், சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும். மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும் நிலையைத்தான் நீ மகிழ்ச்சி என்று அழைக்கிறாய்.
மகிழ்ச்சி என்றால் என்னவென்று உனக்குத் தெரியாததால், அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ மிகவும் தீவிரத்தோடு இருக்கும் இந்த உலகத்தில் மகிழ்ச்சியைப் பற்றிய ஒரு கருத்து மட்டுமே உள்ளது. அந்த கருத்தின் மூலம் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்று உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த உலகமே ஒரு விளையாட்டுதான் என்னும் இந்த நோக்கில் நீ வேரூன்றினால் மட்டுமே மகிழ்ச்சியை உன்னால் பெறமுடியும்.
அதனால் ஒவ்வொன்றையும் மகிழ்வோடு கொண்டாடும் விதமாக, நாடகத்தில் பங்கேற்கும் ஒரு கதைபாத்திரம் போல செய்ய முயற்சி செய். உண்மையென்று கொள்ளாமல் கதாபாத்திரமாக இருக்க முயற்சி செய். கணவன் போல என்றால் கணவன் போல நடி, மனைவி என்றால் மனைவி போல நடி. அதை ஒரு விளையாட்டாக செய். எந்த நாடகம் என்றாலும் கதாபாத்திரங்கள் வேண்டும், நடிப்பதற்கு நடிகர்களும் வேண்டும். திருமணம் என்றாலும், விவாகரத்து என்றாலும் எல்லாமும் நடிப்பதற்கான இடங்களே. ஆனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதே. பல விதிமுறைகள் இருக்கின்றன. ஒன்று ஒன்றால் உருவானது, விவாகரத்து மோசமான ஒரு விஷயம். ஏனெனில் அதற்கு முன்பான திருமணமே மோசமானது. ஒன்று ஒன்றால் உருவாகும். அதனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், எப்படி உனது வாழ்வின் தன்மை உடனடியாக மாறுகின்றது என்று பார்.
இன்று இரவு உனது வீட்டுக்கு போனபின் கணவனோ, மனைவியோ, குழந்தையோ உனது கதாபாத்திரம் நாடகத்தில் எதுவோ அந்த கதாபாத்திரமாக நடிக்க முயற்சி செய். பின் அது எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது என்று பார். நீ கதாபாத்திரமாக இருக்கும்போது திறமையோடு நடிக்க முயற்சி செய்வாய். ஆனால் அதனால் தொந்தரவுக்குள்ளாக மாட்டாய். அதனால் பாதிப்படைய மாட்டாய். அதற்கு தேவையிராது. நீ உனது பாகத்தை பூர்த்தி செய்துவிட்டு தூங்கப் போய்விடலாம். ஆனால் ஏழு நாட்களும் தொடர்ந்து இது ஒரு நாடகம் என்ற நினைப்பு உனக்குள் இருக்க வேண்டும்.
பின் மகிழ்ச்சி உன்னுள் மலரும். ஒருமுறை மகிழ்ச்சி என்றால் என்ன என்று நீ தெரிந்து கொண்டு விட்டால், மகிழ்வற்ற தன்மைக்குள் நீ போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் மகிழ்ச்சியோடு இருப்பதா, மகிழ்ச்சியற்று இருப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இப்போது உன் கையில் இருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றிய தவறான நோக்கை நீ தேர்ந்தெடுத்ததால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஒரு சரியான பார்வையை தேர்ந்தெடுத்தால் நீ மகிழ்வோடு இருப்பாய்.
சரியான பார்வை என்பதற்கு புத்தர் மிக முக்கியத்துவம் கொடுத்தார். சரியான பார்வை என்பதை ஒரு அடித்தளமாகவே ஒரு அஸ்திவாரமாகவே மாற்றினார். சரியான பார்வை என்பது என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? என்னைப் பொறுத்தவரை உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கு சரியான பார்வை. அது பொருளைப் பற்றியது அல்ல. உன்னைத் துயரத்திலும் துன்பத்திலும் வைத்திருக்கும் நோக்கு தவறான பார்வை. அடையாளம் பொருள் சார்ந்தது அல்ல. உனது மகிழ்வே அதன் அடையாளம்.
உண்மையான ஒன்று
நான் இந்த கணத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். ஏனெனில், இந்த கணம் அனைத்தையும் உள்ளடக்கியது. இப்போது என்பது மட்டுமே உண்மையான ஒன்று. மற்றவை யாவும் நினைவுகளாகவோ, கற்பனைகளாகவோ மட்டுமே உள்ளன. கடந்தகாலம் ஒரு நினைவாக தொடர்ந்து இருப்பதற்கு இப்போது தேவைப்படுகிறது. அது கடந்தகாலமாக இருப்பதில்லை. அது நிகழ்காலத்தில் ஒரு நினைப்பாக இருக்கிறது.
இதுதான் எதிர்காலத்திற்கும். எதிர்காலம் எதிர்காலமாக இருப்பதில்லை. அது ஒரு கற்பனையாக இந்த கணத்தில் இருக்கிறது. இருப்பவை யாவும் இப்போது மட்டுமே இருக்கிறது. இருக்கும் ஒரே காலம் நிகழ்காலம்தான்.