1.திடீரென விழிப்புணர்வடை 

கோபமாக இருக்கும்போதுகூட திடீரென நீ அதைப்பற்றிய விழிப்புணர்வு அடைந்தால் அது விழுந்துவிடும். முயற்சி செய்து பார். கோபம் உச்சியில் இருக்கும்போது, யாரையாவது கொலை செய்துவிடலாம் என்பது போல மிகவும் சூடாக இருக்கும் சமயம் திடீரென விழிப்படை, அப்போது ஏதோ ஒன்று மாறுதலடைவதை நீ உணர்வாய். ஒரு நிலைமாற்றம் – ஒரு அசைவை உன்னால் உணர முடியும். ஏதோ ஒன்று மாறும், இப்போது அது முன்பு இருந்ததுபோல இருக்காது, உன்னுடைய உள் இருப்பு நிலை தளர்வு பெற்று விட்டது, உனது வெளி வட்டம் தளர்வு பெற சிறிது நேரம் பிடிக்கலாம், ஆனால் உனது உள்ளிருப்பு ஏற்கனவே தளர்வடைந்துவிட்டது. அந்த தொடர்பு அறுந்து விட்டது, இப்போது நீ அதனுடன் அடையாளப்படுவதில்லை.

 

2.புகை பிடித்தலை தியானமாக செய் 

எவிவளவு புகை பிடிக்க விரும்புகிறாயோ அவ்வளவு புகை பிடி. ஆனால் அதை தியானமாக செய். ஜென் மக்கள் டீ குடித்தலை தியானமாக செய்யும்போது ஏன் நீ புகை பிடித்தலை தியானமாக செய்யக்கூடாது உண்மையில் சிகரெட்டில் என்ன பொருள் உள்ளதோ அதுவேதான் டீயிலும் உள்ளது. அதே தூண்டும் பொருள்தான் சிகரெட்டிலும் உள்ளது. அதிக வித்தாயாசமில்லை. புகை பிடித்தலை தியானமாக செய், மிகவும் பக்தியோடு செய். அதை ஒரு பிரார்த்தனையாக மாற்று. 

 

3.சுவாசத்தையும் வயிற்றையும் லயப்படுத்திக்கொள் 

சுவாசத்தைப் பற்றிய விழிப்பு கொள். சுவாசம் உள்ளே போகும்போது வயிறு வெளியே வரும், சுவாசம் வெளியே வரும்போது வயிறு உள்ளே போகும்.

வயிறு உள்ளே போவதையும் வெளியே வருவதையும் பற்றிய கவனம் கொள்.  மேலும் வயிறு உனது வாழ்வின் ஆதாரத்துடன் மிக நெருங்கி உள்ளது, ஏனெனில் ஒரு குழந்தை தனது தாயுடன் தொப்புள் மூலமாகத்தான் இணைக்கப்பட்டுள்ளது. அந்த தொப்புளில்தான் அவனது வாழ்வின் ஆதாரமே உள்ளது. அதனால் வயிறு வெளியே வரும்போது அது உண்மையிலேயே அது வாழ்வின் சக்தி, வாழ்வின் வசந்தம் எழுவதும் வீழ்வதும் ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிறது. நீ வயிறை பற்றிய உணர்வு அதிகம் பெற பெற மனம் அதிக அமைதியடையும், இதயம் சாந்தமாகும், மனோநிலை மாற்றமடையும், காணாமல் போகும்.