ஒரு நல்ல மகனாக . . . . . .என்பது பற்றிய ஓஷோ அன்பர் ஒருவரின் கேள்விக்கான ஓஷோ பதில் இந்த இதழில்

நீ இந்த சூத்திரத்தை படிக்கும்போது மிகவும் ஆச்சிரியப்படுவாய் ஆனால் இதற்கு மிகவும் அளவற்ற மதிப்பு உள்ளது.

நல்ல மகனாக, சகோதரனாக, சிறந்த துணையாக, நல்லதொரு தந்தையாக இரு.

இதற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று நீ நினைக்கலாம். ஆனால் இதற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் சம்பந்தம் உண்டு. நீ உன்னைச் சுற்றி நல்லதொரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் – அப்போதுதான் உன்னால் தியானத்தினுள் நுழைய முடியும். நீ ஒரு சக்தி தளத்தை, ஒரு சூழலை உருவாக்க வேண்டும். – அப்போதுதான் உன்னால் உள் நோக்கி செல்ல முடியும்.

பாண்டேன்பிளயா என்ற இடத்தில் இருக்கும் குருட்ஜிபின் ஸ்கூல் வாசல் கேட்டில் நீ உனது தந்தையின் கணக்கை சீர் செய்ய வில்லையென்றால் திரும்பி போ. என்று எழுதியிருக்கும். முதலில் உன் தந்தையின் கணக்கை சீர் செய்து விட்டு பிறகு வா. நீ உனது தந்தையை மதிக்க வில்லையென்றால் வளர்ச்சிக்கு வாய்ப்பேயில்லை. வினோதமாக இல்லை  ஏன் அதற்க்கும் தேடுதலுக்கும் என்ன சம்பந்தம்  வேறொரு முனையில் மனேதத்துவ வாதிகள் முதலில் உனது தாயுடன் கணக்கை சீர் செய்து கொள் என்று கூறுகிறார்கள். அதை முதலில் சீர் செய்யவில்லையென்றால் நீ சமன் படவே முடியாது. நீ பதட்டமாகவே இருப்பாய். உனது தாயுடன் உன் கணக்கை எப்படி அன்போடும், அருளோடும் சீர் செய்வது என்பது தான் மனேதத்துவவியலே.

பிதாகரஸ்தான் இதை முதலில் எளிதாக கூறியவர் ஒரு நல்ல மகனாக இரு. நல்ல மகன் என்றால் என்ன. மிகுந்த பணிவுடன் ஒரு அடிமையை போன்று இருப்பதா. நீ ஒரு அடிமையாக இருந்தால் நீ ஒரு நல்ல மகனல்ல. நீ மிகவும் பணிவுடன் இருந்தால் நீ நடிக்கிறாய். போலித்தனமாக இருக்கிறாய். அப்படியென்றால் நல்ல மகனாக இருப்பது என்றால் என்ன

மக்களிடம் கேட்டால் அப்பா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்பவன்தான் நல்ல மகன் என்று கூறுவர். அது அந்த அளவு சாதாரணமானது அல்ல. ஏனெனில் நீ வெளியே அதை அப்படியே செய்வாய், ஆனால் உள்ளே உள்ளத்தில் அதை எதிர்ப்பாய். குழந்தைகள் அதைத்தான் செய்கின்றனர். அவர்கள் ஆதரவற்றவர்கள், பெற்றோர் சொல்வது எதுவோ அதை செய்தாக வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ வெறுப்புடனேயோ அதை செய்தே தீர வேண்டும். இது அவர்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருமனமாய் மாறுகின்றனர். அவர்கள் போலியாய், பொய்யாய் இருக்க ஆரம்பிக்கின்றனர்.

ஆகவே தந்தை சொல்வதை கேட்டு நடந்து நல்ல மகனாக இருப்பது என்பது சாதாரணமான ஒரு வழி. ஆனால் பிதாகரஸ் கூறுவது அது அல்ல. அப்படியென்றால் தந்தைக்கு எதிராக புரட்சி செய்ய சொல்கிறாரா, தந்தைக்கு எதிராக போவதா, அவர் சொல்லும் எல்லாவற்றிற்க்கும் எதிர்பதமாக செய்வதா. ஹிப்பியாகவோ, யப்பியாகவோ அல்லது வேறு எதிர்பதமாகவோ இருப்பதா. அவர் தலைமயிரை வெட்டச் சொன்னால் முடியை வளர்ப்பதா, தினமும் குளி என்று அவர் கூறினால் குளிப்பதை வருடகணக்கில் மறந்து போவதா, சுத்தமாக இருப்பது இறைவனுக்கு உகந்தது என்று கூறினால் அழுக்காகவே இருப்பதும், அழுக்கை ஆண்டவன் நேசிக்க வேண்டும் என்று கூறுவதும் தானா. அப்படியில்லை, நல்ல மகனாக இருப்பது என்பதன் பொருள் அதுவல்ல.

உண்மையில் இரண்டாவது கூறியதுதான் அதிக அளவில் உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் முதலில் கூறியது அதிக நாட்கள் இருந்து விட்டது. பணிவை வலியுறுத்துவது ஒரு பாதிப்பை உருவாக்கும். பின் நல்ல மகன் என்பவன் யார்

நல்ல மகன் என்பவன் கவனத்தோடும், புரிதலோடும், மரியாதையோடும் இருப்பவன். தந்தை கூறுவது என்ன என்று கேட்பவன். ஏனெனில் அவர் வாழ்ந்திருக்கிறார், வாழ்வை அனுபவித்திருக்கிறார், அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. ஆகவே அவருக்கு அதிகம் தெரியும் என்பதால் அவர் சொல்வதை கேட்பவன். அவன் தந்தையை புரிந்து கொள்ள முயற்சி செய்வான். அவன் வெளிப்படையாக இருப்பான். அவன் பணிவதற்கோ, எதிர்ப்பதற்கோ அவசரப் படமாட்டான்.

நல்ல மகன் என்பவன் கேட்பதற்கு, புரிந்து கொள்வதற்கு, கற்பதற்கு தயாராக இருப்பவன். அப்போது உன்னால் உனது தந்தையுடன் ஒத்துப் போக முடிந்தால் ஒத்துப் போ. ஒத்துப் போக முடியாவிட்டால் அதை உன் தந்தையிடம் சொல். அப்போது எதிர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உன்னால் ஒத்துப் போக முடியவில்லையென்பதை தெளிவாக்கி விடு. நீ அதை செய்யலாம், ஆனால் அது கட்டாயத்தின் பேரில் தான் செய்யப்படுகிறது என்பதை சொல்லிவிடு. அது உன்னை போலியாக்கும். தந்தை விரும்பினால் நீ அதை செய்யக்கூடும், ஆனால் அது உன்னை பொய்யாக, பிளவு பட்டவனாக, கூறு பட்டவனாக மாற்றும். அது உள்ளே பிளவுபடுத்தி விடும்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நல்லதொரு தொடர்பு இருக்க வேண்டும். ஏனெனில் தந்தை இறந்த காலத்தின் பிரதிநிதி, மகன் எதிர்காலத்தின் பிரதிநிதி. ஒரு பாலம் தேவை. ஆனால் அது ஒரு பக்கம் சார்ந்ததாக இருக்கக்கூடாது. ஆகவே மகன் நல்ல மகனாக இருப்பது மட்டுமல்ல, தந்தையும் நல்ல தந்தையாக இருக்க வேண்டும். அவர் தியானம் எளிதாக மலரக் கூடிய ஒரு குடும்பசூழலை உருவாக்கித் தர வேண்டும்.

நல்ல மகன் என்பவன் கவனமாக இருப்பவனாகவும், தந்தை சொல்வது சரியென்று படும்போது தந்தைக்கு கீழ்படிபவனாகவும், சரியல்ல என்று படும்போது நான் அதை செய்ய விரும்பவில்லை, அது தவறானது, போலியானது என்று கூறுபவனாகவும் இருக்க வேண்டும். அவனால் தீர்மானிக்க முடியாத போது தந்தை சொல்வதை கேட்க தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் அவனால் சரி என்றோ தவறு என்றோ தீர்மானிக்க முடியாத சில செயல்கள் உள்ளன. அப்போது தந்தையை பின்பற்ற வேண்டும், அவருக்கு அதிகம் தெரியும்.

தந்தை கடந்த காலத்தை பிரதிபலிப்பவர். அவர் இது வரை வாழ்ந்த எல்லா தந்தைகளின் பிரதிநிதிதான். தந்தை என்பவர் உன்னை விட அதிக நாட்கள் வாழ்ந்த, உன்னை விட அதிக அனுபவம் வாய்ந்த – ஆசிரியர்கள், மூத்தோர்கள் போன்றோருக்கு ஒரு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் – ஒருவராவர். அவர்கள் வாழ்ந்த வாழ்வுக்கு, அவர்களது அனுபவத்திற்கு மரியாதை தருதல் வேண்டும்.

அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டியதும் இல்லை. புரிதல் மட்டுமே தேவை. கீழ்படிதலோ எதிர்செயலோ தேவை இல்லை. கீழ்படிதல் புரிதலின் மூலம் வந்தால் மிகவும் அழகானது. சிலசமயங்களில் கிளர்ச்சி புரிதலின் மூலம் வந்தாலும் அதுவும் அழகானதே. ஆனால் அது புரிதலின் மூலம்தான் வர வேண்டும். எதிர் செயலாக அது வரக்கூடாது, புரிதலின் மூலம் மட்டுமே அது வர வேண்டும்.

சிலர் அவர்களது தந்தை செய்யச் சொன்னதால் மட்டுமே அந்த செயலை செய்யவே மாட்டார்கள். அவர்களால் எப்படி செய்ய முடியும் அவர்களது தந்தை செய்ய சொன்னதால் மட்டுமே அவர்களால் அதை செய்ய முடியாது அவர்கள் அதற்கு நேர் எதிரானதை மட்டுமே செய்வார்கள். அவர்களது அகங்காரம் பிளவுபட்டிருக்கும். இன்னும் சிலர் அது தவறு என்று தெரிந்தாலும்கூட அவர்கள் அதை செய்வார்கள், ஏனெனில் அவர்களின் தந்தை அதை செய்ய சொல்லியிருக்கிறார். இருவரின் செயல்களுமே தவறு.

நல்ல மகன் என்பவன் எந்த குழப்பமுமில்லாமல், மரியாதையோடு, திறந்த மனதோடு, முன்னோர்களின் உருவமாக தன் முன் இருக்கும் தனது தந்தை சொல்வதை புரிந்துகொள்ள முயற்சி செய்வான். இதன்பின் அதை செய்வதா இல்லை செய்யாமல் இருப்பதா என்று அவனது இருப்பிலிருந்து எழும் முடிவின்படி செயல்படுவான். அது எதிர்வினையுமல்ல, கீழ்படிதலுமல்ல. அது புரிதலின்மூலம் வரும் செயலாகும்.

ஒரு சகோதரனாக இரு…. உன் தம்பி தங்கை வயதுடையோரிடம் நட்பாக இரு, சண்டையிடாதே. ஏமாற்ற முயற்சிக்காதே. ஏனெனில் ஏமாற்றுவது உன்னிடம் ஒரு பதட்டத்தை உண்டாக்கும். உன்னைச் சுற்றி நட்புணர்வை உண்டாக்கிக்கொள். ஏனெனில் வளர்ச்சி ஒரு நட்பான சூழ்நிலையில்தான் எளிதாக இருக்கும்.

வளைந்து கொடுக்கும் இணையாக இரு… உனது கணவனுடன், உனது மனைவியுடன் மிருதுவாக, வளைந்து கொடுப்பவனாக இரு. ஏனெனில் அன்பிற்கு மறுபக்கம் வெறுப்பு இருக்கிறது. வளைந்து கொடுப்பது, மிருதுவாக இருப்பது அன்பாக இருப்பது என்றால் என்ன என்று நீ புரிந்துகொள்ளாவிட்டால் அன்பு உன்னுள் மிகப் பெரிய வெறுப்பை கொண்டு வந்துவிடும்.

மக்கள் தாங்கள் விரும்பும் ஆளை வெறுக்கவும் செய்கிறார்கள். அந்த வெறுப்பு அன்பு அனைத்தையும் கெடுத்துவிடுகிறது. அது நேசிப்பதற்க்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் பாழ்படுத்தி விடுகிறது. மேலும் அன்பு என்பது மிகப் பெரிய விஷயம். நேசிக்காத ஒருமனிதனுக்கு பிரார்த்தனை என்றால் என்னவென்றே தெரியாது, அவனால் ஒருபோதும் பிரார்த்தனை செய்யவே முடியாது. நேசிக்கும் அனுபவம் ஒன்றுதான் உன்னை பிரார்த்தனைக்கு தயார் படுத்தும்.

துணையுடன் இணைந்து போ…. உன் துணையை மிகவும் அழகுடன் இயைந்து நேசி. அது இந்த உலகிலிருந்து மறைந்து போய் விட்டது. மக்களின் உறவு மிகவும் அழகற்றதாகிவிட்டது. அவர்கள் இயைந்து போவது என்ற வார்த்தையையே முழுமையாக இழந்து விட்டனர். அவர்களது நேசம் முழுவதும் வெறுப்பும் கோபமும் வெறியும்தான் இருக்கிறது.

கடவுள் இந்த தேசத்தில் இறந்து போவதற்க்கு இதுவும் ஒரு காரணம். நேசம் மறைந்துவிட்டது. பிரார்த்தனை எழ முடியாது. நேசம் ஒரு மலர், அதிலிருந்து எனும் நறுமணம்தான் பிரார்த்தனை. மலரே அங்கில்லையென்றால் மணம் இருக்க முடியாது.

நல்லதொரு தந்தை….. உனது முறையில் சுழற்சி முழுமை பெற்று விடும். ஒரு நல்ல தந்தையாக இரு. நல்ல தந்தையாக இருப்பது என்றால் என்ன எதையும் உனது குழந்தை மீது திணிக்காதே. உனது நேசத்தை கொடு, உனது புரிதலைக் கொடு, ஆனால் எப்போதும் முடிவெடுப்பது குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி விடு. அவன் கேட்க விரும்பினால் கேட்கட்டும், ஆனால் அவன்தான் முடிவெடுக்கவேண்டும். செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தால் அது அவன் விருப்பம். ஆனால் அதுவும் அவன் முடிவுதான். எல்லாவற்றையும் அவனிடம் தெளிவுபடுத்தி விடு. நீ அவனை நேசிப்பதால் உன்னுடைய அனுபவத்தை அவனிடம் கொடுக்கிறாய், ஆனால் கட்டாயப்படுத்தாதே. ஆணையிடாதே. அவனை புரிந்து கொள்ள விடு. புரிந்து கொள்ளுதல் ஒன்றே வழி, விதி. அவன் அவனுடைய புரிதலை பின்பற்றட்டும்.

இப்போது உன்னால் தந்தை என்பவர் ஒரு உதவியாளனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். தந்தை தான் விரும்பும் வகையில் குறிப்பிட்ட விதத்தில் தன் குழந்தையை வளைப்பவராக இருக்கக்கூடாது. அவர் தனது சொந்த விருப்பங்களுக்கு குழந்தையை உபயோகப்படுத்தக்கூடாது. அவர் குழந்தையை நேசிக்க வேண்டும், அவனை சக்தியுள்ளவாக வேண்டும், அவனை மேலும் கவனமுள்ளவனாக்க வேண்டும். அப்போதுதான் அவன் வாழ்வில் தனது வழியை கண்டறிய முடியும். மேலும் மேலும் சுதந்திரமானவனாக்க வேண்டும்.

நல்ல தந்தை என்பவர் குழந்தையை பிடித்து வைத்துக் கொள்ள மாட்டார். அவன் தன்னைத்தான் சார்ந்திருக்க வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்த மாட்டார். மேலும் தந்தை நல்லவராக இருந்தால் மகனும் நல்லவனாகத்தான் இருப்பான். ஏனெனில் அவன் எந்த அடிமைத்தனத்திலும் இருக்கவில்லை. எனவே அவன் எந்த எதிர்செயலும் புரிய மாட்டான்.

மேலும் நீ ஒரு நல்ல மகனாக இருந்தால் நீ தந்தையாகும் நாள் வரும்போது நல்லதொரு தந்தையாகத்தான் இருப்பாய்.

நாம் வாழும் இடம், குடும்ப சூழல் இப்படித்தான் இருக்க வேண்டும். அந்த இடம் அன்னியோன்யம், நேசம், பாசம், அழகு கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தியானம் எளிதாகும், ஆன்மீக வளர்ச்சி உயர்நிலையடையும்.         

source: philosophia pernnis, vol:1 chapter # 1 che. title : The Greastest luxury