விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட
ஓஷோ பதில்களை 3-ம் மாதமாக தொடர்ந்து அளிக்கிறோம்.
மன இறுக்கமும் ஓய்வும்
இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள். ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால், வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.
இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது. அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும். ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும். ஆனால் நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள். இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது. முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்னை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும். நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே, நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன் என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள். ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது. அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது. அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது. அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.
இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி. அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள். அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது. அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.
ஓய்வாக இருங்கள். கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது. எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.
பதற்றம் என்பது என்ன, பதற்றம் என்பது நீங்கள் உங்களது எண்ணங்கள் பயங்கள் இவற்றோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும். மரணம், திவால், டாலர் மதிப்பு வீழ்ச்சி இப்படி எல்லாவிதமான பயமும் இருக்கிறது. இவைகள்தான் உங்களது பதற்றம் மேலும், இவை உங்களது உடலையும் பாதிக்கின்றன. உங்களது உடலும் பதற்றம் அடைகிறது. ஏனெனில் உடல் மற்றும் மனம் என்பது, இரண்டும் தனித்தனியாக இருப்பவை அல்ல. உடல் மனம் என்பது ஒரே அமைப்புதான். ஆகவே மனம் பதற்றம் அடையும்போது உங்களது உடலும் பதற்றம் அடைகிறது.
நீங்கள் முதலில் விழிப்புணர்வுடன் ஆரம்பிக்கலாம். அதன்பின்னர் இந்த விழிப்புணர்வு உங்களை உங்களது மனத்திலிருந்தும், மனதோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் இருந்தும் வெளியே எடுத்துவிடுகிறது. உடனே இயல்பாக உங்களது உடல் ஓய்வுடன் இருக்க ஆரம்பித்துவிடும். அப்போது நீங்கள் எதோடும் பற்றிக் கொண்டு இருக்க மாட்டீர்கள். மேலும் விழிப்புணர்வு என்னும் வெளிச்சத்தில் பதற்றம் என்பது இருக்கமுடியாது.
அதே போன்று, நீங்கள் அடுத்த பக்கத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம். வெறுமனே தளர்வுடன் இருங்கள். ஓய்வுடன் இருங்கள். அப்போது தானாகவே எல்லாப் பதற்றமும் விட்டு விலகிவிடும். மேலும், நீங்கள் ஓய்வாக இருக்க ஆரம்பித்துவிட்டால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவைகள் பிரிக்கமுடியாதவை. ஆனால் விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது சுலபம், ஓய்வாக இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கொஞ்சம் கடினம். ஏனெனில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சியே ஒரு குறிப்பிட்ட பதற்றத்தைக் கொடுத்துவிடும்.
அமெரிக்காவில் ஒரு புத்தகம் உள்ளது – நீங்கள் முட்டாள்தனமான புத்தகங்களை காண விரும்பினால் அதற்கான இடம் அமெரிக்காதான். அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த புத்தகத்தின் தலைப்பு You must Relax ( நீங்கள் கண்டிப்பாக ஓய்வுடன் இருக்க வேண்டும்) இப்போது அங்கே must ( கண்டிப்பாக ) என்பது இருந்தால், உங்களால் எப்படி ஓய்வுடன் இருக்கமுடியும், அந்த கண்டிப்பாக என்பதே உங்களைப் பதற்றமாக்கி விடும். அந்த வார்த்தையே உடனடியாக உங்களிடம் பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அந்த கண்டிப்பாக என்னும் வார்த்தை, ஏதோ கடவுளிடம் இருந்து வந்த வார்த்தை போல பதற்றம் அடைந்துவிடுவீர்கள். ஒருவேளை, அந்தப் புத்தகத்தை எழுதியவர், ஓய்வாக இருப்பது என்பதைப் பற்றியும், ஓய்வாக இருப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் ஒன்றுமே அறியாதவர் போல் தெரிகிறது.
கீழைநாடுகளில் நாங்கள் ஓய்வாக இருப்பதில் இருந்து ஒருபோதும் தியானத்தை ஆரம்பித்ததில்லை. நாங்கள் விழிப்புணர்வில் இருந்துதான் தியானத்தை ஆரம்பிக்கிறோம். அதன்பிறகு, ஓய்வு என்பது அதுவாகவே, தானாகவே வந்து விடுகிறது. நீங்கள் ஓய்வை கொண்டு வர வேண்டியதில்லை. நீங்கள் அதைக் கொண்டு வர வேண்டுமெனில் அங்கே ஒருவித பதற்றம் இருக்கும். அது தானாகவே வரவேண்டும். அப்போதுதான் அது சுத்தமான ஓய்வு நிலையாக இருக்கும். மேலும் அது வரும்.
நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் ஓய்வாக இருப்பதில் இருந்தே கூட ஆரம்பிக்கலாம். ஆனால் அந்த அமெரிக்க அறிவுரையாளர்களைப் போல இருக்காதீர்கள். நமது உள் உலக அனுபவத்தைப் பொருத்தமட்டில் இந்த பூமியில் அமெரிக்கா மிகவும் குழந்தைதனமான இடத்தில் உள்ளது. ஐரோப்பா கொஞ்சம் வயதானதாக உள்ளது. ஆனால் கீழைநாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அக ஆன்மாவின் தேடுதலில் வாழ்ந்து வருகிறது.
அமெரிக்காவானது நாடு என்று பார்த்தால் அதற்கு 300 வருடங்கள் மட்டுமே ஆகிறது. எனவே அந்த 300 வருடங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. எனவே அமெரிக்காதான் இந்த உலகின் மிகப்பெரிய அபாயம். குழந்தைகளின் கையில் அணுஆயுதங்கள்…….. ரஷ்யா கொஞ்சம் அதிக பகுத்தறிவுடன் நடந்து கொள்ளும். அது ஒரு வயதான பழமை வாய்ந்த நாடு. மேலும் அதற்கு ஒரு நீண்ட வரலாற்றின் அனுபவமும் உள்ளது. அமெரிக்காவிற்கு என்று எந்த சரித்திரமும் கிடையாது. அங்குள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையின் பெயர், தந்தையின் முன்னோர்கள் பெயர் ஆகியவைதான் தெரியும். அவ்வளவுதான். அங்கே அவர்களின் குடும்ப மரத்தின் கிளைகள் நின்று விடும்.
அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான். சரியாக சொன்னால் கைக்குழந்தை கூட அல்ல. அது இன்னும் கருவறையில்தான் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமுதாயங்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா இப்போதுதான் கருவுற்றிருப்பது போன்றது. எனவே, இந்த மக்களிடம் அணு ஆயுதங்களைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.
இங்கே அரசியல், மத, சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. அவைகள் எல்லாம் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கடினமானது. அதனால்தான் கீழைநாடுகளில் நாங்கள் முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பதில்லை. ஆனால் நீங்கள் அப்படி ஆரம்பிக்க விரும்பினால், நீங்கள் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன. நான் மேலைநாட்டு மக்களிடம் பழகி வந்துள்ளேன். மேலும் அவர்கள் இந்த கீழைநாட்டிற்குச் சொந்தமானவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்கு நமது கீழைநாட்டின் தன்னுணர்வு என்னும் சக்தியினைப் பற்றி தெரியாது என்பதையும் நான் அறிவேன். விழிப்புணர்வு என்று எதையும் ஒருபோதும் அறிந்திராத ஒரு வித்தியாசமான பாரம்பரியத்தில் இருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மேலைநாட்டினருக்காக, நான் Dynamic Meditation (டைனமிக் தியானம்) போன்ற தியானங்களை உருவாக்கி இருக்கிறேன். மேலும் தியான முகாம்களை நான் நடத்தி வந்தபோது, நான் ஜிப்ரிஷ் தியானம் மற்றும் குண்டலினிதியானம் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளேன். எனவே, நீங்கள் ஆரம்பத்தில் ஓய்வாக தியானம் செய்வதை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் மேற்கூறிய தியானங்களை நீங்கள் செய்ய வேண்டும். அவைகள் உங்களது மனதிலும், உடலிலும் உள்ள பதற்றத்தை எடுத்துவிடுவதால், அதன்பிறகு நீங்கள் ஓய்வுடன் இருப்பது சுலபம். நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனவே, அந்த விஷயங்கள்தான் உங்களின் பதற்றத்திற்கு காரணங்கள்.
நான் மலைப்பிரதேசங்களில் ஜிப்ரிஷ் தியானத்தை நடத்தும்போது ……….இந்த தியானத்தை நகரங்களில் அனுமதிப்பது கடினம். ஏனெனில் உங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில், எங்களது முழு வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அவர்களும் அவர்களுடைய வீடுகளில் இந்த தியானத்தைச் செய்தால், இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பைத்தியகாரத்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம் என்பதை அந்த பக்கத்து வீட்டு மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களது பைத்தியகாரத்தனமே முதலில் அவர்களுக்குத் தெரியாது.
ஜிப்ரிஷ் தியானம் என்பது ஒவ்வொருவரும் தங்களது மனதிற்குள் என்னவெல்லாம் வருகிறதோ, அதையெல்லாம் சத்தமாக வெளியே சொல்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும், இப்படி மக்கள் சம்பந்தம் இல்லாமல் முட்டாள்தனமாக உளருவதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது நான் மட்டுமே சாட்சியாக இருப்பேன். மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்து கொண்டிருப்பார்கள். மேலும், இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நீங்கள் வேறு யாரையும் தொடக் கூடாது என்பதுதான். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யலாம் – சிலர் தலைகீழாக நின்றுகொண்டிருப்பார்கள், சிலர் தங்களது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார்கள், சுற்றிலும் ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அந்த ஒருமணி நேரமும் இப்படி இருப்பார்கள்.
அப்போது, ஒருவர் எனது முன்னால் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவர் ஒரு பங்குச் சந்தை தரகரோ அல்லது வேறு எதுவோ தெரியாது. ஆனால், தியானம் ஆரம்பித்த உடன், முதலில் அவர் சிரிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்து அவரே சிரிப்பார். அதன்பின்னர், தனது தொலைபேசியை எடுத்து ஹலோ, ஹலோ…. என்று பேசுவார். அவரது ஓரக்கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும், அவரது தியானத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். அவர் தொலைபேசியில் அவரது பங்குச் சந்தை பங்குகளை விற்பார், வாங்குவார்….. அந்த ஒருமணி நேரமும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பார்.
ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் உள்ளடக்கி வைத்திருந்த விநோதமான செயல்களைச் செய்வார்கள். அந்த தியானம் முடியும்போது, அதில் பத்து நிமிட ஓய்வு இருக்கும். மேலும், அப்போது அந்த பத்து நிமிடத்தில் அந்த மக்கள் முற்றிலும் களைப்பாக இருப்பதால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் கீழே படுத்துக் கிடப்பதைக் காண முடியும். எல்லா குப்பைகளும் வெளியேற்றப் பட்டு விட்டதால், அவர்களுக்குள் ஒரு சுத்தமான தன்மை உருவாகிவிடுவதால், அவர்கள் ஓய்வுடன் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். ஆனால், உங்களால் அங்கு ஆயிரகணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மக்கள் என்னிடம் வந்து, அந்த பத்து நிமிடத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியுங்களேன். ஏனெனில் எங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு ஓய்வு நிளையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. விழிப்புணர்வு என்றால் என்னவென்று நாம் எப்போதாவது புரிந்துகொள்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால் அந்த விழிப்புணர்வு வருவதை எங்களால் உணர முடிந்தது. என்று கூறுவார்கள்.
ஜிப்பரிஷ் என்கிற இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது ஜாப்பர் என்னும் சூபி ஞானியின் பெயரில் இருந்து வந்தது. மேலும் அதுதான் அந்த ஞானியின் தியானமாகவும் இருந்தது. யார் அவரிடம் வந்தாலும், அவர்களிடம் அவர், கீழே உட்காருங்கள் இப்போது ஆரம்பியுங்கள் என்று கூறுவார். மேலும் மக்களுக்கும் அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று புரியும். அவர் ஒருபோதும் பேசியதில்லை. ஒருபோதும் சொற்பொழிவாற்றியதில்லை. அவர் வெறுமனே மக்களிடம் ஜிப்ரிஷ் தியானத்தை கற்பித்து வந்தார்.
உதாரணத்திற்காக, எப்போதாவது அவர் அந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று செய்து காட்டுவார். அரைமணி நேரம் அவர் எல்லாவிதமான அர்த்தமற்ற வார்த்தைகளையும், யாருக்கும் என்ன பாஷை என்று புரியாத ஒரு பாஷையில் பேசுவார். அது ஒரு பாஷை கிடையாது. அவர் மனதில் என்னவெல்லாம் வருகின்றதோ, அதையெல்லாம் அவர் பேசிக் கொண்டே போவார். அதுதான் அவரது ஒரே போதனையாக இருந்தது. மேலும், அதைப் பற்றி புரிந்தவர்களிடம் அவர், கீழே உட்கார்ந்து ஆரம்பியுங்கள் என்று கூறுவார்.
ஆனால் ஜாப்பர், அநேக மக்கள் முழுமையான அமைதியுடன் இருப்பதற்கு உதவினார். உங்கள் மனதால் எவ்வளவு நேரம்தான் பேசமுடியும் எனவே அது காலியாகிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆழ்ந்த வெறுமை மேலும் அந்த ஆழ்ந்த வெறுமையில் விழிப்புணர்வு என்னும் ஒரு ஒளிச்சுடர். அது எப்போதும் இந்த ஜிப்பரிஷ்ஷால் சூழப்பட்டு தான் இருந்தது. இந்த ஜிப்ரிஷ்ஷை நீங்கள் வெளியே எடுத்துவிட வேண்டும். அதுதான் உங்களின் விஷம்.
இதே உண்மை, உங்களது உடலுக்கும் பொருந்தும். உங்களது உடலிலும் பதற்றங்கள் உள்ளன. உங்களது உடல் எந்தவிதமான அசைவுகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ, அந்தவிதமான அசைவுகளை வெறுமனே செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் அதை செய்யும்படி தூண்டக்கூடாது. அது நடனமாட விரும்பலாம். அது குதிக்க விரும்பலாம், அது ஓடுவதற்கு விரும்பலாம், அது தரையில் உருள விரும்பலாம், எதுவாக இருந்தாலும் நீங்களாக அதைச் செய்யக் கூடாது. நீங்கள் வெறுமனே அதைச் செய்வதற்கு அனுமதியுங்கள். உங்களது உடலிடம், நீ சுதந்திரமடைந்துவிட்டால் என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் செய் என்று மட்டும் கூறிவிடுங்கள். அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அடக் கடவுளே, இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் எனது உடல் செய்வதற்கு ஆசைப் பட்டுள்ளது. ஆனால், நான் அதை எனக்குள் அடக்கி வைத்திருக்கிறேன். மேலும், அதுதான் எனது உடல் முறுக்கேறி இருப்பதற்கான காரணம். என்று அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.
ஆகவே இரணடு வகையான பதற்றங்கள் இருக்கின்றன. உடல் பதற்றம், மற்றும் மனப்பதற்றம். நீங்கள் ஓய்வுடன் தியானம் செய்வதற்கு முன்பு இந்த இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் விழிப்புணர்வு கொண்டு வரப்படும். ஆனால், விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது ரொம்பவும் சுலபமானது. அதிலும் குறிப்பாக, மிகவும் எளிமையான விழிப்புணர்வு என்னும் செயல்முறையைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. நாள் முழுவதும் நீங்கள் சில விஷயங்களில் அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலிலும் கூட நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் பைத்தியகாரத்தனமாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, நான் ஏதென்ஸ் நகரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அங்கே டாக்ஸி ஓட்டுபவர்களுக்காக அரசு ஏழு நாட்கள் கொண்ட ஒரு சிறப்பு போட்டியை நடத்தியது. அதில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் மிகச் சிறந்த மூன்று ஓட்டுநர்களுக்கு, அவர்கள் தங்கக் கோப்பைகளை கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் ஏதென்ஸ் நகர் முழுவதிலும் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் மிகுந்த கவலை அடைந்தனர். அந்த ஏழு நாட்களும், கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, கடைசி நாளில், எப்படியாவது மூன்று ஓட்டுநர்களை அவர்கள் முற்றிலும் பின்பற்றாவிட்டாலும் கூட அவர்களுக்கு அந்தப் பரிசை கொடுப்பதற்கு நினைத்தனர்.
ஒரு ஆள் மிகவும் சரியாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஓட்டினார். அவரைக் கண்டவுடன் காவல்துறையினர் சந்தோஷம் அடைந்தனர். அப்போது அவருக்கு அந்த கோப்பையைக் கொடுப்பதற்காக காவல்துறையினர் ஓடினார்கள். ஆனால் காவல்துறையினர் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த அந்த மனிதர் சிவப்பு விளக்கு எரிந்தாலும்கூட டாக்ஸியை ஓட்டிக் கொண்டு ஓடியே போய்விட்டார். யார்தான் தேவையில்லாமல் சங்கடத்தில் மாட்டிக் கொள்ள விரும்புவார்கள் காவல்துறையினர் பொறு பொறு என்று கத்தினார்கள். ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. அவர் உடனடியாக சிவப்பு விளக்கிற்கு எதிராக ஓட்டிக் கொண்டு போய்விட்டார். மேலும், இரண்டு மனிதர்களிடமும் அந்த காவல்துறையினர் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த காவல்துறையினரைப் பார்த்தவுடன் யாரும் நிறுத்தவில்லை. எனவே ஏழு நாட்கள் முயற்சிக்குப் பிறகு அந்த மூன்று பரிசுகளும் இன்னமும் காவல்துறையினரின் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஏதென்ஸ் நகரமோ எப்போதும் போல மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது……
உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் அதை வெளியில் உள்ள விஷயங்களில் மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.
அதே விழிப்புணர்வைத்தான் நீங்கள் உங்களது மனதிற்குள் நடக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கண்களை மூடியவுடன், அங்கே எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் இப்படி ஏகப்பட்ட போக்குவரத்து உள்ளே நடக்கிறது. எல்லா வகையான விஷயங்களும் வெளிச்சம் போட ஆரம்பிக்கின்றன. நீங்கள் வெளி உலகில் உள்ள போக்குவரத்திற்கு என்ன செய்தீர்களோ அதே செயலை சரியாக உங்களது உள் உலகத்திலும் செய்யுங்கள். அப்போது நீங்கள் ஒரு சாட்சியாக மாறிவிடுவீர்கள். மேலும் இதை நீங்கள் ஒருமுறை ருசித்துவிட்டால் போதும், சாட்சியாக இருப்பதில் கிடைக்கின்ற இந்த மகிழ்ச்சி மிகவும் பெரியதாகவும், அடுத்த உலகத்தை சேர்ந்ததாகவும் இருப்பதால், நீங்கள் இன்னும் அதிகமான அளவு உள்ளே போவதற்கு விரும்புவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் மேலும் மேலும் உங்களுக்குள் செல்ல விரும்புவீர்கள்.
இதற்கு எந்த ஆசனத்தில் உட்கார வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அல்லது தேவாலயத்திற்கோ யூதமத கோவிலுக்கோ போக வேண்டியதில்லை. பொதுமக்கள் பயணம் செய்கின்ற ஒரு பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது ரயில் வண்டியில் பயணிக்கும்போதோ நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லாதபோது வெறுமனே உங்களது கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்படி மூடிக் கொள்வதால் வெளியில் பார்த்துக் கொண்டே செல்வதன்மூலம் உங்களது கண்கள் களைப்படைவதில் இருந்து அது பாதுகாக்கும். மேலும் அது உங்களுக்குள் நீங்கள் கவனிப்பதற்கு போதுமான நேரத்தையும் கொடுக்கும். அத்தகைய தருணங்கள் மிகவும் அழகான அனுபவங்கள் ஏற்படுகின்ற தருணங்களாக ஆகிவிடும்.
மேலும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்களது விழிப்புணர்வு வளர்ச்சி அடையும்போது உங்களது தனிமனிதப் பண்பு மாற்றம் காண ஆரம்பிக்கும். விழிப்புணர்வு அற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு உள்ள நிலைக்குச் செல்வதுதான் மிகப் பெரிய தாவுதல் ஆகும்.
மூலம்: விழிப்புணர்வு – நோய்கள் பல மருந்து ஒன்று – பக்கம் 115