அடுத்தபடியாக, நீங்கள் அறிந்து கொள்ளும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு சாட்சி என்பது ஆகும். கனவு அங்கே இருக்கும். ஆனால் நீங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களது மனதின் ஒரு பகுதியாக அங்கு இருக்க மாட்டீர்கள். நீங்கள் அதைக் கடந்த நிலையில் இருப்பீர்கள். நீங்கள் மனதில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனதாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் மனதின் மூலமாக பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனம் அல்ல. நீங்கள் அந்த மனதைப் பயன்படுத்துவீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனம் அல்ல. திடீரென்று நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்கள், ஒருபோதும் மனமாக இருக்க மாட்டீர்கள்.

மேலும், இந்த சாட்சி நிலைதான் இறுதியான, முடிவான அறிதல் ஆகும். அதன்பிறகு, நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா அல்லது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா என்பது எந்த வேறுபாட்டையும் உருவாக்காது. நீங்கள் ஒரு சாட்சியாகவே இருப்பீர்கள். நீங்கள் இந்த உலகில் இருப்பீர்கள், ஆனால் இந்த உலகம் இனி எப்போதும் உங்களுக்குள் நுழைய முடியாது. பொருட்கள் இங்கே இருக்கும், ஆனால் உங்களது மனம் பொருட்களில் இருக்காது, பொருட்களும் மனதில் இருக்காது. திடீரென்று சாட்சியாளன் உள்ளே வந்துவிடும்போது எல்லாமே மாறிவிடும்.

நீங்கள் இந்த சாமர்த்தியத்தை அறிந்து கொண்டால், அதன்பின்னர் இது சுலபமானதாக இருக்கும். இல்லையெனில் இது கடினமானதாக தோன்றும். கிட்டத்தட்ட சாத்தியப்படாத ஒன்றாகத் தெரியும். கனவு காணும்போது விழித்திருப்பது எப்படி இது சாத்தியமில்லாதது போலத் தெரியும். ஆனால் அது அப்படி அல்ல. அதற்கு மூன்றிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை ஆகும். ஒவ்வொரு நாள் இரவும் நீங்கள் தூங்கப் போகும்போது, தூக்கத்தில் விழும்போது, நீங்கள் அதை கவனிப்பதற்க்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்க்கும் முயற்சி செய்யுங்கள்.

ஆனால் செயல் என்ற அளவில் உஷாராக இருப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களால் தூங்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். செயலற்ற அமைதியான விழிப்புணர்வுடன் தளர்வுடன், இயல்பாக, ஓய்வாக உங்களது ஓரக் கண்ணால் பார்ப்பது போல செயல்படுங்கள். அது குறித்து அதிக செயலில் இறங்காதீர்கள். அதிகம் அக்கறையற்ற, வெறுமனே அமைதியான விழிப்புணர்வுடன் இருங்கள். நதியின் கரையில் உட்கார்ந்து கொண்டு, அந்த நதி ஓடுவதைப் பார்ப்பது போல வெறுமனே பார்த்துக் கொண்டு இருங்கள். இதற்கு மூன்று முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் இந்த தூக்கம் என்பது ஒரு இருட்டுத் திரையைப் போல உங்கள் மீது விழும். சூரியன் மறைந்து இரவு வருவதைப் போல அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் பாயும். ஆனால் உங்களுக்குள் ஆழத்தில் ஒரு ஒளிச்சுடர் எரிந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அப்போது அமைதியாக, மௌனமாக கவனித்துக் கொண்டிருப்பீர்கள். அதன்பின்னர் உங்களது கனவு உலகம் ஆரம்பிக்கும். அதன்பின் அநேக நாடகங்கள், அநேக மனநாடகங்கள் நடக்கும். ஆனால் நீங்கள் அவற்றை கவனித்துக் கொண்டே இருப்பீர்கள். போகப் போக இந்த வேறுபாடு உங்களிடம் வந்துவிடும். இப்போது உங்களால் அது என்ன வகை கனவு என்று கண்டு கொள்ள முடியும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும்போதும் கூட இது நடப்பதை அறிவீர்கள். அதன் தன்மையில் வேறுபாடு இருக்காது. இந்த முழு உலகமும் கற்பனை போன்று ஆகிவிடும். மேலும், இந்த உலகம் கற்பனையானதாக ஆகிவிடும்போது, அதன் சாட்சியாளன் மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

மூலம்: விழிப்புணர்வு –அத்தி.- கவனித்தலில் பரிசோதனைகள் செய்