ஒருமுகப்படுத்துதலும் தளர்வும்

உன்னுள் தளர்வடை, கண்களை மூடி வெளியே நிகழும் அனைத்தையும் கவனி. எதையும் திசை திருப்புதலாக உணர வேண்டியதில்லை.

உன் உள்ளே கவனத்தை ஒருமுகப்படுத்தும் எந்த தியானமும் தவறு. – அதன் வெளிப்பாடு
கருணையாக இராது. நீ மேலும் மேலும் திறந்தவனாக மாறுவதற்கு பதிலாக மூடியவனாக மாறுவாய். நீ உனது தன்னுணர்வை எதன் மீதாவது ஒருமுகப்படுத்துதலாக குவிக்கும் போது இந்த பிரபஞ்சம் முழுவதையும் வெளியே விட்டு ஒரு முனைப் புள்ளியாக மாறும்போது அது மேலும் மேலும் உன்னுள் பதட்டத்தை உருவாக்கும். அதனால்தான் அட்டேன்ஷன் என்ற ஆங்கில வார்த்தை உருவானது. அதன் பொருள் அட் – டென்ஷன். கவனக்குவிப்பு என்ற இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே அது உனக்கு ஒரு வகையான பதட்ட உணர்வை கொடுக்கிறது.
கவனக்குவிப்பினால் பயன் உண்டு. ஆனால் அது தியானமல்ல.

விஞ்ஞான வார்த்தையில், விஞ்ஞான ஆராய்ச்சியில், விஞ்ஞான பரிசோதனைக்கூடத்தில், உனக்கு கவனக்குவிப்பு தேவைப்படும். நீ ஒரு பிரச்னையில் ஈடுபட்டிருக்கும்போது அதைத் தவிர மற்ற அனைத்தையும் தவிர்த்து உனது கவனம் அனைத்தையும் அதில் குவிக்க வேண்டும்.
அதைத் தவிர உலகமே நினைவில் இல்லாதது போல இருக்க வேண்டும். நீ ஈடுபட்டிருக்கும் பிரச்னை மட்டுமே உனது உலகமாக இருக்க வேண்டும். அதனால்தான் விஞ்ஞானிகள் ஞாபகமறதியாளர்களாக இருக்கிறார்கள். அதிக அளவு கவனக்குவிப்பு செய்யும் மக்கள் ஞாபக மறதியாளர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்த முழு உலகத்தையும் நினைவில் கொள்வது எப்படி என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

இதுதான் விஞ்ஞானிகளுக்கு நிகழ்கிறது. அவர்கள் ஒரே முனைப்பில் இருப்பதால்
அவர்களது மனம் முழுவதும் குறுகி விடுகிறது. குறுகிய மனதிற்கென்று ஒரு பயன் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. அது அதிக ஆழம் ஊடுருவும், அது ஒரு கத்தி போல மாறி விடும், அது மிகச் சரியான குறியை சென்று தாக்கும். ஆனால் அது சுற்றியுள்ள இந்த அற்புதமான வாழ்வை தவற விட்டு விடுகிறது.

ஒரு புத்தர் ஒருமுகப்படுத்துபவரல்ல, அவர் விழிப்புணர்வு பெற்றவர். அவர் தனது
தன்னுணர்வை குறுக்குவதில்லை. அதற்கு பதிலாக அவர் எல்லா தடுப்புகளையும் எடுத்து
விடுகிறார். அப்போது அவர் இந்த பிரபஞ்சத்திற்கு முழுமையாக ஏற்புடையவராகிறார்.

கவனி. பிரபஞ்சம் ஒத்திசைவுடையது. நான் இங்கே பேசுகிறேன். போக்குவரத்து ஓசை
ஒத்திசைவோடு இருக்கிறது. ரயில், பறவைகள், காற்று சத்தம் – இந்த கணத்தில் இந்த
பிரபஞ்சம் முழுமையும் இணைப்போடிருக்கிறது. நீங்கள் நான் பேசுவதை கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள், நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், லட்சக்கணக்கான
விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. – இது மிகவும் வளமையானது.

கவனக்குவிப்பு உன்னை ஒருமுகப்படுத்தும், ஆனால் அதற்கான விலை மிக அதிகம். 96
சதவிகித வாழ்க்கை வீணாகிப் போகிறது. நீ ஒரு கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கும்போது உன்னால் பறவைகளின் சத்தத்தை கவனிக்க முடியாது – அது ஒரு இடைஞ்சலாக இருக்கும். குழந்தைகள் விளையாட்டு சத்தம், தெருவில் நாய் குரைப்பது இவை யாவும் இடைஞ்சலாக இருக்கும்.

விஞ்ஞானத்தின் வழிமுறையே கவனகுவிப்புதான், அந்த வழிமுறையினால்தான்
விஞ்ஞானத்தால் என்றுமே இறைமைதன்மையை தெரிந்து கொள்ள முடியாது. அதனால் மேலும் மேலும் அதிக புள்ளிவிவரங்களைத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

விஞ்ஞானத்திற்க்கு ஒரேமுனைப்புதான். அதன் தேடல் பொருள் பற்றியது. மதம்
ஒத்திசைவு. பொருள் முழுமையானது. மொத்தத்தையும் உள்ளடக்கியது. மொத்தத்தையும் தெரிந்து கொள்ள, எல்லா இடத்திலும் திறந்துள்ள தன்னுணர்வை பெற வேண்டும். – பிளவில்லாத, ஜன்னலின் பின் நிற்பது போலல்லாத தன்னுணர்வு. இல்லாவிடில் ஜன்னலின் எல்லை பிரபஞ்சத்தின் எல்லை போலாகி விடும். திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழே சூரிய ஒளியில் நிற்பது போன்றதுதான் தியானம் என்பது.

தியானத்திற்கு எல்லை கிடையாது, அது ஒரு ஜன்னலல்ல. அது கதவுமல்ல. தியானம்
ஒருமுகப்படுத்துதல் அல்ல, அது கவனமாக இருத்தலுமல்ல – தியானம் என்றால் விழிப்புணர்வுதான்

நான் உனக்கு சில அடிப்படை விஷயங்களை கூறுகிறேன். ஒன்று தியானம் என்பது
ஒருமுகப்படுத்துதல் அல்ல. அது தளர்வளிப்பது. ஒருவர் தன்னுள் தளர்வடைய வேண்டும். நீ தளர்வடையும் அளவு நீ உன்னை எந்த அளவு திறந்திருப்பவனாக, ஏற்றுக் கொள்பவனாக உணர்கிறாயோ அந்த அளவுக்கு நீ குறை சொல்லாதவனாக, வளைந்து கொடுப்பவனாக இருப்பாய். திடீரென பிரபஞ்சம் உன்னுள் ஊடுருவும். நீ பாறை போன்று இருக்கமாட்டாய். நீ திறப்புடையவனாக இருப்பாய்.

தளர்வு என்றால் நீயாக எதையும் செய்யாத நிலைக்கு நீ செல்ல உன்னை
அனுமதிப்பதுதான். ஏனெனில் நீ எதையாவது செய்யும்போது பதட்டம் தொடர்கிறது. அது
எதையும் செய்யாத நிலை. நீ வெறுமனே தளர்வாக இருப்பாய், தளர்வாக இருக்கும் உணர்வை அனுபவித்துக் கொண்டிருப்பாய். உன்னுள் தளர்வாக இரு. உனது கண்களை மூடி, வெளியே நடக்கும் எல்லாவற்றையும் கவனி. எதையும் குறுக்கீடாக உணர வேண்டிய தேவை இல்லை.

எதையும் மறுக்காதே. எதையும் எதிர்க்காதே. ஏற்றுக் கொள் – ஏனெனில் மறுத்தால் நீ
பதட்டமடைவாய். எல்லா மறுத்தலுகளும் பதட்டத்தை கொண்டு வரும். ஏற்றுக் கொள். நீ
தளர்வாக இருக்க விரும்பினால் ஏற்றுக் கொள்ளுதல் ஒன்றுதான் வழி. சுற்றிலும்
நடக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள். அது இயற்கையிலேயே முழுமையாக மாறட்டும். உனக்கு தெரியுமோ தெரியாதோ எல்லாமும் ஒன்றுகொன்று தொடர்புடையதுதான். நீ தளர்வாக இருந்தால், நீ ஏற்றுக் கொள்வாய். பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஒன்றே தளர்வாக இருப்பதற்கான வழி.

 

source: ANCIENT  MUSIC IN  THE  PINES