ஓஷோ குடும்பத்தைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் என்ன கூறுகிறார்?

என்ற கேள்விக்கான பதிலின் 3 -ம் பகுதி

குடும்பம் ஆயிரக்கணக்கான வருடங்களாக சமுதாயத்தின் அடிப்படை
அங்கமாக இருந்து வருகிறது. ஆனாலும் நீங்கள் உங்களின் புதிய உலகத்தில் அதன் மதிப்பை சந்தேகிக்கிறீர்கள்.
! அதற்கு மாற்றாக எந்த விஷயம் அமையும் என நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்.?  

 

மனிதன் குடும்பத்தை விட்டு வெகுதூரம் வளர்ந்து விட்டான்.
குடும்பத்தின் பயன் முடிந்து விட்டது. அது மிக அதிக காலம் வாழ்ந்து விட்டது. அது
மிகவும் பழமையான அமைப்புகளில் ஒன்று. எனவே மிகவும் கூர்மையான பார்வையுடைய மக்கள் மட்டுமே அது ஏற்கனவே இறந்து விட்டது என்பதை பார்க்கமுடியும். குடும்பம்
இறந்துவிட்டது என்ற உண்மையை கண்டுகொள்ள மற்றவர்களுக்கு நேரமாகும்.

அது அதன் வேலையை செய்துவிட்டது. புதியது சம்பந்தமான
விஷயங்களில் அது பங்கு இருக்காது. இப்போது பிறந்த மனித சமுதாயத்தோடு அது இனிமேலும் சம்பந்தப் பட்டதல்ல. குடும்பம் நல்லதாகவும் இருந்துள்ளது. கெட்டதாகவும்
இருந்துள்ளது. அது உதவியாகவும் இருந்துள்ளது. மனிதன் அதனால் பிழைத்து கொண்டுள்ளான்.
அது மிகவும் ஆபத்து நிறைந்தாகவும் இருந்துள்ளது. ஏனெனில் அது மனித மனத்தை
முழுமையாக கெடுத்துவிட்டது.

ஆனால் கடந்த காலத்தில் அதற்கு எந்த மாற்று வழியும் இல்லை.
வேறு எதையும் தேர்ந்தெடுப்பதற்கு எந்த வழியும் இல்லை. அது அவசியமான தீமை.
எதிர்காலத்தில் அது அப்படி இருக்க தேவையில்லை. எதிர்காலம் மாற்றுமுறைகளை
கொண்டிருக்கலாம்.

என்னுடைய கருத்து எதிர்காலம் ஒரு மாறாத கட்டுக்கோப்புடையதாக
இருக்க போவதில்லை. அது பல பல மாற்று வழிகளை கொண்டிருக்கும். ஒரு சில மக்கள்
இன்னும் குடும்பத்தோடு இருப்பதை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு அந்த சுதந்திரம்
வேண்டும். அது மிகவும் சிறிய சதவிகிதமாக இருக்கும். பூமியில் அப்படிப்பட்ட குடும்பங்கள்
இருக்கின்றன. மிகவும் அபூர்வமாக – ஒரு சதவிகித அளவில் – அவை உண்மையிலேயே அழகாக இருக்கின்றன. அவை உண்மையாகவே பயனுள்ளவையாக இருக்கின்றன.

அவைகளில் வளர்ச்சி நிகழ்கிறது. அவை ஆளுமை படுத்துவதில்லை.
அங்கு அதிகார சூழ்ச்சி இல்லை. எந்த பிடித்துவைத்துக் கொள்ளுதலும் இல்லை. அதில்
குழந்தைகள் அழிக்கப்படுவதில்லை. அந்த குடும்பத்தில் மனைவி கணவனை அழிக்க முயற்சி
செய்வதில்லை. கணவன் மனைவியை அழிக்க முயற்சி செய்வதில்லை. அங்கு காதல் இருக்கிறது,
சுதந்திரம் இருக்கிறது, அங்கு மக்கள் மகிழ்ச்சியின் காரணமாக ஒன்று கூடி
இருக்கிறார்கள். மற்ற எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு எந்த அரசியலும் இல்லை. ஆம்,
இந்த விதமான குடும்பங்கள் பூமியில் இருந்தன. அவை இன்னும் இருக்கின்றன. இந்த
மனிதர்கள் மாற வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில் அவர்கள் குடும்பத்திலேயே
தொடர்ந்து வாழலாம்.

ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு குடும்பம் ஒரு அசிங்கமான
விஷயம். நீ மனோதத்துவவியலாளர்களை கேட்டால் அவர்கள் கூறுவார்கள். எல்லா விதமான
மனோவியாதிகளும் குடும்பத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. எல்லா மனோவியாதிகளும், நரம்பு சம்பந்தமான வியாதிகளும் குடும்பத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன. குடும்பம் மிக மிக நோய்வாய்பட்ட ஒரு மனிதனை உருவாக்குகிறது. அதற்கு இனி தேவையில்லை. மாற்று முறைகள் சாத்தியப்படவேண்டும். என்னைப் பொறுத்தவரை மாற்றுமுறை கம்யூன் என்பதாகும். அது சிறந்தது, அதுதான் சிறந்தது.

ஒரு கம்யூன் என்பதன் பொருள் மக்கள் சேர்ந்து வாழும் இடம்.
குழந்தைகள் கம்யூனை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள். அவர்கள்
யாருக்கும் சொத்தானவர்கள் அல்ல. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான்.
ஏனெனில் அவர்கள் சேர்ந்து வாழ்வதை கொண்டாடுகிறார்கள். அவர்கள் சேர்ந்து வாழ்வதை
அனுபவிக்கிறார்கள். அவர்கள் அன்பு இல்லை என உணரும் அந்த நொடியில் அவர்கள்
ஒருவரையொருவர் இழுத்து பிடித்து வைத்துக் கொள்வதில்லை. நிறைந்த நன்றியுணர்வோடும், நிறைந்த நட்பு தன்மையோடும் வணக்கம் கூறி விடைபெறுகிறார்கள். அவர்கள் மற்றவர்களோடு பழக தொடங்குகிறார்கள்.

கடந்தகாலத்தில் குழந்தைகளை என்ன செய்வது என்பதுதான்
பிரச்னையாக இருந்தது. கம்யூனில் குழந்தைகள் கம்யூனை சேர்ந்தவர்களாகிறார்கள். அது
இன்னும் சிறப்பானதாக இருக்கும். குழந்தைகள் பல்வேறு வகையான மனிதர்களிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் கோபம் இருக்கிறது. தாய் பல
விஷயங்களை தடை போடவேண்டி வருகிறது – அவள் கூடாது என சொல்லியே ஆக வேண்டும் – அதை தவிர்க்க முடியாது. ஒரு சிறந்த தாய் கூட சில சமயங்களில் கண்டிப்பாக,
மறுத்து, கூடாது என சொல்லவேண்டி வருகிறது. குழந்தைக்கு கோபமாக, ஆத்திரமாக
வருகிறது. அது தாயை வெறுக்கிறது, நேசிக்கவும் செய்கிறது. ஏனெனில் அவள்தான் அதன்
உயிராதாரம், வாழ்வின், சக்தியின், பிறப்பிடம். அதனால் அது தாயை வெறுக்கவும் செய்து
கூடவே நேசிக்கவும் செய்கிறது. அதுவே அதன் நடைமுறையாகவும் மாறி விடுகிறது. ஒரு
பெண்ணை நீ நேசிக்கிறாய். அவளை வெறுக்கவும் செய்கிறாய். உனக்கு வேறு வழியில்லை. நீ
உன் தாயைதான் தேடிக்கொண்டே இருக்கிறாய். ஆழ்மனதில் இதுவேதான் பெண்ணுக்கும்
நிகழ்கிறது. அவளும் தந்தையை போலதான் தேடுகிறாள். அவர்களது வாழ்க்கை முழுவதும்
தந்தையை போன்ற ஒரு கணவனை தேடுவதிலேயே கழிகிறது.

இப்போது இந்த உலகத்தில் உனது தந்தை மட்டுமே இல்லை. இந்த
உலகம் பரந்து விரிந்தது. உண்மையில் உனது தந்தையை போன்றவரை கண்டுபிடித்தால் நீ
மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். நீ ஒரு காதலனுடன் ஒரு அன்பனுடன்தான் மகிழ்ச்சியாக
இருக்கமுடியும். உன் தந்தையுடன் அல்ல. உன் தாயை கண்டுபிடித்துவிட்டால் அவளுடன்
உன்னால் சந்தோஷமாக இருக்கமுடியாது. உனக்கு அவளை பற்றி ஏற்கனவே தெரியும். புதிதாக தெரிந்துகொள்ள ஏதுமில்லை. அது ஏற்கனவே பரிச்சயமானதுதான். பரிச்சயமானது
குற்றங்குறைகளைதான் காணும். நீ புதிதான ஏதாவது ஒன்றை தான் தேட வேண்டும், ஆனால்
உன்னிடம் பிம்பம் எதுவும் இல்லை.

கம்யூனில் ஒரு குழந்தை நல்ல வளமுள்ள ஜீவனாக வளர்வான்.
அவனுக்கு பல ஆண்களை, பல பெண்களை தெரியும். அவன் ஒருவரை அல்லது இருவரை மட்டுமே பிம்பமாக கொள்ள மாட்டான்.

குடும்பம் உன்னுள் வரையறையை ஏற்படுத்துகிறது. அது மனித
இனத்திற்கு எதிரானது. உனது தந்தை யாருடனாவது சண்டையிட்டால் அது தவறு என்பதை நீ
உணர்ந்தால்கூட அதுபற்றி கவலையில்லை. நீ உனது தந்தையின் பக்கம்தான் இருக்கவேண்டும். சரியோ தவறோ எனது தேசம் எனது தேசம்தான் எனக மக்கள் கூறுவதுபோல சரியோ, தவறோ அவர் எனது தந்தை அல்லது அவள் எனது தாய். நான் அவர்களுடன்தான் இருப்பேன் எனக் கூற வேண்டும். இல்லாவிடில் அது நம்பிக்கை துரோகம்.

இது நேர்மையற்று இருக்கவே சொல்லித் தருகிறது. உனது தாய்
பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையிடுகிறாள். அவர்கள் சொல்வது சரியே. உனது தாய்தான்
தவறு என்பதை பார்த்தால்கூட நீ உனது தாயின் பக்கம்தான் இருக்க வேண்டும் என்பது
நேர்மையற்ற வாழ்வை கற்றுக் கொள்வதாகும்.

இதன் தொடர்ச்சி... அடுத்த பதிவில்.