- Details
- Category: ஓஷோ பதில்கள்
குடும்பம் மற்றும் அதன் எதிர்காலம் - பகுதி 3
ஓஷோ குடும்பத்தைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் என்ன கூறுகிறார்?
என்ற கேள்விக்கான பதிலின் 3 -ம் பகுதி
குடும்பம் ஆயிரக்கணக்கான வருடங்களாக சமுதாயத்தின் அடிப்படை
அங்கமாக இருந்து வருகிறது. ஆனாலும் நீங்கள் உங்களின் புதிய உலகத்தில் அதன் மதிப்பை சந்தேகிக்கிறீர்கள்.! அதற்கு மாற்றாக எந்த விஷயம் அமையும் என நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்.?
மனிதன் குடும்பத்தை விட்டு வெகுதூரம் வளர்ந்து விட்டான்.
குடும்பத்தின் பயன் முடிந்து விட்டது. அது மிக அதிக காலம் வாழ்ந்து விட்டது. அது
மிகவும் பழமையான அமைப்புகளில் ஒன்று. எனவே மிகவும் கூர்மையான பார்வையுடைய மக்கள் மட்டுமே அது ஏற்கனவே இறந்து விட்டது என்பதை பார்க்கமுடியும். குடும்பம்
இறந்துவிட்டது என்ற உண்மையை கண்டுகொள்ள மற்றவர்களுக்கு நேரமாகும்.
அது அதன் வேலையை செய்துவிட்டது. புதியது சம்பந்தமான
விஷயங்களில் அது பங்கு இருக்காது. இப்போது பிறந்த மனித சமுதாயத்தோடு அது இனிமேலும் சம்பந்தப் பட்டதல்ல. குடும்பம் நல்லதாகவும் இருந்துள்ளது. கெட்டதாகவும்
இருந்துள்ளது. அது உதவியாகவும் இருந்துள்ளது. மனிதன் அதனால் பிழைத்து கொண்டுள்ளான்.
அது மிகவும் ஆபத்து நிறைந்தாகவும் இருந்துள்ளது. ஏனெனில் அது மனித மனத்தை
முழுமையாக கெடுத்துவிட்டது.
ஆனால் கடந்த காலத்தில் அதற்கு எந்த மாற்று வழியும் இல்லை.
வேறு எதையும் தேர்ந்தெடுப்பதற்கு எந்த வழியும் இல்லை. அது அவசியமான தீமை.
எதிர்காலத்தில் அது அப்படி இருக்க தேவையில்லை. எதிர்காலம் மாற்றுமுறைகளை
கொண்டிருக்கலாம்.
என்னுடைய கருத்து எதிர்காலம் ஒரு மாறாத கட்டுக்கோப்புடையதாக
இருக்க போவதில்லை. அது பல பல மாற்று வழிகளை கொண்டிருக்கும். ஒரு சில மக்கள்
இன்னும் குடும்பத்தோடு இருப்பதை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு அந்த சுதந்திரம்
வேண்டும். அது மிகவும் சிறிய சதவிகிதமாக இருக்கும். பூமியில் அப்படிப்பட்ட குடும்பங்கள்
இருக்கின்றன. மிகவும் அபூர்வமாக – ஒரு சதவிகித அளவில் – அவை உண்மையிலேயே அழகாக இருக்கின்றன. அவை உண்மையாகவே பயனுள்ளவையாக இருக்கின்றன.
அவைகளில் வளர்ச்சி நிகழ்கிறது. அவை ஆளுமை படுத்துவதில்லை.
அங்கு அதிகார சூழ்ச்சி இல்லை. எந்த பிடித்துவைத்துக் கொள்ளுதலும் இல்லை. அதில்
குழந்தைகள் அழிக்கப்படுவதில்லை. அந்த குடும்பத்தில் மனைவி கணவனை அழிக்க முயற்சி
செய்வதில்லை. கணவன் மனைவியை அழிக்க முயற்சி செய்வதில்லை. அங்கு காதல் இருக்கிறது,
சுதந்திரம் இருக்கிறது, அங்கு மக்கள் மகிழ்ச்சியின் காரணமாக ஒன்று கூடி
இருக்கிறார்கள். மற்ற எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு எந்த அரசியலும் இல்லை. ஆம்,
இந்த விதமான குடும்பங்கள் பூமியில் இருந்தன. அவை இன்னும் இருக்கின்றன. இந்த
மனிதர்கள் மாற வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில் அவர்கள் குடும்பத்திலேயே
தொடர்ந்து வாழலாம்.
ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு குடும்பம் ஒரு அசிங்கமான
விஷயம். நீ மனோதத்துவவியலாளர்களை கேட்டால் அவர்கள் கூறுவார்கள். எல்லா விதமான
மனோவியாதிகளும் குடும்பத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. எல்லா மனோவியாதிகளும், நரம்பு சம்பந்தமான வியாதிகளும் குடும்பத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன. குடும்பம் மிக மிக நோய்வாய்பட்ட ஒரு மனிதனை உருவாக்குகிறது. அதற்கு இனி தேவையில்லை. மாற்று முறைகள் சாத்தியப்படவேண்டும். என்னைப் பொறுத்தவரை மாற்றுமுறை கம்யூன் என்பதாகும். அது சிறந்தது, அதுதான் சிறந்தது.
ஒரு கம்யூன் என்பதன் பொருள் மக்கள் சேர்ந்து வாழும் இடம்.
குழந்தைகள் கம்யூனை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள். அவர்கள்
யாருக்கும் சொத்தானவர்கள் அல்ல. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான்.
ஏனெனில் அவர்கள் சேர்ந்து வாழ்வதை கொண்டாடுகிறார்கள். அவர்கள் சேர்ந்து வாழ்வதை
அனுபவிக்கிறார்கள். அவர்கள் அன்பு இல்லை என உணரும் அந்த நொடியில் அவர்கள்
ஒருவரையொருவர் இழுத்து பிடித்து வைத்துக் கொள்வதில்லை. நிறைந்த நன்றியுணர்வோடும், நிறைந்த நட்பு தன்மையோடும் வணக்கம் கூறி விடைபெறுகிறார்கள். அவர்கள் மற்றவர்களோடு பழக தொடங்குகிறார்கள்.
கடந்தகாலத்தில் குழந்தைகளை என்ன செய்வது என்பதுதான்
பிரச்னையாக இருந்தது. கம்யூனில் குழந்தைகள் கம்யூனை சேர்ந்தவர்களாகிறார்கள். அது
இன்னும் சிறப்பானதாக இருக்கும். குழந்தைகள் பல்வேறு வகையான மனிதர்களிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் கோபம் இருக்கிறது. தாய் பல
விஷயங்களை தடை போடவேண்டி வருகிறது – அவள் கூடாது என சொல்லியே ஆக வேண்டும் – அதை தவிர்க்க முடியாது. ஒரு சிறந்த தாய் கூட சில சமயங்களில் கண்டிப்பாக,
மறுத்து, கூடாது என சொல்லவேண்டி வருகிறது. குழந்தைக்கு கோபமாக, ஆத்திரமாக
வருகிறது. அது தாயை வெறுக்கிறது, நேசிக்கவும் செய்கிறது. ஏனெனில் அவள்தான் அதன்
உயிராதாரம், வாழ்வின், சக்தியின், பிறப்பிடம். அதனால் அது தாயை வெறுக்கவும் செய்து
கூடவே நேசிக்கவும் செய்கிறது. அதுவே அதன் நடைமுறையாகவும் மாறி விடுகிறது. ஒரு
பெண்ணை நீ நேசிக்கிறாய். அவளை வெறுக்கவும் செய்கிறாய். உனக்கு வேறு வழியில்லை. நீ
உன் தாயைதான் தேடிக்கொண்டே இருக்கிறாய். ஆழ்மனதில் இதுவேதான் பெண்ணுக்கும்
நிகழ்கிறது. அவளும் தந்தையை போலதான் தேடுகிறாள். அவர்களது வாழ்க்கை முழுவதும்
தந்தையை போன்ற ஒரு கணவனை தேடுவதிலேயே கழிகிறது.
இப்போது இந்த உலகத்தில் உனது தந்தை மட்டுமே இல்லை. இந்த
உலகம் பரந்து விரிந்தது. உண்மையில் உனது தந்தையை போன்றவரை கண்டுபிடித்தால் நீ
மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். நீ ஒரு காதலனுடன் ஒரு அன்பனுடன்தான் மகிழ்ச்சியாக
இருக்கமுடியும். உன் தந்தையுடன் அல்ல. உன் தாயை கண்டுபிடித்துவிட்டால் அவளுடன்
உன்னால் சந்தோஷமாக இருக்கமுடியாது. உனக்கு அவளை பற்றி ஏற்கனவே தெரியும். புதிதாக தெரிந்துகொள்ள ஏதுமில்லை. அது ஏற்கனவே பரிச்சயமானதுதான். பரிச்சயமானது
குற்றங்குறைகளைதான் காணும். நீ புதிதான ஏதாவது ஒன்றை தான் தேட வேண்டும், ஆனால்
உன்னிடம் பிம்பம் எதுவும் இல்லை.
கம்யூனில் ஒரு குழந்தை நல்ல வளமுள்ள ஜீவனாக வளர்வான்.
அவனுக்கு பல ஆண்களை, பல பெண்களை தெரியும். அவன் ஒருவரை அல்லது இருவரை மட்டுமே பிம்பமாக கொள்ள மாட்டான்.
குடும்பம் உன்னுள் வரையறையை ஏற்படுத்துகிறது. அது மனித
இனத்திற்கு எதிரானது. உனது தந்தை யாருடனாவது சண்டையிட்டால் அது தவறு என்பதை நீ
உணர்ந்தால்கூட அதுபற்றி கவலையில்லை. நீ உனது தந்தையின் பக்கம்தான் இருக்கவேண்டும். சரியோ தவறோ எனது தேசம் எனது தேசம்தான் எனக மக்கள் கூறுவதுபோல சரியோ, தவறோ அவர் எனது தந்தை அல்லது அவள் எனது தாய். நான் அவர்களுடன்தான் இருப்பேன் எனக் கூற வேண்டும். இல்லாவிடில் அது நம்பிக்கை துரோகம்.
இது நேர்மையற்று இருக்கவே சொல்லித் தருகிறது. உனது தாய்
பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையிடுகிறாள். அவர்கள் சொல்வது சரியே. உனது தாய்தான்
தவறு என்பதை பார்த்தால்கூட நீ உனது தாயின் பக்கம்தான் இருக்க வேண்டும் என்பது
நேர்மையற்ற வாழ்வை கற்றுக் கொள்வதாகும்
கம்யூனில் ஒரு குடும்பத்துடன் மிகவும் இணைந்து இருக்கமாட்டாய் – அங்கு குடும்பமே
இருக்காது. நீ அதிக சுதந்திரத்துடன், பிடிப்புகள் குறைவாக இருப்பாய். நீ நேர்மையாக
இருப்பாய். பலரிடம் இருந்தும் உனக்கு அன்பு கிடைக்கும். வாழ்வே அன்புமயமானது என நீ
உணர்வாய்.
குடும்பம் உனக்கு சமுதாயத்துடன் மற்ற குடும்பங்களுடன்
ஒருவிதமான போராட்டத்தை கற்றுத் தருகிறது. குடும்பம் தனிப்பட்ட ஆட்சியை கேட்கிறது.
அது உன்னை மற்ற எல்லாவற்றிக்கும் எதிராக இருக்கும்படியும் குடும்பத்திற்கு மட்டுமே
ஆதரவாக இருக்கும்படியும் கேட்கிறது. நீ குடும்பத்தின் சேவையில் இருந்தாக வேண்டும்.
குடும்பம் உனக்கு குறிக்கோள், போராட்டம், வெறித்தனம் ஆகியவற்றை கற்றுத் தருகிறது.
கம்யூனில் நீ கோபம் குறைவாக உள்ளவனாக இருப்பாய். நீ உலகத்துடன் இன்னும் இசைவாக
இருப்பாய். ஏனெனில் நீ பல மக்களை அறிந்துள்ளாய். அதைத்தான் நான் இங்கே
உருவாக்கப்போகிறேன்.
ஒரு கம்யூன். இங்கே எல்லோரும் நண்பர்களாக இருப்பார்கள்.
கணவன் மனைவி கூட நண்பர்களைவிட வேறெதாகவும் இருக்கமாட்டார்கள். இருவர்களுக்கிடையேயான வெறும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இணைந்திருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதில் ஒருவர் மகிழ்ச்சியற்ற தன்மையை உணரும்போது – ஒரு விநாடி நேரம் உணர்ந்தால்கூட – பிறகு அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். எந்த விவாகரத்தும்
இல்லை, ஏனெனில் அங்கு விவாகமே இல்லை. அதனால் விவாகரத்து தேவையில்லை.
ஒருவர் இயல்போடு இசைவாக வாழ்கிறார். நீ துன்பத்தில்
வாழும்போது போகப் போகப் நீ துன்பத்திற்கு பழக்கப் பட்டு விடுகிறாய். ஒருபோதும்
ஒருவிநாடி கூட ஒருவர் எந்த துன்பத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடாது. ஒரு ஆணோடு
வாழ்வது கடந்த காலத்தில் இன்பமயமாகவும் நன்றாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது இன்பமயமாக இல்லாவிட்டால் பிறகு நீ அதனை விட்டு வெளியே வந்து விட வேண்டும். கோபப் படவோ எதையும் அழிக்கவோ தேவையில்லை. அதனை சுமக்கவும் தேவையில்லை. ஏனெனில் காதலைக் குறித்து எதுவும் செய்ய இயலாது. காதல் ஒரு தென்றலைப் போன்றது. நீ பார்த்தால்…………… அது வெறுமனே வருகிறது. அது அங்கே இருந்தால் இருக்கிறது, பிறகு போய் விடுகிறது. அது போய்விடும்போது அது போய்விடுகிறது. காதல் ஒரு மர்மம். நீ அதனை மாற்றமுடியாது. காதல் மாற்றப் படக் கூடாது. காதல் சட்டத்திற்கு உட்படுத்தப் படக் கூடாது. எந்த காரணத்திற்க்காகவும் காதல் கட்டாயப் படுத்தப் படக் கூடாது.
கம்யூனில் மக்கள் சேர்ந்திருப்பதன் மகிழ்ச்சிக்காக மட்டுமே
சேர்ந்து வாழ்வார்கள். வேறு எதற்காகவும் அல்ல. அந்த மகிழ்ச்சி மறைந்து விடும்போது
அவர்கள் பிரிந்து விடுகின்றனர். அது சோகமாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள்
பிரிகின்றனர். மனதில் பழைய நினைவுகளின் மணம் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரிந்து
விடுகின்றனர். அவர்கள் நிச்சயமாக துன்பத்தில் வாழக் கூடாது என உறுதிமொழி எடுத்துக்
கொள்கின்றனர். ஏனெனில் துன்பம் பழக்கமாக மாறிவிடும் – அவர்கள் கனத்த இதயத்துடன் பிரிகின்றனர். ஆனால் பிரிந்து விடுகின்றனர். அவர்கள் வேறு துணையை தேடிச் செல்கின்றனர்.
எதிர்காலத்தில் கடந்தகாலங்களில் இருந்தது போன்ற திருமணமும்
இருக்காது, விவாகரத்தும் இருக்காது. வாழ்வு மேலும் உயிரோட்டமுள்ளதாக, மேலும்
நம்பிக்கையுணர்வு கொண்டதாக இருக்கும். சட்டத்தின் வரையறைகளை விட வாழ்வின்
மர்மங்களின் மீது அதிக நம்பிக்கையுணர்வு கொண்டதாக இருக்கும். கோர்ட், போலீஸ்,
சர்ச், பூசாரி ஆகியவற்றை விட வாழ்வின் மீது நம்பிக்கையுணர்வு கொண்டதாக வாழ்க்கை
இருக்கும். குழந்தைகள் பொதுவானவர்கள் – அவர்கள் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற குறிப்பை சுமக்க வேண்டியதில்லை.
அவர்கள் கம்யூனை சேர்ந்தவர்கள். அவர்களை கம்யூன் கவனித்துக் கொள்ளும்.
இது மனித இன வரலாற்றிலேயே மிகப் பெரிய புரட்சியாக இருக்கப்
போகிறது. கம்யூனில் சேர்ந்து வாழ்வதால் மனிதன் நம்பிக்கையுணர்வுள்ளவனாக,
நேர்மையானவனாக, உண்மையானவனாக இருக்க ஆரம்பிப்பதால் சட்டம் தன் பிடிப்பை இழக்க ஆரம்பிக்கும்.
குடும்பத்தில் அன்பு சீக்கிரமாகவோ மெதுவாகவோ மறைந்து
விடும். முதலில் ஆரம்பத்திலிருந்தே அது அங்கு இல்லை. ஏற்பாடு செய்யப் பட்ட
திருமணங்களில் குடும்பம் இருந்திருக்கலாம் – பணம், பதவி, கெளரவம், அதிகாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இருக்கக் கூடும். முதலிலிருந்தே அன்பு அங்கு இருந்திருக்க முடியாது. குழந்தைகள் வெறுமனே இயற்கையின் விளைவாக பிறந்து விடுகின்றன. குழந்தைகள் அன்பின் மூலமாக பிறக்கவில்லை. அவை
ஆரம்பத்திலிருந்தே அன்பற்ற வரண்ட பாலைவனமாக இருக்கின்றன. வீட்டில் உள்ள இந்த
அன்பற்ற நிலை அவர்களை மேலும் உற்சாகமற்றவர்களாக அன்பற்றவர்களாக மாற்றுகிறது.
குழந்தைகள் வாழ்வின் முதல் பாடத்தை பெற்றோர்களிடமிருந்தே
கற்றுக் கொள்கின்றன. பெற்றோர்கள் நேசிப்பதில்லை. அவர்களுக்குள் பொறாமையும்
சண்டையும் கோபமும்தான் இருக்கின்றன. குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் அசிங்கமான முகத்தையே எப்போதும் பார்க்கின்றன.
அவர்களது எதிர்கால நம்பிக்கையே சிதைக்கப் படுகிறது. தங்களது
பெற்றோர்களின் வாழ்வில் அன்பும் பாசமும் இருக்கவில்லை எனும்போது தங்களது வாழ்வில்
அன்பு பாசம் இருக்கக்கூடும் என அவர்களால் நம்ப முடியாது. அவர்கள் மற்ற
குடும்பங்களையும் மற்றவர்களது பெற்றோர்களையும் கூட பார்க்கிறார்கள். குழந்தைகள்
மிகவும் கூர்மையான பார்வையுடையவர்கள். அவர்கள் தங்களை சுற்றிப் பார்த்து
கிரகித்துக் கொள்கிறார்கள். அன்பிற்கான சாத்தியக் கூறே இல்லை என்பதை அவர்கள்
பார்க்கும்போது காதல், அன்பு என்பதெல்லாம் கவிதையில் மட்டும்தான், அவை
கவிதைகளுக்காக மட்டுமே – வாழ்வில் உண்மையாக வராது என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒருமுறை அன்பு என்பது கவிதைக்காக மட்டுமே என்ற கருத்தை நீ கொண்டுவிட்டால் பின் அது உன் வாழ்வில் அது நிகழாது, ஏனெனில் நீ அதன் வாயிலை மூடிவிடுகிறாய்.
அன்பு கொண்டவர்களை பார்ப்பது மட்டுமே பிற்காலத்தில் உனது வாழ்வில் அன்பு நிகழக் கூடிய ஒரே வழியாகும். உனது தாயும் தந்தையும் ஆழமான அன்பில் ஆழ்ந்த காதலில் ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்தி, ஒருவர் மீது ஒருவர் கருணை கொண்டு, ஒருவருக்கொருவர் மரியாதை செய்து வாழ்வதை பார்த்தால்தான் அன்பு நிகழும் என்ற எதிர்கால நம்பிக்கை உனக்கு உருவாகும். ஒரு விதை உனது இதயத்தில் விழுந்து முளைவிட ஆரம்பிக்கும். அது உனக்கும் நிகழும் என்பது உனக்குத் தெரியும்.
நீ பார்க்கவில்லையென்றால் எப்படி உனக்கும் அது நிகழக்கூடும்
என உன்னால் நம்பமுடியும். உனது பெற்றோர்களுக்குள் அன்பு பரிமாற்றம் நிகழ
வில்லையென்றால் உனக்கு எப்படி அது நடக்கும். உண்மையில் அது உனக்கு நடக்காமலிருக்க என்னனென்ன செய்ய வேண்டுமோ அதை நீ செய்து கொண்டிருப்பாய். இல்லாவிடில் நீ உனது
பெற்றோர்களுக்கு நம்பிக்கைதுரோகம் செய்தவனாவாய். நான் மக்களை கவனித்தவிதத்தில்
பெண்கள் ஆழ்மனதில் அம்மா நீ எவ்வளவு சிரமப்பட்டாயோ அவ்வளவு நானும் சிரமப்
படுகிறேன். எனக் கூறிக் கொள்கின்றனர். பையன்கள், அப்பா, கவலைப்படாதீர்கள் என்னுடைய
வாழ்க்கையும் உங்களுடைய வாழ்க்கை போலவே சிரமமானதுதான். நான் உங்களை கடந்து போக வில்லை. நான் உங்களை நம்பிக்கை துரோகம் செய்யவில்லை. நானும் உங்களைப் போலவே துன்பப்படும் ஆள்தான். நானும் சம்பிரதாயம் என்ற விலங்கை சுமந்துகொண்டு தான்
இருக்கிறேன். நான் உங்கள் வாரிசுதான் அப்பா நான் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை.
நீ என் தாய்க்கு செய்ததைதான் நான் என் குழந்தைகளின் தாய்க்கு செய்கிறேன். நீ
எனக்கு செய்ததைதான் நான் என் குழந்தைகளுக்கு செய்கிறேன். நீ என்னை வளர்த்த
விதத்தில்தான் நானும் என் குழந்தைகளை வளர்க்கிறேன். என தங்களுக்கு தாங்களே கூறிக்
கொள்கின்றனர்.
இதில் குழந்தைகளை வளர்த்துவது என்பதே மடத்தனமானது. நீ உதவி
செய்யலாம், நீ அவர்களை வளர்த்தமுடியாது. குழந்தைகளை உருவாக்குவது என்ற கருத்தே
மடத்தனம். மடத்தனம் மட்டுமல்ல, கெடுதலும்கூட. மிகவும் கெடுதலானது. நீ உருவாக்க
முடியாது. – குழந்தைகள் பொருட்களல்ல. ஒரு கட்டிடம் போலல்ல – குழந்தைகள் ஒரு மரம் போன்றவர்கள். நீ உதவலாம்,
நீ மண்ணை தயார் செய்யலாம், உரம் போடலாம், தண்ணீர் விடலாம், சூரிய ஒளி செடியின்
மீது படுகிறதா இல்லையா என கவனிக்கலாம். அவ்வளவுதான். ஆனால் அது நீதான் செடியை
வளர்த்துகிறாய் என்பதல்ல, அது தானாகவே வளரும். நீ உதவலாம். ஆனால் அதை வெளியே
இழுக்க முடியாது. அதை உருவாக்க முடியாது.
குழந்தைகள் அதிசயமானவர்கள். நீ அவர்களை உருவாக்க முயற்சி
செய்யும்போது நீ அவர்களை சுற்றி குணாதிசியங்களையும் வரையறைகளையும் உண்டாக்கி
அவர்களை சிறை வைத்துவிடுகிறாய். அவர்களால் உன்னை மன்னிக்கவே முடியாது. அவர்கள்
கற்றுக் கொள்ளும் ஒரே வழி இதுதான். அவர்கள் இதையேதான் தனது குழந்தைகளுக்கும்
செய்கிறார்கள். இதுவேதான் தொடர்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் இந்த பூமிக்கு வரும்
புதிய மக்களுக்கு மனச்சிதைவை தருகிறது. இந்த சமுதாயம் தனது முட்டாள்தனத்துடனும்
துயரங்களுடனும் தொடர்கிறது. கூடாது. இப்போது ஒரு வேறுபட்ட விஷயம் தேவை. மனிதன்
வளர்ந்துவிட்டான் குடும்பம் பழைமையானதாகி விட்டது. அதற்கு எதிர்காலம் கிடையாது.
கம்யூன்தான் குடும்பத்திற்கு மாற்றாக இருக்கமுடியும். அது மேலும் பயனுள்ளதாக
இருக்கும்.
ஆனால் கம்யூனில் தியானதன்மையுடைய மக்கள் மட்டுமே சேர்ந்து
இருக்க முடியும். வாழ்வை எப்படி கொண்டாடுவது என உனக்கு தெரிந்திருந்தால் மட்டுமே
உன்னால் சேர்ந்து இருக்கமுடியும். தியானம் என நான் கூறும் தளம் எதுவென்று உனக்கு
தெரிந்திருந்தால் மட்டுமே உன்னால் அன்பாக இருக்கமுடியும். தனிப்பட்டவரை சேர்ந்தது
அன்பு என்ற பழைய முட்டாள்தனம் கைவிடப்பட வேண்டும். பின்புதான் உன்னால் கம்யூனில்
இருக்க முடியும். உன்னுடைய பழைய ஐடியாக்களையே சுமந்துகொண்டிருந்தால் – உன் மனைவி வேறு யாருடனும் பழகக் கூடாது, உன் கணவன் வேறு
பெண்ணுடன் கூடி சிரிக்கக் கூடாது என்பது போன்ற – மடத்தனமான விஷயங்களையே உன் மனதில் நீ சுமந்து கொண்டிருந்தால் நீ கம்யூனின் ஒரு பாகமாக மாற முடியாது.
உனது கணவன் வேறு யாருடனாவது சிரித்து பேசிக் கொண்டிருந்தால்
நல்லது. உனது கணவன் சிரிக்கிறான் – சிரிப்பது எப்போதும் நல்லது. யாருடன் என்பது பொருட்டல்ல. சிரிப்பது நல்லது.
சிரிப்புக்கு மதிப்புண்டு. உன் மனைவி வேறு யாருடனாவது பழகினால் நல்லது. இசைவு
வருகிறது. இசைவாக இருத்தல் நல்லது. அதற்கு மதிப்புண்டு. யாருடன் என்பது
கேள்வியல்ல. அப்படி உனது மனைவிக்கு பலருடன் நிகழுமானால் உன்னுடனும் நிகழும்.
மற்றவரிடம் நிகழ்வதை தடுத்தால் உன்னுடன் நிகழ்வதும் நின்றுவிடும். அந்த பழமையான
கருத்து அனைத்தும் முட்டாள்தனம்.
அது “உனது கணவன் வெளியே செல்லும்போது, வெளியே எங்கும் சுவாசிக்காதே. வீட்டிற்கு
திரும்பி வந்ததும் எவ்வளவு வேண்டுமானாலும் சுவாசித்துக் கொள்ளலாம். ஆனால் நீ
என்னுடன் இருக்கும்போது மட்டுமே சுவாசிக்க வேண்டும். வெளியே ஒரு யோகி போல இருந்து சுவாசத்தை கட்டுப்படுத்திக் கொள். நீ வேறு எங்கும் சுவாசிப்பதை நான் விரும்பவில்லை” என நீ கூறுவதை போன்றது. இது மடத்தனம். ஆனால் ஏன் அன்பு
சுவாசத்தை போல இருக்கக் கூடாது. அன்பு சுவாசத்தைப் போன்றதுதான்.
சுவாசம் உடலின் வாழ்வு, அன்பு உயிரின் வாழ்வு. இது
சுவாசத்தை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உனது கணவன் வெளியே போகும்போது, அவன் வேறு யாரிடமும் குறிப்பாக வேறு எந்த பெண்களிடமும் சிரிக்கக் கூடாது என்பதை
வலியுறுத்துகிறாய். அவன் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாது. அதனால் மற்ற எந்த
நேரமும் அவன் அன்பாக இருக்கக்கூடாது. ஆனால் ஒருமணி நேரம் படுக்கையில் உன்னிடம்
மட்டும் அன்பாக இருக்க வேண்டும். நீ அவனது அன்பை கொன்றுவிட்டாய். – அது பெருகி ஓடுவதில்லை – இருபத்தி மூன்று மணி நேரம் அவன் ஒரு யோகி போல அவனது அன்பை
கட்டுப்படுத்தி பயத்துடன் இருந்தால் எப்படி ஒருமணிநேரம் மட்டும் திடீரென தளர்வு
கொள்ளமுடியும். அது சாத்தியமேயில்லை. நீ ஆணை கெடுத்துவிட்டாய், பெண்ணை
கெடுத்துவிட்டாய், பின் வெறும் கூடாகிவிட்டாய், சலித்துவிட்டாய். – பின் அவன் என்னை காதலிக்கவில்லை என உணர ஆரம்பிக்கிறாய்.
ஆனால் இந்த முழு விஷயத்தையும் உருவாக்கியதே நீதான். பின் நீ அவனை காதலிக்கவில்லை என அவன் உணர ஆரம்பிக்கிறான். நீ இதற்கு முன் இருந்தது போல மகிழ்ச்சியாக இல்லை.
மக்கள் பீச்சில், பார்க்கில், சந்திக்கும்போது எதுவும்
தெளிவாவதில்லை. எல்லாமும் குழப்பமாக இருக்கிறது. இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கின்றனர். ஏன் ஏனெனில் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். ஒரு பறவை
பறப்பதற்க்கும், அதே பறவை கூண்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள்
சுதந்திரமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மனிதன் சுதந்திரமின்றி மகிழ்ச்சியாக இருக்கமுடியாது, உனது
பழைய குடும்ப அமைப்பு சுதந்திரத்தை சிதைக்கிறது. அப்படி அது சுதந்திரத்தை
சிதைப்பதால் அது மகிழ்ச்சியை சிதைக்கிறது. அது அன்பை சிதைக்கிறது. அன்பு வாழ்விருப்பின் ஒரு வித அளவுகோல். ஆம், குடும்பம் உடலை பாதுகாக்கிறது, ஆனால் அது உயிரை சிதைத்துவிடுகிறது. இப்போது அதற்கு தேவையில்லை. நாம் இப்போது உயிரையும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது மேலும் அடிப்படையானது.
குடும்பத்திற்கு எதிர்காலம் இல்லை. இதுவரை புரிந்துகொள்ளப்பட்ட விதத்தில் அல்லாமல் இனிமேல் அன்பும் அன்பு உணர்வுகளும் மட்டுமே இருக்கும். கணவன் மனைவி என்பது இனிமேல் அசிங்கமான அழுக்கு வார்த்தைகளாகி விடும்.
நீ ஒரு ஆணையோ பெண்ணையோ ஆளுமை படுத்தும்போது இயல்பாகவே நீ
குழந்தைகளையும் சேர்த்தே அடிமைப் படுத்துகிறாய். தாமஸ் கோர்டன் சொல்வதை நான்
முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். அவர், எல்லா பெற்றோர்களும் குழந்தைகளை உபயோகிக்கும் அரசியல்வாதிகள். ஏனெனில் குழந்தைகளை அடிப்படையில் அதிகாரம் மற்றும் ஆளுமை மூலம்தான் வளர்க்கின்றனர். இது எனது குழந்தை. நான் எனது குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்பது பல பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. இது குழந்தைகளை அழித்துவிடும் என நான் நினைக்கிறேன். இது வன்முறை, இது அழிப்பது, இது என் குழந்தை நான் இதை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற கருத்து மிக தவறானது, என்றார்.
ஒரு குழந்தை ஒரு பொருளல்ல, ஒரு நாற்காலி அல்ல, ஒரு வண்டி
அல்ல, நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதையெல்லாம் அவனிடம் செய்ய முடியாது. அவன் உன் மூலமாக வந்திருக்கலாம். ஆனால் உனக்கு சொந்தமானவனல்ல. அவன் இறைவனை, இயற்கையை சேர்ந்தவன். நீ அதிகபட்சம் பாதுகாவலனாக இருக்கலாம், அவனை சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் குடும்பம் என்ற முறையே சொந்தம் கொண்டாடுதல்தான். சொத்துக்களை, பெண்ணை, ஆணை, குழந்தைகளை சொந்தம் கொண்டாடுதல், சொந்தமாக்கிக் கொள்ளுதல் என்பது விஷம். அதனால்தான் நான் குடும்பம் என்ற அமைப்புக்கு எதிரானவன். ஆனால் யார் உண்மையிலேயே தனது குடும்பத்தில் உயிர்ப்போடு, அன்போடு, இசைவோடு, இயல்பாக இருக்கிறார்களோ அவர்களை அதை கெடுத்துக் கொள்ள சொல்ல வில்லை. அதற்கு அவசியமில்லை. அவர்களது குடும்பம் ஏற்கனவே ஒரு கம்யூனாக, சிறிய கம்யூனாக உள்ளது.
ஒரு பெரிய கம்யூன் மேலும் சிறந்ததாக, மேலும் அதிக மக்களுடன்
மேலும் அதிக வாய்ப்புகளுடன் இருந்தால் அதுவும் நன்றாக இருக்குமே. வேறுபட்ட மக்கள்
வேறுபட்ட பாடல்களை, வேறுபட்ட வாழ்க்கைமுறைகளை, வேறுபட்ட சுவாச முறைகளை, வேறுபட்ட தென்றல்காற்றை, வேறுவிதமான வெளிச்சத்தை கொண்டுவருவார்கள். – குழந்தைகள் வேறுபட்ட வித்தியாசமான வாழ்க்கைமுறைகளில்
நனைவார்கள். வாழ்ந்து பார்ப்பார்கள், அப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,
அவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடைக்கும். பல பெண்களால் வளர்க்கப்
படுவதால் அம்மாவின் முகம் அல்லது அம்மாவின் ஸ்டைல் மட்டுமே என்றிருக்கமாட்டார்கள்.
அப்போது பலவிதமான ஆண்களை, பலவிதமான பெண்களை நேசிப்பார்கள். வாழ்க்கை ஒரு சாகசமாக இருக்கும்.
மக்கள், பயம் வேலை செய்யும், ஆணித்தரமாக சொல்வது வேலை
செய்யும், ஆளுமை வேலை செய்யும், அதிகாரம் வேலை செய்யும் என கற்றுக்கொண்டனர்.
குழந்தைகள் கதியற்றவர்கள், பெற்றோரை அண்டியே இருக்கின்றனர். அதனால் அவர்களை நீ
பயமுறுத்தலாம். அது அவர்களை சுரண்ட, அவர்களை அடக்கிவைக்க நீ உபயோகிக்கும்
வழிமுறையாக மாறிவிடும். அவர்களுக்கு வேறு வழியில்லை.
கம்யூனில் அவர்களுக்கு செல்ல பல இடங்கள் உண்டு. அவர்களுக்கு
பல அத்தைகள், பல மாமன்கள், இன்னும் பலர் உண்டு. – அவர்கள் கதியற்றவர்கள் அல்ல. அவர்கள் இப்போது உன் கைகளில் இருப்பது போல
இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரமுண்டு. வழியில்லாமல் இல்லை. அவர்களை
சுலபமாக நசுக்கி விட முடியாது.
குடும்பத்தில் அவர்கள் பட்டதெல்லாம் துயரம்தான். சில
நேரங்களில் கணவன் மனைவி அன்பாக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால்
அப்படி அவர்கள் அன்பாக இருப்பதெல்லாம் தனிமையில்தான். குழந்தைகளுக்கு அதைப்
பற்றித் தெரியாது. குழந்தைகள் அசிங்கமான முகத்தை அருவெறுப்பான பாகத்தை மட்டுமே
பார்க்கிறார்கள். தாயும் தந்தையும் மூடிய கதவிற்கு பின்னேதான் நேசிக்கின்றனர்.
அவர்கள் அதை ரகசியமாக வைக்கின்றனர். அன்பு என்பது என்னவென்று குழந்தைகளுக்கு தெரிய அவர்கள் அனுமதிப்பதே இல்லை. குழந்தைகள் அவர்களது சண்டையை, சச்சரவை, ஒருவரையொருவர் தாக்குவதை, மறைமுகமாகவும் நேராகவும் ஒருவரையொருவர் அவமரியாதை செய்வதைதான் பார்க்கின்றனர்.
குழந்தைகள் என்ன நிகழ்கிறது என்பதை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.
இது போய்கொண்டே இருக்கிறது. குழந்தைகள் நடப்பதை பார்த்துக்
கொண்டே இருக்கின்றனர். இதுவா வாழ்க்கை, என்ன விதமான வாழ்க்கை இது, வாழ்க்கை
என்பதன் பொருள் இதுதானா, இவ்வளவுதானா, என்று அவர்கள் எதிர்கால நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கின்றனர். வாழ்க்கைக்குள் நுழைய ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள்
தோற்றுவிடுகின்றனர். தோல்வியை ஒத்துக் கொண்டு விடுகின்றனர். அவ்வளவு அறிவுள்ள,
சக்தியுள்ள தங்களது பெற்றோர்களே வெற்றி பெற வில்லை என்னும்போது அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கமுடியும்? சாத்தியமேயில்லை. அவர்கள் குறுக்குவழியை கற்றுக் கொள்கின்றனர். – துன்பத்தில் இருப்பது, வெறித்தனமாக இருப்பது. குழந்தைகள் நேசிப்பதை பார்த்ததே இல்லை.
கம்யூனில் அதற்கு நிறைய சாத்தியக் கூறுகள் உள்ளன. அன்பு ஒரு
சிறிதளவாவது வெளிப்படையாக வேண்டும். அன்பு நிகழும் என்பது மக்களுக்கு தெரிய
வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு அன்பு என்பது என்னவென்று தெரியவேண்டும்.
ஒருவரையொருவர் அக்கறை எடுத்துக் கொள்வதை அவர்கள் பார்க்க வேண்டும், இந்த
ஆசிரமத்தில் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் என்னிடம் வந்து, ஏன் இப்படி
இருக்கிறது. சன்னியாசிகள் ஒருவர் மீது ஒருவர் அதிக நேசம் காட்டுகிறார்கள் அதுவும்
பொது இடத்தில் என கேட்கின்றனர். அது அவர்களை சோதிக்கிறது. இது அவர்களது
பிரச்னைகளில் ஒன்று, அவர்களது மிகப் பெரிய பிரச்சனை.
ஒருநாள் ஒரு இதழ் வந்தது. – மராட்டிய இதழ் – ஒருவர் எனக்கு எதிராக ஒரு கட்டுரை
எழுதியிருந்தார். அவர், எல்லாமும் சரிதான், ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடியாத
ஒரு விஷயம்………..ஓஷோ சொற்பொழிவு பேசி முடித்துவிட்டு போனபின்பு அணைத்துக்
கொள்வதும் முத்தமிட்டுக் கொள்வதும் அசிங்கமாக இருக்கிறது. என கூறியிருந்தார்.
இது ஒருமனிதனின் கருத்தல்ல – மிகப் பழைமையான, பழங்கால கருத்து. நீ பொது இடத்தில் சண்டையிடலாம், ஆனால்
நேசிக்ககூடாது. சண்டையிடுதல் சரி. நீ கொலைகூடச் செய்யலாம், அது அனுமதிக்கப்
படுகிறது. உண்மையில் இரண்டு மனிதர்கள் சண்டையிடும்போது ஒருகூட்டம் சுற்றி நின்று
என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் அதை
ரசிக்கின்றனர். அதனால்தான் மக்கள் கொலை கதைகள், மர்ம கதைகள், துப்பறியும் கதைகள்
ஆகியவற்றை ரசித்து படிக்கின்றனர். வன்முறை அனுமதிக்கப் படுகிறது. நேசம்
அனுமதிக்கப் படுவதில்லை.
நீ பொது இடத்தில் நேசித்தால் அது அசிங்கமாக கருதப்படுகிறது.
இது மடத்தனம். அன்பு அசிங்கம் கொலை செய்வது அசிங்கமானதல்ல. காதலர்கள் பொது
இடங்களில் அன்போடு இருக்கக் கூடாது. ஆனால் ஜெனரல்கள் தங்களது பதக்கங்களை
வெளிப்படையாக காண்பித்துக் கொண்டு நடக்கலாம். அவர்கள் கொலைகாரர்கள் அந்த
பதக்கங்கள் எல்லாம் அவர்கள் செய்த கொலைகளுக்காக அந்த பதக்கங்கள் எல்லாம் அவர்கள்
எந்த அளவு கொலைகாரர்கள், எவ்வளவு மக்களை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள்
என்பதையே காட்டுகிறது. இது அசிங்கமானதல்லவா?
இதுதான் அசிங்கமானதாக இருக்க வேண்டும். யாரும் பொது
இடங்களில் சண்டையிட அனுமதிக்கப் படக் கூடாது. அது அசிங்கம், வன்முறை அசிங்கம். எப்படி நேசம் அசிங்கமாக முடியும்? ஆனால் நேசம் அசிங்கமானதாக நினைக்கப் படுகிறது. நீ அதை இருட்டில் ஒளித்துவைக்க வேண்டும். நீ அன்பு செய்வது யாருக்கும் தெரியாது. நீ அதை மிகவும் அமைதியாக திருட்டுதனமாக செய்யவேண்டும். அப்போது இயல்பாகவே நீ அதை நன்றாக அனுபவிக்க முடியாது. மக்களுக்கு அன்பு என்பது என்ன என்ற விழிப்புணர்வு இல்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்பை பற்றி தெரியாமலேயே போய்விடுகிறது.
இதை விட சிறப்பான உலகில், அதிகம் புரிதலோடு, அன்பு எல்லா
இடத்திலும் இருக்கும். குழந்தைகள், அக்கறை எடுத்துக் கொள்வதை பார்ப்பார்கள். நீ
மற்றவருக்காக அக்கறை எடுத்துக் கொள்ளும்போது என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்பதை
பார்ப்பார்கள். அது இங்கே நிகழ்வதை நீ பார்க்க முடியும். மிகுந்த அன்போடும்
அக்கறையோடும் சிறுவன் சித்தார்த் ஒரு சிறு பெண்ணின் கரங்களை கோர்த்துக் கொண்டு
போவதை காணலாம். அவர்கள் கவனிப்பதால் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அது நிகழக்
கூடும் என அவர்களுக்கு தெரியும்போது அவர்களது கதவுகள் திறக்கின்றன. அன்பு
மேன்மேலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். வன்முறை மேன்மேலும் ஒதுக்கப் பட
வேண்டும். அன்பு அதிகமாக கிடைக்கப் பட வேண்டும். இருவர் இணையும்போது யாருக்கும்
தெரியக் கூடாது என்ற கவலை இருக்கக் கூடாது. அவர்கள் சிரித்து, பாடி, சந்தோஷத்தில்
கத்த வேண்டும். யாரோ இருவர் அன்பால் இணைகின்றனர் என அருகில் உள்ளவர்களுக்குத்
தெரிய வேண்டும்.
அன்பு ஒரு பரிசாக இருக்க வேண்டும். அன்பு தெய்வீகமானதாக
இருக்க வேண்டும், அது புனிதமானது.
நீ ஒரு மனிதன் கொல்லப் பட்டதை பற்றி எழுதி புத்தகம்
பிரசுரிக்கலாம். அது தவறல்ல. அது அருவெறுப்பானது அல்ல. என்னை பொறுத்தவரை அதுதான் அருவெறுப்பானது.
ஒரு மனிதன் ஒரு பெண்ணை அன்புடன் தழுவிகொள்வதை பற்றி, நேசத்துடன் அந்த பெண்ணிடம் கூடி இருப்பதை பற்றி புத்தகம் பிரசுரிக்க முடியாது. அது போர்னோகிராபி
அருவெறுப்பானது. இந்த உலகம் இதுவரை அன்பிற்க்கு எதிராகவே இருந்துவந்துள்ளது. உனது
குடும்பம் அன்புக்கு எதிரானது, உனது சமுதாயம் அன்புக்கு எதிரானது, உனது நிலைபாடே
அன்புக்கு எதிரானது. அன்பு ஒரு சிறிதளவு இன்னும் மிச்சமிருப்பது அதிசயம்தான்.
இன்னும் அன்பு நிகழ்வது நம்பவே முடியாதது – இது அப்படி இருக்கக் கூடாது, அது ஒரு சிறு துளியாக இருக்கிறது, கடல்போல இல்லை – ஆனால் இத்தனை எதிரிகளுக்கிடையில் முற்றிலுமாக சிதைக்கப் பட வில்லை, இது அதிசயம்தான்.
கம்யூன் என்பது என்னை பொறுத்தவரை அன்பான மக்கள் போட்டியின்றி,
பொறாமையின்றி, சொந்தம் கொண்டாடுதல் இல்லாமல் அன்பு பெருகி ஓடும் வண்ணம்,
மேன்மேலும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சேர்ந்து வாழும் இடம். குழந்தைகள்
எல்லோருக்கும் பொதுவானவர்கள், ஏனெனில் அவர்கள் கடவுளை சேர்ந்தவர்கள் – எல்லோரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளலாம். அவ்வளவு
அழகானவர்கள் இந்த குழந்தைகள். யார்தான் அவர்கள்மேல் அக்கறை செலுத்த மாட்டார்கள்.
பலர் அன்போடு இருப்பதை, ஒருவருக்கொருவர் தங்களது வழியில் வாழ்வதை பார்க்கும்
வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. குழந்தைகள் பார்த்து, விளையாடி, அனுபவித்து
மகிழட்டும். பெற்றோர்கள் அன்பு செலுத்தும்போது குழந்தைகளும் அங்கிருக்கட்டும்,
அவர்களும் அதில் ஒரு பாகமாகட்டும். அன்பு செய்யும்போது தாய்க்கு என்ன நடக்கிறதென்று
அவர்களும் பார்க்கட்டும். – அவளது முகம் எவ்வளவு பொலிவடைகிறது, எந்த அளவு அவள் பரவசமடைகிறாள் எப்படி அவளது விழிகளை மூடி அவள் தன்னுள் போகிறாள், எப்படி தனது தந்தை ஆற்றல் பெறுகிறார், எப்படி தந்தை சந்தோஷத்தில் கூக்குரலிடுகிறார் – என்று குழந்தைகள் தெரிந்து கொள்ளட்டும்.
குழந்தைகளுக்கு பலர் அன்பு செய்வதும் தெரியட்டும். அவர்கள்
மேலும் வளப்படுவர். இப்படிப் பட்ட குழந்தைகள் வளர்ந்து உலகில் இருக்கும்போது
யாரும் ப்ளேபாய் புத்தகத்தை படிக்க மாட்டார்கள். அதற்கு அவசியமிருக்காது. யாரும்
வாத்யாயனாவின் காமசூத்ரா வை படிக்க மாட்டார்கள். அதற்கு தேவையிருக்காது. நிர்வாண
படங்கள் மறைந்து விடும். அவர்கள் குறைபட்ட அன்பை, குறைபட்ட காமத்தை
காட்டுகிறார்கள்.
இந்த உலகம் கிட்டத்தட்ட காமமே இல்லாததாகி விடும் நேசம்
மட்டுமே இருக்கும். உன்னுடைய மதகுருவும் உன்னுடைய போலீஸ்காரனும் சேர்ந்து இந்த
உலகில் எல்லாவிதமான அசிங்கத்தையும் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். அசிங்கமான
அனைத்திற்கும் அவர்களே மூலகாரணம். உனது குடும்பம் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.
குடும்பம் மறைய வேண்டும். அது தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் இசைவாக இருக்ககூடிய பெரிய குடும்பமாகிய கம்யூனில் கரைய வேண்டும்.
கம்யூனில் புத்தமதத்தவர், இந்துமதத்தவர், ஜைன மதத்தவர்,
கிறிஸ்துவ மதத்தவர் யூத மதத்தவர் என எல்லோரும் இருப்பர். குடும்பங்கள் மறைந்து
விட்டால் தானாகவே சர்ச்சுகள் மறைந்து விடும். ஏனெனில் குடும்பங்கள் சர்ச்சுகளை
சார்ந்தது. கம்யூனில் எல்லா வகையான மக்களும் எல்லா வகையான மதங்களும் எல்லாவகையான தத்துவங்களும் கலந்திருக்கும். குழந்தைக்கு கற்றுக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கும். ஒருநாள் ஒரு மாமனுடன் அவன் சர்ச்சுக்கு போவான், இன்னொரு நாள் இன்னொரு மாமனுடன் கோவிலுக்கு போவான். அவன் அங்கு உள்ள அனைத்தை பற்றியும் கற்றுக் கொள்வான். அவன் இப்போது தேர்ந்தெடுக்க முடியும்.
தான் எந்த மதத்தில் இருக்கலாம் தான் எந்த மதத்தில் சேரலாம்
என்பதை அவன் தேர்ந்தெடுக்கலாம். எதுவும் சாத்தியமற்றதல்ல என்றாகிவிடும்.
வாழ்க்கை இங்கேயே இப்போதே சொர்க்கமாகி விடும். எல்லா விலங்குகளும்,
தடைகளும் தகர்க்கப் பட வேண்டும். குடும்பம் மிகப் பெரிய தடைகளில் ஒன்று.
SOURCE: Sufis : The people of the
Path Vol.2 Ch. #12