கேள்வி – நெஞ்சுக்கும் மனதுக்கும் நாபிக்கும் எங்கே வேறுபாடு?
பதில் – மனிதன் மூன்று மையங்களிலிருந்து செயல்படுகிறான். ஒன்று தலை, மற்றொன்று இதயம், மூன்றாவது நாபிக்கமலம்.
நீ தலையிலிருந்து செயல்பட்டால் மேலும் மேலும் எண்ணங்களால் பின்னப்படுவாய். அவை உள்ளீடற்றவை, கனவுகளை கொண்டவை, – சொல்வது அதிகம், செய்வது ஒன்றுமில்லை. மனம் ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. பொய்யான நம்பிக்கையை தரக்கூடிய அளவற்ற ஆற்றல் அதனிடம் உண்டு, ஏனெனில் அதனால் அதை பெரிது படுத்திக் காட்ட முடியும். மிகப் பெரிய ஆசை ஊட்டி, அளவற்ற நம்பிக்கை ஏற்றி நாளை இது நடக்கக் கூடும் எனக் கூறி ஏமாற்றும், ஆனால் அப்படி நடக்கவே நடக்காது. தலையில் எதுவும் எப்போதும் நடக்காது, எதுவும் நடப்பதற்கான இடம் தலை அல்ல.
இரண்டாவது மையம் இதயம். உணர்வுகளுக்கான மையம் இது. ஒருவர் இதயத்தின் மூலம்தான் உணர்கிறார். நீ வீட்டிற்கு அருகில் இருக்கிறாய் – வீட்டை வந்தடைய வில்லை ஆனால் நெருங்கி விட்டாய். நீ உணரும்போது நீ உயிர்ப்போடிருக்கிறாய், நீ நிலைப்படுகிறாய். நீ உணரும்போது ஏதாவது நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மூளையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதயத்தில் சிறிதளவாவது வாய்ப்பு உள்ளது.
ஆனால் உண்மையான விஷயம் இதயத்தில் இல்லை – உண்மையானது இதயத்தை விடவும் ஆழமானது – அதுதான் நாபிக்கமலம். அது இருப்பின் மையம்.
நினைப்பு, இருப்பு, உணர்வு இவைதான் மூன்று மையங்கள். ஆனால் நிச்சயமாக உணர்வு எண்ணங்களை விட இருப்புக்கு நெருக்கமானது. மேலும் உணர்வு ஒரு வழிமுறை போல செயல்படுகிறது. நீ மூளையிலிருந்து இறங்கி நாபிக்கு வர வேண்டுமானால் இதயத்தின் மூலமாகத்தான் வர வேண்டும். அதுதான் சாலைகள் பிரியும் முச்சந்தி. இருப்பிற்கு நேரிடையாக போக முடியாது , வழியில்லை. இதயத்தின் வழியாகத்தான் போயாக வேண்டும். அதனால் இதயம் ஒரு வழிமுறையாக செயல்படுகிறது.
அதிகமாக உணர்ந்தால் குறைவாக சிந்திப்பாய்.
எண்ணங்களுடன் சண்டையிடாதே, ஏனெனில் எண்ணங்களுடன் சண்டையிடுவது சண்டையிடும் எண்ணங்களை மேலும் உருவாக்குவதாகும், பின் மனம் ஒருபோதும் தோல்வியுறாது. நீ வென்றால் மனம்தான் வென்றது, நீ தோற்றால் நீதான் தோற்றாய். எப்படியும் நீதான் தோல்வியுறுவாய் – அதனால் எண்ணங்களுடன் சண்டையிடாதே. அதனால் பயனில்லை.
எண்ணங்களுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, உனது சக்தியை உணர்வுகளுக்கு கொண்டு வா. நினைப்பதற்கு பதிலாக பாடு, தத்துவம் பேசுவதற்கு பதிலாக அன்பு செய், கட்டுரைக்கு பதிலாக கவிதை படி, ஆடு, இயற்கையை பார், என்ன செய்தாலும் அதை இதயத்தின் மூலமாக செய்.
உதாரணமாக, நீ யாரையாவது தொட்டால், இதயத்தின் மூலமாக உணர்வோடு தொடு. உனது இருப்பு துடிக்கட்டும். யாரையாவது பார்க்கும்போது இறுகிய கண்களோடு பார்க்காதே. உனது சக்தியை கண்களில் செலுத்திப் பார், உடனடியாக இதயத்தில் ஏதோ ஒன்று நிகழ்வதை நீ உணர்வாய். அதற்கு முயற்சி செய்வது மட்டுமே வேண்டும்.
இதயம் ஒதுக்கப்பட்ட மையம். ஒருமுறை நீ அதில் கவனம் செலுத்தினால் அது செயல்பட ஆரம்பிக்கும். அது செயல்பட ஆரம்பித்து விட்டால் மனதின் வழி செல்லும் சக்தி இதயத்தின் வழியாக செல்ல ஆரம்பிக்கும். இதயம் சக்தி மூலத்திற்கு அருகில் உள்ளது.
நாபிக்கமலம்தான் சக்தி மூலம். அதனால் சாதாரணமாக அதில் இருந்து தலை வரை சக்தியை செலுத்துவது கடினமான வேலைதான். இதில்தான் அனைத்து கல்விமுறைகளும் உயிர் வாழ்கின்றன. அவை சக்தியை நாபி மூலத்திலிருந்து இதயத்தை தொடாமல் தலை மையத்திற்கு செலுத்துவது எப்படி என்பதை போதிக்கின்றன. எந்த ஸ்கூலும், காலேஜூம், பல்கலைகழகமும் எப்படி உணர்வதென்று உணர்வைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. அவை உணர்வை அழிக்கின்றன. ஏனெனில் நீ உணர்ந்தால் உன்னால் நினைப்பில் ஆழ முடியாதென்று அவைகளுக்குத் தெரியும். நீ அதிகமாக உணர உணர சக்தி இருதய மையத்திலேயே நின்று விடும், தலைக்கு போகாது. இருதயமையத்தை கை விட்டால்தான் அது தலைக்கு போகும். சக்தி எங்காவது போயே தீர வேண்டும். அது வெளியேறும் பாதை ஒன்றை கண்டு பிடிக்கும். அது இருதய மையத்தின் வழியாக போக முடியாவிடில் தலைக்கு போகும்.
அதனால் அன்பு மறுக்கப்படுகிறது, உணர்வு மறுக்கப்படுகிறது – தடை செய்யப்படுகிறது – உணர்வது ஒரு பாவமாகவே ஆகி விட்டது. ஒருவர் தர்க்கவாதியாக, பகுத்தறிவுவாதியாக இருக்கலாம், ஆனால் உணர்வுமயமாக இருக்கக் கூடாது. நீ உணர்வுமயமாக இருந்தால் மக்கள் உன்னை குழந்தைதனமாய் இருக்கிறாய் எனக் கூறி விடுவார்கள். ஒருவகையில் அவர்கள் கூறுவது உண்மைதான், ஏனெனில் குழந்தையால் மட்டுமே உணரமுடியும்.
வளர்ந்த, மனக்கட்டுப்பாடு செய்யப்பட்ட, படித்த, நாகரீகமடைந்த ஒரு மனிதன் உணர்வதை நிறுத்திவிடுகிறான். அவன் கிட்டத்தட்ட வறண்டு, இறந்த மரத்தைப் போல ஆகி விடுகிறான். அவனிடமிருந்து சாராம்சம் பெருகுவதில்லை. அதனால்தான் அவ்வளவு துயரம். தலைதான் துயரத்திற்கு காரணம்.
தலையால் கொண்டாட முடியாது, தலைமூலம் கொண்டாட்டம் எதுவும் சாத்தியமில்லை. அதால் கொண்டாட்டத்தை பற்றி நினைக்க முடியும் – அது அதைப்பற்றி, பற்றி, பற்றி என சிந்திக்க முடியும். ஆனால் அதனால் கொண்டாட முடியாது. கொண்டாட்டம் இதயத்தின் மூலமாகத்தான் நிகழும்.
முதலில் அன்பாயிரு. – பாதிப்பயணம் முடிந்தது. தலையிலிருந்து இதயத்துக்கு நகர்வது பின் சுலபமானதாகி விடும். இதயத்திலிருந்து நாபிக்கு செல்வது இன்னும் எளிதானதாகி விடும்.
நாபியில் நீ ஒரு இருப்பு, ஒரு உயிர் – உணர்வில்லை, சிந்தனையில்லை. நீ அசைவதில்லை. அது புயலின் மையம். மற்ற அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கும், தலை அசைந்து கொண்டிருக்கும், இதயம் அலைபாய்ந்து கொண்டிருக்கும், உடல் ஆடிக் கொண்டிருக்கும். எல்லாமும் அசைவோடிருக்கும். எல்லாமும் தொடர்ந்த அசைவில் இருக்கும்.
உனது நாபிக்கமலம், இருப்பின் மையம் மட்டுமே அசைவற்றிருக்கும். அது சக்கரத்தின் அச்சாணி போன்றது.
For Madman only Ch. #10