1.புத்திசாலித்தனம்

அறிவாற்றல் போலித்தனமானது, பொய்யானது. அது புத்திசாலித்தனத்திற்கு மாற்றானது. புத்திசாலித்தனம் என்பது முற்றிலும் வேறுபட்டது, அது உண்மையான ஒன்று.

புத்திசாலித்தனத்திற்கு அளவற்ற தைரியம் வேண்டும். ஒரு சாகசமான வாழ்வுதான் புத்திசாலித்தனத்தை தர முடியும். புத்திசாலித்தனத்திற்கு எப்போதும் அறியாதது வேண்டும், ஒரு தெரிந்திராத புலம் வேண்டும். அப்போதுதான் புத்திசாலித்தனம் வளரும். அது கூர்மையடையும். அது ஒவ்வொரு கணமும் அறியாத ஒன்றை எதிர் கொள்ளும் போதுதான் வளரும்.

மக்கள் அறியாததைக் கண்டு பயப்படுகிறார்கள். மக்கள் அறியாதது எனும்போது பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். அவர்கள் தெரிந்ததை கடந்து போக விரும்புவதேயில்லை. அதனால்தான் அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் மாற்று ஒன்றை உருவாக்கினர். அதை அறிவாற்றல் என்றழைத்தனர்.

அறிவாற்றல் வெறும் மூளையின் விளையாட்டு. அது படைக்கக் கூடியதல்ல.

அறிவாற்றல் கற்பனை செய்யும், ஆனால் அது உருவாக்காது. புத்திசாலித்தனம் உருவாக்கும். புத்திசாலித்தனம் உன்னை பிரபஞ்சத்துடன் பங்கு கொள்ள வைக்கும் ஆற்றல் படைத்தது, ஆகவே அது படைக்கும். பிரபஞ்சம்தான் எல்லா படைப்புக்களின் ஆதாரம். நீ பிரபஞ்சத்துடன் இணைந்து இருக்கும்போதுதான். நீ இயற்கையில் வேர் கொண்டு இருக்கும்போதுதான், நீ இறைமையின் ஒரு பாகமாக இருக்கும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும். நீயாக எதையும் உருவாக்க முடியாது, நீ இயற்கையின் ஒரு ஊடகமாக மாறும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும்.

ஒரு கவிஞன் கவிதை இயற்றும்போது அவன் ஒரு வெற்று மூங்கிலாகிறான், அவன் ஊடகமாகிறான். அப்போது திடீரென அந்த வெற்று மூங்கில் மூங்கிலல்ல, அது புல்லாங்குழலாகிறது. மூங்கிலின் காலி இடம் முழுமையும் பாடலாக, ஆடலாக, கொண்டாட்டமாக மாறுகிறது.

படைப்புத்தன்மை என்பது நீ மறைவதுதான். நீ தூர விலகி நின்று பிரபஞ்சம் உன்னை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான்.

அறிவாற்றல் ஆணவத்தன்மை உடையது. புத்திசாலித்தனம் பணிவானது, ஆணவமற்றது. இந்த வித்தியாசம் மிகவும் மெலிதானது, ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே மூலத்திலிருந்துதான் வந்தவை. எனவே ஏமாறுவது எளிது. கவனமாக இரு, ஜாக்கிரதையாக இரு. அறிவாற்றல் புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் படைப்பாற்றல் கொண்டது. அறிவாற்றல் நடிப்பது. படைப்பது எனும் பெயரில் அது குப்பைகளை உருவாக்கும்.

புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்டது. அது தலையுடன் தொடர்புடையதல்ல. அது இதயத்துடன் தொடர்புடையது. அறிவாற்றல் மூளையில் இருப்பது. இதயம் முழுமையாக திறந்திருக்கும் நிலைதான் புத்திசாலித்தனமாகும். உனது இதயம் திறந்திருக்கும்போது, ஆழமான நன்றியுணர்வில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, உனது இதயம் பிரபஞ்சத்துடன் லயத்தில் இருக்கும்போது, இயற்கையுடன் இணைந்து இருக்கும்போது அந்த லயத்தில் இருந்து படைப்பு எழுகிறது. அறிவாற்றலிலிருந்து எந்த விதமான படைப்பும் எழ வாய்ப்பே இல்லை. அறிவாற்றல் குப்பைகளைத்தான் உருவாக்கும். அது உற்பத்தி செய்யும், அதனால் உற்பத்தி செய்ய முடியும், ஆனால் படைக்க முடியாது. படைப்பதற்க்கும், உற்பத்தி செய்வதற்க்கும் என்ன வித்தியாசம் உற்பத்தி செய்வது இயந்திரத்தனமான செயல். கம்ப்யூட்டர்களே அதை செய்யும். அதை ஏற்கனவே செய்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களை விட மிகவும் நன்றாகவே செய்து கொண்டு இருக்கின்றன.

புத்திசாலித்தனம் படைக்கும் , ஆனால் அது உற்பத்தி செய்யாது. உற்பத்தி என்றால் ஏற்கனவே செய்த ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வது. படைப்பது என்பது புதிய ஒன்றை இருப்பினுள் கொண்டு வருவது, அறியாத ஒன்றை நடப்பில் கொண்டு வரும் முயற்சி, வானம் பூமிக்கு வர ஒரு வழி உண்டாக்குவது,

அறிவாளி, தகவலறிவுடையவன், அதில் தேர்ச்சி பெற்றவன் தன்னிடம் எந்த உள்ளொளியும் இல்லாதவன். அவன் பாரம்பரியத்தை, தகவலறிவை, பரிமாற்றத்தை சார்ந்து இருப்பான். அது ஒரு சில இடங்களில் பொருந்தி இருக்கும், ஆனால் அது சுயஉணர்வற்றது, நீ கிட்டத்தட்ட தூக்கத்தில் செயல்படுபவாய்.

புத்திசாலித்தனம் விழிப்புடையது, நீ முழுமையாக விழிப்புடன் இல்லையென்றால் நீ தீர்மானிப்பது எதுவாக இருந்தாலும் எங்காவது தவறாக முடியக்கூடிய வாய்ப்புண்டு.

செயலில் நீ புத்திசாலித்தனமாக இருக்க உனக்கு அதிக தகவல் தேவை இல்லை. அதிக தியானத்தன்மைதான் தேவை. மௌனமாக, அமைதியாக எண்ணங்களற்று இருப்பதுதான் தேவை. நீ மேன்மேலும் அதிக இதயபூர்வமாகவும் குறைவான அளவு மனதோடும் செயல்படுபவனாக இருக்க வேண்டும்.
The Dhammapada : The Way of the Buddha
.
2. விழிப்புணர்வும் தளர்வு நிலையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

நீங்கள் ஏன் பதட்டமாயிருக்கிறீர்கள் எல்லா எண்ணங்களுடனும் நீங்கள் ஒன்றி போய் விடுவதாலும், மரணம் மற்றும் பணவீழ்ச்சி, பொருளாதாரநிலை மாற்றம் போன்ற பயங்களாலும் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். அது உங்கள் உடலையும் பாதிக்கிறது. உனது உடலும் பதட்டமாகிவிடுகிறது, ஏனெனில் உடலும் மனமும் இரண்டல்ல. உடலும் மனமும் ஒரே இயக்கம்தான். ஆகவே மனம் பதட்டமடையும்போது உடலும் பதட்டமாகி விடுகிறது.

விழிப்புணர்வும் தளர்வு நிலையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நீ அவற்றை பிரிக்க முடியாது. நீ விழிப்புணர்வில் தொடங்கினால் நீ தளர்வு நிலையில் இருப்பதை நீயே காணலாம். ……

விழிப்புணர்வு உன்னை மனதிலிருந்தும் மனதின் அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்தும் நகர்த்தி விடுகிறது. அதனால் இயல்பாகவே உடல் தளர்வு கொள்கிறது. நீ மனதோடு ஒன்றி இருப்பதில்லை, விழிப்புணர்வு ஒளியில் பதட்டங்கள் இருக்க முடியாது.

நீ இந்த முனையிலிருந்தும் துவங்கலாம், தளர்வாக இரு…..எல்லா பதட்டங்களும் குறையட்டும்…..நீ தளர்வாக இருக்கும்போது ஒருவகையான விழிப்புணர்வு உன்னுள் எழுவதை நீ பார்க்கும்போது நீ வியப்படைவாய். ஆனால் விழிப்புணர்விலிருந்து துவங்குவது எளிதாக இருக்கும். தளர்வு நிலையிலிருந்து துவங்குவது சிறிது சிரமம். ஏனெனில் தளர்வு கொள்ளும் அந்த முயற்சியே சிறிது பதட்டத்தை உருவாக்கும்.

நீ கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஒரு அமெரிக்க புத்தகம் உள்ளது. கட்டாயமாக என்பது அங்கிருக்கும்போது நீ ஓய்வெடுப்பது எங்ஙனம் அந்த கட்டாயம் என்பது உன்னை பதட்டமாக்கும். அந்த வார்த்தையே பதட்டத்தை உருவாக்கி விடும்.

கட்டாயம் என்பது கடவுளிடமிருந்து வந்த ஒரு கட்டளை போலாகி விடும். அந்த புத்தகத்தை எழுதியவருக்கு தளர்வு நிலையைப் பற்றியோ, தளர்வு நிலையின் சிக்கல்களைப் பற்றியே எதுவும் தெரியாது என நினைக்கிறேன். அதனால்தான் கிழக்கில் நாங்கள் தளர்வு நிலையிலிருந்து தியானத்தை துவங்குவதில்லை. நாங்கள் விழிப்புணர்வு நிலையிலிருந்து தியானத்தை துவங்குகிறோம். பின் தளர்வு நிலை தானாகவே வந்துவிடும். நீ அதை கொண்டுவர வேண்டியதில்லை, நீ அதை கொண்டுவர வேண்டும் எனும்போது அங்கு ஒரு பதட்டம் வந்துவிடுகிறது. அது அதன்போக்கில் அது பாட்டுக்கு வரவேண்டும். அப்போதுதான் அது முழுமையான தளர்வு நிலை. மேலும் அது தானாகவே வரும்.

நீ விரும்பினால் தளர்வு நிலையிலிருந்து ஆரம்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் கட்டாயமாக என்ற எந்த கருத்தும் இல்லாமல் ஆரம்பி. தளர்வு நிலையிலிருந்து துவங்குவது கஷ்டம். ஆனால் நீ அதை முயற்சி செய்ய விரும்பினால் எப்படி துவங்க வேண்டும் என்பதற்கு என்னிடம் ஒரு திட்டமுண்டு. நான் பல மேற்கத்திய மனிதர்களை பண்படுத்தியிருக்கிறேன். அவர்கள் கிழக்கை சேர்ந்தவர்களாக இருந்ததில்லை. அவர்களுக்கு கிழக்கத்திய தன்னுணர்வு என்பதைப் பற்றிய எதுவும் தெரியவில்லை என்ற உண்மையை உணர்ந்திருக்கிறேன். எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாத ஒரு பாரம்பரியத்திலிருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக மேற்கத்திய மனிதர்களுக்காகவே நான் டைனமிக் தியானத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் முகாம் நடத்தும்போது குண்டலினி தியானத்தையும் ஜிபரிஷ் தியானத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன். நீ தளர்வு நிலையிலிருந்து துவங்க விரும்பினால் முதலில் இந்த தியானங்களை செய்ய வேண்டும். அவை உன்னுடைய மனதிலிருந்தும் உடலிலிருந்தும் பதட்டத்தை வெளியே எடுத்து விடும்போது பின் ஓய்வாக இருப்பது எளிதாகும். நீ எவ்வளவு விஷயங்களை பிடித்து வைத்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. மேலும் இவைதான் உனது பதட்டத்திற்கான காரணம்.

நான் மலைகளில் நடக்கும் தியான முகாம்களில் ஜிப்ரிஷ் தியானத்தை அனுமதிப்பேன். அதை நகரத்தில் நடக்கும் தியான முகாம்களில் அனுமதித்தால் அக்கம்பக்கத்தார்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் போலீஸூக்கு போன் செய்து எங்களது வாழ்க்கையே கெட்டுவிட்டது என்று புகார் செய்வர். அவர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே அந்த தியானத்தில் அவர்களும் பங்கெடுத்தால் அவர்கள் வாழும் வாழ்க்கையின் பைத்தியக்காரத்தனத்திலிருந்து விடுபடலாம் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தங்களது வாழ்க்கை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்பது கூட தெரிவதில்லை.

ஜிபரிஷ் தியானத்தின் போது எல்லோரும் தங்களது மனதில் என்ன வருகிறதோ அதை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும். மற்றவர்கள் கூறுவதை நான் கேட்டுக்கொண்டிருப்பேன் – அது மடத்தனமானதாக, முட்டாள்தனமானதாக இருந்தால் கூட – அது ஒரு சந்தோஷமான விஷயமும். ஏனெனில் நான் அதில் ஒரு சாட்சியாக மட்டுமே இருப்பேன்.

இதில் நீ என்ன செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, மற்றவர்களை தொடக்கூடாது. மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்வார்கள். ஒருவர் தலைகீழாக நிற்பார். ஒருவர் எல்லா டைகளையும் கழற்றி எறிந்துவிட்டு சுற்றி சுற்றி ஓடுவார் – அந்த ஒரு மணி நேரமும். ஒருவர் ஒவ்வொரு நாளும் என் முன்னால் வந்து உட்காருவார். அவர் ஒரு ஷேர் மார்க்கெட் புரோக்கராகவோ அல்லது அது போல ஏதாவதாகவோ இருக்கிறார். தியானம் தொடங்கியவுடன் அவர் தான் செய்யப்போகும் காரியத்தை நினைத்து தானே சிரித்துக் கொள்வார். பின் தனது இல்லாத போனை எடுத்து ஹலோ ஹலோ என்று பேசுவார். அதற்க்குள் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே போன் பேசுவார். அவரது தியானத்தை கலைக்க விரும்பாததால் அவரை பார்ப்பதை நான் தவிர்த்து விடுவேன். அவர் தனது ஷேர்களை வாங்கி விற்று அந்த ஒரு மணி நேரத்தையும் செலவிடுவார்.

ஒவ்வொருவரும் தாங்கள் அமுக்கி வைத்திருக்கும் வித்தியாசமான விஷயங்களை செய்வார்கள். அந்த தியானம் முடிந்தவுடன் பத்து நிமிடம் அமைதியான மௌன நிலை.

அந்த பத்து நிமிடங்கள் எல்லோரும் படுத்திருப்பர். எந்த விதத்திலும் தானாக எடுத்த முடிவாக இல்லாமல் முழுமையாக சக்தி வெளியேற்றப்பட்ட காரணத்தால் நிகழ்வதாக இருப்பதால் அமைதியாக இருப்பர். எல்லாவித குப்பைகளும் வெளியேற்ற பட்ட நிலையில் அவர்கள் ஒருவிதமான சுத்தத்தை உணர்வதால் அவர்கள் தளர்வடைகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக படுத்திருப்பர்…………

அங்கு ஆயிரக்கணகான மக்கள் இருக்கிறார்கள் என்று உன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மக்கள் என்னிடம் வந்து, தயவுசெய்து இந்த நேரத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் எனது வாழ்நாள் முழுவதிலும் இத்தகைய தளர்வை, இத்தகைய சந்தோஷத்தை நான்
அனுபவித்ததேயில்லை. எங்களால் விழிப்புணர்வு என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியதேயில்லை. ஆனால் இன்று அது வருவதை நாங்கள் உணர்ந்தோம். என்று கூறுகின்றனர்.

ஆகவே நீ தளர்வு நிலையிலிருந்து துவங்க விரும்பினால் முதலில் கெத்தாரிஸிஸ் நிலையிலிருந்து துவங்க வேண்டும். டைனமிக் அல்லது குண்டலினி அல்லது ஜிபரிஷ் போன்ற தியானங்களை செய்ய வேண்டும். ஜிபரிஷ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என உனக்கு தெரியாமல் இருக்கலாம். அது ஜாபர் என்று பெயருடைய ஒரு சூஃபி ஞானியிடமிருந்து வந்தது. அதுதான் அவருடைய ஒரே தியானம். யார் அவரிடம் வந்தாலும் உடனே அவர் உம், உட்கார், ஆரம்பி என்பார். மக்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று தெரியும். அவர் பேசியதேயில்லை, அவர் எந்த சொற்பொழிவும் ஆற்றியதில்லை. அவர் மக்களுக்கு ஜிபரிஷ் தியானத்தை மட்டுமே கற்றுக் கொடுத்தார். உதாரணமாக புதிதாக யாராவது வந்தால் அவர் அவர்களுக்கு எப்படி ஜிபரிஷ் செய்வது என்று செய்து காண்பிப்பார். அரைமணி நேரம் அவர் எல்லா விதமான மடத்தனமான பேச்சுக்களையும் தானே உருவாக்கிய மொழியில், மொழியற்ற உளறலாக பேசிக் காண்பிப்பார். அவருடைய மனதில் என்ன வருகிறதோ அதை அவர் சொல்வார். அதுதான் அவருடைய ஒரே போதனை. அதைப் பற்றி தெரிந்த யார் வந்தாலும் அவர் உட்கார், ஆரம்பி என்றே சொல்வார்.

ஜாபர் பலர் முழுமையாக அமைதியடைய உதவியிருக்கிறார். எவ்வளவு நேரம் உன்னால் பேச முடியும் மனம் காலியாகியே தீரும். மெது மெதுவாக ஒரு ஒன்றுமில்லாதன்மை வந்து அமரும். அந்த ஒன்றுமில்லை தன்மையில் விழிப்புணர்வு ஒளிரும். அது எப்போதும் அங்கேயே இருக்கிறது. உன்னுடைய ஜிபரிஷ் தன்மையால் சூழப்பட்டு இருக்கிறது. இந்த ஜிபரிஷ் எடுக்கப்பட வேண்டும். அதுதான் உனது நோய்.

உடலைப்பற்றியும் இதுதான் பொருத்தமாக இருக்கும். உன்னுடைய உடலில் பதட்டம் இருக்கிறது. உனது உடல் செய்ய விரும்பும் இயக்கத்தை செய்ய உதவி செய். நீ அதை தடை செய்யக்கூடாது. அது நடனமாட விரும்பினால், குதிக்க விரும்பினால், ஓட விரும்பினால், தரையில் படுத்து புரள விரும்பினால் நீயாக அதை செய்யாதே. உடல் செயல் பட அனுமதித்துவிடு. உடலிடம் நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை சுதந்திரமாக செய் என்று கூறிவிடு. அப்போது நீ வியப்படைவாய். கடவுளே, உடல் இத்தனை விஷயங்களை செய்ய விரும்பியிருக்கிறது, ஆனால் நான் அதை அனுமதிக்க வில்லை. ஆகவேதான் இந்த பதட்டம் என்று உணர்வாய். ஆகவே இரண்டு விதமான பதட்டங்கள் இருக்கின்றன. உடல் பதட்டம், மனப்பதட்டம். தளர்வடைய ஆரம்பிப்பதற்கு முன் இரண்டும் விடுவிக்கப்பட வேண்டும். அதுதான் உனக்கு விழிப்புணர்வை வெளியே கொண்டு வரும்.

ஆனால் விழிப்புணர்விலிருந்து ஆரம்பிப்பது மிகவும் எளிது. அதிலும் விழிப்புணர்வின் வழிவகை தெரிந்தவர்களுக்கு அது மிகவும் சுலபமாக இருக்கும். நாள் முழுவதும் நீ உன்னுடைய விழிப்புணர்வை எல்லாவற்றிற்க்கும் உபயோகப்படுத்தலாம். காரோட்ட,
போக்குவரத்தில் என எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தலாம். போக்குவரத்து மிக மிக பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, அதில் கூட நீ தப்பிக்கலாம். நீ விழிப்புணர்வை வெளிவிஷயங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறாய். அதைப்பற்றிய கவனமே இல்லை உனக்கு. அதே விழிப்பை நீ உள் போக்குவரத்துக்கும் உபயோகப்படுத்தலாம், நீ உனது விழிகளை மூடினால் உள்ளே எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள், உணர்வுகள் என ஏகப்பட்ட போக்குவரத்து ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் பெருக்கெடுத்து ஓடும். நீ வெளி உலகத்தில் என்ன செய்கிறாயோ அதையே உள் உலகத்திலும் செய், அதை சாட்சியாக இருந்து பார். சாட்சியாக இருப்பதன் சுகம் ஒரு முறை தெரிந்து விட்டால் அது மிகவும் அருமையானதாக, வேறு உலகை சேர்ந்ததாக, திரும்ப திரும்ப அப்படி இருக்க தூண்டுவதாக இருக்கும். எப்போதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மேலும் மேலும் நீ உள் உலகில் ஆழ விரும்புவாய்.

அது எந்த அமைப்பையும் சேர்ந்ததல்ல, அது எந்த கோவிலை சர்ச்சை, மசூதியை சேர்ந்தது என்பது போன்ற கேள்வியல்ல. பஸ்ஸில் அல்லது ரயிலில் உட்கார்ந்திருக்கும் போது செய்ய எதுவும் அல்லாத சமயத்தில் கண்களை மூடிக்கொள். இது வெளியே பார்ப்பதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வை தவிர்ப்பது மட்டுமல்லாமல் உனக்கு உள்ளே பார்க்க தேவையான காலநேரத்தையும் கொடுக்கும். அந்த கணங்கள் மிகவும் அற்புதமான அனுபவங்களை கொடுக்கும் கணங்களாகும். மெது மெதுவாக விழிப்புணர்வு வளர வளர உன்னுடைய இயல்பு முழுவதும் மாற ஆரம்பிக்கும். தன்னுணர்வு அற்ற நிலையிலிருந்து விழிப்புணர்வு நிலைக்கு மாறுவது மிகப் பெரிய தாவலாகும்.

எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்போடு இருக்க கற்றுக் கொள். விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு சூழலையும் உபயோகிப்பது என்று உறுதி கொள்.