1. புத்திசாலித்தனம் பற்றி ஓஷோ
விஷயஞானம் போலியான ஒன்று, பொய்யான ஒன்று. புத்திசாலித்தனத்திற்கு அது ஒரு மாற்று அல்ல. புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். உண்மையான விஷயம்.
புத்திசாலித்தனத்திற்கு அதிக துணிச்சல் தேவை. புத்திசாலித்தனத்திற்கு துணிச்சலான வாழ்க்கை தேவை. புத்திசாலித்தனத்திற்கு அறியாதவற்றிற்குள் செல்வது, வரைபடமற்ற கடலுக்குள் செல்வது தேவைப்படுகிறது. அப்போது புத்திசாலித்தனம் வளர்கிறது, அதிக கூர்மையடைகிறது. அறியாததை ஒவ்வொரு நொடியும் சந்திக்கும் போது மட்டுமே அது வளர்கிறது. மக்கள் அறியாததைக் கண்டு பயப்படுகிறார்கள். அறியாதவற்றில் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள். தெரிந்தவற்றை தாண்டிச் செல்ல அவர்கள் விரும்புவதில்லை.
அதனால்தான் அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பொய்யான பிளாஸ்டிக் மாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதனை விஷயஞானம் என்று அழைக்கின்றனர்.
விஷயஞானம் மனதின் ஒரு விளையாட்டு மட்டுமே அது ஆக்கபூர்வமாக இருக்க முடியாது. விஷயஞானம் கற்பனை வளமுடையது, ஆனால் ஆக்கபூர்வமானதல்ல. புத்திசாலித்தனம் ஆக்கப்பூர்வமானது. புத்திசாலித்தனம் உருவாக்குகிறது. ஏனெனில் புத்திசாலித்தனம் உன்னை பிரபஞ்சத்தோடு பங்கெடுத்துக் கொள்ளும் சக்தியுள்ளவனாக ஆக்குகிறது. பிரபஞ்சம்தான் எல்லா ஆக்கபூர்வ சக்திக்கும் மூலம். பிரபஞ்சத்தோடு இணைந்து இருக்கும் போது மட்டுமே பிரபஞ்சத்தில் நீ வேர் கொண்டிருக்கும்போது மட்டுமே நீ தெய்வீக சக்தியின் பகுதியாக இருக்கும்போது மட்டுமே உன்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியும். நீ தனித்து ஆக்கபூர்வமாக இருக்க முடியாது. பிரபஞ்சத்தின் ஒரு கருவியாக மட்டுமே நீ ஆக்கபூர்வமாக இருக்க முடியும். ஒரு கவிஞர் உருவாக்கும்போது, அவர் வெறும் ஒரு கருவியாக மட்டுமே ஒரு வெற்று மூங்கிலாக இருக்கிறார். திடீரென அந்த வெற்று மூங்கில் மூங்கிலாக இல்லை, அது ஒரு புல்லாங்குழலாக ஆகிவிடுகிறது. மூங்கிலின் காலித்தன்மை பாடலாலும் ஆடலாலும் கொண்டாட்டத்தாலும் நிறைந்து விடுகிறது.
ஆக்கபூர்வதன்மை என்பதன் பொருள், நீ மறைந்து விட வேண்டும், பிரபஞ்சம் உன்னை ஆட்கொள்ள நீ அனுமதிக்க வேண்டும், நீ வழியை விட்டு விலக வேண்டும் என்பதேயாகும்.
விஷயஞானம் ஆணவம் மிக்கது. புத்திசாலித்தனம் பணிவானது, ஆணவமற்றது. இரண்டுக்கும் வேறுபாடு நுண்ணியது. ஏனெனில் ஆங்கிலத்தில் இரு சொற்களும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன. எனவேதான் ஒருவர் எளிதாக ஏமாற்றப்பட முடியும். உணர்வோடு இரு, சுதாரிப்போடு இரு. விஷயஞானம் புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் ஆக்கபூர்வமானது. விஷயஞானம் வெறும் ஒரு நடிப்பு மட்டுமே. ஆக்கபூர்வ தன்மை என்ற பெயரில் அது வெறும் குப்பையை மட்டுமே உற்பத்தி செய்கிறது. புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிமாணம். அதற்கு தலையோடு எந்த சம்பந்தமும் கிடையாது, அது இதயத்தோடு தொடர்புடையது. விஷயஞானம் தலையில் உள்ளது, புத்திசாலித்தனம் என்பது இதயம் விழிப்போடு உள்ள நிலை. உன்னுடைய இதயம் விழித்திருக்கும்போது உன்னுடைய இதயம் ஆழ்ந்த நன்றியில் நடனம் ஆடும்போது, உன்னுடைய இதயம் பிரபஞ்சத்தோடு இயைந்து இருக்கும்போது, பிரபஞ்சத்தோடு லயமாக இருக்கும்போது அந்த லயத்தில் இருந்து ஆக்கபூர்வதன்மை எழுகிறது. விஷயஞானத்தின் மூலம் ஆக்கபூர்வதன்மை எழுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை. விஷயஞானம் குப்பையை உற்பத்தி செய்ய முடியும், அதற்கு உற்பத்தி திறன் உள்ளது – அதனால் உற்பத்தி செய்ய முடியும் ஆனால் அது உருவாக்க முடியாது.
உற்பத்தி செய்வதற்க்கும் உருவாக்குவதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன உற்பத்தி செய்வது என்பது எந்திர செயல்பாடு. கணிப்பொறிகள் அதனை செய்ய முடியும். அவை ஏற்கனவே அதை செய்து கொண்டிருக்கின்றன. மற்றும் மனிதனை விட அதிகமாக நீ எதிர் பார்ப்பதை விட அதிக உற்பத்தி அளிக்கும் வகையில் அது வேலையை செய்கிறது.
புத்திசாலித்தனம் உருவாக்குகிறது. அது உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி என்பது திரும்ப திரும்ப செய்யும் செயல். ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றை நீ திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறாய். ஆக்கபூர்வ தன்மை என்பது புதியதை பிரபஞ்சத்திற்க்குள் கொண்டு வருவது, தெரியாதது தெரிந்ததற்குள் ஊடுருவ ஒரு வழியை ஏற்படுத்துவது, வானம் பூமிக்கு வர ஒரு வழியை ஏற்படுத்துவது
திறமைசாலி, அறிவாளி, விஷயம் தெரிந்தவர் இவர்களுக்கு சொந்த அனுபவம் ஏதுமில்லை. அவர் கடன் வாங்கபட்ட அறிவை, சடங்கை, சம்பிரதாயத்தை சார்ந்திருக்கிறார். விஷயம் தெரிந்தவர்கள் ஒரு சில முடிவுகளுக்கு வரக்கூடும், ஆனால் விஷயஞானம் என்பது உணர்வற்ற விஷயம். நீ கிட்டதட்ட தூக்க்கலக்கத்தில் நடந்துகொள்கிறாய்.
புத்திசாலித்தனம் என்பது விழித்தெழுதல். மேலும் நீ முழுவதுமாக விழிக்கும்வரை நீ என்ன முடிவு செய்தாலும் அது எங்கோ ஒரிடத்தில் தவறாகவே இருக்கும். புத்திசாலித்தனத்தை செயலுக்கு கொண்டு வர உனக்கு அதிக விவரம் தேவையில்லை, உனக்கு அதிக கவனம் தேவை. நீ அதிக மௌனமுள்ளவனாக வேண்டும். நீ எண்ணங்கள்ளற்றவனாக வேண்டும். நீ அதிக இதயத்தோடும் குறைந்த மனத்தோடும் இருக்க வேண்டும்.
Source : Dhamma patha – Budha’s way