1. திருமணமும் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா

கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். சில அடிப்படை உண்மைகளை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று இன்னாருக்கு இன்னார் என்று யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. இரண்டாவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்காக யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது உங்கள் அன்புக்கு நீங்கள்தான் அதிகாரி. எனவே நீங்கள் விரும்பும் வரை வழங்க முடியும். ஆனால் மற்றவர்களிடமிருந்து அன்பை நீங்கள் வற்புறுத்தி பெற முடியாது. ஏனெனில் மற்றவர் உங்கள் அடிமையல்ல. இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சேர்ந்திருக்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுத் தர முடியும். ஒருவர் மற்றவரின் தனித்தன்மையில் ஒருபோதும் குறுக்கிடாதிருக்கமுடியும். 

உண்மையில் கல்யாணம் என்பது காலாவதியாகிப்போன ஒரு நிறுவனம். முதலாவதாக, எந்த நிறுவனத்தின் உள்ளேயும் வாழ்வது நல்லதல்ல. எந்த விதமான அமைப்பும் அறிவுபூர்வமானதே. கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் திருமணமானது ஏறக்குறைய அழித்து விட்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற காரணங்களுக்காக. எனவே முதல் விஷயமே, திருமணமே – திருமண சடங்கே கூட – போலித்தனமானதுதான்.

திருமணத்தை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். வினையாக எடுத்துக் கொண்டால் சுதந்திரம் சாத்தியமேயில்லை. திருமணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் – அது ஒரு விளையாட்டுத்தான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள். வாழ்க்கை மேடையில் நீங்கள் நடிக்கும் பாத்திரமே திருமண வாழ்க்கை. ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல. அதற்கு எந்த வித யதார்த்தமும் கிடையாது. அது ஒரு கட்டுக்கதை. ஆனால் கட்டுக்கதையையே யதார்த்தம் என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் மூடர்களாக இருக்கிறார்கள்.  

கண்களில் கண்ணீருடன் கதை படிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். கதை நிகழ்ச்சிகள் அவ்வளவு சோகமாக போகிறதாம். திரைப்பட அரங்குகளில் விளக்குகளை அணைத்துவிடுவது மிக நல்ல உபாயம்தான். இதனால் எல்லோராலும் சிரித்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, படத்தை ரசிக்க முடிகிறது. வெளிச்சம் இருந்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று இருக்கும். அதே சமயம் திரை காலியாக உள்ளது. அதில் யாரும் இல்லை என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அது வெறுமனே ஒளிவீச்சால் தோற்றுவிக்கப்படும் படம்தான். ஆனால் அவர்கள் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். இதேதான் நம் கதையிலும் நடக்கிறது. வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நாம் விவகாரமாக எடுத்துக் கொள்கிறோம். அவ்விதமான காரியநோக்கிலிருந்தே நம் பிரச்னை தொடங்குகிறது.

முதலில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒருவரை காதலியுங்கள். ஒருவருடன் வாழுங்கள். இது உங்களின் அடிப்படை உரிமைகளில் அடங்கும். நீங்கள் ஒருவருடன் வாழவும் முடியும் ஒருவரை காதலிக்கவும் முடியும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல. இங்கேதான் இது சூழ்ச்சிக்கார புரோகிதர்களால் சாமியார்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சமுதாயத்துடனான விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பினால், அதேசமயம் தனிப்பட்டு நிற்க விரும்பினால், உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ இந்த திருமணம் வெறும் விளையாட்டுத்தான் என்பதை தெளிவாக்கி விடுங்கள். ஒருபோதும் இதை பிரச்னைக்குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்திற்கு முன்பு இருந்தமாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என் வாழ்வில் நீயும் குறுக்கிடாதே. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம் சந்தோஷத்தை, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மற்றவருக்கு பாரமாக மாற மாட்டோம்.

எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்து விட்டதாக, தேனிலவு தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே மேற்கொண்டு நடிக்கத் தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக இருப்போம். “நாம் நிரம்ப காதலித்தோம், என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருப்போம், நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது அன்பின் அடையாளமாக இருக்காது. நான் உன்னை காதலிப்பது உண்மையென்றால் என் காதல் உனக்கு துன்பமாக மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கி விடுவேன். நீ என்னை உண்மையாக காதலித்தால் உன் காதல் எனக்கு சிறையாக மாறுகிறது என்பதை காணும் அக்கணமே நீ என்னை விட்டு நீங்கி விடுவாய்.”

அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும். மூடச்சடங்குகளாக அதை தாழ்த்தி விடக்கூடாது. அன்பும் சுதந்திரமும் ஒன்றிணைந்தே செல்லும் – ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றதை விட்டுவிட முடியாது. சுதந்திரத்தை அறிகிற மனிதர் அன்பு நிறைந்தவராய் இருப்பார். அன்பை அறிகிற மனிதர் எப்போதுமே சுதந்திரம் தர சித்தமாய் இருப்பார். நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் தருவீர்கள் சுதந்திரம் தருவது என்பது பூரணமாய் நம்புவதே தவிர வேறல்ல. சுதந்திரம் என்பது அன்பின் வெளிப்பாடு. 

எனவே திருமணம் ஆனவராயினும் ஆகாதவராயினும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா திருமணங்களுமே போலியானவைதான். சம்பிரதாய வசதிக்காகத்தான். உங்களை சிறைப்படுத்தி ஒருவருடன் ஒருவரை பிணைத்துப் போடுவதல்ல அவற்றின் நோக்கம். இருவரும் சேர்ந்து வளர்வதற்கு உதவுவதே அவற்றின் நோக்கம். ஆனால் வளர்ச்சிக்கு சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் கடந்த காலத்தின் எல்லா கலாசாரங்களுமே, சுதந்திரம் இல்லையென்றால் அன்பு மரணமடைகிறது என்பதை மறந்து விட்டன.

The Rebellious Spirit  Session  8

2. மௌனத்தின் மலர்தான் சத்தியம்

உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அழகாக இருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் வேறு ஏதோ ஒரு உரையாடலும் உங்களுடன் நடைபெறுவதாக நாங்கள் உணர்கிறோம். அந்த மௌனமான உரையாடலைப் பற்றியும் நாங்கள் அதை எப்படி மேலும் மேலும் அதிகம் உள்வாங்குவது என்பது பற்றியும் தயவுசெய்து பேச முடியுமா

அது எப்போதும் இருக்கிறது. நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நானும் உங்களுடன் இருக்கிறேன். பேசுவதன் மூலம் அறிவுபூர்வமாக நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன், உங்களுடன் முழுமையாக இருப்பதன் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

நீங்கள் என்னை கவனிக்கும்போது, முழுமையாக கவனித்தால் அது வெறுமனே வார்த்தைகளை மட்டும் கவனிப்பதல்ல, என்னை கவனிப்பதன் மூலம் உங்களது மனம் நின்று விடுகிறது, என்னை கவனிப்பதால் நீங்கள் சிந்திப்பதை நிறுத்தி விடுகிறீர்கள். நீங்கள் சிந்தனை செய்யாத போது நீங்கள் உள்வாங்குபவராக இருக்கிறீர்கள். சிந்தனை செய்யாத போது, உங்களது மனம் வேலை செய்யாதபோது நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். பின் என்னால் உங்களை மூழ்கடிக்க முடியும், நான் உங்களை நிறைக்க முடியும். 

வார்த்தைகள் வெறும் கருவிகள்தான். நான் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நான் பேசியாக வேண்டும், அப்படி நான் பேசும்போது நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். நான் பேச வில்லையென்றால் நீங்கள் உங்களுக்குள் பேச ஆரம்பித்து விடுகிறீர்கள், நீங்கள் மௌனமாக இருப்பது இல்லை என்பதை நான் உணர்கிறேன். என்னுடைய பேச்சு இல்லையென்றாலும் நீங்கள் மௌனமாக இருப்பீர்கள் என்றால் அப்போது பேச அவசியம் இல்லை. நீங்கள் என்னருகில் வெறுமனே உட்கார முடியும், என் கூட சும்மா உட்கார்ந்திருக்க முடியும், சிந்தனை செய்யாமல் உங்களால் இருக்க முடியக்கூடிய கணத்திற்க்காக நான் காத்திருக்கிறேன். அப்போது நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பேச்சு ஒரு பகுதிதான். அப்போது நான் உங்களிடம் முழுமையாக நேரிடையாக வார்த்தைகள் என்ற ஊடகம் இன்றி வர முடியும்.

ஆனால் நான் இப்போது உங்களிடம் என்னருகில் அமைதியாக அமருங்கள் என்று கூறினால் உங்களால் மௌனமாக அமர்ந்திருக்க முடியாது. நீங்கள் அரட்டையடித்துக் கொண்டிருப்பீர்கள், உங்களுக்குள் நீங்கள் பேசிக் கொண்டே இருப்பீர்கள். உள் அரட்டை தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்களுடைய தனக்குள்ளேயே பேசும் பேச்சை நிறுத்த வேண்டுமானால் நான் பேசியாக வேண்டும். ஆகவே நான் பேசி உங்களை ஆக்ரமித்து கொள்கிறேன். என்னுடைய பேச்சு ஒரு குழந்தைக்கு கொடுக்கப்படும் பொம்மை போல.

அது அந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டு அமைதியாக இருக்கும். நாம் நமது வேலையை கவனிக்கலாம். நான் எனது வார்த்தைகளை ஒரு பொம்மையை போலத்தான் உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் அவற்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அதனுடன் ஒன்றி விடுவதால் நீங்கள் மௌனமாகி விடுவீர்கள். எப்போதெல்லாம் அமைதி நிகழ்கிறதோ அப்போது என்னால் உன்னுள் ஊடுருவமுடியும். வார்த்தைகள் அழகானதாக இருக்கலாம், ஆனால் அவை எப்போதும் உண்மையானதாக இருப்பதில்லை. அதன் அழகு ரசனையான ஒன்று. நீ அதை ஓவியத்தை ரசிப்பதைப் போல அனுபவிக்கலாம். ஆனால் அந்த ரசிப்பிலிருந்து எதுவும் நிகழாது. அது இருப்பதில் நல்லதாக இருக்கிறது, ஆனால் வார்த்தைகள் ஒருபோதும் சத்தியமாகாது. அவற்றின் இயல்புபடி அவை சத்தியமாக இருக்கமுடியாது. சத்தியத்தை மௌனத்தின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

ஆனால் இது முரண்பாடானது. சத்தியத்தை மௌனத்தின் மூலம் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் சொல்லும் எல்லோரும் வார்த்தைகளைத்தான் உபயோகிக்கிறார்கள். இது அவமானமானது, ஆனால் இதை எதுவும் செய்ய முடியாது. உன்னை மௌனமாக்க வார்த்தைகளைத்தான் உபயோகித்தாக வேண்டும். நீ என்னை கவனிக்கும்போது நீ அமைதியாக இருக்கிறாய். அந்த மௌனம் அர்த்தமுள்ளது. அந்த அமைதிதான் உனக்கு சத்தியத்தைப் பற்றிய ஒரு தரிசனத்தைத் தரும்.

என்னுடைய வார்த்தைகளின் மூலமாக உனக்கு சத்தியத்தைப் பற்றிய தரிசனம் கிடைத்தாலும் அது உனது மௌனத்தின் மூலமே வந்தது. எனது வார்த்தைகள் மூலமாக அல்ல. நான் சொல்வதெல்லாம் நிச்சயமான இறுதி உண்மை என்று நீ உணர்ந்தாலும் அந்த நிச்சயமான இறுதி என்பது உன்னுடைய மௌனத்திலிருந்து வந்தது. என்னுடைய வார்த்தைகள் மூலம் வந்ததல்ல.

எப்போதெல்லாம் நீ மௌனமாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் உண்மை அங்கிருக்கிறது. எப்போதெல்லாம் உள்ளே உள்அரட்டை ஓடிக் கொண்டிருக்கிறதோ எப்போதெல்லாம் குரங்குசேட்டை உள்ளே இருக்கிறதோ அப்போதெல்லாம் எப்போதும் அங்கேயே இருக்கும் சத்தியத்தை நீ தவற விட்டு விடுவாய்.

நான் என்ன செய்தாலும் – உங்களுடன் பேசினாலும் சரி, நீங்கள் தியானம் செய்ய உதவினாலும் சரி, கெத்தாரிஸிஸ் செய்ய உங்களை வற்புறுத்தினாலும் சரி, நீங்கள் நடனமாட வேண்டும், கொண்டாட வேண்டும் என்று சொன்னாலும் சரி – என்னுடையது ஒரே ஒரு குறிக்கோள்தான். எப்படியாவது நீங்கள் மௌனமடைய உதவி செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் மௌனமாக இருக்கும்போதுதான் கதவுகள் திறக்கும், நீங்கள் கோவிலுக்குள் இருப்பீர்கள். நீங்கள் எப்படி மௌனமாகிறீர்கள் என்பது பிரச்னையேயில்லை. நீங்கள் மௌனமாக இருக்கும்போது நீங்கள் என்னுள் இருப்பீர்கள், நான் உங்களுக்குள் இருப்பேன். மௌனத்திற்க்கு எல்லைகள் கிடையாது.

மௌனத்தில் நேசம் நிகழ்கிறது. நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், நான் உங்களை நேசிக்கிறேன். மௌனத்தில்தான் முக்கியமானது அனைத்தும் நிகழ்கிறது. ஆனால் மௌனத்தை கொண்டு வருவதுதான் கஷ்டம், கடினம். ஆகவே நான் உங்களிடம் என்ன சொல்கிறேன் என்பதில் நான் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. நான் எதையாவது – — – சொல்லும்போது உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதில்தான் நான் அக்கறை கொள்கிறேன். சில நேரங்களில் நான் சொன்னதை நானே மறுத்து கூறுவேன். இன்று நான் ஒன்றை சொல்வேன், நாளை வேறு ஒன்றை சொல்வேன். ஏனெனில் நான் என்ன சொன்னேன் என்பது பிரச்னையில்லை. என்னுடைய பேச்சு ஒரு கவிதை போல. நான் ஒரு தத்துவவாதி அல்ல. நான் ஒரு கவிஞனாக இருக்கலாம், ஆனால் நான் ஒரு தத்துவவாதி அல்ல.

நாளை நான் ஒன்றை சொல்வேன், நாளை மறுநாள் வேறு ஒன்றை சொல்வேன். அது ஒரு விஷயமே அல்ல. என்னுடைய பேச்சு மாறுபடலாம், ஆனால் நான் மாறுபடுவதில்லை. ஏனெனில் நான் இன்று ஒன்றைச் சொல்லும்போது நீங்கள் மௌனமாவீர்கள், நாளை சுத்தமாக வேறுபட்ட ஒன்றை கூறும்போதுதான் மௌனமாவீர்கள். நாளை மறுநாள் முற்றிலும் மாறுபட்ட எதையாவது கூறும்போதுதான் மௌனமாவீர்கள். நான் சொல்வது அனைத்தையும் நான் மறுத்து பேசலாம் ஆனால் நீங்கள் மௌனமாக வேண்டும் என்பதில் மாறுதல் இல்லை.

நான் நிலையானவன், எப்போதும் நிலையானவன். மேல்மட்டத்தில் மாறுபடுபவன், ஆனால் உள்ளே இருப்பது எப்போதும் ஒன்றேதான். மேலும் நினைவில் கொள். நான் ஒவ்வொரு நாளும் ஒன்றையே கூறிக் கொண்டிருந்தால் நீ மௌனமாக மாட்டாய். உனக்கு போரடித்துவிடும், உன்னுடைய உள்அரட்டை தொடங்கி விடும். நான் எப்போதும் ஒன்றையே கூறிக் கொண்டிருந்தால் அது பழகியதாகி விடும். அது பழகியதாகிவிட்டால் அதை நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கவனிக்காமலேயே நான் என்ன சொல்லப் போகிறேன் என்று உனக்குத் தெரியும். ஆகவே நீ உனது உள்அரட்டையை தொடரலாம். 

நான் கண்டுபிடிப்பாளனாக இருக்க வேண்டும். உன்னை குலுக்கக் கூடிய விஷயங்களை கூற வேண்டும். உன்னுள் மௌனத்தை உண்டாக்க வேண்டும் என்ற விஷயம் மட்டும் நிலையானது. ஏனெனில் நீ என்னுடன் இருக்க வேண்டும், நான் உன்னுடன் இருக்க வேண்டும். அப்போது நேசம், சத்தியம் அங்கு மலரும்.

எங்கெல்லாம் மௌனம் இருக்கிறதோ அங்கெல்லாம் சத்தியம் மலர்கிறது.

மௌனத்தின் மூலம்தான் சத்தியம் மலர்கிறது.