இருப்பு நிலைக்கு சாதகனை அழைத்துச் செல்லும் எல்லா தியான யுக்திகளும் நிதர்சனத்தில் செயல்பாடுகளாகவே இருப்பதென்னவோ உண்மைதானே.
ஒருவிதத்தில் ஆமாம், இன்னும் ஆழமான விதத்தில் இல்லை. தியான யுக்திகள்
செயல்பாடுகள்தான், ஏனெனில் அது உன்னை ஏதோவொன்றைச் செய்யச் சொல்கிறது. தியானம் செய்வதுகூட செய்வதுதான், அமைதியாக அமர்வது கூட ஏதோவொன்றைச் செய்வதுதான், எதையும் செய்யாமல் இருப்பதுகூட ஒருவகை செய்கைதான். ஆகவே மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா
தியான யுக்திகளும் செயல்பாடுகள்தான். ஆனால் ஆழமான விதத்தில் அவை அப்படியல்ல. ஏனெனில் நீ அவற்றில் வெற்றி பெற்றுவிட்டால், செயல்பாடு மறைந்துவிடுகிறது.
ஆரம்பத்தில் மட்டுமே அது முயற்சியை போல தோன்றுகிறது. நீ அதில் வெற்றி
பெற்றுவிட்டால், முயற்சி மறைந்து, முழு விஷயமும் முயற்சியற்று தானாகவே நடப்பதாக ஆகிவிடுகிறது. நீ அதில் வெற்றி பெற்றுவிட்டால், அது ஒரு செயலல்ல. உனது பக்கத்திலிருந்து எந்த முயற்சியும் அதன்பிறகு தேவையில்லை. அது சுவாசிப்பதைப்போல ஆகிவிட்டது – அது அங்கு இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் கண்டிப்பாக முயற்சி வேண்டும், ஏனெனில் முயற்சி அல்லாத எதையும் மனதால் செய்ய முடியாது. அது முயற்சியற்றது என்று நீ கூறினால், அந்த முழு விஷயமும் மடத்தனமானதாக தோன்றும்.
ஜென் – மரபில், முயற்சியற்றதன்மை மிகவும் வலியுறுத்தப்படும் அதில்,
குரு சீடனிடம் கூறுவார் – வெறுமனே அமரு. எதுவும் செய்யாதே. – அந்த சீடன்
முயற்சிப்பான். முயற்சிப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்ய முடியும். அந்த சீடன்
வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் எதுவும் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான். அப்போது குரு தனது கைத்தடியால் அவனது தலையில் அடித்துவிட்டுக் கூறுகிறார் – இதை செய்யாதே. நான் உன்னை வெறுமனே அமர முயற்சிசெய்யச் சொல்லவில்லை, அப்போது அது செய்வதாகி விடுகிறது. எதுவும் செய்யாமலிருக்க முயற்சி செய்யாதே, அப்போது அதுவும் ஒரு செயல்பாடாகி விடுகிறது. வெறுமனே உட்கார்.
நான் உன்னிடம் வெறுமனே உட்கார், என்று கூறினால், நீ என்ன செய்வாய். நீ
எதாவது செய்வாய், அது அதை வெறுமனே உட்காருவதாக இல்லாமல் செய்துவிடும். ஒரு செயல்பாடு நுழைந்துவிடும். நீ முயற்சிசெய்து உட்கார்ந்து கொண்டிருப்பாய், ஒரு இறுக்கம் அங்கிருக்கும். உன்னால் வெறுமனே உட்கார முடியாது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் நீ வெறுமனே உட்கார முயற்சிக்கும் கணத்திலேயே, அது சிக்கலாகி விடுகிறது. வெறுமனே உட்கார முயற்சிப்பதே அதை சிக்கலாக்கி விடுகிறது. ஆகவே என்ன செய்வது.
வருடங்கள் கழிகின்றன, சீடன் அமர்ந்துகொண்டே இருக்கிறான், தவறு
செய்வதாக குருவால் தண்டிக்கப்பட்டும், குறைகூறப்பட்டும் வருகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கொண்டே போகிறான், தினமும் அவனுக்கு தோல்விதான், ஏனெனில் முயற்சி அங்கிருக்கிறது. மேலும் நீ குருவை ஏமாற்ற முடியாது. ஆனால் ஒருநாள், பொறுமையோடு உட்கார்ந்திருக்கையில், இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட மறைந்துவிட்டது, ஒருநாள் திடீரென அவன் உட்கார்ந்திருக்கிறான் – ஒரு மரம் போல, ஒரு
பாறை போல – எதுவும் செய்யாமல். அப்போது குரு கூறுகிறார் – இதுதான் சரியான முறை. இப்போது நீ அதை அடைந்துவிட்டாய். இதை நினைவில் வைத்துக்கொள். இதுதான் உட்காரும் முறை.- ஆனால் இந்த முயற்சியற்ற நிலையை அடைய நிறைய பொறுமையும், நீண்ட முயற்சியும்
தேவை. ஆரம்பத்தில் முயற்சி தேவை, செயல்பாடு தேவை, ஆனால் ஒரு தேவைப்படும் தீமையாக ஆரம்பத்தில் மட்டும் இது தேவை. மேலும் நீ
இதை தாண்டி செல்ல வேண்டும் என்பதை நீ தொடர்ந்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். நீ தியானத்திற்காக எதுவுமே செய்யாத ஒரு கணம் கண்டிப்பாக வரும் – வெறும் இருப்பாக அங்கு இருப்பாய், அது நிகழும், வெறுமனே நிற்கையில் அல்லது அமர்ந்திருக்கையில் அது நிகழும். எதையும் செய்யாதிருக்கையில், வெறுமனே விழிப்புணர்வோடிருக்கையில், அது நிகழும்.
இந்த எல்லா யுக்திகளுமே உன்னை ஒரு முயற்சியற்ற கணத்திற்கு கொண்டுவர
உதவி செய்பவைகளே. உள் நிலைமாற்றம், உள் நிலையுணர்வு, முயற்சியினால் நிகழாது, ஏனெனில் முயற்சி ஒருவகை இறுக்கம். முயற்சியில் நீ முழுவதுமாக தளர்வடைவது சாத்தியமல்ல, முயற்சியே தடையாக மாறிவிடும். இந்த பின்புலத்தை மனதில் வைத்துக்கொண்டு நீ முயற்சித்தால், மெது மெதுவாக அதையும் விடக்கூடிய திறனை நீ பெறுவாய்.
இது நீச்சல் போன்றதுதான். நீச்சல் தெரிந்தவர்களுக்கு தெரியும் –
அதாவது ஆரம்பத்தில் நீ முயற்ச்சிக்க வேண்டியிருக்கும், ஆனால் ஆரம்பத்தில்
மட்டும்தான். உனக்கு அதன் உணர்வு தெரிந்துவிட்டால், அதை நீ அறிந்துவிட்டால், முயற்சி போய்விடும், நீ முயற்சியில்லாமலே நீந்தலாம். மேலும் ஒரு சிறந்த நீச்சல்வீரன்கூட நீச்சல் என்பதென்ன, அவன் அப்போது என்ன செய்கிறான் என்று கூறமுடியாது. அவன் என்ன செய்கிறான் என்பதை உனக்கு விளக்க முடியாது. உண்மையில் அவன் எதுவும் செய்வதில்லை. அவன் வெறுமனே ஒரு ஆழமான தளர்வான உறவு தண்ணீருடன், ஆற்றுடன்
தனக்கு ஏற்பட அனுமதிக்கிறான். அவன் உண்மையில் எதுவும் செய்வதில்லை. அவன் இன்னும் அப்படி ஏதாவது செய்துகொண்டிருந்தால், அவன் இன்னும் சிறந்த நீச்சல்காரன் இல்லை, அவன் இன்னும் பழகாதவன், கற்றுக்கொண்டிருப்பவன்.
நான் ஒரு கதை சொல்கிறேன்.
பர்மாவில், ஒரு புதிய கோவிலின் வாசலுக்காக வரைபடம் தயாரிக்கும் படி ஒரு புத்தமத துறவிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் பல வரைபடங்களைத் தயாரித்தார். மிகவும் திறமைவாய்ந்த ஒரு சீடன் அவருக்கு இருந்தான். அவர் அவனை தன்னுடனேயே இருக்கும்படிக் கூறினார். அவர் வரைபடத்தை உருவாக்குகையில் சீடன் பார்த்துகொண்டே இருக்கவேண்டியதுதான், அதை அவன் விரும்பினால், அது சரி, நன்றாயிருக்கிறது என்று சொல்லவேண்டும். அவனுக்குப் பிடிக்கவில்லையென்றால், இல்லை என்று சொல்லவேண்டும். மேலும் குரு – நீ
சரி என்று சொல்வதை மட்டுமே நான் அனுப்ப போகிறேன். நீ சரியில்லை என்று
சொல்வதையெல்லாம் நான் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் புதிய வரைபடத்தை நான் உருவாக்குவேன் – என்றார்.
நூற்றுக்கணக்கான வரைபடங்கள் இப்படி ஒதுக்கப்பட்டன. மூன்று மாதங்கள்
ஆகிவிட்டது. குருவிற்கே பயம் வர ஆரம்பித்து விட்டது, ஆனாலும் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும். குரு படம் வரைவார். சீடன் பார்த்துக்கொண்டிருப்பான், சரியில்லை என்பான். குரு மறுபடியும் ஒன்றை வரைய ஆரம்பிப்பார்.
ஒருநாள் பேனா மை முடியப்போகிறது, ஆகவே குரு – போய் பேனா மை கொண்டுவா – என்றார். அந்த சீடன் வெளியே போனான், குரு அவனை, அவனது இருத்தலை மறந்து முயற்சியற்றவரானார், அவனது இருத்தலே பிரச்சனை. சீடன் உடனிருக்கிறான், பார்த்துகொண்டிருக்கிறான் என்ற எண்ணம் குருவின் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அவன் இதை விரும்புவானா. மாட்டானா, இதையும் நிராகரித்து விடுவானா என்று தொடர்ந்து நினைத்துக்கொண்டேயிருந்தார். இது உள்ளே ஒரு பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது., ஆகவே அந்த குருவால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அந்த சீடன் வெளியே போனான். வரைபடம் முடிந்துவிட்டது. சீடன் உள்ளே
திரும்பிவந்து – அபாரம். ஆனால் இதை ஏன் முன்பே வரையவில்லை – என்றான்.
குரு – இப்போதுதான் ஏனென்று எனக்கே புரிந்தது. நீ இருந்ததனால்தான். நீ
இருந்ததால், நீ சரியென்று சொல்ல வேண்டுமென முயற்சித்தேன். அந்த முயற்சிதான் முழுவதையும் கெடுத்துவிட்டது. நான் இயல்பாக இருக்க முடியவில்லை, நான் கரைய முடியவில்லை, நீ இருந்ததால் நான் என்னை மறக்க முடியவில்லை.- என்றார்.
நீங்கள் தியானம் செய்யும் பொழுதெல்லாம், நீங்கள் அதைச் செய்யும்
முயற்சியே, நீங்கள் அதில் வெற்றிபெற நினைக்கும் நினைப்பே, தடைதான். இதைப் பற்றிய தன்னுணர்வோடு இரு. செய்து கொண்டே போ. அதை குறித்து தன்னுணர்வோடு இரு. ஒரு நாள் வரும்….. பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் வரும், முயற்சியற்ற ஒருநாள் வரும். அப்போது உண்மையில் நீ அங்கிருக்க மாட்டாய், வெறும் தியானம் மட்டுமே அங்கிருக்கும். இதற்கு நீண்ட காலம் ஆகலாம். இது எப்போது நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது,
முன்பே தீர்மானிக்க முடியாது. ஏனெனில் முயற்சியின் மூலமாக அடையக்கூடியதாக இருந்தால் மட்டுமே, அதை முன்பே தீர்மானமாக கூறமுடியும். நீ இவ்வளவு முயற்சி செய்தால் நீ வெற்றியடைவாய் – ஆனால் தியானம் நீ முயற்சியற்று இருக்கும்போது தான் கை கூடும். அதனால்தான் அதை தீர்மானிக்க முடியாது. நீ வெற்றியடையும்போது அதைப் பற்றி
சொல்ல எதுவும் இருக்காது. நீ இந்த கணமே அடைந்து விடக் கூடும், அல்லது பல
பிறவிகளாயினும் வெற்றி கிடைக்காமல் போகக் கூடும்.
இந்த முழு விஷயமும் ஒரே ஒரு இடத்தில்தான் தொக்கி நிற்கிறது. உன்னுடைய
பங்கிலிருந்து முயற்சி அற்றுப் போகும் போது நீ உன் இயல்பை அடைகிறாய், உன்னுடைய தியானம் நீ செய்யும் ஒரு செயலாக இல்லாமல் அது உன்னுடைய இருப்பாக மாறும்போது, உன்னுடைய தியானம் நேசத்தைப் போன்று ஆகும் போது….. ஆம். நேசத்தை உன்னால் எதுவும் செய்ய முடியாது அல்லவா – செய்ய முடியுமா – அப்படி நீ எதையாவது செய்தால் அது போலியாக ஆகிவிடுகிறது, அது செயற்கையாக ஆகிவிடுகிறது. அது ஆழமாக செல்லாது. நீ அதில்
இருக்க மாட்டாய். அது ஒரு நடிப்பாக மாறிவிடும். நேசம் என்பது ஒரு இருப்புநிலை – நீ அது குறித்து எதுவும் செய்ய முடியாது.
இதைப்போன்றே உன்னால் தியானத்தை குறித்தும் எதுவும் செய்ய முடியாது.
ஆனால் அதற்காக எதையும் செய்யாதே என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் அப்போது நீ என்னவாக இருக்கிறாயோ அப்படியே நீ இருந்து விடுவாய். நீ எதையாவது செய்தாக வேண்டும் ஆனால் செய்வதன் மூலம் அதை அடைந்து விட முடியாது என்பதில் நீ தெளிவாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் செயல் தேவைப் படும். அதை விட முடியாது, ஒவ்வொருவரும் அதை
கடந்து வந்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர் அதை, கடந்து சென்று விட வேண்டும், முயற்சியற்ற ஒரு தளர்வு நிலையை அடைய வேண்டும். இந்த பாதை மிகவும் கடினமானது மற்றும் முரண்பாடானது. தியானத்தை விடவும் முரண்பாடான விஷயம் வேறு எதுவும் கிடையாது. முரண்பாடு எது எனில் ஆரம்பத்தில் நீ முயற்சி செய்ய வேண்டும் இறுதியில்
முயற்சியற்றதில் முடிய வேண்டும். இது நிகழத்தான் செய்கிறது. தர்க்கரீதியாக நீ இது எப்படி நிகழ்கிறது என்று கூற முடியாமல் போகலாம், ஆனால் அனுபவத்தில் இது நிகழத்தான் செய்கிறது. நீ முயற்சி செய்வதில் அலுத்துப் போகும் ஒரு நாள் வரும். அன்று அது விழுந்து விடும்.
புத்தருக்கு அது அப்படித்தான் நிகழ்ந்தது. ஆறு வருடங்களாக அவரால்
இயன்றது அனைத்தையும் அவர் செய்து பார்த்து விட்டார். ஞானமடைவதற்காக அவ்வளவு தீவிரமாக முயன்றவர் யாருமில்லை. அவரால் செய்யக் கூடிய அவ்வளவையும் அவர் செய்தார். ஒரு குருவிடமிருந்து மற்றொரு குருவுக்கு சென்றார், அவர்கள் கூறிய அனைத்தையும் இம்மி பிசகாமல் அப்படியே செய்தார். எந்த ஒரு குருவும் நீ சரியாக செய்யவில்லை, அதனால்தான் நீ அடையவில்லை என்று கூறவே முடியாது. அது சாத்தியமேயில்லை. அந்த அளவு
செய்தார். அவர் குரு சொல்லியதை விட அதிகமாகவே செய்தார். ஆகவே ஆசான்களே குழம்பிப் போனார்கள். அவர்கள், இவ்வளவுதான் எங்களால் சொல்லித் தர முடியும். இதற்கு மேல் எங்களுக்குத் தெரியாது. ஆகவே நீ வேறு ஏதாவது குருவிடம் செல் என்றனர்.
அவர் ஒரு பயங்கரமான சீடன் – பயங்கரமான சீடர்கள் மட்டும்தான்
அடைகிறார்கள். சாத்தியப்பட்ட அனைத்தையும் அவர் கற்றார். அவரிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் அவர் செய்தார். – எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே செய்தார். பின் அவர் குருவிடம் வந்து நான் அனைத்தையும் செய்து விட்டேன். எதுவும் நிகழவில்லை. அடுத்து என்ன செய்வது என்று கேட்பார்.
அவர்கள், நீ வேறு ஒருவரிடம் செல். இமயமலையில் ஒருவர் இருக்கிறார்,
அங்கே செல் அல்லது ஒருவர் காட்டுக்குள் இருக்கிறார் அங்கே செல் எங்களுக்கு இதை விட வேறு எதுவும் தெரியாது. என்றனர்.
அவர் ஆறு வருடங்கள் சுற்றி சுற்றி வந்தார். மனிதனால் சாத்தியப்படும்
அனைத்தையும் அவர் செய்து பார்த்து விட்டார். ஒன்றும் நடக்க வில்லை. அவர் வெறுத்து போனார். எல்லா செயல்களும் அர்த்தமற்றதாக பலனில்லாததாக, வெத்துவேட்டாக தோன்றியது. ஒரு நாள் இரவு அவர் அனைத்து முயற்சிகளையும் கை விட்டார். அவர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர், “எல்லாமும் முடிந்து விட்டது. இந்த உலகில் ஒன்றுமில்லை, ஆன்மீக
தேடுதலிலும் ஒன்றுமில்லை. இப்போது நான் செய்யக்கூடியது ஏதுமில்லை. எல்லாமும் முடிந்தது. இந்த உலகம் மட்டுமல்ல, அடுத்த உலகமும் இல்லை.” என்று கூறிக்கொண்டார். திடீரென அங்கு எல்லா முயற்சிகளும் போய்விட்டன. அவர் திடீரென வெறுமையானார். ஏனெனில் செய்வதற்கு ஏதுமில்லை எனும் போது மனதினால் நகர முடியாது. செய்ய ஏதாவது இருக்கும்போதுதான் மனம் நகர முடியும் – ஏதாவது குறிக்கோள். ஏதாவது லட்சியம் – எதிர்காலத்தில் எதையாவது அடைய வேண்டும், ஏதாவது கிடைக்க வேண்டும்
எனும்போதுதான் மனம் செயல்படும். இன்றில்லையென்றாலும் நாளை ஏதாவது நடைபெறும் சாத்தியம் இருக்கிறது எனும்போதுதான் மனம் ஓடும்.
அன்று இரவு புத்தர் இறுதி நிலைக்கு வந்தார். உண்மையில் அவர் அந்த கணம்
இறந்துவிட்டார். ஏனெனில் எதிர்காலம் என்பது இல்லை. எதையும் அடைய வில்லை, அடையவும் எதுவுமில்லை. – நான் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். இந்த முழு உலகமும் பலனற்றது இந்த முழு பிரபஞ்சமும் மிரட்சியானது – இந்த பொருளுலகம் மட்டுமல்ல பயனற்றது ஆன்மீக உலகமும் பயனற்றதுதான். அவர் தளர்ந்து போனார். அவர் தளர்வு செய்து
கொள்ளவில்லை. இந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இறுக்கமாக இருக்க ஏதும் இல்லை. எனவே அவர் தளர்வடைந்தார். தளர்வடைய அவர் முயலவில்லை. அரச மரத்தடியில் அவர் தளர்வு கொள்ள முயற்சிக்க வில்லை. இறுக்கமாக இருக்கவோ, செய்யவோ, ஆசைப்படவோ,
நம்பிக்கை கொள்ளவோ, ஏதுமில்லை. அன்று இரவு அவர் முழுக்க முழுக்க நம்பிக்கையிழந்து விட்டார். தளர்வாகி விட்டது. தளர்வு நிகழ்ந்தது. நீ தளர்வு செய்து கொள்ள முடியாது. ஏனெனில் அப்போது எதையாவது செய்வது என்பது இன்னும் உன் மனதில் உள்ளது. நீ அதை சுற்றி சுழன்று கொண்டிருக்கிறாய். திடீரென அந்த சுழற்சி நின்று விட்டது அந்த சக்கரம் நின்றுவிட்டது. புத்தர் தளர்வுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார்.
காலையில் அவர் விழிக்கும் போது வானத்தில் இறுதி நட்சத்திரம் மறைந்து
கொண்டிருந்தது. அவர் அது மறைவதை பார்த்துக் கொண்டிருந்தார், அந்த நட்சத்திரம் மறைந்த சமயம் அவரும் மறைந்து விட்டார். அவர் ஞானம் பெற்று விட்டார். மக்கள் அவரிடம், எப்படி நீங்கள் இதை அடைந்தீர்கள்,
அந்த முறை என்ன என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.
இப்போது நீங்கள் புத்தருக்கு வந்த சோதனையை பாருங்கள். அவர் நான் இந்த
முறை மூலம் அடைந்தேன் என்று கூறினால் அது தவறு, ஏனெனில் அவர் எந்த முறையும் இல்லாத போதுதான் அடைந்தார். அவர் தான் முயற்சி செய்ததன் மூலமாக அடைந்ததாக கூறினால் அது தவறு, ஏனெனில் அவர் முயற்சி எதுவும் இல்லாமல் இருந்த போதுதான் அது நிகழ்ந்தது. ஆனால்
முயற்சி எதுவும் செய்யாதீர்கள், நீங்கள் அடைந்து விடுவீர்கள் என்று சொன்னாலும் அது தவறு, ஏனெனில் அவரது முயற்சியற்ற தன்மையின் பின்னே அவரது ஆறு வருட முயற்சி இருக்கிறது. அந்த முயற்சி இல்லாமல், அந்த ஆறு வருட கடின முயற்சியில்லாமல், இந்த முயற்சியற்ற தன்மையை அடைந்திருக்க முடியாது. இந்த தீவிர முயற்சியினால்தான் அவர் சிகரத்தை வந்தடைந்தார். அங்கிருந்து வேறு எங்கும் போக முடியாத நிலையில். அவர் தளர்வடைந்து பள்ளத்தாக்கில் விழுந்தார்.
இதை பல காரணங்களுக்காக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீக
முயற்சி மிகவும் முரண்பாடான சிக்கலான ஒரு விஷயம். முயற்சியினால் எதுவும் நிகழாது என்ற முழுமையான தன்னுணர்வுடன் முயற்சியை மேற் கொள்ள வேண்டும். முயற்சியற்ற, முயற்சியில்லாத நிலையை அடைவதற்காக முயற்சி மேற் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் முயற்சியில் தளர்வு கொள்ளக் கூடாது, ஏனெனில் நீங்கள் தளர்வு கொண்டால் புத்தருக்கு வந்த அந்த தளர்வு நிலை உங்களுக்கு நிகழாமல் போய்விடும். நீங்கள் முயன்று கொண்டே
இருக்க வேண்டும், அப்போது தானாகவே அந்த தளர்வுநிலை நிகழும் ஒரு கட்டம் உங்களது முயற்சியால் வரும்.
உதாரணமாக நீ இதை வேறு விதமாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். மேற்கில்
நான், எனது உயர்வு, என்பதுதான் முக்கியம். மேற்கின் முழு முயற்சியும் நான் என்பதை எப்படி வளர்ப்பது, அதை எப்படி காப்பாற்றுவது, அதை எப்படி வலிமையானதாக மாற்றுவது என்பதிலேயே இருக்கிறது. கிழக்கில் நானற்ற தன்மையை எப்படி அடைவது, எப்படி நான் என்ற ஆணவம் இன்றி இருப்பது, எப்படி தன்னை இழந்து, கரைந்து, சரணாகதியடைவது என்பதே
குறியாக இருக்கிறது. கிழக்கு, முற்றிலுமாக ஆணவமற்று இருக்க முயலுகிறது. மேற்கு, எப்படி முழுமையான நான் என்று இருப்பது என்றே முயற்சிக்கிறது.
ஆனால் இது முரண்பட்ட சிக்கலான விஷயம். உன்னிடம் வளர்ந்த ஒரு நான்
என்பது இருந்தாலொழிய நீ எப்படி சரணாகதி அடைய முடியும்?
உன்னிடம் தெளிவாக நான் இப்படித்தான் என்பது இருந்தால்தான் அதை விட்டுவிட்டு நீ சரணாகதியடைய முடியும். இல்லாவிடில் நீ சரணாகதியடைய முடியாது. ஏனெனில் சரணாகதியடைய யார் அங்கே இருக்கிறார்கள்.? ஆகவே என்னைப் பொறுத்தவரை இருவருமே அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள்,
இருவருமே துயரத்தில்தான் இருக்கிறார்கள். மேற்கு கிழக்கு இரண்டுமே. ஏனெனில் கிழக்கு ஆணவமற்ற பகுதியை எடுத்துக் கொண்டுள்ளது, அது இறுதி பகுதி. அதில் ஆரம்பம் இல்லை.
சரணாகதியடைய அங்கே யாராவது இருக்க வேண்டுமே? சிகரம்
அங்கில்லையெனில் எப்படி அங்கே பள்ளத்தாக்கு இருக்க முடியும், சிகரம் இருந்தால்தான் அதைச் சுற்றி பள்ளத்தாக்கு உருவாகமுடியும், சிகரம் பெரிதாக இருக்கும் அளவு பள்ளத்தாக்கும் பெரிதாக இருக்கும். உன்னிடம் நான் இல்லையெனில் அல்லது அந்த நான் பெரிதாக இல்லையெனில் சரணாகதி சாத்தியமில்லை. அல்லது உன்னுடைய சரணாகதி வெறும்
பேச்சளவில் இருப்பதாக இருக்கும். அதனால் பெரிதும் பயன் எதுவும் விளையப்போவதில்லை. அங்கே வெடித்தல் எதுவும் நிகழாது.
மேற்கே ஆரம்ப கட்டம் வலியுறுத்தப்படுகிறது. ஆகவே நீ உன்னுடைய நான்
என்பதில் மிகவும் பெரிதாக வளரலாம். அது மேலும் மேலும் வேதனையை உருவாக்கும். அதை நீ நன்றாக வளர விட்டபின் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று உனக்குத் தெரியாது. ஏனெனில் இறுதிகட்டம் உனக்குத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரை ஆன்மீக தேடுதல் என்பது இரண்டும் சேர்ந்ததுதான்.
மிகப் பெரிய சிகரத்தை உருவாக்கு, கரைப்பதற்காகவே மிக சிறப்பானதொரு அகங்காரத்தை உருவாக்கு. இது மடத்தனமாக தோன்றும் – எங்காவது சென்று தொலைத்து விடுவதற்காக, ஆழமானதொரு சரணாகதியை செய்ய, கரைப்பதற்காகவே உருவாக்கு – ஆனால் உன்னிடம் இல்லாத
ஒன்றை நீ இழக்க முடியாது. என் பார்வையில் மனித இனம் இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்துதான் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான நான் என்பதை, அகங்காரத்தை, உருவாக்க உதவ வேண்டும். ஆனால் இது ஒரு பகுதிதான், பின் அதன் சரணாகதிக்கும் உதவ வேண்டும்.
சிகரம் பெரிதாக இருக்கும் அளவு பள்ளத்தாக்கும் பெரிதாக இருக்கும்.
உன்னுடைய அகங்காரம் உயர்ந்து நிற்கும் அளவு நீ உன்னுடைய சரணாகதியில் ஆழமாக செல்லலாம். இது எல்லாவற்றிக்கும் பொருந்தும். ஆன்மீக பாதையில் இந்த முரண்பாட்டை தொடர்ந்து நினைவில் கொள். ஒரு கணம் கூட மறக்காதே. மிகச் சிறப்பான அகங்காரத்தை உருவாக்கு, அப்போதுதான் உன்னால் சரணடைய முடியும், அப்போதுதான் உன்னால் கரைய முடியும், உருக முடியும். ஆகவே நீ செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் செய். முயற்சி தானாகவே உன்னை விட்டு போய் முயற்சியில்லா நிலை வரும் அந்த ஒரு கணம் வரை
முயற்சியை கை விடாமல் செய்.
மூலம் – தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4 அத். 2