மன அழுத்தத்தை(TENSION) பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு
ஓஷோவின் பதில்

அழுத்தம் எப்போதுமே தவறானதல்ல அதை அழகான விதங்களில் பயன்படுத்தலாம். அது
எதிர்மறையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று கிடையாது ஆனால் நாம் அதை
எதிர்மறையானதாக நினைக்கிறோம். அது நல்லதல்ல எனஅறு நினைக்கும்போது அது
பிரச்சனையாகிறது. அழுத்தம் கூட ஒரு படிக்கல்லாக உபயோகமாகும். அது கூட ஒரு
உருவாக்கும் சக்தியாக இருக்கலாம். ஆனால் சாதாரணமாக கடந்த காலத்தில் நமக்கு
அழுத்தம் என்பது கெடுதல் என்று சொல்லித்தரப்பட்டிருக்கிறது. அதனால் எந்த வித
அழுத்ததிற்கும் நாம் பயப்படுகிறோம். மேலும் அந்த பயம் அதை இன்னும்
அதிகமாக்குகிறது. சூழ்நிலைக்கு அது எந்த வகையிலும் உதவுவதில்லை.

உதாரணமாக ஏதோவொரு வெளிப்புற சூழ்நிலை,
அதனால் அழுத்தம் ஏற்படுகிறது. நீ அழுத்தத்தை, பதட்டத்தை உணரும் நேரத்தில் உடனடியாக
நான் தளர்வு செய்துகொள்ளவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என நீ நினைக்கிறாய்,
அந்த பதட்டத்தை பார்த்து பயம் கொள்கிறாய். இப்போது தளர்வு செய்துகொள்ள
முயற்சிப்பது உபயோகப்படாது. ஏனெனில் உன்னால் தளர்வு கொள்ள முடியாது. மாறாக தளர்வு
செய்து கொள்ள முயற்சிப்பது ஒரு புதிய அழுத்தத்தையே உருவாக்கும். அழுத்தமும்
இருக்கும், நீ தளர்வு கொள்ள முயற்சிக்கிறாய், அது முடியவில்லை. இது இந்த
பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கும்.

அழுத்தம் இருக்கும் போது அதை
உருவாக்கும் சக்தியாக பயன்படுத்திக்கொள். முதலில் அதை ஏற்றுக்கொள், அதனுடன்
சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. அதை ஏற்றுக்கொள், அது முற்றிலும் சரிதான். அது
இந்த விஷயம் சரியாக செல்லவில்லை, ஏதோ தவறாக செல்கிறது என்றே சொல்கிறது, நீ இழந்து
விடப் போகிறாய் என்றோ அல்லது வேறு எதையாவதோ கூறுகிறது. உடல் சண்டையிட தயாராகிறது
என்பதன் அறிகுறியே அழுத்தம். ஆனால் நீ தளர்வு கொள்ள முயற்சிக்கிறாய் அல்லது வலி
நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறாய் அல்லது தூக்க மாத்திரை சாப்பிடுகிறாய். நீ
உடலுக்கு எதிராக செல்கிறாய். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு சவால்
அங்கிருக்கும்போது உடல் போராட தயாராகிறது, சவாலை அனுபவி.

சில சமயங்களில் உன்னால் இரவில்
உறங்க முடியவில்லை என்றால் கவலைப்படாதே. அது என்னவென்று கண்டுபிடி. வரும் சக்தியை
உபயோகப்படுத்து. மேலும் கீழும் நட, சிறிது தூரம் ஓடு, சிறிது அதிக தூரம் நட,
அடுத்த நாள் என்ன செய்யவேண்டுமென திட்டமிடு, மனம் என்ன செய்ய விரும்புகிறதோ, அதை
செய். இயலாத விஷயமான தூங்க முயற்சி செய்வதை விட்டு அந்த சூழ்நிலையை ஒரு உபயோகமான
வழியில் செலவிடு. அந்த பிரச்சனையை எதிர்த்து போராட உடல், அது தயார் என்பதை
காட்டுகிறது. இது தளர்வு கொள்வதற்கான நேரமல்ல, அதை பிறகு செய்துகொள்ளலாம்.

மிகச் சரியாக சொல்ல வேண்டுமானால்
நீ உனது அழுத்தத்தை மிகவும் முழுமையாக அனுபவித்து வாழ்ந்தால் தளர்வு ஏற்படுவது
தானே நடக்கும். நீ குறிப்பிட்ட அளவு மட்டுமே அழுத்தம் கொள்ள முடியும், பின் உடல்
தானே தளர்வு கொள்ளும். நீ இடையில் தளர்வு கொள்ள முயற்சித்தால் நீ பிரச்சனையைதான்
உருவாக்குவாய். உடலால் இடையில் தளர்வு அடைய முடியாது. ஒரு ஒலிம்பிக் வீரன்
ஓட்டபந்தயத்திற்கு தயாராக உட்கார்ந்து, விசிலுக்காக காத்திருக்கிறான், விசில்
சத்தம் கேட்டவுடன் காற்றாய் பறக்கிறான். அவன் முழு அழுத்தத்தில் இருக்கிறான், இது
தளர்வு கொள்ளும் நேரமல்ல. அவன் போதை மாத்திரை எடுத்துக்கொண்டால் அது இந்த ஓட்ட
பந்தயத்திற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அல்லது தளர்வு செய்துகொள்வதற்காக
அவன் மகேஷ்யோகி  தியானம் செய்தால் அவன் எல்லாவற்றையும்
இழந்துவிடுவான். அவன் அவனது அழுத்தத்தை உபயோகித்தாக வேண்டும், அந்த அழுத்தம்
உச்சத்தில் இருக்கவேண்டும், அது சக்தி கொடுக்கும், அவன் மேலும் அதிக துடிப்போடும்
வீரியமாகவும் செயல்படுவான். அவன் அந்த அழுத்தத்தை வாழ்ந்து அதை ஒரு எரிபொருளாக,
சக்தியாக உபயோகிக்க வேண்டும்

அதனால் இப்படி முயற்சி செய்து
பார். அழுத்தம் தரும் சூழ்நிலை வரும்போது பயப்படாதே, கத்தாதே. அதனுள் செல், அதை
போரிட பயன்படுத்து. மனிதனுள் அளவற்ற ஆற்றல் உள்ளது, அதை நீ பயன்படுத்தும் அளவுக்கு
நீ அதை அதிகமாக பெறமுடியும்

அதுபோல ஒரு சூழ்நிலை வரும்போது, அழுத்தம் பெறும்போது போரிடு, நீ என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அத்தனையும் செய், அதனுள் ஆழமாக செல். அதை அனுமதி, ஏற்றுக்கொள்,
அதற்கு வரவேற்பு கொடு. அது நல்லதுதான், அது உன்னை போராடுவதற்காக தயார் செய்கிறது.
அதை இப்படி முயற்சி செய்தால் நீ வியப்படைவாய், மிகத் தளர்வான நிலை வரும், அந்த
தளர்வு நிலை உன்னால் ஏற்படுத்தப்பட்டதல்ல. இரண்டு மூன்று நாட்களுக்கு உன்னால்
உறங்கமுடியவில்லை என்றால் பின் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு உன்னால்
எழுந்திருக்கமுடியாது, அது பரவாயில்லை

இந்த உலகில் இரண்டு விதமான
மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று ஓட்டபந்தயக் குதிரை ரகம், மற்றொன்று ஆமை ரகம்.

பந்தயக்குதிரை வித மனிதர்களை விஷயங்களை வேகமாக செய்ய விடவில்லை என்றால் விரைவாக
போக விடவில்லை எனில் அங்கு அவர்களுக்கு அழுத்தம் உண்டாகும். அவர்களுக்கு அதுபோல
ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். நீ பந்தய குதிரை விதம் என்றால் தளர்வு, ஓய்வு
போன்ற விஷயங்களை மறந்துவிடு. அவை உனக்கானவை அல்ல. அவை என்னைப்போன்ற ஆமை வித
மனிதர்களுக்கானவை. ஆமைகள் அனுபவிக்கும் விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷம் தராது. அவை
உனக்கல்ல. உனக்கு சந்தோஷம் தரும் விஷயங்களே வேறு. அதேபோல ஆமை பந்தயக்குதிரைபோல மாற
ஆரம்பித்தால் அதற்கும் அதே பிரச்சனைதான்

நீ சூழ்நிலையிலிருந்து
வெளியேறிவிடலாம். அது சுலபம். சந்தையிலிருந்து வெளியே வந்துவிடு, அதை மறந்துவிடு,
இங்கே வந்து கம்யூனில் இருந்துவிடு என்று மனம் சொல்லும். ஆனால் நீ நன்றாக
உணரமாட்டாய். நீ மேலும் அழுத்தத்தைதான் உணர்வாய் ஏனெனில் உனது சக்தி
வெளிப்படவில்லை

ஆகவே உனது இயல்பை ஏற்றுக்கொள். நீ
ஒரு போராளி என்றால் அந்த வழியில் இரு, அதுதான் உனது சந்தோஷம். பயப்பட அவசியம்
இல்லை. அதில் முழுமையாக ஈடுபடு. சந்தையில் வெளி உலகில் போராடு, போட்டியிடு. நீ
செய்ய விரும்பும் அத்தனையும் செய். விளைவுகளை கண்டு அச்சப்படாதே அழுத்தத்தை
ஏற்றுக்கொள், அழுத்தத்தை நீ ஏற்றுக்கொண்டுவிட்டால் அது அழுத்தமாக இருக்காது.

அது மட்டுமல்ல, நீ மிகவும் சந்தோஷத்தை உணர்வாய் ஏனெனில் நீ அதை பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டாய். அது ஒரு வகையான சக்தி. தளர்வாக இருக்கச் சொல்லும் மக்கள்
பேச்சை கேட்காதே. அது உனக்கானதல்ல. கடின உழைப்பிற்கு பின் தானே நிகழும்
தளர்வைத்தான் நீ பெற்றாக வேண்டும்.

ஒருவர் தான் எந்த விதம் என்பதை
புரிந்துகொள்ள வேண்டும். ஒருமுறை தான் எப்படி என்பதை புரிந்துகொண்டுவிட்டால் பின்
அங்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பின் அவர் தெளிவாக தன் வழியே போய்க்
கொண்டிருக்கலாம். அழுத்தம்தான் உனது வாழ்வின் வழியாக இருக்கலாம்

மூலம்: DON’T BITE MY FINGER, LOOK WHERE I
AM POINTING