நிலை மாற்றம் தரக்கூடிய டைனமிக் தியானத்தை செய்வது எவ்வளவு சிறப்பானது என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரதீபா.

என்னைப் பொறுத்தவரை டைனமிக் தியானம் செய்வது
பற்றிய நமது அணுகுமுறை என்பது பொதுவாக நம்முடைய உடல், மனம், ஓசை பற்றிய நம்முடைய
குறுகிய அளவு அறிவின் அடிப்படையில் நாம் கொண்டுள்ள சில பல தவறான புரிதல்கள்,
இடைவெளிகள் சேர்ந்தே உருவாகியுள்ளது.

முதல் நிலையில் சுவாசம் வயிற்றிலிருந்து செய்ய வேண்டும்

முதல் நிலையில் மூக்கின் வழியே சுவாசிக்க
வேண்டும், ஆனால் நம்முடைய கவனம் சுவாசத்தை வெளியேற்றுவதில்தான் இருக்க வேண்டும்.
இதில் நிகழும் மிக முக்கிய தவறு என்னவென்றால் வயிற்றிலிருந்து சுவாசத்தை வெளியேற்ற
வேண்டும் என்பதை தவறவிடுவது. சுவாசம் வயிற்றிலிருந்துதான் நடைபெற வேண்டும், மேலும்
வெளிமூச்சின் வேகத்திற்கு இடுப்பக்கூட்டுப் பகுதியை முன்னும் மேலுமாக அசைத்து
கொடுக்க வேண்டும்.

இப்படி செய்வது உதரவிதானம் மேலே வந்து சுவாசத்தை
வெளியேற்ற உதவும். இது போல செய்யும் போது நெஞ்சில் எந்த விதமான முயற்சியும்
தேவைப்படாது,.  மூச்சு விடமுடியாமல் இரைக்க
வேண்டியது என்பது நிகழாது, பலரிடமும் நான் பார்க்கும் முகத்தில் செய்யும்
முயற்சியும் தேவைப்படாது. உங்களுடைய முழங்காலை சிறிது மடித்து வைத்துக் கொண்டால்
இந்த இடுப்பு அசைவு மிகவும் எளிதானதாக மாறும்.  மூச்சை வெளியே விடும்போது உடம்பை கீழ்நோக்கி
அழுத்தக் கூடாது என்பது முக்கியமான ஒரு விஷயம். அதற்கு பதிலாக தோள்பட்டைகளை சமமாக
வைத்துக் கொண்டு வயிற்றை உள் நோக்கி இழுத்து சுவாசத்தை வெளியே மேலே விடுவதுதான்
சரியானது. இப்படி செய்வது மூச்சு விடுவதை எளிதாக்குவது மட்டுமல்ல, அதை மேலும்
சக்தியுள்ளதாகவும் இனிதானதாகவும் மாற்றும்.

அலறு, கத்தாதே.

இரண்டாவது நிலையான கெத்தாரிஸிசில்
வெளிப்படுத்துதலை குரலில் மாறுதலை கொண்டுவந்து செய்யுமாறு நான் ஊக்கப்படுத்துகிறேன்.
கத்துவதற்கும் அலறுவதற்கும் வித்தியாசம் உண்டு. அலறுவது என்பது கோபம், பொறாமை,
ஈர்ப்பு, பிடிப்பு, ஒதுக்குதல், சோகம் போன்றவற்றை வெளிப்படுத்துதல்தான். அது வயிற்றிலிருந்து
வெளி வருதல்தான். இது நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்தான்.

கத்துதல் என்பது தொண்டையிலிருந்து வெளிப்படும்
ஒரு ஒலம் தான். உணர்ச்சிகளை வாழவிரும்பாத நம்முடைய கையிலாகாத்தனம், கவனமறுப்பு,
மறுதலிப்பு போன்றவற்றின் வெளிப்பாடு இது. இந்த வெளிப்பாடும் தேவைப்படும் சில
சந்தர்ப்பங்கள் வரும். ஆனால் டைனமிக் தியானத்தின் இரண்டாவது நிலையில் நமது தன்னுணர்வற்ற
அமுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட உணர்வுகளோடு தொடர்பு கொள்ளத்தான், அதிலும் முக்கியமாக
கோபத்தோடு தொடர்பு கொள்வதைத்தான் செயல்படுத்த வேண்டும். நாம் நமது வயிற்றோடு
ஒன்றுவதற்கு நமக்கு அதிக சகதி கொடுத்து தைரியமாக முயற்சிக்க வேண்டும். அப்போது
அமுக்கப்பட்ட உணர்ச்சிகள் தங்களது முழு சக்தியையும் காட்டும், வெளிப்படும். வயிற்றிலிருந்து
அலறுவதைப் போல இல்லாமல், தொண்டையிலிருந்து கத்துவது நம்மை எப்போதும் சோர்வடைய
செய்கிறது, சக்தியிழக்கச் செய்கிறது அதோடு நாள் முழுவதும் தொண்டை பாதிக்கப்பட்டு
குரல் வராமலும் ஆகிவிடுகிறது. மேலும் கத்தலில் நாமறியாத எதையும் நாம் தொட்டு அதை
வெளிப்படுத்துவதில்லை. ஆனால் வயிற்றோடு தொடர்பு கொண்டு நாம் அலறும்போது அது
எவ்வளவு சத்தமாக வெளிப்பட்டாலும் அதன் மூலம் நமது குரல் பாதிக்கப்படுவதில்லை.
மேலும் ஜிப்பரிஷ், கீழ் தொனியிலான வார்த்தைகள், பல்வேறு ஒலிகொண்ட வார்த்தைகள் என
செய்யவும் நான் ஊக்குவிக்கிறேன்.

“ ஹூ “   மற்றும் குதிகால் முதல் சக்கரத்தில் சுத்தியலாக அடித்தல்

மூன்றாவது நிலை தான் மிகவும் புகழ் பெற்ற ஹூ. நான் புரிந்து கொண்ட விதத்தில்
செய்ததால், ஆரம்பத்தில் செய்யும் போது நான் பட்ட சிரமங்கள் மிகவும் அதிகம். ஓஷோ
தன்னுடைய ஆரம்ப கால கட்டங்களில் நிகழ்த்திய டைனமிக் தியான முகாம்களின் போது முதல்
சக்கராவின் மீது சுத்தியல் அடிப்பது போல ஹூ இருக்க வேண்டும் என்கிறார். நான்
குதிக்க ஆரம்பித்த உடனேயே 3 நிமிடங்களுக்குள் சோர்வடைந்து விடுவேன். அதன்பின்
கைகளை உயர்த்தி வைத்திருப்பது என்பது சுய சித்திரவதை அனுபவமாகவே இருக்கும்.

இந்த நிலையின் வலியும் வேதனையும் என்னை உடலின் சக்தி மீது கவனம் கொள்ள
செய்தது. ஓஷோ கூறிய விளக்கங்களை திரும்பவும் நினைவு படுத்தி பார்க்கும்போது
குதிப்பதை விட எம்புவதைதான் செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். முழங்காலை
சிறிதளவு வளைத்து வைத்துக்கொண்டு முதுகெலும்பு பாதிக்கப்படாதவண்ணம் மென்மையாக,
குதிகால் தரையில் மோதுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டியதை
உணர்ந்தேன்.

இந்த யுக்தி என்னை ஒரு பந்து போல மேலெழும்புவதற்கு உதவி செய்ததோடு, சக்தி
பூமியிலிருந்து என் வழியே மேலேறி ஓடி செல்வதால், எனது தோள்பட்டைக்கு மேல் என்னுடைய
கைகளை உயர்த்தி வைத்திருப்பதை, இறுக்காமல் வைத்திருப்பதை எளிதாக்கியது. நான் என்னை
சக்தி டார்ச் போல உணர்ந்தேன். சக்தி எல்லா சக்கரங்களின் வழியாகவும் சென்று
என்னுடைய கைகள் மற்றும் தலை வழியாக வெளியேறுவதாக உணர்ந்தேன். மேலும் இந்த ஹூ ஆழமாக
செல்ல செல்ல அதிக வலிமையானதாக மாறியது. குதிகால்தான்   நம்முடைய வைராக்கியம் மற்றும்
தீவிரத்திற்க்கான புள்ளியாகும். நம்முடைய கவனத்தை குதிகாலில் குவித்தவாறு
இடைவிடாமல் குதிப்பது ஒவ்வொரு குதிப்பிலும் நம்முடைய தீவிரத்தை எடுத்துக்
காட்டுவதாகிறது.

மேலும் இந்த ஹூ சப்தத்தை தொடர்ந்து வயிற்றிலிருந்தே சொல்வது மிகவும் முக்கியமானது.
நாம் அதை நெஞ்சிலிருந்து சொல்வதோ, அதை விட மிகவும் மோசமானது அதை தொண்டையிலிருந்து
சொல்வது. அப்போது அது ஹு,ஹு என்று குறைந்துவிடும், அது ஹா என்றுகூட ஆகிவிடும்.
அப்போது அது அதன் உண்மையான செயல்பாடுகள் அனைத்தையும் இழந்து விடுகிறது. ஓஷோ
ஆரம்பத்தில் டைனமிக் பற்றி பேசும்போது இது அல்லா-ஹூ என்ற மௌவில்வி சூபி உச்சரித்த
மந்திரச்சொல்லின் சுருக்கம் என்று கூறுகிறார். இந்த ஹூ மிக ஆழமானது, இது முதல்
சக்கரத்தின் மீது வேலை செய்யக்கூடியது. ஆகவே இந்த சப்தத்தை மிகவும் கீழ்ஸ்தாயில்
வயிற்றிலிருந்து உச்சரிப்பது மிகவும் முக்கியம். சப்தம் குறைவாக அல்ல. குதிகால் கீழே
படும் அதே லயத்தில் ஹூ வேர் சக்கரத்திலிருந்து புறப்பட்டுவருவது போல நாம் கற்பனை செய்து
கொள்ளலாம்.

இந்த சவாலுக்கு தேவையான யுக்தி

வேகம் குறையாமல் அது செல்லும் விதம் உடையாமல் வைத்திருப்பது முக்கியம். சக்தி
அதுவாகவே நம்மை ஆட்கொள்ளும் அந்தப் புள்ளிவரை நம்மை எடுத்துச்செல்ல இது உதவி
புரியும். ஏதாவது காரணத்தால் நாம் நிறுத்த வேண்டி வந்தால் குதிப்பதையும் ஹூ
சத்தமிடுவதையும் சேர்த்து நிறுத்திவிடாமல் ஏதாவது ஒன்றை அதன் லயம் கெடாமல்
வைத்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்து திரும்பவும் ஆரம்பிக்க மிகுந்த முயற்சி
தேவைப்படும். அதற்கு பதிலாக இந்த லயத்தை இழந்து விடாமல் பயன்படுத்திக் கொள்வது
உதவியாக இருக்கும்.

முதுகுதண்டு பிரச்னை இருப்பவர்களுக்கு, இடுப்புக்கூட்டுப் பகுதியை
வட்டமடிக்கும்படி  சில பயிற்சியாளர்கள் சொல்கிறார்கள், ஆனால் அசையாமல் உடலை வைத்துக்கொண்டு முதல் சக்ரா செயல்படுவதற்காக முழங்காலை மட்டும் சிறிது வளைத்துக் கொடுத்து குதிகால்களை எம்புவதை செய்யலாம் என்பது எனது ஆலோசனை. இது முதல் சக்கரத்துடன் தொடர்பை விடாது இருக்கும் – உங்கள் தீவிரமும் வைராக்கிமும் இருக்கும்போது- மேலும் இதனால் சக்ராக்கள் ஒழங்கு படுவதும் நிகழும். மாறாக இடுப்பை வட்டமடிப்பது இரண்டாவது சக்கரத்தின் தன்மையையும், உணர்ச்சியையுமே தூண்டும்.

நிறுத்து என்பதை பற்றி சொல்ல ஏதுமில்லை, ஆனால் ஒருபோதும் கொண்டாட்டத்தை செய்யாமல்
விடாதீர்கள்.     

நிறுத்து என்ற நிலையைப் பற்றி கூற ஏதுமில்லை என்னிடத்தில். அதுவே அதைப்பற்றி
எல்லாமும் சொல்லி விடுகிறது…… ஆனால் கொண்டாட்டம் என்பதைப் பற்றி நான் ஒன்று
சொல்ல விரும்புகிறேன். தியானம் நிறைவு பெறும் முன் சென்று விடாதீர்கள்.
நன்றியையும், சந்தோஷத்தையும் உணரும் அந்த பரிமாணத்தை தவற விடுவது மிகவும் வருத்தத்திற்கு
உரியது.