1. நடனமாடுதல்
நீ தியானத்தன்மையோடு ஆடும்போது உன்னுடைய நடனம் ஒரு புதிய தன்மையை பெற்று விடுகிறது. ஏதோ ஒரு தெய்வீகம் அதில் வந்து விடுகிறது. ஏனெனில் நீ தியானத்தன்மையோடு ஆடும்போது அங்கே அகம்பாவம் இருப்பதில்லை, நடனமாடுபவரும் இருப்பதில்லை. இதுதான் தியானத்தின் கலை.
அகம்பாவமும் காணாமல் போய், மனமும் இல்லாமல் போகும் இந்த நிலையைத் தான் நான் தெய்வீக இயல்பு என்று கூறுகிறேன்.
நடனமாடுபவர் மௌனமாக இருக்கும்போது ஆடல் தொடர்ந்தால் அங்கே நடனமாடுபவர் கரைந்து விடுகிறார்.
உனது மனமும் உடலும் உயிரும் லயத்தில் இருக்கிறதா என்று அறிய ஆடல் ஒரு பரிசோதனை.
நடனமாடுபவர்தான் நடனமே. எனவே ஆடுபவர் ஆடலில் இருந்து வேறுபட்டவரல்ல.
தியானம் என்று வரும்போது ஆட்டத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.
நடனம் ஒரு மிக அழகான லயத்தோடு கூடிய செயல்பாடாகும்.
ஆடுபவரின் முகத்தில் ஒரு புதுவித ஜொலிப்பை நீ பார்க்கலாம். அது ரசவாதமாகும்.
2. நலம் – ஆரோக்கியம்
மதம் ஏற்கனவே நலமாக உள்ள மக்களுக்குத்தான் உதவுகிறது. ஆனால்நலத்தின் சிகரத்தை அறிந்து கொள்ள வேண்டும். நலமாக இருப்பதன் எவரெஸ்ட் சிகரம் போன்ற உச்சியை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சிகர அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. நீ இறுதி அனுபவத்தை பெற வில்லையென்றால் நீ விலைமதிப்பற்ற ஒன்றை பெறாமல் விட்டுவிட்டாய்.
நோய் மேலோட்டமானது, நலம் கூடவே வந்தது. சிரிப்பு நலத்திலிருந்து தான் வரும், அது சக்தி பெருகி வருவது. நலம் என்பது உடல் முழுமையாக இருப்பது, எதையும் விட்டு விடாமல் இருப்பது.
நலம் உனது மையத்தில் நிகழ்வது, அது உனது இருப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எப்படி நோய் வந்து பிடித்துக் கொள்கிறதோ அது போல ஆரோக்கியமும் பிடித்துக் கொள்ளும்.
ஒருவன் பிரபஞ்சத்துடன் லயத்தில் இருக்கும்போது நலமாக இருப்பான்.
3. மலர்கள் சொரியும்
நீ விரக்தியாகவும் சோகமாகவும் இருக்க விரும்பினால் தவிர மற்றபடி நீ உனது கடந்த காலத்திலிருந்தும் எதிர்காலத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு நிகழ்காலத்தில் வாழ ஆரம்பித்தால் உனது வாழ்வு ஆடலோடும் பாடலோடும் இருக்கும். அப்போது சாப்பிடுவது, குடிப்பது, குளிப்பது, உலாவச் செல்வது ஆகிய யாவுமே திடீரென சிறப்பானதாக மாறும். மலர்கள் சொரிவது எந்த காரணமும் இல்லாமல் நிகழ ஆரம்பிக்கும்.
நான் என்பது இல்லாமல் நீ இருக்கும்போது பிரபஞ்சம் அதை கொண்டாடுகிறது, மலர்கள் உன் மேல் சொரிகின்றன.
மலர்கள் சொரிந்து அருள் சுரந்து வழிகிறது – மேலும் ஒருவர் வீடு வந்து சேர்ந்து விட்டார்.
புத்தர் ஞானமடைந்த போது மலர்கள் வானத்திலிருந்து அவர் மேல் மழையாய் பொழிந்தன.
நீ உன் மலரை கொடு, ஆயிரக்கணக்கான மலர்கள் உன்மேல் பொழியும்.
மலர்கள் உன் மேல் பொழிவதன் பொருள் இந்த முழு பிரபஞ்சமும் கொண்டாடுகிறது என்பதே.