ஆன்மீக வியாபாரம்
நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர்.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது.
ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம் இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான்.
இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான்.
இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான்.
அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான்.
அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான்.
அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான்.
அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான்.
அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான்.
மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம்.
இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது.
மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது.
இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான்.
அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான்.
ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர்.
அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர்.
இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர்.
அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….”
அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான்.
முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது.
அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான்.
இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான்.
மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர்.
பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான்.
அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது.
அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார்.
ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே.
பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம்.
கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல.
அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள்.
அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை.
மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை.
அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது.
Source : From Ignorance to Innocence Ch. #5