அன்பு நண்பர்களே,

தன்னுணர்வு, விழிப்புணர்வு மட்டும்தான் உண்மை என்றால் உறவு, நட்பு, காதல், அழகு, கலை, கவிதை, சங்கீதம் இப்படி வாழ்க்கையில் உள்ள எல்லாமே பொய்யா, ஞானமடைதல் மட்டுமே உண்மை என்றால் மற்றவையெல்லாம் பயனற்றதா, மாறாத சத்தியமே உண்மை என்றால் மாறும் இயல்புடையனவெல்லாம் போலியா, வேஷமா, வீணா, வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதா, விரயமா, மடத்தனமா, இவையெல்லாம் தவறு என்று நீக்கிவிட்டால் வெறுமைதானே மிச்சமிருக்கிறது. வளர்ச்சி எதுவும் வருவதில்லையே, சலிப்புதானே வருகிறது, என்று ஒரு நண்பர் அடுக்கடுக்காய் பொங்கினார்.

இப்போது இதில் இரண்டு அடிப்படை விஷயங்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஒன்று, ஒருவர் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் தன்னிடம், தன்னுணர்வில் ஒரு வித்தியாசம் பிறக்கிறது. வேஷமும் வியாபாரமுமாய், போலித்தனமும் சுயநலமுமாய், பொறாமையும் பேராசையுமாய், தான் இதுவரை இருந்து வந்திருப்பதை உணர்கிறார். அதோடு தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் இப்படித்தான் இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் அவர் ஒதுங்க ஆரம்பிக்கிறார். அப்போது அவருள் தனிமையும் வெறுமையும் சலிப்பும் சோம்பலும் ஏற்படுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இது மனதின் கடைசி ஆயுதம், கடைசி போராட்டம். மனம் தீனி கிடைக்காமல் தவிக்கும் தவிப்பு இது. இந்த சமயத்தில் திரும்பவும் சமூகத்தில் அமிழ்ந்து விடுபவரே பெரும்பாலராய் உள்ளனர். இன்னும் சிலர் தான் எதையோ அடைந்துவிட்டதைப் போல உபதேசம் செய்ய ஆரம்பித்து அதன் வழியாய்
சமூகத்தில் சேர்ந்து கொள்கின்றனர். இவை இரண்டுமே சரியல்ல.

இந்த நிலைக்கு வந்த ஒருவர் மனதிலிருந்து இதயத்திற்குள் விழ வேண்டும். இதயம் திறந்து வாழ ஆரம்பிக்க வேண்டும். இதனால் வெளியே என்ன இழப்பு ஏற்படினும் உள்ளே மலர்ச்சி ஏற்படும். உன்னைச் சுற்றி மணம் பரவும்.

அதாவது இந்த வெறுமை, மனதின் வெறுமை. மனம் பயித்தியமாய் அலைந்து கொண்டிருந்தது இல்லாத வெறுமை. இதை உணர்ந்து இந்த வெறுமையிலிருந்து திரும்பவும் பயித்தியமாய் வெறி பிடித்து அலையப் பார்க்காமல், மாறாக இதயம் திறக்கும் பாசிடிவ் பக்கம் வர வேண்டும். தன்னை விரிவடைய அனுமதிக்க வேண்டும். மண்டை ஓட்டினுள் மனதில் ஒளிந்துகொண்டு நான் என்ற ஈகோவில் வாழ்வதை விட்டுவிட்டு இதயம் திறக்கும் வாழ்வுப் பாதைக்கு மாறவேண்டும்.

பயனின்றி மகிழ்ச்சிக்காக மட்டும் ஏதாவது செய்யுங்கள். விளையாடுங்கள் வெற்றி என்ற குறிக்கோள் இருப்பது விளையாட்டு அல்ல. குழந்தையை கொஞ்சுங்கள். மலர்களை பார்த்து ஆச்சரியப் படுங்கள். மேகங்களின் பயணத்தை பார்த்து கவனியுங்கள். வெண்ணிலாவின் குளிர்ச்சியை அனுபவியுங்கள். துளித்துளியாய் சுவைத்து மணத்தை நுகர்ந்து டீ குடியுங்கள். கலர்களுடன் கலந்து வண்ணம் தீட்டி மகிழுங்கள். இதயம் திறக்கும் இசை, இன்பம் ஏற்படுத்தும் கவிதை, கல்லில் காவியமாயுள்ள சிற்பங்கள் என அனுபவியுங்கள். கடலுக்கும், மலைக்கும், அருவிக்கும் செல்லுங்கள். அழகை அனுபவியுங்கள். அழகு என்பது என்ன? வெளியே நாம் உணரும் ஒரு லயம் திடீரென நமது உள்ளே சிதறிக் கிடக்கும் நம்மை ஒரு லயப்படுத்துகிறது. அப்படி உள்ளே லயப்படுத்துகையில் ஏற்படும் உணர்வுதான் அழகுணர்வு.

அன்பு என்பது என்ன? உள்ளே நாம் நிறைவாக உணர்கையில் நம்மிடமிருந்தே பொங்கி பெருகி வழிந்தோடி சுற்றியுள்ள அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் சக்தி பெருக்கத்தால் நாம் விரிவடையும் போது எழும் உணர்வே அன்பு.

இப்படி இதயம் திறக்கையில் நாம் பிரபஞ்சத்துளியாய் மாறிவிடும் அனுபவம் கிடைக்கிறது. இதுவே ஆனந்தம்.

இப்படி இதயம் திறக்க ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே உனது வெறுமையும், தனிமையும், சலிப்பும், சோம்பலும் போய் வாழ்வின் பாசிடிவ் பக்கத்தை உணர முடியும், வளர முடியும். ஏன் விழிப்புணர்வில் நின்று வெறுமையைப் பார்த்தால் கூட வெறுமையை விட்டு நாம் விழிப்புணர்வுதான் என்ற நிறைவில் நுழைய முடியும்.

விழிப்புணர்வும், சாட்சிபாவமும், நிசப்தமும், அழகும், படைப்பும், சத்தியமும், நிறைவும், கருணையும், ஆனந்த நடனமும், பிரபஞ்ச இருப்பின் குணங்கள். இதில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு வெறுமையிலிருந்து வெளிவந்தால் மீண்டும் மனம் துளிர்க்காது. மாறாக பிரபஞ்ச இருப்பில் கரைந்துவிடும் ஞானம் பிறக்கும்.

இதிலும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. ஒரு கண தரிசனம் கிடைத்தவுடன் நமக்கு ஆச்சரியமும், வியப்பும், ஆனந்தமும் பொங்கும். அங்கு நாம் விழிப்புணர்வை விட்டு விடுவோம். மனம் இயங்க ஆரம்பிக்கும். நமக்கு தியான அனுபவம் கிடைத்து விட்டது, அது இப்படி இருக்கிறது, அதை
நாம் அடைய முடியும், அதை அடைந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்லி மேலும் ஆழமாகச் செல்ல முடியாமல் மனம் நம்மை தடுத்துவிடும்.

தியானமும் எனக்குத் தெரியும் என்று அதைக் கடந்த அனுபவத்தைக் கூட நுட்பமான ஈகோவாக மாற்றிக் கொண்டுவிடும். அப்படி நமக்கு ஆகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதன் அறிகுறி என்னவென்றால் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடுவோம், சந்தோஷம் அதிகமாவதற்கு பதிலாக அன்பு அதிகமாவதற்கு பதிலாக மற்றவர்களிடம் அதுவும் காதலியிடம், மகன், மகள், மனைவி என்று தன்னை வெளிப்படுத்த உரிமை உள்ளவனாக நினைக்கும் இடங்களிலெல்லாம் கோபம் அதிகம் வரும். அவர்களை கண்டிக்க ஆரம்பிப்போம். இது தவறான பாதையில் செல்வதன் அறிகுறி.

அன்பும், தியானமும் ஒன்றாய் வளர்ந்தால்தான் அது சரியான வழி. விழிப்புணர்வும், அழகும், கருணையும், நிசப்தமும், படைப்பும் என பிரபஞ்ச இருப்பின் குணங்கள்தான் நம்மிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்க வேண்டும். இது சரியான வழி.

மேலும் தியானிப்பவர்கள் நாபிக்கமலத்தில் வேர் ஊன்றி அதை இயங்கச் செய்ய வேண்டும். நாபிச்சக்கரம்தான் மனிதனின் இருப்பு நிலை. அதற்குக் கீழே உள்ளவை விலங்குகளுக்கு உள்ளவைதான். நாபிச்சக்கரத்தில் இருந்து நாம் வளர வேண்டும். இப்போது எல்லோரும் நமது இருப்பு நிலையை விட்டுவிட்டு
தலையில் நமது சிறிய தன்னுணர்வால் ஏற்படுத்தப்படும் மனக்கூட்டுக்குள் வாழ்கிறோம். இது புருவமத்தி சக்கரத்தில் வாழ்வது போல தோன்றலாம். ஆனால் இது உண்மையல்ல. இங்குள்ள சக்தி மிகக் குறைந்தது. இதை அமைதிப்படுத்தும் வழிமுறைகள் பயனற்றவை. ஏனெனில் அவை நிரந்தர நிலைமாற்றத்தை, குணமாற்றத்தை ஏற்படுத்தாது. இருப்புநிலையிலிருந்து முளை விட்டு, கிளைவிட்டு, அதன் வேராய் உள்ள பாலுணர்வு சக்கரம், ஹரா சக்கரத்திலிருந்து சக்தியை எடுத்து மாற்றி மலர்ந்து இருதய சக்கரமாய் அன்பிலும், தொண்டை சக்கரமாய் வெளிப்படுத்தலிலும் புருவமத்தி சக்கரமாய் தெளிவும்
அடைந்து, சகஸ்ரசக்கரத்தில் பிரபஞ்ச இருப்புடன் சங்கமிக்கும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.

நாம் பொய்யான வாழ்க்கை வாழ்வதால் இருப்பு நிலைக்கு செல்வதே முதல் வேலை ஆகிறது. அதற்காகத்தான் ஓஷோ உணர்ச்சிகளை வெளியே வீசும் கேத்தாரிஸிஸ் முறையை அறிமுகப்படுத்தினார். நாம் தலை கனத்தவர்களாய், மண்டை வீங்கியவர்களாய் இருக்கிறோம். வேரிலிருந்து விளைந்த மரமாய் இல்லாமல் பிளாஸ்டிக் மரமாய் பெரிதாகப் பிரியப்படுகிறோம்.

ஆனால் இந்த நிலையிலும் நமக்கு உயிர்தொடர்பும், துடிப்பும் இருப்பதைப் பயன்படுத்தி வெறுமையைக் கடந்து பிரபஞ்ச இருப்பைத் தொடும் சுவை பெற முடியும். அதற்குத்தான் ஓஷோ ஆயிரக்கணக்கான தியானப் பயிற்சி முறைகளைக் கொடுத்திருக்கிறார்.

தியான பயிற்சி முறைகள் தியானமல்ல. அது நிகழ உதவும் சூழலை ஏற்படுத்தும் முயற்சியே. மேலும் முதல் அனுபவத்திற்க்குப் பிறகு நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நாம் தயாராகவேண்டும். தலையிலிருந்து வாழாமல் இருப்புநிலையிலிருந்து வளரும் வாழ்க்கைக்கு மாற வேண்டும். அப்போதுதான் தியானம் நிகழும்.

நமது வாழ்வைத் தொடாமல் வெறும் தியானப் பயிற்சி முறைகளைப் பின்பற்றுவது ஒரு பழக்கமாக, நல்ல பழக்கமாக வேண்டுமானால் உதவலாம். அப்படி ஆகும்போது அதுவும் மனதிற்கு உதவும் பழக்கமாகவே ஆகிவிடுகிறது. இருந்தாலும் நல்ல பழக்கம் என்பதால் அது உடல் ஆரோக்கியத்தையும், மனத்திற்கு 
வெறிபிடித்து விடாது சமநிலையையும் கொடுக்கும். ஆனால் இதுவல்ல ஓஷோவின் எதிர்பார்ப்பு.

புதிய மனிதன். இருப்பு நிலையிலிருந்து வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்பி, இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்று வாழும், ஞானத்தை நோக்கிச் செல்லும், ஆரோக்கிய மனிதனே ஓஷோவின் செய்தி, செயல், வாழ்வு, விளைவு, இயக்கம், எதிர்பார்ப்பு.

அதை நனவாக்கும் முயற்சியில் ஒருவருக்கொருவர் உதவியாய் வளர்வோம். உண்மையை உணர்வோம். வாருங்கள்.

அன்பு,

சித்.