அன்பு நண்பர்களே,
கூட்ட மனப்பான்மை பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் தனிமனிதனாதல் பற்றியும் எழுதுங்கள், அது என்னைப் போன்று பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று ஒரு அன்பர் அவரது பிரச்னையை விளக்கும்போது கூறினார்.
அது உண்மைதான். ஓஷோவிடம் வருவதற்கு முதலில் ஒரு தனிமனிதனாய் இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே கூறுவேன். ஆன்மீக வளர்ச்சிக்கு இது மிக மிக அவசியம். மேலும் இதுதான் இந்தியர்களிடம் இல்லாத, இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு பண்பாக இருக்கிறது.
நாம் இன்னும் ஒரு கூட்டமாகத்தான், அதாவது கூட்டத்தில் ஒருவராகத்தான், கூட்டத்தின் பகுதியாகத்தான் இருக்கிறோம். இதை நான் பூனாவில் இருந்தபோது அங்கு வரும் நண்பர்கள் அனைவரிடமும் சுட்டிக்காட்டுவேன். வருபவர்கள் தங்களது ஊரைப்பற்றி சிறப்பாகப் பேசுவார்கள். அங்குள்ள சிறப்பைப் பற்றி பேசுவதில் தவறில்லை. ஆனால் நான் அவர்கள் ஊரைக் குறை சொன்னால் அவர்கள் முகம் வாடிவிடும். ஒரு சங்கடம் வரும். இது தவறு. இப்படி நமது ஊரோடு ஒரு உணர்ச்சிப் பிணைப்பு நமக்குள் இருக்கிறது. நாம் ஊரின் ஒரு பகுதியாக நம்மை உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
என்னைக் கேட்பார்கள், நீங்கள் எந்த ஊர் என்று – நான் திருப்பூர் என்றால், அதுதான் சொந்த ஊரா என்று கேட்பார்கள். எனக்குச் சொந்தமான ஊர் எதுவும் இல்லை, அது நான் இருக்குமிடத்தின் பெயர் மட்டுமே என்று சொல்வேன். ஊரில் என்ன இருக்கிறது, இது நம் அறிவுக்குப் புரியலாம். ஆனால் நாம் உணர்ச்சி பூர்வமாக ஒரு பிணைப்பு கொண்டிருக்கிறோம். இப்படி நமது ஊரோடு மட்டுமல்ல, நமது நாடு, நமது மொழி, ஏன் நமது பூமி தொடங்கி நமது ஊர், நமது வீதி, நான் படித்த பள்ளிக்கூடம், எனது இனம், எனது ஜாதி, எனது மதம், பிறகு எனது குடும்பம், என் சுற்றத்தார் என்று எவ்வளவாய் நாம் வாழ்கிறோம் என்று பாருங்கள். இந்த உணர்ச்சிப் பிடிப்புதான் கூட்ட மனப்பான்மை.
கூட்டம் கூட்டமாய் விலங்குகள் வாழ்கின்றன. தனது இடம், ஜாதி, சொந்தம் என்று கூட்ட உணர்வில்தான் அவை இருக்கின்றன. இந்த கூட்ட மனப்பான்மை நம்மிடமும் இருக்கிறது. இதன் அடிப்படை பாதுகாப்பு. இந்த சமூகம்தான் நமக்கு பாதுகாப்பு என்ற உணர்வு. நாம் எந்த சமூகக் கூட்டத்தில் பிறக்கிறோமோ அதன் அங்கமாக
ஆகிப் போகிறோம். இது நமது உள்ளே அடி ஆழத்தில் குழந்தை பருவத்திலேயே பதிந்து போய் விடுகிறது. வளர வளர நாமும் நமது சமூகத்தைப் பார்த்து அவர்களைப் போலவே நமது சமூக கூட்டத்தில் மேலும் மேலும் அடையாளங்களை, பிணைப்பை வளர்த்துக் கொள்கிறோம். இதனால் நமக்குள் ஏற்படும் உளமனப்பான்மை, மனப்பாங்கு, பார்வை, அணுகுமுறைதான் கூட்ட மனப்பான்மை.
இதன்பின் நமது வாழ்வின் போராட்டம் முழுவதுமே நமது கூட்டத்தால் மதிக்கப்படும், போற்றப்படும், பாராட்டப்படும், அங்கீகரிக்கப்படும் ஒருவனாக ஆவதுதான். உங்களது போராட்டங்களை, முயற்சிகளை, ஈடுபாடுகளை, இலக்குகளை லட்சியங்களை, செயல்பாடுகளை கூர்ந்து பாருங்கள். அனைத்தும்
எதை நோக்கி எதன் விளைவு கூட்ட மனப்பான்மையின் விளைவு, கூட்டத்தின் அங்கீகாரம் தேடல்.
ஓஷோவிடம் அவரது பேச்சால், பேச்சைப் படிப்பதால் ஈர்க்கப்பட்டு வருபவர்களுக்கு முதலில் பிடிபடாமல் போவது இதுதான். அவர்களுக்கு ஓஷோ சொல்வதெல்லாம் பிடிக்கிறது. தான் இன்னும் உயர, வளர, ஓஷோ சொல்வதெல்லாம் சரியாகவே படுகிறது. ஆனால் வந்து பார்த்தால் ஓஷோவின் படி வாழ்பவர்களுடன் சேர்ந்து இருக்க முடிவதில்லை, அவரது தியானம் நடக்கும் இடங்களில் அவர்களால் பொருந்த முடிவதில்லை. ஓஷோவின் பேச்சு ஈர்த்த அளவு அவரது வாழ்க்கைமுறை ஈர்ப்பதில்லை, மாறாக பயமாகத் தெரிகிறது, தவறாகத் தெரிகிறது. மேலும் ஓஷோ தவிர மற்ற எல்லா சாமியார் கூட்டம் நடத்தும் ஆசிரமங்களுக்கும் அவர்கள் செல்லும்போது மிக நன்றாக உணர்கிறார்கள். பொருத்தமாக இருக்கிறது. சரியாகப் படுகிறது. அந்த சாமியார்கள் பேச்சு ஓஷோ அளவு உண்மையில்லாமல், தெளிவும் ஆழமும் இல்லாமல் இருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை முறை பிடித்திருக்கிறது.
ஏகப்பட்ட நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள். படிப்பது ஓஷோ. எண்ணங்களாலும், கருத்தாலும், ஓஷோவால் ஈர்க்கப்படுகிறார்கள். அவரையே படிக்கிறார்கள், அவரது பேச்சையே கேட்கிறார்கள். அவரையே மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். ஆனால் போவது ஏதோ ஒரு ஆசிரமத்துக்கு, ஏதோ ஒரு கோவிலுக்கு, ஏதோ ஒரு சர்ச்சுக்கு. இது ஏன், கூட்ட மனப்பான்மைதான் காரணம். எல்லா கோயில்களும் ஆசிரமங்களும் பேசுவது எதுவாக இருந்த போதிலும் நடைமுறையில் உன் கூட்டமனப்பான்மைக்கு எதிரான வாழ்வியலை கொண்டதாக இருப்பதில்லை. உனது கூட்ட மனப்பான்மை ஏற்றுக்கொள்ளப் படுகிறது. கூட்டத்தில் அங்கீகாரம் எனும் உனது இலக்கு முயற்சிக்கு உதவி செய்வதாகவே அவர்களது நடைமுறை இருக்கிறது. அங்கும் உனக்கு ஒரு அங்கீகாரம். எங்கள் கூட்டத்தில் இணைந்தவன், சிறப்பானவன் என்ற வரவேற்பு. மேலும் மேலும் அந்த கூட்டத்தில் இணைந்தவனாய் செயல்பட ஊக்கம். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பொறுப்பு, இப்படி உன் கூட்ட மனப்பான்மை வலுப்படுத்தவே படுகிறது. இது வேறு கூட்டமாக இருக்கலாம். ஆனால் உனது கூட்ட மனப்பான்மை உடைக்கப்படுவதில்லை, சிதறடிக்கப்படுவதில்லை. தனிமனிதனாய் வாழும் பொறுப்பு உனக்கு கொடுக்கப்படுவதில்லை.
மேலும் ஓஷோ பேச்சு உங்கள் கூட்டமனப்பான்மையை பாதிப்பதில்லை. ஏனெனில் கூட்ட மனப்பான்மைப்படியே நீங்கள் அவரைப் புரிந்து கொள்கிறீர்கள். பாதித்தாலும் அது வெறும் எண்ணங்களை பாதிப்பதாகவே உள்ளது. ஆனால் அவரது வாழ்வியலைப் பார்க்கும்போது உங்களால் ஏற்க முடிவதில்லை. ஏனெனில் ஓஷோ கூட்ட மனப்பான்மையை உடைத்துவிட்டு தனிமனிதனாய் வாழ சொல்கிறார். அப்படி தனிமனிதனாய் வாழ ஆரம்பிக்கும்பொழுதுதான் நமக்கு உள்ளே உள்ள பிரச்னைகளைப் பார்க்க முடியும். கூட்ட மனப்பான்மையின் வாழ்க்கையில் பிரச்சனை எப்போதும் வெளியேதான். வெளியேதான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் தனிமனிதப் பண்போடு வாழ ஆரம்பிக்கையில் பொறுப்பு நம்மிடம் வருகிறது. நமது பங்களிப்பை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது நோயை, நமது தன்னுணர்வற்ற நிலையை உணர ஆரம்பிக்கிறோம். இங்கிருந்துதான் ஆன்மீக வளர்ச்சி சாத்தியம்.
அதற்காக ஓஷோ கூட்டத்திற்கு, சமூகத்திற்கு எதிராக இருக்கச் சொல்வதில்லை. மாறாக சமூகத்தைப் பயன்படுத்திக்கொள். கூட்டமாக வாழ்வதன் வசதிகளை பயன்படுத்து. ஆனால் உனக்குள் தனிமனிதனாய் இரு. உள்ளே கூட்ட மனப்பான்மையுடன் இருக்காதே. உள்ளே ஒரு கூட்டமாய், ஒரு கும்பலாய், பலராய் இருந்தால் ஆன்மீகவளர்ச்சி சாத்தியமில்லை. நாம் சேர்ந்து கூட்டமாய் இருப்பது நமது நன்மைக்கே, நமது வளர்ச்சிக்கே. அது ஒரு ஏற்பாடு. ஆனால் அதை மறந்து அதன் பாகமாய் நாம் ஆகிவிட்டால் அப்போது நாமே அங்கு இல்லாமல் போய்விடுகிறோம். அப்போது அங்கு வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது.
இங்குதான் ஓஷோ கம்யூனிஸத்தைக் கண்டிக்கிறார். பொதுவுடமை நல்லதுதான். ஆனால் தனிமனிதனை அழிக்கும் பொதுவுடைமை நல்லதல்ல. தனிமனிதனை வளர்க்கும் பொதுவுடைமையை தான் நான் கூறுகிறேன் என்கிறார். தனிமனிதன் என்பவன் இல்லை, வெறும் சமூகமே இருக்கிறது என்பது தவறு. தனிமனிதன்தான் உண்மையில் இருப்பவன், உயிரோடு இருப்பவன். சமூகம் என்பது வெறும் ஒரு ஏற்பாடு. தனிமனிதர்களாகிய
நாம் கூடி திட்டமிட்டுக் செய்துகொள்ளும் ஒரு நடைமுறை ஏற்பாடு, அது நம் வளர்ச்சிக்கு, நம் வசதிக்குத்தான். ஆனால் மாறாக இன்று மனிதன் தன்னை இழந்து கூட்ட மனப்பான்மைக்கு அடிமையாய் வாழ்கிறான்.
இதற்கு வறுமையும், பயமும் ஒரு காரணம்தான். அதனால்தான் இந்தியாவில் இது அதிகமிருக்கிறது. செல்வச் செழிப்படைந்த நாடுகளில் குறைகிறது. செல்வசெழிப்பில் உன் பயம் போகிறது. அப்போது கூட்ட மனப்பான்மையை உதறித்தள்ளிவிட்டு தனிமனிதனாய் வாழ்ந்து பார்க்கும் தைரியம் வர வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆனால் இந்தியாவில் பணமுள்ளவர்களும் தன்னைச் சுற்றி பணமில்லாத ஏராளமானபேரைப் பார்த்து பயம் கொள்வதால், பணத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். வாழ்ந்து பார்ப்பதில் செலவாகி நாமும் மற்றவர்கள் போல ஆகிவிடுவோமோ என்ற பயம் வந்துவிடுகிறது. அதற்கு பதிலாக கூட்டத்தில் கிடைக்கும் போலி மரியாதை என்ற போதையில் வாழ்வதையே தேர்ந்தெடுக்கின்றனர்.
ஓஷோ வாழ்முறையில் முதலில் நீ தனிமனிதன். தனிமனிதனாய்தான் பிறக்கிறாய், இறக்கப்போகிறாய், வலியும் மகிழ்ச்சியும் பசியும் தனியாகத்தான் உனக்குள் வருகிறது. ஆகவே இந்தப் பிரச்னைகளை உள்ளேதான், தனியாகத்தான் சந்திக்க வேண்டும். அதற்குரிய சூழலை ஏற்படுத்த, உதவிகரமான
வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவும் ஒரு கூட்டம் நல்லதுதான். ஆனால் அது தனிமனிதர்கள், தனிமனிதர்களாய் இருக்க சேர்ந்திருக்கும் கூட்டம். சமூகத்திலிருப்பதைப் போல கூட்ட மனப்பான்மையுடன், கூட்டத்திற்காக, கூட்டத்தின் அங்கமாய் இருக்கும் கூட்டமல்ல இது.
ஆகவே ஓஷோ தியானத்தில் ஆழமாகச் செல்பவர்கள், ஓஷோ வழி வாழ விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் குழப்பம் சமூகத்தில் வாழும்போது ஏற்படுகிறது. ஏனெனில் தியானம் செய்ய, செய்ய ஓஷோ வழியில் வாழ முற்பட, முற்பட அவர்களின் கூட்ட மனப்பான்மை உடைகிறது. தனிமனிதனாய் வாழ முற்படுகிறார்கள். அப்படி முற்படுகையில் சமூகத்திற்கு, அவர்களது சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, ஊருக்கு, கோபம் வருகிறது. அவர்களை அறியாமலேயே கோபம் அல்லது பொறாமை வருகிறது. ஏனெனில் ஒருவன் தனிமனிதனாய் மாறி வாழ்வது அவர்களை இடித்துக் காட்டுகிறது. சமூகத்தில் சலசலப்பை, சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சமூகக் கட்டமைப்பை, கூட்ட மனப்பான்மையை அதனால் குளிர்காயும் சுயநலவாதிகளை பாதிக்கிறது. இது ஒருபுறம்.
தான் தனிமனிதனாய் உணர்வு பெற்று வாழும் ஒரு வாழ்க்கை, தான் கூட்ட மனப்பான்மையுடன் வாழும் ஒரு வாழ்க்கை என்று ஓஷோ அன்பர்கள் இரண்டுபட்டு இருப்பது மறுபுறம். இப்படி ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்பதுபோல, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல, ஓஷோ வழி பிடிக்கிறது, ஆனால் சமூகத்தை விடுவது மிரட்டுகிறது என்ற நிலை ஓஷோ அன்பர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூகம் கோபப்பட்டு மிரட்டுகையில் ஏராளமானோர் பாதுகாப்புக்கு பயந்து சமூகத்திடமே தஞ்சம் கொண்டுவிடுகின்றனர். ஓஷோவை மெதுவாக விலக்கி, ஆர்வக்கோளாறை அடக்கி, பெரும்பாலோர் பேச ஒரு நல்ல விஷயமாக மட்டும் ஓஷோவை ஆக்கிக் கொள்கின்றனர். நானும் ஒரு சிறிது காலம் ஓஷோ வழியை முயன்றேன் என்ற பெருமை மட்டுமே சேர்ந்து கொள்கிறது.
இதற்கு மாற்றாகத்தான் ஓஷோ மிகச்சிறு குழுக்களாக, குறைந்த நபர்களைக் கொண்ட குழுக்களாக, சேர்ந்து சிறு சிறு கம்யூன்களாக வாழுங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஏனெனில் பெரிய கம்யூன்கள் சமூகத்தின் கோபத்தையும், பொறாமையையும் சந்தித்து சமூகத்தால் பயனடையும் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிடும். இது ஓஷோ அமெரிக்காவில் அனுபவித்தது.
அதேசமயம் தனிநபராய் இருந்தாலும் சமூகத்தை சந்திப்பது மிகவும் சிரமம். வசதிகள் எல்லாவற்றையும் இழந்து வாட வேண்டும்.
ஆகவேதான் சிறு கம்யூன் ஏற்பாடே இன்றைய நிலையில் உகந்தது என்கிறார் ஓஷோ.
நண்பர்களே, ஆன்மீக வளர்ச்சிக்கு, உருகடந்த உணர்வு நிலை அறிதலுக்கு, ஞானத்திற்கு செல்லும் வழி நடக்க விரும்பினால் வாழ்க்கை முறை மாறுதலுக்கு, மாற்று ஏற்பாட்டிற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். கூட்ட மனப்பான்மையினால் உள்ளே எழும் பயங்களை, தயக்கங்களை, சந்தேக உணர்வுகளை, பார்த்து, அவைகளை தன்னுணர்வோடு சந்தியுங்கள். அப்போது அவை போய்விடும். தன்னுணர்வின் முன் உண்மையான உணர்வுகள் மட்டுமே, தனிமனித உணர்வுகள் மட்டுமே நிலைத்திருக்கும். கூட்ட மனப்பான்மை உணர்வுகளைக் கடந்து நீங்கள் வளர்வீர்கள். இது மனிதனின் பிறப்புரிமை, அவனின் தனிச்சிறப்பு.
வாருங்கள். வழி நடப்போம். வழி நடப்பதே புனிதப்பயணம். சேருமிடம் ஏதுமில்லை.
அன்பு,
சித்.