ஒரு தியானம் புரியும் அன்பருக்கு மனமற்ற நிலை அனுபவம் சென்ற மாதம் ஏற்பட்டது. அவர் 13 வயதிலிருந்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு, கடைசியாக ஓஷோவிடம் வந்து, அவரின் டைனமிக் தியானத்தை முழுமூச்சுடன் 1 ½   வருடமாகச் செய்து வந்தவர். திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. தொழில்
நல்லபடி செய்கிறார், ஆனாலும் குறி ஆன்மீகம்தான், ஞானமடைதல்தான்.

ஒரு சின்ன தட்டல் –
மனமற்ற நிலை என்பதன் முதல் அனுபவம் –
சடோரி என்று இதைக் கூறுவார் ஓஷோ – ‘சடோரி’ நிகழ்ந்து விட்டது.

ஆனால் அது நிகழ ஆரம்பித்த உடனேயே மனிதர் பயந்து நடுங்குகிறார். அதைத் தடுக்க போராடுகிறார்.

அந்த போராட்டத்தின் விளைவாக அவருக்கு காய்ச்சல், உடல் தடுமாற்றம், வியர்வை இன்னும் ஏதேதோ செய்தது. தடுக்க முடியவில்லை. அது முடியாது. ‘சடோரி’க்குள் போய்விட்டார். திரும்பியவுடன் அதைப் பற்றி விளக்கிச் சொன்னபின்பு அவருக்கு பயம் போய்விட்டது. ஆனாலும் பலப் பல கேள்விகள்!.

அது ஆனந்தமாக இல்லையே?

அது மிகவும் பயமாக அல்லவா இருக்கிறது!

இதற்கா இவ்வளவு முயற்சி செய்தேன்?

நினைத்துப் பார்த்தால் திரும்பவும் உள்ளே போக பயமாகத்தானே இருக்கிறது?

எதையும் நான் அடையவில்லையே?

நான் இல்லாமல் அல்லவா போகிறேன்?

நான் அழிந்தல்லவா போகிறேன்?

அவரின் கேள்விகள் அனைத்தும் உண்மையான கேள்விகள்தான். அவருக்கு ‘சடோரி’ ஆனந்த அனுபவமாக இல்லை என்பது உண்மைதான்.

இதைப் பற்றி கூறுமுன் சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

நீச்சல் பழகும்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ, ஜெயண்ட்வீல் முதல் சுற்று சுற்றும்போதோ, முதல் பனிசறுக்கின் போதோ யாருக்காவது அந்த அனுபங்கள்
ஆனந்தமாகத் தெரியுமா? பயமாகத் தான் இருக்கும்!. ஏனெனில் அவை புதிய அனுபவங்கள். புதிய அனுபவங்களின் முதல் தடவை மனம் இருப்பதில்லை. ஏனெனில் மனம் என்பது பழைய பதிவுகளின் படி நடக்கும் ஒரு இயக்கமே. ஆகவே அது நின்று விடுகிறது. அப்போது பயம் ஏற்படுகிறது. மனத்தின்
துணையின்றி வாழ்வை சந்திக்கும்போது மனம் ஏற்படுத்தும் உணர்ச்சிதான் இந்த பயம்.

எனவே சாதாரணமான புதிய அனுபவங்களுக்கே மனம் பயமுறுத்துகிறது. ‘சடோரி’ என்பது என்றுமே மனதினால் பதிவு செய்து கொள்ள முடியாத அனுபவம். அது படிப்படியாக முற்றிலுமாக மனதை அழித்துவிடப் போகிறது. மேலும் மற்ற சாதாரண அனுபவங்களை மனம் பதிவு செய்துகொண்டு
மறுமுறையிலிருந்து அதை அனுபவிக்கத் தயாராகி விடுகிறது. ஆனால் சடோரியில் அது படிப்படியாக தானே அழிகிறது. அனுபவிக்க அதுவே இல்லாமல் போகிறது. ஆகவேதான் இந்த பயம்.

ஆனால் இந்த பயம் இல்லாமல் சடோரிக்குள் குதித்து பரவசமாகி ஆனந்தமாய் மாறலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?. முதலில் இந்த பயம் ‘மனமற்ற
நிலை’ என்ற அனுபவத்தால் ஏற்படுகிறது. அதாவது நாம் நம் மனதை இழக்கிறோமே என்ற பயம். அதனால் மனம் இழப்பதை காண முடிகிற உன்னால் பிரபஞ்சத்தோடு நீ ஒன்றிப் போவதை காண முடியாமல் இந்த பயம் தடுத்து விடுகிறது.

அதற்கு தயார் செய்யும் வாழ்வைத் தான் ஓஷோ, ‘எழுச்சியாளனாய் வாழ்தல்’ என்கிறார். அவரது “ஜோர்புத்தா” வாக வாழ்ந்தால் அது பரவச அனுபவமாய் இருக்கும்.

ஆம் ஓஷோவின் தியான முறைகளை முழுமையாய் பயிற்சி செய்வதால் இந்த ‘சடோரி’ என்கிற முதல் அனுபவம் கிடைக்கும்.

ஆனால் அவர் கூறும் வாழ்க்கை முறைக்கு மாறாதவருக்கு அது பயனளிக்காமல் போகலாம், பயம் ஏற்படலாம்.

நாம் ஆயிரத்தெட்டு பிடிப்புகளோடு ஆசைகளோடு கட்டுண்டு கிடக்கிறோம்.

என் வீடு,

என் கார்,

என் தொழில்,

என்படிப்பு,

என் திறமை,

என் மனைவி,

என் சொந்தம்,

என் குடும்பம்,

என் மொழி,

என் ஜாதி,

என் இனம்,

என் தெரு,

என் ஊர்,

என் உடம்பு,

என் அழகு,

என் அறிவு,………….. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதோடு பிறப்பிலேயே இருக்கும் விலங்கு உணர்ச்சிகளை வேறு அமுக்கியே வைத்திருக்கிறோம்.

இதோடு இவையெல்லாம் இல்லாதது போன்ற போலித்தனம், பொய்நடிப்பு, கௌரவம், அந்தஸ்து, மரியாதை இத்யாதிகள் வேறு.

இத்தனையையும் வைத்துக் கொண்டு அதோடு எவனோ சொல்லி வைத்ததை, யாரோ எதிர்பார்ப்பதை, யாரிடமிருந்தோ பெற்ற கருத்தை, தன்னுடையது என்று நினைத்து அதன்படி சாதிக்க வாழ்ந்து காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போராட்டம் வேறு.

இத்தனை இறுக்கங்கள்,

இத்தனை அமுக்கங்கள்,

இத்தனை சுமைகள்,

இத்தனை பதட்டங்கள்,

இத்தனை பயங்கள்

ஆனால் இதுதான் ‘நான்’. இந்தக் குப்பைகளின் நிறத்தில் தரத்தில் வடிவில் இருக்கும் வித்தியாசம்தான் நமது ‘நான்’ எனும் தனித்துவமான நினைப்பு.

ஆகவேதான் ஓஷோ என்னைப் பொறுத்தவரை, “சுதந்திரமாய் வாழ்வதுதான் வாழ்வின் மிக முக்கிய பண்பு” என்கிறார். ஆனால் அவர் கூறும் சுதந்திரம் ‘மனம் போனபடி’ வாழும் சுதந்திரம் அல்ல. எல்லா ஞானிகளும் ‘துறவு நிலை’ என்றும் ‘பற்றற்ற நிலை’ என்றும் ‘பிடிப்பற்ற நிலை’ என்றும் ‘இயல்போடு
தடையற்று பொருந்திப் போதல்’ என்றும் சொன்ன சுதந்திர நிலைதான் ஓஷோ கூறுவது. அதாவது ‘நான்’ என்பதிலிருந்து, மனதிற்கு அடிமையாய் இருப்பதிலிருந்து, இயந்திரத் தனமாய் இருப்பதிலிருந்து, சுதந்திரம். ரோபோ போல கொடுக்கப் பட்ட திட்ட அமைப்புப் படி (programme) செயல்படாமல்
இயற்கையின் அங்கமாய் உணர்வு பூர்வமான வாழ்க்கை வாழுதல். அப்படி வாழ மனதையும் பகுத்தறிவையும் விஞ்ஞானத்தையும் பயன்படுத்துதல். ஆகவே
ஓஷோவின் புதிய மனிதன் “ஜோர்புத்தா” என்பவன் சுதந்திரமாக இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, தன்உடலை, தன்னுணர்வோடு சுதந்திரமாக வாழ்ந்து பார்ப்பவன்.

அப்பிடி வாழ்பவனுக்கு மனமற்ற நிலையைத் தாண்டி உள்ள ஆனந்தமும், படைப்பின் பரவசமும், அன்பின் புரிதலும் தெரிந்திருக்கும்.

தியானம் செய்து ‘சடோரி’ ஏற்படும்போது அதனுள் மேலும் மூழ்கி கரைந்து விடும் துணிவும் தாகமும் அவனுக்கிருக்கும். வாழ்வில் கரையும்போது கிடைத்த பரவச அனுபவங்களால் அவன் தியானத்தில் மௌனத்தில் அமைதியில் ஒருமையில் இருக்கையில் அது கிடைக்கையில் அதற்குள் ஆழ்ந்து சென்று அடுத்தடுத்த நிலைகளை பெற முடியும்.

அப்படி ஓஷோ கூறும் “ஜோர்புத்தா”வாக வாழ தன்னுணர்வும் தைரியமும் வேண்டும். தன் மனம், திறன், உடல் பற்றிய தெளிவு வேண்டும். தன்னுணர்வோடு சிந்தித்து இதயத்தை உணர்ந்து பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு முதலில் தன் மனதை அக்குவேறாக ஆணிவேறாக அலசிப் பார்க்க வேண்டும். தேடுவது எது? செய்வது என்ன? எதற்காக செய்கிறோம்? ஒவ்வொரு செயலுக்குமான சுயநலக் காரணம் ஒன்று இருக்கும். அதுவரை சென்று அதைப் பார்க்க வேண்டும். உதவி செய்கிறேன், தியாகம் செய்கிறேன், பாசத்திற்காக செய்கிறேன், பற்றுக்காக செய்கிறேன், கடனுக்காக செய்கிறேன், கட்டுண்டதால் செய்கிறேன், என்று கூறும் ஏமாற்றுத்தனங்களை விட்டுவிட்டு நம் மனதை நம் இருப்புவரை தோலுரித்துப் பார்க்க வேண்டியது அவசியம். பிறகு அப்படிப் பார்த்து உணர்ந்து கொண்டபடி நடக்கும் துணிவு.

மந்தைக் கூட்டம், சந்தைக் கூட்டம், இனக் கூட்டம், சாதிக் கூட்டம், கட்சிக் கூட்டம், மதக் கூட்டம். ஸ்ரீஸ்ரீஸ்ரீக்கள், சத்குருக்கள், மகரிஷிகள், பரமஹம்சர்கள் என்று உதிக்கும் புதுப்புது கூட்டங்கள் இப்படி எல்லாக் கூட்டத்திலிருந்தும் விலகி வர வேண்டும் என்ற தெளிவு பிறக்க வேண்டும். கூட்டம் தரும் அணைப்பும் சுகமும் கௌரவமும் உண்மையல்ல என்பது புரிய வேண்டும்.

இப்படி உள்ளே புரிதலும், தெளிவும், தியானப் பயிற்சியுடன் சேர்ந்து நடக்க வேண்டும். நமது புரிதலும் தெளிவும் தன்னுணர்வு சார்ந்ததாக இருக்கையில் வாழும் வாழ்வு “ஜோர்புத்தா” வாழ்வாக அமையும். அப்படி பட்ட வாழ்க்கையில் நிகழும் ‘சடோரி’ அனுபவம் ஞான நிலைக்கான முதல் படியாக இருக்கும்.

அதற்குப்பின் தான் உண்மையான பயணம். அதற்கு முழு அர்ப்பணிப்பும் தேவை. ‘சடோரி’ என்பது ஒரு துளிச் சுவைதான்.

ஆகவே சமுதாய வாழ்வுக்கு உறுதுணை வேண்டுவோர் ஓஷோவிடம் வந்தால் அது தவறாகவே முடியும். ஓஷோ புதிய மனிதனை, சுதந்திரமான புதிய மனிதன் வாழும் வகையிலான புதிய சமுதாயத்தை சிந்திப்பவர். புதிய சமுதாயத்தின் முன்னோட்டமாக 5000 தனி நபர்கள் சேர்ந்து வாழ்ந்த கம்யூனை நடத்திக் காட்டியவர். அவரது கூற்றுப்படி சிறுசிறு கம்யூன்களாக புதிய சமுதாயங்கள் மலர்ந்து வருகின்றன. ஆகவே புதிய மனிதனாக, “ஜோர்புத்தா”வாக வாழத் தலைப்படுவது ஓஷோ அன்பர்களுக்கு மிகவும் அவசியம்.

அன்பு,

சித்.