அன்பு நண்பர்களே
நான் 1995 முதல் 2005 முடிய பூனேவிற்குச் சென்று அங்கேயே ஓஷோ கம்யூனில் பங்கு கொண்டிருந்தேன்.
இதில் 1975 –லேயே நான் இந்த சமூகம் ஆரோக்கிய வாழ்விற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் பொருந்தாதிருப்பதைப் பார்த்துப் புறப்பட்டேன்.
இது தப்பி ஓடுதல் என்ற மனநிலையில் நடந்தது அல்ல.
ஏனெனில் அப்போது நான் பாங்க் ஆப் பரோடாவில் பணிபுரிந்து வந்தேன். பாங்க் வேலை பார்க்கும் இளைஞன் என்று எனக்கு சமூக மதிப்பும், பாதுகாப்பும், உறவினர் அங்கீகாரமும், சமூக உயர்வுக்கு வழியும் வெகுவாகவே இருந்தது.
ஆனால் என்னை வளர்த்து ஆளாக்கிய எனது மூத்த அண்ணன் விடுத்த ஒரு வேண்டுகோளால் புறப்பட்டது தடைப்பட்டது, தள்ளிப் போயிற்று.
பிறகு அந்தக் கணத்தைப் பிடிக்க 1984 வரை ஆயிற்று.
1984 – ல் மனைவி குழந்தையோடு பூனே புறப்பட்டேன் – கம்யூனில் கரைய.
அப்போது என்னுடன் தியானம் செய்துவந்த ஓஷோ அன்பர்கள் என் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டனர்.
மறுபடியும் தவறிப் போயிற்று.
பின் 1995 லேயே அந்தக் கணம் வாய்த்தது .
இச்சமயம் என் மனைவி தவிர யாருக்கும் சொல்லாமல் சென்றே விட்டேன். அதுதான் சாத்தியமாயிற்று.
பின் என் மனைவியும் பையனும் அவன் +2 முடித்தவுடன் 1999 – ல் வந்து சேர்ந்தனர்.
அதன்பின் பலசமயம் நான் திருப்பூர் வந்தேன். வேலை முடிந்தவுடன் ஒருநாளில் பூனே திரும்பிவிடுவேன்.
காரணம் என்ன தெரியுமா
இங்கு உள்ள எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், சுற்றியுள்ளோர்கள் எல்லோரிடமும் நான் வெளிப்படையாக, ஆனந்தமாக, பூனே கம்யூன் வாழ்வின் சுதந்திரத்தையும், சுய பொறுப்பை தவிர எந்தவித திணிப்புகளும் இல்லாத வாழ்வு பற்றியும் பேசும்போது அவர்களிடம் இரண்டு வகை உணர்ச்சிகளே எழுந்தது.
ஒன்று கோபம் அல்லது இரண்டாவதாக பொறாமை.
நாங்கள் எல்லாம் கேனப்பயல்கள். இவன் பெரிய அறிவாளி என்ற கோபம். அல்லது பாவிப்பய இவன் மட்டும் இப்படி இருக்கானே என்ற பொறாமை.
வெகுவெகு சிலரே தள்ளி நின்று தன்னை பார்த்துக் கொள்ள முயன்றார்கள்.
ஆகவேதான் என்னால் தங்க முடியவில்லை.
பின்னர் 2005 ல் இயற்கையின் லீலையில் திரும்பவும் இங்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது எனது பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை போயிற்று. இதற்கு எனது கவனக்குறைவே காரணம். பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். முகம் தெரியாத திருடன் திருடியது அவனது வேலை. அது ஓகே. அது வேறு. நான் கூறுவது அதற்கு நமது மக்களின் அணுகல் எப்படி இருந்தது என்பதே. மிக நாசூக்காக எல்லோரும் அவர் கவலைப்பட மாட்டார், வருந்தமாட்டார், போனால் போகிறது என்று பேசி மகிழ்ந்தனர். அதாவது என் உணர்வைக் கூற முயன்றார்களே தவிர தன் உணர்வை ஒருவருமே வெளிப்படுத்தவில்லை. இந்த நிதழ்வால் தனக்குள் என்ன உணர்வு எழுகிறது என்று பார்த்து செயல்பட யாரும் தயாரில்லை. ஒரு சிலரே நெருங்கியவர்களிடம் – நல்லா வேணும் – என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள். சிலர் சமூக நோக்கில் – இது போன்ற திருட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை – என்றனர். சிலர் இப்படி எனக்கு நடந்திருந்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்றனர். ஆகக்கூடி சிலரது சொல்லைத்தவிர யாருடைய செயலுமே தன்ணுணர்விலிருந்து இல்லை. இதில் பார்க்க வேண்டியது என்னைத் தெரிந்தவர்கள் பார்ப்பவர் கேட்பவர், பழகுபவர்கள் எல்லோரிடமும் என்ன வெளிப்படுகிறது என்பதைத் தான். ஏனெனில் உணர்வற்ற மனத்தின் கட்டுதிட்டப்படிதான் உணர்வுகள் அவர்களை ஆட்சி செலுத்துகின்றன.
அதேபோல் எனது வீட்டின் முன்னே அழகாக நான் பராமரிக்கும் சிறு பூச்செடி தோட்டத்தில் செடிகள் களவாடப் படுகின்றன. இவன் திருடனல்ல, தினமும் அதைப் பார்ப்பவர்களில் ஒருவன்.
வித்தியாசமாக ரம்மியமாக வீட்டை பெயிண்ட் அடித்து வியக்க வைத்ததன் விளைவு அதன்மேல் ஒரு அசிங்கமான சுவரொட்டி ஒட்டப்பட்டது அருகே வசிக்கும் அரசியல் பிரபலத்தால்.
வீட்டு எதிரில் மரம் வளர்த்தால் அதை வெட்டுவது, ஒடிப்பது.
செடிகளை ஆடு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தும் விரட்டாமல் தாண்டிப் போகும் அண்டை வீட்டார். இன்னும் பலப்பல அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றால் என்ன தெரிகிறது கோபம், பொறாமை, மட்டுமே. ஏன் ஓஷோ தியானம் புரியவரும் அன்பர்களே பொறுப்போடு நடப்பதில்லை, அனுபவிக்கும் பயன்பாட்டுக்கு உரிய கட்டணத்தை அதற்குரிய பெட்டியில் போடுவதில்லை. பாவம், அதற்கு அவர்கள் மனம் இடம் கொடுப்பதில்லை.
ஏன்? நெருங்கி அனுபவிக்க முடிவதால் கோபத்திற்கும் பொறாமைக்கும் பதிலாக உள்ளே உள்ள பேராசை ஆளுகிறது.
மிகவும் உண்மையான சிலர் சொல்வது நீங்களும் பயமும், சந்தேகமும் கொண்டவராக மாறுங்கள், அதுதான் உங்களுக்கு நல்லது. ஆனால் எனக்குத்தான் இங்கு வரும்போதே என்ன நடக்கும் என்று தெரியுமே
இருக்கும் எல்லாவற்றையும் பாதுகாக்க பயமும் சந்தேகமும் கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டேன் நான்.
இழக்கவே தயாராக இருக்கிறேன். அதற்காக இறைத்து விட மாட்டேன். செல்வத்தை அனுபவிப்பதே சரியான வழி. அதற்கிடையில் அது அழியுமானால் அதற்கும் சரிதான். ஆனால் உள் இருக்கும் ஆனந்தமும், அமைதியும், தன்னுணர்வும் விலைமதிப்பில்லாதது.
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நமது சமூகத்தின் அவலத்தைப் பாருங்கள் என்பதற்காகவே.
பேராசையும், பொறாமையும், ஒப்பு நோக்கும் கொள்ளாமல் அவரவர் வாழ்வை அவரவர் சிறப்பாக வாழ முயற்சிக்கும் மக்கள் கொண்ட இடத்தில் அல்லவா நேசமும், படைப்பாற்றலும், இன்பமும், உலகின் இருப்பும், வியப்பும், அழகும், சக்தியும், அறிந்து மனிதர்கள் வளர முடியும்.
அதற்கான சிறு முயற்சியாவது செய்யுங்கள், செய்ய வாருங்கள்.
அன்பு,
சித்.