அன்பு நண்பர்களே,

இந்த மாதமும் கூட்ட மனப்பான்மை பற்றி திரும்ப விளக்கப் போகிறேன். ஏனெனில், நான் நல்லவன், நல்லவனாய் இருக்கப் பாடுபடுகிறேன், எல்லோரிடமும் அன்பு காட்ட விரும்புகிறேன், முயற்சிக்கிறேன், வயதானவர்களிடம் மரியாதை கொள்கிறேன், என்னை விட உயர்ந்தவர்களிடம் பணிவோடு நடந்து கொள்கிறேன், நடந்து கொள்ள முயல்கிறேன், என்னை விட எளியவர்களிடம் இரக்கம் கொள்கிறேன், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், சுற்றம் எல்லோரிடமும் பாசத்துடன் இருக்க விரும்புகிறேன், என் கடமையை சரிவர செய்ய விரும்புகிறேன், பெயரும் புகழும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ விரும்புகிறேன், இவையெல்லாம் தவறா, போலியா என்ற கேள்வியை பலர் பலவிதமாக எழுப்பியுள்ளனர்.

இதற்கு நான் ஆரம்பத்திலிருந்து வருகிறேன். மனித நிலை என்பது ஒரு சந்திப்பு. மிருக நிலை பிறகு மனித நிலை பிறகு அடுத்த உயர் நிலை. ஆகவே மனித நிலை ஒரு சந்திப்பாக இருக்கிறது. நமக்கு மிருக உணர்வுகள் உள்ளன. அதிகம் அவையே உள்ளன. அவையே நம்மை ஆட்டிப்படைக்கும் தன்ணுணர்வற்ற மனமாய் உள்ளன. மனிதனின் தன்னுணர்வு சிறிய அளவில் பிறக்கும்போதே இருக்கிறது. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவு. இதைப் பயன்படுத்தி வாழும் வாழ்க்கை மனித வாழ்க்கை. ஆனால் இதன் சக்தி மிகக் குறைவாகவே பிறக்கையில் உள்ளது.

இந்தத் தன்னுணர்வுக்கு தன்ணுணர்வற்ற மனத்தில் அடங்கியுள்ள சக்தியை திருப்பி விடும் விதமாய் வாழ்வை அமைத்துக் கொள்ளுதலே வாழ்வியல் நெறி. இந்த வாழ்வியல் நெறி சிறிது காலத்திற்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, உண்மையிலேயே தன்னுணர்வு வளர உதவுகிறதா என்று பார்த்து அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு ஞானியும் புதுப்பிக்கும் வாழ்வியல் முறைகள் அவர்களுக்குப்பின் சுயநலக் கும்பலான வியாபாரிகள், அரசியல்வாதிகள், மற்றும் பூசாரிகளால் சடங்குகளாக மாற்றப்பட்டு மக்களை ஏமாற்றவும், அடிமைப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தன்னுணர்வு வளர்ந்து பிரபஞ்சத் தொடர்பை உணர்ந்து அதில் மூழ்கி பேரானந்தமாய் வாழ்வது தெய்வ நிலை.

இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் கேள்வி கேட்டவர் சொன்ன நிலையிலேயே இருக்கிறோம். கேள்வி சரியானதுதான், எந்த விதத்தில் என்றால் அது நாம் இன்றிருக்கும் நிலையைத் தெளிவாக விளக்கி விட்டது.

நாம் நல்லவனாய், தியாகியாய், அன்பு காட்டுபவனாய், பாசமுள்ளவனாய், கடமை தவறாதவனாய், நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப்பற்றும்
உள்ளவனாய் இருக்க விரும்புகிறோம். இந்த நமது உணர்வுகள் எல்லாமே கூட்டத்தின் பாதுகாப்புக்காக நம்மில் விதைக்கப்பட்ட சமூக முகங்கள். இவற்றிற்க்கான சமூகக் கருத்துக்களும் நியாயங்களும் நமக்கு குழந்தை பிராயத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன. இதன் காரணம் நம்மில் உள்ள 90 சத விலங்கு மனத்தை கட்டி ஆள்வதுதான். அதன் உணர்வுகளான பேராசை, கோபம், செக்ஸ், வன்முறை, பொறாமை, பயம், பசி இவை போன்றவையே நம்மை ஆட்டுவிக்கின்றன. இவற்றை சமூகக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாகவே உயர்ந்த நிலை ஆசைகள் விதைக்கப் படுகின்றன.

மிருக குணங்களைக் கடந்து நம்மிடமுள்ள சிறிய தன்னுணர்வு வெளிச்சத்தில் அறியும் குணங்களைக் கடைபிடித்து ஒரு மனிதனாய் வாழும் பொறுப்பு
நம்மிடம் இருக்கிறது. அப்படி மனிதனாய் வாழ கடந்த காலத்தில் காட்டப்பட்ட வாழ்வியல் நெறிகள் இன்று போலித்தனமாய், வியாபாரமாய், சமூக
முகமூடிகளாய் மாறிக் கிடக்கின்றன.

ஒரு மனிதனாய் நாம் மாற நாம் விலங்கு உணர்ச்சிகளைக் கடந்து வர வேண்டும் என்பது ஒரு புறம். மறுபுறம் மனித உணர்ச்சிகளுடன் வாழ தலைப்பட வேண்டும். அப்படித் தனிமனித உணர்ச்சிகளுடன் வாழ உதவுவதாக நமது சமுதாயம் அமைய வேண்டும். ஆனால் இன்று வரை அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு சில சுயநல வாதிகளுக்காக பெரும்பாலோர் சுரண்டப்படும் சமூகமாகவே நமது சமூகம் இருந்து வருகிறது. முன்னாளில் அரசனுக்கு சேவகம் செய்யும் சமூகம். அரசனின் அதிகாரத்தையும், ஆணவத்தையும், அறியாமையையும், அவன் போடும் ஆட்டங்களையும் நியாயப்படுத்த, அவனுக்கு எதிராக மக்கள் உண்மையைப் புரிந்து உணர்வு கொள்ளாமலிருக்க, உருவாக்கப்பட்ட கருத்துக்கள் – மதவாதிகளால் உருவாக்கப்பட்டன – பூசாரிகளால் பரப்பப்பட்டன. எப்போதோ தோன்றும் ஒரு சில ஞானிகளின் கருத்துகளும் மதவாதிகளால் சுவீகரீக்கப்பட்டு மக்கள் ஏமாற்றத்திலேயே ஆழ்த்தப்பட்டனர்.

ஞானிகள் எல்லோரும் மக்களுக்கு உண்மை நிலையை, உணர்வை ஊட்டவே முனைந்தனர். உதாரணமாக புத்தர் ஒரு புரட்சியாளர். கடவுள் பாஷையான சமஸ்கிருதத்தை மறுத்து மக்கள் மொழியான பாலியில் உண்மைகளை உரைத்தார். அப்போது வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் யாகத்துக்கு உயிர் பலி கொடுத்து வந்தது. மனுவின் சாதிமுறையை கடைபிடித்து வந்தது. முனிவர்களும் குருக்களும் குடும்பத்தோடு இருப்பது மட்டுமின்றி இராஜாக்களுக்கும் குழந்தை கொடுத்து வந்தனர். இதையெல்லாம் எதிர்த்தவர் புத்தர். உண்மையைக் கண்டறிய தன்னை வருத்தும் தவமும், படாடோபமான
யாகங்களும் தேவையில்லை, அமைதியும், சாந்தமும், கொண்டவனாய் சாட்சி பாவத்துடன் தன்னை நோக்குதலே போதும் என்றார் புத்தர். உருவ வழிபாட்டின் சீர்கேட்டை 2500 வருடங்களுக்கு முன்பே விளக்கிப் பேசி கடைபிடித்தவர் புத்தர். தன்னையும் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று கூறியவர்
புத்தர். அதனால்தான் அவர் மறைந்த பின் முதல் 500 வருடங்களுக்கு அவர் ஞானமடைந்த அரச மரம் வழிபடப் பட்டது. அவர் நாயகர்களுடன், கடவுள்களுடன் சேராது எதிர்த்தவர். அவரது முற்பிறவிகளில் ஒன்றில் அவர் யானையாய் இருந்து, காடு தீப்பிடித்துக் கொண்டபோது, தன் காலடியில் அடைக்கலம் புகுந்த ஒரு காட்டு எலியைக் காப்பாற்ற தன் உயிரையே விட்டவர் என்ற அடிப்படையில் அவரது சிறப்பு பெயரான விநாயகர் என்ற பெயரில், உருவம் அமைத்து, அரசமரத்து விநாயகராக வழிபடப் பட்டார். அவரது தியானத்தில் உணர்வோடு நடப்பது என்பது மிக முக்கிய ஒன்று. அதனால்தான் நாம் அரசமரத்தை சுற்றி வருகிறோம்.

பண்டைய தீர்த்தங்கரர்களின் சமணக் கோயில்களே இன்றைய பல முருகக் கோயில்களும், ஏனைய மலைக் கோயில்களுமாய் இருக்கலாம், ஏனெனில் சித்தர்கள் எல்லாம் இந்து மதமாற்றத்தை ஏற்காமல் மறைந்து வாழ்ந்த சமணத்துறவிகளே. ஆனால் எதையும் ஆராய்வதில்லை நாம். புத்தர் அவரது பேச்சுக்களைக் குறிப்பெடுப்பதைக் கூட அனுமதித்ததில்லை. அவர் மறைவிற்குப் பின்னரே அவரது கருத்துக்கள் தொகுக்கப்பட்டன. எந்த கருத்தும் திணிக்கும் முறை கூடாது, தனிமனிதன் தன்னுணர்வின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதாலேயே புத்தர் தன் பேச்சை எழுத அனுமதிக்காமல் இருந்தார். 

இதே நோக்கத்திற்க்காகவே ஓஷோ தனது அனைத்துப் பேச்சுக்களையும் ஒலி வடிவத்தில் பதிவு செய்வதை வற்புறுத்தி வந்தார். ஏனெனில் வரி வடிவத்தில் இடைச் செருகல் சாத்தியம். ஒலி வடிவத்தில் செய்வது இயலாது என்பதே காரணம்.

சரி, தனி மனித உணர்வுகள், அல்லது தன்னுணர்வு கொண்ட தனிமனிதனாய் நமக்கு சாத்தியப்படும் உணர்வுகள் எவை எவை – அவைதான் அன்பு, படைப்பு, நிறைவு, அழகு, சிரிப்பு, இசை, நடனம், விளையாட்டு, மகிழ்ச்சி, துணிவு, புத்திகூர்மை, நட்பு, தேடல், வைராக்கியம், சவால், பகிர்வுதன்மை, இப்படி நிறைய உள்ளன. இவற்றில் வாழ்ந்தால்தான் அடுத்த நிலையான தெய்வநிலை என்ற பரிணாமம் மனிதனுக்குச் சாத்தியம். தெய்வநிலை என்றவுடன் சூப்பர் மனிதனை கற்பளை செய்து கொள்ளாதீர்கள். அது பயமற்ற, பதட்டமற்ற, இறப்பையும், நிலையாமையையும், இந்த உடலின் எல்லையையும் ஏற்று அதைக் கொண்டாடும் எளிய வாழ்வு நிலைதான்.

அதே போல் தனிமனிதனாய் தன்னுணர்வு சிறிதே கொண்டு பிறக்கும் மனிதனுக்கு விலங்கைவிட கீழாக, மோசமாக போகும் வாய்ப்பும் உள்ளது. விலங்கு குணங்களை விட மோசமான குணங்கள்தான் துரோகம், வஞ்சகம், ஏமாற்றல், சுரண்டல், பொய், இப்படி உள்ளவை. இவையே இன்று நம் சமூகத்தை ஆள்கிறது.

இதில் நல்ல தனிமனித உணர்வுகளில் வாழும் வாய்ப்பை இன்றைய சமூகம் நமக்கு அளிப்பதில்லை. அதே சமயம் விலங்குணர்வை ஒரு குழந்தை வெளிப்படுத்துவதையும் நாம் அனுமதிக்க தயாராய் இல்லை. இந்த நிலையில் நாம் குழந்தைக்கு போலித்தனமான சமூக முகங்களை உருவாக்குகிறோம். நமது தேவைக்கு ஏற்றபடி, நமது பேராசைபடி, ஒரு குழந்தை அடிமையாகவே, இயந்திரமாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கும்படியாக சமூக முகத்தை, போலி முகத்தை, முகமூடியை, பொய்யான கருத்துக்களை, அதன் அடிப்படையில் உணர்வுகளை, ஏற்படுத்துகிறோம். இப்படி ஏற்படுத்தப்பட்டவைகள் உண்மையானவையாக இல்லாததால் அவற்றை முழுதாகக் கடைபிடிக்க முடியாமல் குற்றவுணர்வில் சிக்கித் தவித்து வாழும் வாழ்க்கைதான் இன்றைய உலகம். இன்றைய நமது கேள்வி கேட்பவர்கள் வாழ்வது.

அங்கீகாரம், பணிவு, மரியாதை, போலி அன்பு காட்டல், வெற்றி, நியாயம், குற்ற உணர்வு, பல்வேறு பற்றுகள், போதையாய் தன்ணுணர்வற்ற மத இன மொழி வெறிகள், பாராட்டு இப்படி. இதில் சிக்கி இதற்காகப் போராடி, உழைத்து, இதன்மூலம் அடிமையாய், ஒரு சில சுயநலவாதிகள் இஷ்டம்போல, அடிமை விலங்கு போல, சேவகம் செய்பவர்களாய் உள்ளோம். இப்போது நமக்குள்ள உணர்வுகள் ஆழமற்ற போலி சமூக முகங்களின் வெளிப்பாடு. இவை எந்த உள் வளர்ச்சியையும், உள்நிலை மாற்றத்தையும் கொடுக்க முடியாது.

உயர் நிலை குணங்களான கருணை, பிரபஞ்ச உணர்வு, விழிப்புணர்வு, பரவசம், சாட்சிபாவம், அழிவற்றவுணர்வு, உருக்கடந்த நிலை இப்படி எதற்கும் கூட்டிச்செல்ல முடியாது. மேலும் நாம் இந்த சமூக முகங்களைக் கட்டிக் காக்க நமது விலங்குணர்வுகளை உள்ளே அமுக்கி வைக்கிறோம். இதுவே மேலும் கெட்டு விலங்கை விடக் கீழானதாக மாறி வெளிப்படுகிறது. நமது குற்றவாளிகள், கொலையாளிகள், நக்சலைட்டுகள், எல்லோரின் கதையும் இதுதான்.

இதற்கு பதிலாக குழந்தையின் விலங்குணர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும். குழந்தை குற்றஉணர்ச்சி அடையாமல் அது அதையும் ஏற்க, பார்க்க. சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். இது ஒருபுறம், மறுபுறம் சிறு தன்னுணர்வால் காணக்கூடிய மனித குணங்களை வாழ்ந்து காட்ட வேண்டும். அதை வாழ ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு உகந்த சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது ஒருவன் சிறிது சிறிதாக விலங்குணர்விலிருந்து விடுபட்டு மனித குணங்களில் மேம்படுவான். பிறகு தெய்வ குணங்களில் தாகம் இயல்பாகவே அங்கு எழும். இதற்கு மாறாக நாம் சமூக முகங்களை திணிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல அடிமை கிடைப்பான். அவன் உள்ளே புழுங்கிக் கொண்டிருப்பவனாகவே, நிறைவு பெறாதவனாகவே, மகிழ்ச்சி கொள்ளாதவனாகவே இருப்பான். அவனிடம் இனந்தெரியாத பதட்டமும், அவசரமும், இறுக்கமும், படபடப்புமே இருக்கும். வேர் இன்றி உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மரமாகவே இருப்பான். உயிர் இருக்காது. ஆழம் இருக்காது. சமூக முகங்களை முற்றிலும் கடைபிடிக்க முடியாத குற்றவுணர்வும், முடியாத போதும் முடிந்தாத காட்டிக் கொள்ளும் போலித்தனமுமே அவனுள் இருக்கும்.

ஆகவே நண்பர்களே, நம் சமூக வாழ்க்கை என்ற மாயையில் நீங்கள் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் உண்மை. நீங்கள் உயிரோடிருப்பது உண்மை. ஆனால் தலைக்குள் நாம் கற்பித்துக் கொள்ளும் நம் வீடு, நம் உறவு, நம்நாடு, நம் சொந்தம், நம் சமூகம், என்ற நம் சேர்ந்த உலகம் ஒரு மாயை. மாயை என்றால் உண்மையை உண்மையாக பார்க்க முடியாமல் வேறென்றாகத் திரித்துப் பார்ப்பது. இதில் உங்கள் வாழ்வும், சக்தியும், காலமும், உடலும் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே மாயையை விடுங்கள். உண்மை உலகில் தனிமனிதனாக வாழுங்கள். மனைவியும் குடும்பமும் தொழிலும் தவறல்ல. தனிமனிதனாய், மாயை
இன்றி செயல்படுங்கள். தனிமனிதப் பண்பை வளர்க்க எல்லோரும் ஒருவருகொருவர் உதவிக் கொள்வோம். இயல்பாக வாழ்தல் மனித வாழ்வு. இதுதான் ஓஷோவின் ஜோர்பா. அதாவது உணர்வற்ற விலங்கு மனதையும் தன்ணுணர்வுள்ள மனதையும் கொண்டு மனிதனாக வாழ்பவன். இதோடு புத்தா இணையட்டும், விழிப்புணர்வு இணையட்டும். இதுதான் ஜோர்புத்தா. இயல்பாக விழிப்புணர்வோடிரு – ஜோர்பா தி புத்தா இதுதான்.

நாம் மனிதன்தான், அதை ஏற்போம்,

நமக்குள் உள்ள விலங்குணர்வுகளை ஏற்போம்.

தனி மனித உணர்வுகளை வளர்ப்போம்.

தனிமனிதர்கள் வளர உதவும் நல்லதொரு சமூகம் அமைப்போம்.

விழிப்புணர்வோடு வாழ்ந்து உயர் நிலை பெறுவோம்.

இதுதான் ஓஷோவின் ‘ இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் ’ என்ற அறிக்கையின் வெளிப்பாடு.

அன்பு,

சித்.