அன்பு என்பது என்ன அடுத்தவருக்கு உதவி புரிவதா, குடும்பத்தாருக்காக உழைப்பதா காதல் செய்வதா தாய்மை பாசமா, நட்புக் கொள்வதா, இல்லை, இது எல்லாமே போலியா, பக்தி, சரணாகதி என்பதெல்லாம் அன்பைச் சேர்ந்ததா, அன்பு வழி என்பது என்ன இப்படி ஒரு நண்பரின் பலப்பல கேள்விகள்.

என்ன சொல்ல. ஓஷோ மிக அருமையாகக் கூறுகிறார். அன்பு உன் இயல்பு. அதுவாகவே ஆகி விடுவது மனிதனின் சிறப்பியல்பு. அது தொடங்குமிடம் காமம். காமத்தில் அது விலங்கின் குணமாக சிறு தீப்பொறியாக இருக்கிறது. அதை அனுமதிக்க வேண்டும். வளர்ந்து மலர சுதந்திரமும், பாதுகாப்பும், புரிதலும் கொடுக்க வேண்டும்.

காமத்தில் ஒரு உடம்பின் சக்தி மற்றொரு உடம்பிலும் விரிகிறது, பாய்கிறது. இதுதான் முதல் அனுபவம் நமக்கு. அதாவது நாம் என்பது நமது இந்த உடல், இந்த
உடலோடு சேர்ந்த மனம், அறிவு, அனுபவம் என்ற எல்லைக்குள் கட்டுண்டு கிடக்கும் சக்தி அல்ல. அப்படி நாம் நினைத்திருக்கும் நினைப்பு வெறும் கற்பனையே. நமது உடலில் உள்ள சக்தி விரிந்து பரவி தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது மற்றொரு உடலோடு தொடர்பு கொள்ளக் கூடியது என்ற அனுபவம் காமத்தில் கிடைக்கிறது.

அந்த ஒரு கணத்தில் நான் என்பது மறந்து, இறந்து, மனம் மறைந்து, கடந்து, ஆனாலும் ஒரு இருப்பாய், சக்தியாய் இருக்கும் அனுபவம் கிடைக்கிறது. இதையே சிற்றின்பம் என்கிறோம்.

நமது எல்லைகள் கடந்து நாம் விரியும் முதல் அனுபவம் இது. இதுவே அன்பின் விதை. எனவேதான் அன்பு உயிர்களின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. வாழ்வின் இன்பமாக இருக்கிறது. இப்படி அன்பு ஒரு தேவை என்ற அடிப்படையில் இருக்கும்நிலையில் அன்பு வளர்வதில்லை. அது அதன் சிகரங்களைத் தொடுவதில்லை. கருணையாகவும் அருளாகவும் உயர்வதில்லை. தாய்மை கூட அன்புதான். தேவையாக உள்ள அன்பு.

ஒரு தாய்க்கு தன் மக்கள் எல்லாம் தன்னிலிருந்து உருவாக்கிய, தன் உடம்பின் பாகங்களே. ஆகவேதான் ஒரு பெண் தாய்மையில் பெரும் இன்பமும், பூரிப்பும் அடைகிறாள். ஏனெனில் ஒரு தாய் ஒரு உடம்பல்ல. அவள் விரிந்து தன் மக்களுக்குள்ளும் பரிணமிக்கிறாள். ஆகவேதான் தாய்மை அனுபவம் அன்பின் உதாரணமாக உலகில் திகழ்கிறது.

ஆகவே அன்பு என்பது இந்த உடம்பும், மனமும், அறிவும், அனுபவமுமான நான் என்பதை கடந்து வாழ்வின் இருப்பின் இயற்கையின் வேறொன்றில் பரவி விரிவதால் கிடைக்கும் ஆனந்தம், இன்பம் என்று சொல்லலாம். அந்த விரிவுணர்வு, கலப்புணர்வு……

காமம் என்பது உடலின் கலத்தலுக்கான உந்துதல். நட்பு என்பது மனதின் கலத்தலுக்கான களம். ஆக எல்லா கலத்தலும், விரிவும் அன்பின் சுவைதான். கணநேரம் தன்னை மறந்து எதில் கலப்பதும் அன்புதான். ஆனால் இவையெல்லாம் ஆரம்பங்கள்.

மனிதனின் சாத்தியம் மிக அதிகமாயிருக்கிறது. இவனின் ஆரம்பம் காமம் என்றாலும் அழகில், படைப்பில், ஆச்சரியத்தில், சிரிப்பில் என்று அவன் தன்னை இழந்து பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம். இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அன்பு நமது சமூகத்தில் அபாய சங்காக இருக்கிறது. ஏனெனில் அதில் தன்னை இழப்பதால் ஆபத்து இருக்கிறது. அடுத்தவர் உன்னை பயன்படுத்திக் கொண்டு விடலாம். அதனால் உனக்கு இழப்பு நேரலாம் என்ற பயம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் தன்னை இழப்பது என்பது ஒருவகையில் இறப்புதான். நான் என்கிற சிறிய வட்டத்தின் இறப்பு. இறப்பு என்பது சோகம், மோசம், கெட்டது என்ற கருத்தால் அன்பு ஏற்படுத்தும் இறப்பைப் பார்த்து பயம் வருகிறது.

ஆம், அன்பு ஒருவகை இறப்பு அனுபவம்தான். ஆனால் அதன்மூலம் நாம் பரவி விரிகிறோம். நமது உண்மை இயல்பை, சாத்தியத்தை உணர்ந்து ஆனந்திக்கிறோம். மேலும் இந்த சமூகம் காமத்தைக் கூட அன்பாக வளர விடாமல் கட்டுப்படுத்த மற்றொரு காரணமும் இருக்கிறது.

அன்பின், காதலின் அனுபவம் ஒருவனது பயத்தை போக்கி விடுகிறது. ஏனெனில் இறப்பை பார்த்து விடுகிறான். அதன்பின் தான் பரவி ஆனந்திப்பதை அறிந்து விடுகிறான். ஆகவே, அவனை அடிமைப் படுத்தவோ, அடிமையாக வைத்திருப்பதோ சமூகத்திற்கு சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் இந்த சுரண்டல் சமூக அமைப்பில் ஒரு சிலருக்காகவே பெரும்பான்மையினர் அடிமையாக வாழ வேண்டியுள்ளது. இதில் இப்படி ஒருவன் பயமற்று போவது என்பது சுயநலவாதிகளுக்கு ஆபத்தானது. எனவேதான் சமூகம் முளையிலேயே, காமத்திலேயே அன்பைக் கிள்ளி விடுகிறது, நசுக்கி விடுகிறது.

அன்பு காமத்தில் முளை விடுகிறது. பெண்களுக்கு தாய்மையில் பரவசமளிக்கிறது. ஆண்களுக்கு தாய்அன்பு தெவிட்டாத சுவையாய் இனிக்கிறது. பின் வளர, வளர ஒவ்வொரு வாய்ப்பிலும் மனிதன் தன்னை இழந்து ஈடுபடுகையில் பரவி விரிந்து கலக்கும் அன்பின் அனுபவம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

செய்யும் செயலில், பழகும் மனிதர்களில், பார்க்கும் மரங்களில், செடிகளில், பூக்களில், கேட்கும் இசையில், ஆடும் நடனத்தில், அருமை மணத்தில், அறுசுவை உணவில் என்று  மெய்மறக்கும் அனுபவங்கள் எல்லாமே பிரபஞ்ச இருப்பின் சுவை அனுபவம்தான். அன்பு அனுபவம்தான்.

விழிப்புணர்வோடு, தியானிப்பவனாய் இருப்பில் கரைந்து இருக்கும்போது பொங்கிப் பெருகி வழிந்தோடும் சக்தியும் அன்புதான்.

அன்பு ஒரு குணம், ஒரு செயலல்ல. அன்பு, நமது இயல்பு நிலையில் நாம் பிரபஞ்ச இருப்போடு இணைந்து இருக்கையில் பொங்கி வழியும் சக்திதான். அது
நான் என்பது நிறைந்து மறைந்து போகும் வெளிப்பாடு. ஒரு வகையில் இறப்பு.

நமக்கு இறப்பைப் பார்த்து பயம் வருமாயின் அது இன்னும் அன்பின் சுவையை அறியவில்லை நாம் என்பதன் அறிகுறிதான்.

இறப்பும் இன்பம்தான், பேரின்பம். ஏனெனில் முழுதாய் இறந்தால்தான் முழுதாய் பரவி விரிந்து கலக்க முடியும்.

ஆகவே காமத்தைப் பற்றிய சரியான புரிதலையும் அன்பின் அடிப்படையிலான சுதந்திரத்தையும் நாம் இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அவர்களது வாழ்வின் நட்பு, உறவு, வேலை, தொழில் எல்லாமே அவர்களது அன்பின் அடிப்படையில், அதாவது அவர்களுக்கு அன்பு அனுபவம் தருவதாக மட்டுமே அமைத்துக் கொள்ள சுதந்திரம் கொண்ட வருங்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அன்பு என்பது ஒரு உணர்வு. உள்ளுணர்வு. இருப்புணர்வில் ஒன்று கலக்கையில் ஏற்படும் இயற்கையுணர்வு. ஆகவே இது நிலையானது அல்ல. இயற்கை எப்படியோ, அப்படியே கணத்துக்குக் கணம் மாறுவது, மாறக்கூடியது. ஒரே உணர்வில் எந்த உயிரும் வாழ்வது சாத்தியமற்றது. இதை நாம் உணர வேண்டும். இந்தக் கணத்தில் நான் அன்பில் மூழ்கலாம், அடுத்த கணத்தில் மாறிப் போகலாம். அன்பை எப்போதும் நினைத்த நேரமெல்லாம் கொண்டுவர முடியாது. அது வரும், போகும். ஆகவேதான் காதலர்கள் சன்டை போடுகின்றனர். இது புரிந்துகொள்ளப் படவேண்டும். எப்போதும் நட்பாய் இருக்கலாம், ஆனால் அன்பாய் இருக்க முடியாது.

அன்பு இயற்கையின் நிலையாமையோடு சேர்ந்தது. அதனால்தான் சமூகம் அன்பை அனுமதிக்க, அன்பை வளர விட, அதற்கு சுதந்திரம் கொடுக்க பயப்படுகிறது.அதற்கு பதிலாக திருமணம் என்ற சட்டச் சிறைக்குள் வைத்துப் பூட்டுகிறது. அன்பு பாதுகாப்பற்றது, பாதுகாப்பு தேடாது. ஏனெனில் இறப்பே ஆனந்தமானவனுக்கு எதற்குப் பாதுகாப்பு…..

கடைசியாக உங்களுக்கே இப்போது புரிந்திருக்கும் என்றாலும் சொல்லி விடுகிறேன். அன்பு தன்னையே கொடுக்கக் கூடியது. ஆனால் கடமை என்ற பெயரிலல்ல. அன்பு பகிர்ந்து கொள்ளக் கூடியது. ஆனால் நான் பெரியவன் ஆகவே நான் செய்கிறேன் பார் உதவி என்ற அகங்காரத்திற்கு ஆட்பட்டதல்ல.

மேலும் அன்பு வளராமல், வெறும்முதல் அனுபவத்தோடு, ஒரு ஏக்கமாக, ஒரு தேவையாக, ஒரு உணவாக, ஒரு கனவாக இன்றைய மனிதனுக்கு ஆகி விட்டது. ஆகவே அது ஒரு வியாபாரப் பொருள் போல நான் உன்னிடம் அன்பு காட்டுகிறேன் நீ என்னிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டாயமாக, எதிர்பார்ப்பாக ஆகி விட்டது. ஒருவரையொருவர் அடிமைபடுத்தும் தந்திரமாகவும், போலித்தனமாகவும் நடிப்பாகவும் ஆகி விட்டது. இதில் அன்புணர்ச்சி என்பதே மறந்தும், மறத்தும் போய்விட்டது மனிதனுக்கு.

ஆகவே நண்பர்களே

இன்று அன்பை மீண்டும் கொண்டுவர, மீட்டுக் கொண்டு வர ஒரே வழி தியானம் செய்யுங்கள். விழிப்புணர்வு பெறுங்கள். விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கையில் உண்மை அன்பை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். அனுபவிப்பீர்கள், ஆனந்தப்படுவீரகள்.

அன்பு,

சித்.