அன்பு நண்பர்களே,

நண்பர் வந்து கேட்கிறார். எல்லாம் புரியுது, தெரியுது, தியானம் செய்யும் போது அருமையாக இருக்கு. ஆனா வெளியே போன உடனே நான் மாறி விடுகிறேனே, நான் வந்து விடுகிறதே, மனம் ஓட ஆரம்பித்து விடுகிறதே, நாடகம் தொடங்கி விடுகிறதே, காய்ச்சல் வந்து விடுகிறதே, அப்புறம் மறுபடியும் இங்கு வந்து நுழைந்தால்தான் என்னைப் பார்க்க முடிகிறது. செய்த பயித்தியக்காரத்தனமெல்லாம் தெரியுது. என்னதான் செய்யறது.

முதலில் நீ கூட்டத்தைச் சேர்ந்தவனாக இல்லாமல் தனிமனிதன் ஆக வேண்டும். ஏனெனில் தனிமனிதன் தான் வளர முடியும். கூட்டம் உன்னை அதற்கு ஒத்துப் போகச் சொல்லியே அமுத்தும். அப்படி கூட்டத்தை, கூட்டத்தின் கருத்துக்களை, கடந்த கால அறிவுரைகளை, வழிகளை ஏற்று நடப்பதுதான் சரி, இதற்குப் பெயர்தான் வாழ்க்கையை, வருவதை ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த ஆன்மீகப் பண்பு என்று கூட விளக்கம் சொல்லப்படும். வெங்காயம். இதற்குப் பெயர் ஒத்துப் போதல், ஒத்து ஊதல், பயந்து பின்பற்றுதல், போலி கவுரவத்திற்காக அடங்கிப் போதல், பயன் கருதி தாழ்ந்து போதல் என்றெல்லாம் வேண்டுமானால் சொல்லலாம்.

உண்மையான ஏற்றுக் கொள்ளுதல் என்பது தன்னை ஏற்றுக் கொள்வது. உள்ளிருந்து வரும் வழிகாட்டல்படி நடப்பது. போலித்தனமில்லாமல் தான் தானாயிருப்பது. பகை வரினும், உயிர் விடினும் தன் இயல்பை விடாமல் கைக் கொள்வது. இந்த வீரப் பண்புகள், வைராக்கிய நெஞ்சங்கள் தொலைந்து போய்விட்டன. ஆனால் இதைப் பெறாமல் நீ வளர முடியாது. வளர்ச்சி அனுபவத்தை தக்க வைத்துக் கொள்வது கூட முடியாது. ஏனெனில் இங்கு கூட்டம் அதிகம். மிகவும் பழைய, அழுகிய கூட்டம் என்பதால் அதன் பாதிப்பும் அதிகம்.

அடுத்து நீ மன அமைதியைத் தேடுபவன் என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. மன அமைதி என்பது ஒரு மாயைதான். மனமே சலனம்தான். அதில் அமைதி ஏது ஆகவே மனம் தாண்டிய நிலைக்கு கடந்து செல்ல நீ தயாராக வேண்டும். அதில் நீ பகுத்தறிவு மனம், பெற்றோர் அல்லது சமுதாய மனம், உன் கட்டுப்பாட்டில் இல்லாத உணர்ச்சி மனம் என மூன்றின் இடை சிக்கித் தவிக்கிறாய். பகுத்தறிவு மனதிலிருந்தே உன் கேள்வி வருகிறது. பகுத்தறிவு மனமே சீர்தூக்கிப் பார்த்து, நான் ஏன் இப்படியெல்லாம் இருக்கிறேன் என்கிறது. ஆராய்ச்சி செய்து விடை காண முயற்சிக்கிறது.

ஆனால் எல்லாமே மனம்தான். உன் பகுத்தறிவு மனம் சமூகத்தைப் பார்த்ததும் பலமிழந்து விடுகிறது. சமூக மனத்தின்படியே உன் உறவும், வியாபாரமும், சொத்தும், மதிப்பும் இருப்பதால் மற்றவர் மத்தியில் அதுதான் உன்னை ஆள்கிறது. ஆனால் உணர்ச்சி மனம் எப்போதும் உன்னை தன் தேவையை பூர்த்தி செய்யச் சொல்லி உந்திக் கொண்டேயிருக்கிறது. அது மேலே வரும்போது நீ மிருகமாகிறாய். அதன் பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு, வன்முறை, செக்ஸ் ஆகியவற்றின் அலங்காரமாகவே உன் சமூக மனம் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி ஒரு கட்டுத்திட்டத்தில் அமுக்கி வைப்பதால் அது உள்ளே எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய சந்தர்ப்பம் போதும். ரோட்டில் ஒரு சிறிய உரசல் இரண்டு டூ வீலர்கள் இடையே. பிறக்கும் கோபம் ஆச்சரியப்பட வைக்கிறது. காரணம் அடக்கியுள்ள உணர்ச்சி மனம்.

ஆகவே என்னதான் வழி

ஓஷோ கூறுவது போல இந்த மூன்று மனங்களையும் தாண்டி விழிப்புணர்வு நிலை நின்று வாழ்வதுதான்.
அதாவது வெளி வாழ்வில் எந்த மாற்றமும் தேவையில்லை. மனதை அமைதிப்படுத்தவோ, அதனோடு போராடவோ அவசியமில்லை. மெதுவாக விழிப்புணர்வுக்குள் நகர்ந்து விடுங்கள். எல்லாவற்றையும் விழிப்புணர்வோடு விலகி நின்று சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், எந்த முடிவும் இல்லாமல் வேடிக்கையாய், சாட்சி பாவமாய் பாருங்கள்.

நண்பர் கேட்டார். சரிசார், ஆனால் பலதையும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறதே. எப்படி முடிவெடுப்பது எந்த முடிவெடுப்பது, பார்த்துக் கொண்டேயிருந்தால் பத்தாதே. தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதை என்ன செய்வது.

சரிதான் – விழிப்புணர்வோடு முதலில் பாருங்கள். அதன் விளைவாய் குழப்பமும், படபடப்பும், இறுக்கமும் முதலில் போய்விடும். பதிலாக தெளிவும், நிதானமும், பிறக்கும். செய்ய வேண்டியது என்ன என்பது தானாகவே தெரியும். டார்ச் ஒளியை அடித்து நாலாபக்கமும் தேடினால் பாதை தானாகவே தெரிவது போல. பிறகு எதில் நடக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. ஆகவே எந்த சூழலிலும், மனதின் போராட்டம், குழப்பம், படபடப்பு. தாண்டி விழிப்புணர்வுக்கு நகர்ந்துவிட முடிந்தால் அப்போது செய்ய வேண்டியது என்ன என்பது தானாகவே தெரியும். விழிப்புணர்வு வெளிச்சத்தில் எல்லாமும் விளங்கும். இயற்கையின் ஏராளமான ரகசியங்களும் துலங்கும். உன் இயல்பின் மேன்மையும் சக்தியும் தானாகவே வெளிப்படும்.

பிறகு அந்த செய்ய வேண்டியதைச் செய்ய உனது உடல், அறிவு, மூளை, அதன் அனுபவங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் பயன்படுத்து.

ஆகவே இது மிக சுலபம்.

விழிப்புணர்விலிருந்து முடிவு பிறக்கட்டும். முடிவை செயலாக்கும் முயற்சி உன்னிடமிருந்து புறப்படட்டும்.

இதற்கு விழிப்புணர்வில் நிலை கொள்ள வேண்டும். அதற்காகத்தான் தியானப்பயிற்சிகள். அவை உனக்கு விழிப்புணர்வின் முதல் அனுபவத்தைத் தரும். அதாவது உன் மனதைத் தாண்டி உன்னைக் கூட்டிச் செல்லும். மனமில்லாமல் சக்தியோடு கூடி பொங்கி வழிவதுதான் விழிப்புணர்வு, தன்னுணர்வு, தியானம், சாட்சிபாவம் அன்புநிலை எல்லாமே.

எனவே தினமும் தியானப்பயிற்சி செய்யுங்கள். தினசரி வாழ்வில் விழிப்புணர்விலிருந்து முடிவெடுங்கள். செயல்புரிய உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுதான் வழி.

இன்னொரு வழியாக வாழலாம். அது இதயபூர்வமாக வாழ்தல் என்பது. இதில் நீங்கள் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. எல்லாமே இதயத்தின் விருப்பம். ஆனால் இப்படி முழுதாய் சரணாகதியாய் இதயத்திலிருந்து வாழ்வது இன்றைய நாகரீக மனிதனுக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இவனுக்கு இதயம் திறந்து சிறகடித்துப் பறந்த கண அனுபவங்களே சிறிதும் கிடைக்காமல் இளம் பிராயத்திலேயே இறுகிக்கொண்டே அல்லவா வருகிறான் இவன். பிறகெப்படி முழுமையாக இதயத்திலிருந்து வாழ்வது சாத்தியப்படும்.

கலைஞர்கள் குறைந்தும் வியாபாரிகள் பெருகியும் வரும் நேரமிது. கலை கூட வியாபாரமாகி விட்ட கொடுமைக் காலம் இது.

எனவே விழிப்புணர்வு வழி செல்வதே சாத்தியமானது. அப்படி விழிப்புணர்வு வளரும் பொழுது இதயமும் மலரும். அப்போது விழிப்புணர்வும் இதயத்திலிருந்து வாழ்தலும் ஒரே நிலையின் இரு வேறு கோணங்களே என்பதும் புரியும்.

அன்பு,
சித்.