அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்…

ஓஷோவின் விஞ்ஞான பூர்வமான தியான நிகழ்வு முயற்சிகளில் விளைந்தவைதான் அவரது டைனமிக், குண்டலினி போன்ற பல நூறு தியான யுக்திகள். இவற்றை புரிந்து கொண்டு செய்வதும், பரிசோதனை செய்து பார்ப்பதும், நமது சக்தியை நூறு சதம் கொடுத்து முயற்சி செய்து பார்ப்பதும், ஓஷோ அந்தந்த தியான யுக்திகளைப் பற்றி கூறியுள்ளவற்றை கூர்ந்து கேட்டு, செய்து பார்த்து, ஆழமாய் புரிந்து கொள்ள முயல்வதும், நமது உடலைப் புரிந்துகொண்டு அது இந்த தியான யுக்திகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமளவு அதை கூர்ந்து பார்த்து அது தயாராக இடம் கொடுப்பதும், அதன் லயத்தைப் புரிந்து கொள்வதும், உடலின் மாறுதல்களை கவனிப்பதும் என பல விஷயங்கள் ஓஷோவின் தியான யுக்திகளைச் செய்வதில், அதன் பலனை முழுதாக அனுபவிப்பதில் உள்ளன.

நான் கடந்த 36 வருடங்களாக ஓஷோ தியான யுக்திகளைத் தொடர்ந்து செய்து, ஆராய்ந்து, என் உடலையும், மனதையும் பரிசோதனைக்கு உட்படுத்தி அதை அனுபவித்து மகிழ்ந்து வருகிறேன். ஓஷோ இந்த தியான யுக்திகளைப் பற்றி கூறிபவற்றை கூர்ந்து ஒவ்வொரு சொல்லாகக் கேட்டு அதை கடைபிடித்து அதன் உண்மைகளை அனுபவித்து வருகிறேன்.

அடிப்படையில் மனதால் பழகிக் கொள்ளவோ, மனதின் மூலம் முயற்சி செய்யவோ ஆரம்பித்தால் தியான யுக்தியின் அனுபவம் கைகூடாது. தினமும் புதிதாக, உடலின் சக்திப் பெருக்கத்தில் நடப்பதாக ஓஷோவின் தியான யுக்திகள் இருக்க வேண்டும். இதில் எனது உடல் முழுதாக திறக்க பலப்பல வருடங்கள் ஆயிற்று. முக்கியமாக இந்தியர்களாகிய நாம் உடலை அடக்கியே பழகி உள்ளதால், ஓஷோவின் தியான யுக்திகளை பயன்படுத்துவதிலும், அப்படி
செய்யும் போதும் அதை நூறு சதமாக செய்வதிலும் பிரச்னைகளே உள்ளது. அதற்கு உதவவே நான் எனது அனுபவத்தில் கிடைத்த பாடங்களை இங்கு வருபவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் சுலபமாக உடலைத் திறந்து தியான யுக்தியை முழுமையாகச் செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்க சாத்தியமுள்ளது. எனது உடல் திறக்க பலப்பல வருடங்கள் ஆயின. திறந்த போது மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொப்பளித்தன. அப்படி ஆனதை கூர்ந்து பார்த்து அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியே எனது தியான பட்டறைகள்.

டைனமிக்கின் கெத்தாரிஸிஸ் என்ற உள் தேக்கத்தை வெளியேற்றுதல் கூட மனதின் மூலமாக தினமும் ஒன்று போலவே பலருக்கும் நடப்பதை நான் பார்க்கிறேன். இது மனம் செய்வது. இதன் காரணம் உடலில் சக்தி பொங்கிப் பெருகாதது. உடலில் சக்தி பொங்கி பெருகினால் மனம் சக்தி இழந்து விடும். உடல் மூலம் இயற்கையின் பிரபஞ்ச உணர்வு வரை ஆழ்ந்து செல்ல முடியும். ஏனெனில் உடல் இயற்கையின் கையில்தான் பெரும்பாலும் இன்னும் இருக்கிறது. எனது உடல் என்பது வெறும் கற்பனைதான். உடல் உண்மையில் மண்ணின், நீரின், காற்றின் பகுதியாக, படைப்பாகவே இருக்கிறது. மூச்சு விடுவதும், ஜீரணமும், இரத்த ஓட்டமும், தூக்கமும், என்பது முதல் கண்ணை இமைப்பது வரை உடல் இயற்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. மனதின்
கட்டுப்பாட்டிற்கு இன்னும் முழுதாக வரவில்லை. மனதால் நாம் இந்த இயக்கங்களை கெடுக்கவும், துன்புறுத்தவும் தொடர்ந்து செய்தாலும் இன்னும் உடல் இயற்கையின் பாகமாகவே இருந்து வருகிறது. ஆகவே தான் ஓஷோ, உடலில் சக்தியை பொங்கிப் பெருக வைத்த பின் தியான நிகழ்வு சாத்தியமுள்ளது என்ற அணுகுமுறையோடு தனது பெரும்பாலான தியான யுக்திகளை வகுத்துள்ளார். இதற்கு உதவுவதே எனது தியானப்பட்டறைகளின் நோக்கம்.

அடுத்து ஓஷோவின் முக்கியமான ஒரு முயற்சி – தியானசக்தி மண்டலம் – என்ற ஒரு சக்தி மண்டலத்தை உருவாக்குவது. இதன் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இதை எல்லா ஞானிகளுமே முயற்சித்துள்ளனர். ஓஷோ அதற்காகத்தான் – ஓஷோ வெண்ணிற ஆடை சகோதரத்துவம் – என்று அழைக்கப்படுகின்ற மாலை நேர சங்கமிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை நான் “மாலை நேர சங்கமிப்பு தியானம்” என்று அழைக்கிறேன். இதில்
தியான அன்பர்கள் அனைவரும் வெண்ணிற ஆடை அணிந்து கலந்து கொள்வர். இது ஓஷோ அமைதியாக வந்திருந்து கலந்து கொள்ளும் தியானம். இதன் மூலம் நாம் ஒரு தியானசக்தி மண்டலத்தை உருவாக்குகிறோம். அனைவரின் சக்தியும் நான் என்பதிலிருந்து தியான சக்தி என்ற ஒரு சக்தி வாய்ந்த அதிர்வாக மாறுகிறது.

இதன் பயன் என்ன ? சமூகத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு தனிமனிதனும் அதில் அடிபட்டு, புரிந்து, தைரியம் கொண்டு, முயற்சித்து பின் தியான யுக்திகளைச் செய்து தியான அனுபவம் பெற்று மாறுவது என்பது மிகவும் மெதுவாக நடக்கக் கூடிய ஒன்று. பெரும்பகுதி மக்கள் இப்படி புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு சுலபமாக இல்லை. ஆனால் இந்த தியானசக்தி மண்டலத்தில் ஒருவர் நுழையும்போது அவர் தியான அனுபவத்தை, அவரது எந்த முயற்சியும் இன்றி, திறந்திருந்தால் போதும், அடைந்து விடுகிறார். அதன்பின் அந்த சுவை அவருக்கு ஒரு புதிய சாத்தியத்தை உணர்த்திவிடுகிறது. இதுதான் பயன். இதற்கான ஓஷோ முயற்சிதான் மாலை நேர சங்கமிப்பு தியானம். இதன் மற்றொரு பயனாக நான் கூறுவது, தியானத்தில் வாழும் ஓஷோவோடு நாம் கரைகையில் நமக்கும் அவரது தியானானுபவம் கிடைக்கிறது. எப்படி எரியும் தீபத்தின் அருகில் மற்றொரு எரியாத திரியை கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட நெருக்கத்தில், அந்த தீபத்தை தொடாமலே, இந்த திரிக்கு நெருப்பு தாவுகிறதோ அப்படி நமக்கு அவரது தியானவுணர்வு வந்துவிடும். ஆகவே இது நாம் தியானவுணர்வில் கரையவும் ஒரு எளிதான வழியாக இருக்கிறது. ஆகவே மாலை நேர சங்கமிப்பு தியானம், நமக்கு தியான அனுபவம் கொடுக்கிறது, அதோடு தியானசக்தி மண்டலத்தையும் உருவாக்குகிறது. அது இந்த உலகத்தோடு நாம் நம்மை பகிர்ந்து கொள்வதாகவும் அமைகிறது.

இதற்காகத்தான் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஓஷோ நிச்சயித்தார். அப்போது ஒருசேர எல்லோரும் கலக்க வேண்டும், சங்கமிக்க வேண்டும் என்பதற்காக. இதற்காக ஏராளமான ஓஷோ தியான மையங்கள் தேவைப்படுகின்றன. ஆம், நமக்கு வீதிக்கொரு ஓஷோ தியானகம் தேவை. எங்கோ பூனாவிலும் திருச்சியிலும் அவினாசியிலும் கோவையிலும் திருப்பூரிலும் என இருப்பது போதாது. வீதிக்கொன்று அங்கெல்லாம் மாலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியான அன்பர்களின் சங்கமிப்பு. அப்படிப் பரவ வேண்டும் தியானம். அப்போதுதான் இந்த சமூகம் மாற்றமடையும். மக்களின் பெரும்பகுதி உணர்வடையும். இதற்காக, நம்மை நாம் வாழ்வோம், பகிர்ந்து கொள்வோம். இதைப் படிக்கும் தியான அன்பர்கள் எல்லா ஊரிலும் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு எடுங்கள். மாலை நேர சங்கமிப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் இருவர் இருந்தால் போதும். எல்லோரையும் அழையுங்கள். இதில் ஆட்டம், அமைதி, ஓஷோ வீடியோ அல்லது ஆடியோ பேச்சு, ஓஷோவே வழிநடத்தும் ஆடியோ தியானம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன.

இந்த மாதம் இங்கு அவிநாசியில் வைத்திருக்கும் சில அறிவிப்பு பலகைகளின் வாசகங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1. உன் சுதந்திரத்தையும், உன் தனித்தன்மையையும் வாழ்வதே உன் முதல் பொறுப்பு.

2. ஓஷோ நமது குருவல்ல, நமது சாத்தியக்கூறு.

3. ஞானமடையும் வாய்ப்பிருந்தும் அதை வாழாதிருப்பது வாழ்தலல்ல.

4. வாழ்வின் ஒரே பிரச்னை, அது வருகிறபடியே அதை ஏற்றுக் கொள்ள முடியாததுதான்.

5. கடவுள் ஒரு அனுமானம். தியானம் அதன் அனுபவம்.

6. தியான அனுபவம் என்பது பிரபஞ்ச இருப்புணர்வு வரை உணரும் ஒரு கணநேர அனுபவமே.

7. உண்மையான பிரார்த்தனை என்பது பிரபஞ்ச இருப்பின் மீது ஏற்படும் நன்றிவுணர்வுதான்.

8. பிடிப்புக்களை விட்டு விட்டு வாழ்வைத் தொட்டுத் தொட்டு அதன் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போ. அதுதான் ஆன்மீகம்.

மனதைக் கடந்துள்ள மௌனக் குழிக்குள் திரும்ப திரும்ப விழுந்து காணாமல் போ. அதுதான்
ஆன்மீகம்.

நிர்க்கதி நிலையில் சரணாகதி அடைந்து அடைந்து நன்றியுணர்வு மட்டுமே எஞ்சி விடட்டும். அதுதான்
ஆன்மீகம்.

ஒவ்வொரு அவமானத்திலும் தோல்வியிலும் செத்து செத்து ஈகோவை
இழந்து மீண்டும் மீண்டும் புதிதாய் பிற.. அதுதான் ஆன்மீகம்.

9. நீ மனதைப் பயன்படுத்தி செய்வது சிந்தனை. மனம் உன்னைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது எண்ணங்கள்.

10.வாழ்தல் ஈகோவை உடைத்துவிடும்.

அன்பு ஆசைகளை அழித்துவிடும்.

விழிப்புணர்வு மனதை விலக்கிவிடும்.

வாழ்க விழிப்புணர்வுடன்

சித்.