அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

ஜோர்புத்தா பற்றி சிறிது விளக்கம் தர பல தமிழ் அன்பர்கள் கேட்டுள்ளனர்.

ஜோர்புத்தா என்று நான் குறிப்பது ஜோர்பா த புத்தா என்று ஓஷோ தனது புது மனிதனைக் குறிப்பிட்டதன் தமிழாக்கம்தான்.

ஜோர்பா த புத்தா என்று ஓஷோ குறிப்பிட்டதில் – ஜோர்பா – என்பது ஒரு கிரேக்க நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். அந்த நாவலின் பெயர் ஜோர்பா த கிரீக். அந்த நாவல் ஹாலிவுட்டில் இதே பெயரில் படமாக வந்துள்ளது. இன்றும் கிடைக்கிறது. இந்த நாவலில் ஜோர்பா என்ற அந்த கதாபாத்திரம் ஒரு இயல்பான மனிதன். மனிதனின் எல்லா உணர்வுகளையும் வாழ்பவன். சமூக முகம் என்ற போலித்தனத்திலும், கருத்துக்கள் கொள்கைகள் என்ற அறிவு ஜீவிதத்திலும் மாட்டிக்கொள்ளாமல், பணம் அதிகாரம் புகழ் என்பது போன்ற சமூக போதைகளில் சிக்கிக் கொள்ளாமல் எளிய இயல்பான வாழ்வை வாழ்பவன். ஆட்டம், பாட்டம், கொண்ட்டாடம் என்று மகிழ்பவன். இசை, நடனம், செக்ஸ், நட்பு, பகிர்வு, உழைப்பு என்று இயல்பான வாழ்வில் ஈடுபாடு கொண்டவன். இந்த கதாபாத்திரத்தைத்தான் ஓஷோ எடுத்துக் கொண்டார்.

புத்தா என்று ஓஷோ குறிப்பது ஞானநிலையை. கௌதமபுத்தரை மட்டுமல்ல, ஆனால் அவரையும் சேர்த்து. ஞானநிலை என்பது மனிதனின் உச்சக்கட்ட சாத்தியமான வாழ்வு. பிரபஞ்சத்தோடு ஒன்றி இந்த உலகத்தையும் உடலையும் அதோடு இரண்டறக் கலந்து வாழும் வாழ்வு. அங்கு வாழ்வு இருக்கிறது, வாழ்தல் இருக்கிறது. பிரபஞ்சத்தின் நடனம் இருக்கிறது. பிரபஞ்சத்தின் தன்னுணர்வும், அழகும், சத்தியமும், சக்தியும் வெளிப்படுகிறது – ஒரு
உடலில். நான் என்பதைக் காப்பாற்றப் போராடும் வாழ்வு மறைந்துவிடுகிறது. என் – என்ற குறுகிய வட்ட உணர்வுகளுக்காக வாழும் வாழ்வு மறைந்து விடுகிறது.

இப்படிப்பட்ட புத்தா, இப்படிப்பட்ட ஜோர்பா இரண்டையும் சேர்த்து ஜோர்பா த புத்தா என்று இனி வரப்போகும் புதிய மனிதனுக்குப் பெயரிட்டார் ஓஷோ.

சரி, ஜோர்பா த புத்தா என்று ஓஷோ குறிக்கும் அந்தப் புதிய மனிதனைப் பற்றி இப்போது கொஞ்சம் பேசுவோம். 

இந்தப் புதிய மனிதன் ஜோர்பா வாழ்வை வாழ்வான். இந்த உலகை, இந்த உடலை, அதன் உணர்வுகளை, அதன் இன்பங்களை மறுக்கவோ, வெறுக்கவோ
மாட்டான். இந்த உடலுக்கும், உலகுக்கும் எதிரான வாழ்வை தேர்வு செய்ய மாட்டான். இந்த உடலின் உணர்வுகளை அமுக்கி வைக்கவும், மறைத்துக் கொள்ளவும் மாட்டான். நான் மனிதன். அப்படியிருப்பதை கொண்டாடுகிறேன் என்று வாழ்வான். அதே சமயம் அடிமையாக்கும் சமூக போதைகளுக்காகவும் வாழ மாட்டான். மதிப்பு, கௌரவம், அந்தஸ்து, அதிகாரம், புகழ், பாராட்டு போன்ற சமூக போதைகளில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வான். நேர்மை, வீரம், நட்பு, காதல், மனிதநேயம், உறவு, அழகு, இசை, நடனம் போன்ற மனித குணங்களோடு இன்பம் துய்ப்பான். மனிதனுக்கு வெறியூட்டி பிரித்தாளும் சூழ்ச்சியாக மதம், மொழி, இனம், நாடு போன்றவை பயன்படுத்தப் படுவதிலிருந்து விலகி நிற்பான்.

ஜோர்பா எளியவன். இயல்பானவன். தன் உணர்வுகளின் படி வாழ்பவன். போட்டியும் பொறாமையும் எழும்படியான எந்தவித திணிக்கப்பட்ட முறைப்படுத்தலும் இல்லாதவன். அன்பும் நேசமும் நட்பும் உறவுமென மனிதநேயத்தில் வாழ்பவன். இவன் ஜோர்பா. இவன் சமூகத்தில் வாழ்பவன். சமூகத்தின் அநீதிகளை, தவறுகளை தட்டிக் கேட்பான். சமூகத்திலிருந்து தப்பிக்க மாட்டான். சமூகத்தில் பங்கு கொள்வான், சமூகத்தில்
இவன் இருப்பான். ஆனால் தனி மனிதனாக தன் உணர்வுகளை வாழ்பவனாக இருப்பான். சமூகத்திற்கு ஏற்ற முகமூடி அணிபவனாக, போலித்தனம் கொண்டவனாக, சமூகத்திற்கு பயப்படுபவனாக இருக்க மாட்டான். சமூகம் இவனால் பயனுறும். வளப்படும். ஆனாலும் சமூகம் என்பது நமது வசதிக்காக நாம் செய்துகொள்ளும் ஒரு கற்பனைக் கட்டமைப்பே என்பதைத் தவிர அவன் அதற்கு அடிமைப்பட்டு விடமாட்டான். முன்னுரிமை கொடுத்துவிட மாட்டான். தனி மனிதனே நிஜம். சமூகம் ஒரு கற்பனை. தனிமனிதனுக்கே உணர்வும் உயிரும் உள்ளது. சமூகத்திற்கு தனியாக உடலோ உயிரோ இல்லை. இதை உணர்ந்து வாழ்வான்.

மேலும் ஓஷோவின் ஜோர்பாவிற்க்கும், நாவல் கதாபாத்திரம் ஜோர்பாவிற்க்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு. அது – ஓஷோவின் ஜோர்பா, புத்தராக மாற தாகம் கொண்டவன். ஜோர்பாவாக வாழும் வாழ்வில் ஆழம் வரை சென்று தன்னை அறிய முயற்சிப்பவன். தனது வாழ்வின் தன்மையை, இறப்பு என்பது என்ன, இருப்பது என்ன, இருந்தது எங்கே என்ற ஆழ்ந்த தேடலுடன் வாழ்வை வாழ்பவன். இந்த தன்மைதான் ஜோர்பா வாழ்வின் நங்கூரம், அவனது திசை. இருக்கும் வாழ்வை, உடலை, கசக்கிப் பிழிந்து வாழ்ந்து பார்க்கிறான் ஜோர்பா. கொண்டாட்டமாக எதையும் வாழ்ந்து பார்க்கிறான். சோகத்தை, தோல்வியை, பயத்தை, என்று எந்த உணர்வையும் அதன் ஆழம் வரை அனுபவித்து வாழ்கிறான் ஜோர்பா. மலையின் உச்சியை மட்டுமல்ல, மடுவையும் வாழ்ந்து கொண்டாடுபவன் ஜோர்பா. இப்படி வாழ்வை ஒரு ஆழ்ந்த தேடலுடன் முழுமையாக அனுபவித்து வாழ்பவன்தான் ஓஷோவின் – ஜோர்பா
த புத்தா – நமது ஜோர்புத்தா.

இப்படி வாழ்வதில் புத்தாவாக நீ மலர்கிறாய் என்கிறார் ஓஷோ.

மேலும் இந்த ஜோர்புத்தா வாழ்க்கைமுறை இந்த உலகை அழகாக்குகிறது. வளமாக்குகிறது. இசையும், பாட்டும், கலையும் கொண்டதாக்குகிறது. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மனித மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உகந்த விஷயமாக உபயோகமாகிறது. சுரண்டல் சமுதாயம் போய் பகிர்தல் சமுதாயம் மலர வாய்ப்பாகிறது. எல்லோரும் அவரவர்களாய் தனித்தன்மை இழக்காமல் பல்வேறு சுவை சேர்க்கும் வண்ணமய சமூகம் ஏற்பட வாய்ப்பாகிறது. சமூக
போதைகள், பாதுகாப்பு பயங்கள் என்று மனிதனை அடிமைப்படுத்தும் அரசியலும், பூசாரித்தனமும் அழிந்துவிட ஜோர்புத்தா என்ற புதிய மனிதனின் புதிய வாழ்க்கை முறை வழி வகுக்கிறது. இந்த உடலே புத்தர் இந்த பூமியே சொர்க்கம் என்ற வாழ்வு நிதர்சனமாகும் வழியாகவே ஓஷோ ஜோர்புத்தா என்ற புதிய மனிதனின் வருகையை அறிவிக்கிறார்.

இதோடு மூன்றாவதாக – (முதல் – புத்தா தாகத்தோடு வாழும் ஜோர்புத்தா, இரண்டு – உயரிய மனித சமுதாயத்தை தோற்றுவிக்கும் ஜோர்புத்தா) இந்த ஜோர்புத்தா வாழ்வு இயல்பானது, இயற்கையானது, தனிமனிதனை எந்த நம்பிக்கையிலிருந்தும், எந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிப்பது. ஆம். முக்கியமாக ஆன்மீக அடிமைத்தனம் தேவையில்லை. குருவும் சீடனும் தேவை என்ற ஆன்மீகப்பாதையை உடைத்தெறிகிறார் ஓஷோ.

குரு தேவையில்லை, வாழ்வே போதும். ஜோர்புத்தாவாக நம்மால் வாழ முடிகிறதா என்று பார்த்துக் கொண்டாலே போதும். அதுவே நமது சரியான திசைப் பயணத்தின் உரைகல். ஜோர்புத்தாவாக வாழ முடியாதபோது, அதற்கு தடையாக நமக்குள்ளே இருக்கும் கருத்துக்கள், அகங்காரம், பிடிப்பு ஆகியவைகளை தெளிவாகக் காணலாம். அவைகளை நீக்கிக் கொள்ளும் பொறுப்பு நமதே. ஆகவே சுட்டிக்காட்ட குருவோ, சுத்தம் செய்ய தவமோ, இயல்பு வாழ்க்கைக்கு வேறாகத் தேவையே இல்லை. இதனால்தான் ஓஷோவின் தியான யுக்திகள் வாழ்வோடு இயைந்தவையாக உள்ளன. தனிமனிதனின் ஜோர்பா வாழ்வை ஒட்டியவையாகவே உள்ளன. அவரின் தியான யுக்திகள் விஞ்ஞானக் கருவிகளே. அவைகளைப் பயன்படுத்தி நம்மை நாம் உள்ளே சுத்தம் செய்து கொள்ளலாம். தியான யுக்திகளைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தியான யுக்திகளைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக ஒரு நன்றியுணர்வு நமக்குள் எழலாம். ஆனால் அவர் வழிகாட்டும் ஒரு குரு அல்ல. நம்மை சீடனாக ஏற்றுக் கொண்டு, கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நம்மை அடிமைப்படுத்தும் கடவுளோ, அவதாரமோ, குருவோ அல்ல அவர். ஜோர்புத்தா வாழ்க்கை முறையே நமது வளர்ச்சிக்கு உரைகல்லாகவும் இருக்கிறது.

நண்பர்களே

ஆன்மீகம், லௌகீகம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம், இகம், பரம் – இப்படிப்பட்ட பிரிவினை இனிமேல் இல்லை. ஜோர்புத்தா ஒரு முழுமை, பிரபஞ்சத்தின் ஒரு முழுமையான வெளிப்பாடு. அவன் இவ்வுலத்தில் கால் ஊன்றி ஆகாயத்தில் சுவாசிப்பவன். மனிதனாய் இன்பம் துய்து தெய்வீகத்தில் கரைபவன். இன்னிசை பாடும் மௌனம். அமைதியான அழகான வீடு கொண்ட நாடோடி.. ஊஞ்சலாடும் அழகான கிளைகள் கொண்ட அசைக்க முடியாத வேர். அவன் பிரபஞ்சப்படைப்பு, பிரிவினையற்ற ஒருமை.

ஜோர்புத்தாக்களே,

வணக்கம், வாருங்கள்
இந்த முழுமை வாழ்வுக்கு,

அன்பு,

வாழ்க விழிப்புணர்வுடன்

சித்.