அன்பும் வணக்கமும்,

நமது இணைய தளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பார்த்து ரசித்து பலரும் போன் செய்வதும் பகிர்ந்து கொள்வதும் நாம் செல்லும் திசை சரிதான் என்பதைக் காட்டுகின்றன.

ஓஷோ அன்பர்களின் கருத்துகள், மொழிபெயர்ப்பு மற்றும் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்கள் வரவேற்கப் படுகின்றன. 

இனி……….. 

ஓஷோவின் சிறப்புகளில், “ஞானமடைய அவரின் புதிய பாதை என்பதைப்பற்றி சென்ற மாத இதழில் பகிர்ந்து கொண்டேன்.

இந்த மாதம் ஓஷோவின் மற்றும் ஓரு சிறப்பு அம்சமான  “ஞான அனுபவம் பெற அவரின் புதிய தியான முறைகள்”  பற்றிப் பார்ப்போம்.

யோகா, தந்த்ரா, சரணாகதி, வாழ்வின் போக்கோடு செல்லுதல், சாட்சிபாவம்  ஆகிய ஞான வழிகளைப் பற்றியும், ஓஷோவின் புதிய வழி பற்றியும் சென்ற இதழில் படித்திருப்பீர்கள். 

இப்போது இந்த ஒவ்வோரு வழியிலும் கூட பல்வேறு யுக்திகள், முறைகள் பல்வேறு ஞானிகளால் பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோரு ஞானியும் தான் ஞானமடைந்தவுடன் அது தனக்கு எப்படி நிகழ்ந்தது, என்ன நிகழ்ந்தது, அது ஏற்படுத்திய குணமாறுதல்கள் எவைஎவை என ஆராய்ந்தறிகிறார். அதோடு தன்னைச் சுற்றி வாழும் மக்களின் மனம் எதைச் சுற்றி, எதைப் பற்றி ஓடிக் கொண்டிருக்கிறது, அதன் வேகம் எவ்வளவு இருக்கிறது. அதை விட்டு வெளியேற அவர்களிடம் மிச்சமுள்ள உணர்வுகள் எது எது என்று ஆராய்கிறார்.

பின்னர் அவர்களுக்கான உபாயங்களை, முறைகளை, யுக்திகளை வகுத்தளிக்கிறார். இந்த முறைகளும் முதல் அனுபவத்திற்க்கானவை மட்டுமே. அதன்பின் அவன் சிறிது சிறிதாக அவனது வழியை அவனேதான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் அந்த சுவையை தொட்டுக் காட்டும் முறை மிக முக்கியமானது. பலருக்கும் இது பலமுறை மீண்டும் மீண்டும் தேவைப்படுவது.

அவை என்றும் சாசுவதமானவை அல்ல. மேலும் அந்த முறைகள் அந்த ஞானிக்குப் பின் குருக்கள், பூசாரிகள், ஆசான்கள், மதபோதகர்கள், வழிகாட்டிகள் போன்ற தொழில் செய்வோரால் மக்களை ஏமாற்ற, மிரட்ட, பயமுறுத்த, மூடநம்பிக்கைகளை வளர்த்தவே பயன்படுத்தபட்டு வந்துள்ளது. பயன்படுத்த பட்டு வருகிறது.

இதை இன்னும் எளிமையாகச் சொன்னால் உண்மையான ஆரோக்கியத்தைக் கண்டறிந்தவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நோய்களை ஆராய்ந்து, அவர்கள் அதிலிருந்து விடுபட ஒரு மருந்து தயாரிக்கிறான். தியானமுறை என்பது மருந்துதான். ஆனால் அவனுக்குப் பின் வருபவர்கள், மக்களின் நோயை அறியாமல் அதே மருந்தை சகலரோக நிவாரணி என்று சொல்லி விற்பது போலத்தான் இது.

எனவே தியான முறைகள் மாற்றத்திற்க்கு உட்பட்டவை. ஆனால் இதை உருவாக்க முதலில் ஒரு ஞானி வேண்டும், இரண்டாவதாக அந்த ஞானி ஆராய்ச்சி செய்ய, மக்களின் நோய்களை அதன் மூலம் வரை சென்று பகுத்துப் பார்க்க விருப்பம் கொள்ள வேண்டும். மூன்றாவதாக அப்படிக் கண்டு ஆராய்ந்து உருவாக்கும் முறைகளை நடைமுறைப் படுத்துமளவு கல்வியும், உலகியலும் கற்றுணர அந்த ஞானி தலைப்பட வேண்டும்.  இல்லாவிட்டால் அவருடைய ஆரோக்கியம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதோடு நின்றுவிடும். 

கடந்த 2500 ஆண்டுகளாக, புத்தருக்குப்பின் ஒரு புதிய வழியை ஓஷோதான் முழுமையாக உருவாக்கியுள்ளார். அதோடு அந்த புதிய வழியில் கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எந்தவித மத அமைப்பும், எந்த வித பூசாரியும், எந்தவித கட்டாயமான விதிமுறைகளும் ஏற்படுத்தபட்டு விட முடியாதபடியும், அதனால் மனிதனில் உயர்வு தாழ்வும், அடிமைத்தனமும், குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்தப்பட முடியாமலும், தனது வழியின் அடிப்படையை மிக எளிதான ஒரே சொல்லில் வைக்கிறார்.  அதுதான்  விழிப்புணர்வு (AWARENESS).

விழிப்புணர்வோடு எனது முறைகளை செய்து பார், விழிப்புணர்வோடு என் கருத்துகளை சிந்தித்துப்பார், விழிப்புணர்வோடு உனது வாழ்வை ஆராய்ந்து பார். அப்போது சரியான முறையும், சரியான புரிதலும் சரியான நமது நிலையும் நமக்கே தெரியும். நமக்கு அப்படி தெரிவதுதான் சரி. மற்றவர்கள் நம்மைப் பற்றி சொல்வதோ, கற்றுக்கொடுப்பதோ சரியல்ல.  நாம் தவறுகள் செய்தாலும், விழிப்புணர்வோடு இருந்து தவறுகள் மூலம் வளர்வதுதான் வாழ்க்கை என்கிறார். 

மனிதனைத் தவிர ஏனைய இயற்கையிலுள்ள அனைத்துக்கும் தவறு செய்யும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே அப்படிப் பலதையும் செய்து பார்த்து அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே நமக்கு அடிப்படைத் தேவையாக அவர் வலியுறுத்தும் ஒரே ஓழுக்கம் விழிப்புணர்வோடு இரு என்பதுதான். விழிப்புணர்வோடு தைரியமாகவும் புத்திசாலித்தனத்துடன் உனது சுதந்திரத்தை வாழ்ந்துபார் என்பதே அவர் கூறுவது. 

ஆகவே அவரது தியானமுறைகளின் ஒரே நோக்கம் விழிப்புணர்வை  தட்டி எழுப்புவதுதான். அதுவும் கூட உனக்குள் ஏற்கனவே உள்ளதுதான். அதற்காக அவர் என்னென்ன தியானமுறைகள் உருவாக்கியிருக்கிறார் என்று பார்ப்போம்.

1.உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி சக்தியை உண்டாக்கி தன்ணுணர்வு(CONSCIOUSNESS) கொள்ளவைக்கும் தியானப்பயிற்சிகள். 

இதில் டைனமிக், குண்டலினி, நடராஜ், மண்டலா, நாதபிரம்மா, சக்ரா ஒலிகள், சக்ரா மூச்சு, 7 சக்ரா ஒலிகள், தேவவாணி, பரிமாணமில்லா நிலை, கெளரிசங்கர், ஜிப்பரிஷ், சிரிப்பு, சுழலல், போன்று இசையோடு கூடி ஒரு மணி நேரம் செய்யத்தக்கதாக பலவற்றை ஆராய்ந்து வடிவமைத்திருக்கிறார். இவை இன்றைய மனிதனுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

பல நாள் செய்யும் தியான பயிற்சிகளாக – மனம் கடந்த நிலை, இரகசிய ரோஜா, போன்று பலதையும் ஓஷோ வடிவமைத்திருக்கிறார்.

இன்றைய மனிதன் உடலில், புலன்களில், உணர்வில் வாழ்வது மிகக் குறைவு. மனதிற்காக, மன ஆசைகளுக்காக, மன அழுத்தம், குற்றவுணர்வு, ஆணவம், அவமானம், நிறைவு, பெருமை, அந்தஸ்து, கெளரவம் என மனதில்தான் வாழ்கிறான். 

அவனது உணர்வுகள் மனதால் ஆளப்படுபவையாகவே இருக்கின்றன.

அதற்காகவே பெரும்பகுதி சக்தியை செலவழிக்கிறான். இப்படிப்பட்ட இன்றைய மனிதன் அவனுடைய மிக வேகமான அவனது மன ஓட்டத்தை விட்டு ஒரு கணமேனும் வெளியேறி விழிப்புணர்வும், தன்ணுணர்வும் பெற செய்வதே அவரது இந்த தியான முறைகளின் நோக்கம்.

2.பழமையான யோகா, தந்த்ரா, விபாசனா முறைகளை தூசிதட்டி தூய்மைபடுத்தி அதை இன்றைய மனிதன் புரிந்துகொள்வது எப்படி.  முயற்சித்துப் பார்ப்பது எப்படி என்று விளக்கியுள்ளார்.  அதற்கான பயிற்சி முறைகளும், தனியே முயன்று பார்ப்பதற்க்கான வழிமுறைகளும் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் யோக சூத்திரம்,  சிவாவின் 112 தந்திரா யுக்திகள்,  விபாசனா தியான முறை, மற்றும் ஓஷோவின் பேச்சுகள் முழுவதிலும் பரவிகிடக்கின்ற விளக்கமான பழைய யுக்திகளின் இன்றைய செயல்முறைகள் ஆகியவை விழிப்புணர்வோடு முயற்சி செய்து பார்க்கத் தக்கவை.

3.இன்றைய மனிதனுக்கு வெளிப்படையான வாழ்க்கை முறை இல்லை. போலித்தனம் மிகுந்த நமது வாழ்க்கை முறையில் ஏராளமான அழுத்தங்களை நமது உடலிலும் உள்ளத்திலும் நாம் தேக்கி வைத்துள்ளோம். இதுவே நமது உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்க்கு எதிராக உள்ளது. நுண்ணுணர்வு அற்ற நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது. இவற்றை நீக்க ஓஷோ மேற்கத்திய நிபுணர்களின் ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டு பல்வேறு குழுச் சிகிச்சை, மற்றும் தனிச் சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ளார். இவை மூலம் நமது அழுத்தங்கள் நீங்கப் பெற்று தளர்வு நிலையை அடைவது எளிதாகிறது. அந்த நிலையிலிருந்து விழிப்புணர்வு அனுபவத்திற்க்கான முறைகளைச் செய்தால் அதை உணர்வது எளிதாக இருக்கும். இன்றைய மனிதனின், இன்றைய உலகத்தின் பரபரப்பான வாழ்க்கை முறையில், பழைய காலத்தைப் போல பல வருடங்களைப் பக்குவம் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் வாழ ஒதுக்க முடியாது. மேலும் இன்று மனிதனின் சுய புரிதலும் விஞ்ஞானத்தால் வளர்ந்துள்ளது. நுட்பங்களும் வளர்ந்துள்ளன. எனவே ஓஷோ சில நாட்களில், சில வாரங்களில் மிகப் பெரிய பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய குழு மற்றும் தனி மனித சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.  இதை அந்தந்த சிகிச்சை முறைகளின் நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற வழிகாட்டி மூலமாக செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறாக இன்றைய மனிதனின் இன்றைய நிலையில் அவனுக்கு தன்னிடமுள்ள விழிப்புணர்வை தொட்டுக் காட்டவும், அதைத் தெரிந்து கொள்ளப் பக்குவம் பெறவும், தெரிந்தவன் தனது வழியை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், பழமையான முறைகளின் உண்மை  ரகசியங்களை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் ஓஷோ பல்வேறு தியானங்களையும், முறைகளையும், பயிற்சிகளையும், விளக்கங்களையும், கொடுத்துள்ளார்.

அன்பு.

சித்.