ஓஷோவின் பாதை – பகுதி-3  

மற்றும் இலங்கைப் பிரச்சனை  

அன்பு வாசகர்களே!

இந்த மாதம் ஓஷோவின் 3 வது சிறப்பு அம்சமான “மனிதகுலத்தில் முதல்முறையாக ஞானம் பெற்ற பின் உள்ள வாழ்வு, வாழ்வியல் பற்றிய அவரின் அனுபவ பகிர்வு” என்பது குறித்து நான் எழுதுவேன் என நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்த 3வது சிறப்பு அம்சத்தை நீங்களேதான் ஓஷோவிடம் நெருங்கி வந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு  “உயிர் துடிப்புள்ள வாழும் சக்தி. “ எனவே அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு அவரது புத்தகங்களைப் படிப்பதும், அதைவிட அதிகம் அவரது பேச்சைக் கேட்பதும், அதைவிட அதிகம் அவரது வீடியோக்களைப் பார்ப்பதும், அதைவிட அதிகம் அவரது சந்நியாசிகளிடம் பழகுவதும், அதைவிட அதிகம் உங்களுக்குள் ஆழ்ந்து செல்வதும் உதவும்.

அடுத்து இன்றைய தேதியில் மிகவும் கொந்தளிப்பான விஷயமாக தமிழ்நாட்டில் இருக்கும் “இலங்கையில் பிரச்சனை” குறித்து பார்ப்போம். விடுதலைப்புலிகள் ஒரு பக்கம், இலங்கையின் சிங்கள அரசாங்கம் அதன் எதிர் பக்கம், சமாதானதூதுவர்கள் ஒரு பக்கம், வன்முறை போராட்டத்தை ஆதரிப்போர் அதன் எதிர் பக்கம், தமிழ் மக்கள் துயர் துடைக்க நிதி திரட்டும் ஆளும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம், அவர்களின் இயலாமையை பேசும் அரசியல்வாதிகள் அதன் எதிர் பக்கம், இப்படி பல்வேறு சண்டைகள் அதை ஒட்டி நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கைப் பிரச்னையை ஒட்டி இதிலெல்லாம் கலந்து கொள்ளாமல் வழக்கம்போல பெரும்பான்மை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினசரி உரையாடும் சுவாரசிய விஷயமாக ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வெற்றி பெறும் என நிச்சயமாகத் தெரியும் பக்கம் சாய காத்திருக்கின்றனர். மத்திய அரசாங்கம் அன்றாடம் ஒரு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபை அமெரிக்கா இந்த பிரச்னையை எழுப்பினால்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்கும். அதுவும்கூட அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரித்துப் போடும் தீர்மானமாகவே இருக்கும்.

ஆனால் உண்மை என்னவென்றால், மனிதர்களை மனிதர்களே கொல்கிறார்கள். அருகருகே உள்ள மனிதர்கள், ஒருவரையொருவர் நன்கு தெரிந்த மனிதர்கள், ஒருவரைக் கொல்ல மற்றொருவர் மதம் பிடித்து அலைகிறார். குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றோர், இப்படி எந்த பாகுபாடும் இல்லாமல் கொன்றுகொள்ளுமளவு கொலைவெறி மனிதனிடம் தாண்டவமாடுகிறது. கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனிதனிடம் உள்ள மிருகவெறி தூண்டிவிடப் பட்டு மிருகத்தை விடவும் மோசமான நிலைக்கு அவன் தள்ளப் பட்டிருக்கிறான். 

இது எப்படி நடந்தது? இது எப்படி நடக்கிறது? ஏனெனில் உலகின் பல பாகங்களிலும் இது போல நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதன் அடிப்படை என்ன? தவறு எங்கே இருக்கிறது? 

தவறு நமது சமுதாய அமைப்பில் இருக்கிறது. சுயநல கும்பலின் பேராசைக்கு அடிமைபட்டுப்போன நமது சமுதாய அமைப்பில் இருக்கிறது. ஆம். நாடு என்பது என்ன? இயற்கையான எல்லையா? ஆளும் வர்க்கத்தின் அதிகார வரம்புகளே நாட்டின் எல்லைகள். ஆனால் தேசப் பற்று என்ற பெயரால் எனது தேசம் என்ற போலியான, பொய்யான, நம்பிக்கை ஊட்டப்பட்டு மக்கள் வெறியேற்றப் படுகின்றனர்.  மொழி என்பதென்ன? கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவும் சாதனம். அவ்வளவே. ஆனால் எனது தாய்மெரழி என்ற போலியான பொய்யான நம்பிக்கையை ஊட்டி மக்களை மதம் பிடித்தவர்களாக்குகின்றனர். இவை அரசியல் வாதிகளின் தந்திரத்திற்கு உதாரணங்கள். மதவாதிகள் தங்கள் பங்குக்கு “இராமன் என் கடவுள்,”  “அல்லா என் கடவுள்,” என்று நம்பவைத்து மக்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்ள வழி செய்கின்றனர். ஆகவே அடிப்படை பிரச்னை மனிதனின் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை வளர்க்கும் சுயநல கும்பல்கள், மூட நம்பிக்கையில் மூழ்கி மதம் பிடித்திருக்கும் மக்களுக்கு பகுத்தறிவும் விஞ்ஞானமும் புகட்டாமலிருக்கும் நமது சமூக அமைப்பு.

மொழி, நாடு, மதம் போன்றவை நாம் வளர பயன்படும் சாதனங்கள். அவை பாதுகாக்கப்பட வேண்டியவை, வளர்க்கப்பட வேண்டியவை. ஆனால் அவை உயிர் உள்ளவை அல்ல. ஆகவே அவற்றிற்காக உயிரும், வாழ்வும் உணர்வும் உள்ள மனிதர்கள் அழிவதும், அழிக்கப்படுவதும் மடமையிலும் மடமை.

நான் ஒரு மனிதன். தமிழனும் முதலில் ஒரு மனிதன். சிங்களவனும் முதலில் ஒரு மனிதன். மனிதன் என்பது மட்டுமே உண்மையும்கூட. மற்றபடி நாடு, மொழி, நம்பிக்கைகளால் நாம் பெறும் உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அவை விளையாட்டாய், ஆனந்தமாய், வளர்ச்சிக்காக, பயன்படுத்தப் பட வேண்டும். ஆனால் அவைகளை உண்மையென நம்பி மதம் பிடிக்கக் கூடாது.

அப்படியானால் அதற்கு அடிப்படையில் நாம் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். நம்பிக்கைகள் இல்லாமல் வாழ்வை  நேருக்கு நேர் சந்திக்கும் உயிர்துடிப்புள்ள, பகுத்தறிவுள்ள, இணைப்புணர்வு கொண்ட(அதாவது அகத்திலிருந்து எழும் நம்பிக்கையுணர்வு, இது அடுத்தவர் சொல்லி வரும் நம்பிக்கையல்ல) மனிதர்களை, குழந்தைகளை, சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இல்லாவிட்டால், காலங்காலமாக நடப்பதுபோல, சுயநல அதிகாரகும்பல், ஏதாவதொரு நம்பிக்கை அடிப்படையில் மனிதர்களிடையே பிளவை ஏற்படுத்தி, அவனை மோதவிட்டு, அவன் அடிமையாகவும் இவர்கள் தலைவர்களாகவும் இருப்பது தொடரவே செய்யும்.

“புரிந்து கொள்ளும்வரை கேள்வி கேள், அனுபவத்தை அறியும்வரை நம்பாதே”

என்ற அடிப்படையில் நமது குழந்தைகளை வளர விடுங்கள். அது போதும், இந்த அராஜகங்கள் ஒழிய.

அன்பு.

சித்.