வணக்கமும் அன்பும்!

அன்பு நண்பர்களே,

சென்ற இதழில் ஓஷோ செக்ஸ் சாமியாரா என்று பார்த்தோம். இப்போது இவர் மீதுள்ள அடுத்த பழியான பணக்கார சாமியார், பணக்காரர்களின் சாமியார் என்பதைப் பார்ப்போம்.

ஓஷோவின் பூனா தியான ஓய்விடத்திற்கு கிளைகள் இல்லை. இருக்கும் பூனா தியான ஓய்விடம் கடனில் இயங்குகிறது. சமீபத்தில் கூட ஒரு சொத்தை விற்று விட்டார்கள். நமது மற்ற சாமியார்கள் ஆசிரமங்கள் எதுவும் சொத்தை விற்றதாக இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது நாம்.

ஓஷோ உடலில் இருந்த காலத்தில் இன்னும் மோசம். அப்போது ஏழு ஏக்கரே பூனா ஆசிரமத்திற்கு இருந்தது. தினசரி செலவுகளும் புத்தக வெளியீடுகளும் அங்கு வரும் ஓஷோ அன்பர்களின் தயவில்தான் நடந்து வந்தது. ஆனால் ஒருவிதத்தில் ஓஷோ பணக்கார சாமியார்தான். ஏனெனில் பெட்டியில் பணத்தை பூட்டி வைத்து, பாங்க் டெபாசிட்டாய், அசையா சொத்தாய், தங்கக்கட்டியாய், இன்ஜினீயரிங் மருத்துவ கல்லூரிகளாய் மாற்றி அதை கட்டிப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் சாமியார்கள் மற்றும் செல்வந்தர்கள் மத்தியில் ஓஷோ ஒரு செலவாளி. தினக்கூலிப் போல தினமும் கிடைப்பதை வாழ்வுக்கு செலவழிப்பார் அவர். அடுத்த நாளைக்கு சேர்த்து வைக்கும் பயம் அவருக்குக் கிடையாது.

அவர் 99 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்திருந்தார் என்பதாலேயே அமெரிக்கா கூட அவரை பணக்காரச் சாமியார் என்று பறை சாற்றியது. ஆனால் சத்தியமும் நேர்மையும் மக்களை ஈர்க்காததைப் பார்த்த ஓஷோ தன்னை திரும்பிப் பார்க்கச் செய்யும் தந்திரத்திற்காகவே மிகுந்த சிரமப்பட்டு, அத்தனை கார்களை வாங்கி நிறுத்தச் சொன்னார். அவற்றை அவர் ஒருபோதும் தன்னுடையது என்று உரிமை கொண்டாடியதில்லை. அதேபோலத்தான் அவரது வைரம் பதித்த வாட்சும் தொப்பியும். நண்பர்களே, அவற்றில் இருந்தவை வைரமல்ல, சாதாரண கலர் கற்கள். இந்த விவரங்கள் எல்லாம் அவரது பேச்சுக்களிலேயே இருக்கிறது. புத்தகங்களிலேயே இருக்கிறது.

மோஸஸ் கடவுளிடமிருந்து பத்து கட்டளைகளை சம்பாதித்தார், ஜீஸஸ் அவைகளை கட்டிக் காத்தார். ஓஷோ பழமையை ஒழித்து அவற்றை செலவு செய்து விட்டார் என்ற ஒரு வாசகம் அவரைப் பற்றி கூறப்படுவதுண்டு.

அது முற்றிலும் உண்மை.

ஓஷோ எந்த சொந்தக் கணக்கோ, சொந்தக் காரர்கள் பேரில் கணக்கோ, அறக்கட்டளையோ எதுவுமே ஆரம்பிக்கவில்லை. தனது ரூமில் தங்ககட்டிகளையோ பணப்பெட்டியையோ வைத்திருக்கவில்லை. வாழ்வில் ஆரம்பம் முதல் சுதந்திரமாய் வாழ்ந்தவர் அவர். கல்லூரி நாட்களிலேயே தந்தையிடம் பணம் பெறாமல் பகுதிநேர பணி செய்து படித்தவர் அவர். படித்து முடித்ததும் கல்லூரி பேராசிரியராக பத்து வருடங்கள் வேலை செய்தார் அவர். அதன்பின் கிட்டத்தட்ட 23 வருடங்கள் அவர் தனது படுக்கையறையிலேயே தான் காலம் கழித்தார். தினமும் பேசுவதற்கு மட்டுமே வெளியே வருவார். மற்றபடி அவசியத்தின் பொருட்டு சிலமுறை வெளியே வந்ததைத் தவிர அவர் இந்த உலகத்தை அனுபவிக்கும் விஷயமாய் எதிலும் ஈடுபட்டவரல்ல.

பதவிக்கும் பணத்துக்கும் அதிகாரத்திற்க்கும் அங்கீகாரத்திற்க்கும் புகழுக்கும் பெருமைக்கும் உறவுக்கும் என எதற்காகவும் அடிபணியாத, துதிபாடாத சுதந்திர மனிதர் அவர். குறைகளையும் நிறைகளையும் உள்ளது உள்ளபடி உணர்வதைக் கொட்டியவர் அவர். உள்ளூர் அரசியல், மதத்லைவர்கள் தொடங்கி, பிரதமர் வரை ஏன் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை பயமின்றி அடக்கமுடியாதவராய் புயல் புறப்பட்டது போல வாழ்ந்தவர் அவர். தனது அன்பர்கள் சொல்வதற்கு கூட அடிபணியாமல், பூனாவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறி விடுவேன் என்று வாழ்ந்தவர் ஓஷோ.

கம்யூனிஸ்டுகள், காந்தீயவாதிகள், ஜெயின் சமூகம், புத்த சமூகம், இந்துக்கள் கூட்டம், சீக்கியர் கூட்டம் என எல்லோராலும் புகழப்பட்ட அவர் உடனே அதில் உள்ள குறைகளை தாக்கிப்பேசி ஏச்சும் பெற்றார். தனிமனித சுதந்திரம், தன்னுணர்வு, காதல், அன்பு, நேசம், படைப்பு, அழகு, நடனம், இசை, இயற்கை, என உயர்ந்த விஷயங்களைப் போற்றி வளர்த்தவர் அவர். நம்பிக்கைகளுக்கு எதிராய் விஞ்ஞானத்தை வளர்க்கப் போராடிய அக விஞ்ஞானி அவர். அந்த ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்டவர் அவர். எந்த கொள்கையையும்கோட்பாட்டையும் கருத்தையும் முடிவையும் நெறிமுறையையும் கட்டாயத்தையும் ஏற்க மறுத்து கேள்விக்கணையாய் வாழ்ந்தவர் அவர்.

உணர்விலிருந்து வாழ்வை சந்திக்கிறேன், வாழ்கிறேன், ரசிக்கிறேன் என்று இருந்து அறிவுக்கு அதன் எல்லையை சுட்டிக்காட்டி அறிவை அடிமையாய்பணியாளனாய், சுகமான வாழ்விற்க்கான கருவியாய் எப்படி பயன்படுத்துவதென்று வாழ்ந்து காட்டியவர் ஓஷோ. இதயத்தின் நடனமாய், இருப்பின் தன்னுணர்வாய் ஆழத்தோடு வாழ்வின் அனைத்து சாத்தியங்களையும் வாழ்பவர் ஓஷோ. அறிவு ஒரு நுண்பொருள், மென்பொருள். அது அதனுடைய எல்லைதாண்டி எஜமானனாகி விடாமல் வாழ்ந்தவர் ஓஷோ. அப்படியிருக்கையில் பணம் ஒரு பருப்பொருள். வெறும் நமது உருவாக்கம். அவர் அதைப் பயன்படுத்தியவர், அதுவும் கிடைத்ததை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் அவர் என்று சொல்லலாமேயன்றி பணத்தின் மேல் பற்றுக் கொண்டவர் அவர் என்று யாராவது கணித்தால் அவர்களது சிந்தனை கூர்மையின்மையும் அறியாமையுமே அதில் வெளிப்படுகிறது.

உறங்கும் சமூகத்தை தட்டி எழுப்ப தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் பயன்படுத்தி அதற்காக எந்த ஒரு இழிச்சொல்லையும் தாக்குதலையும் ஏற்று சிரித்து வாழ்ந்தவர் ஓஷோ. அவரின் கோபம், சோகம், புலம்பல், அரட்டை, அக்கறை இப்படி எல்லாமே நம்மை தட்டி எழுப்ப அவர் செய்யும் தந்திரங்களேயன்றி அவருக்கானது எதுவுமில்லை.

ஓஷோ பேசவேயில்லை என்று எப்போதும் நான் கூறுவேன். எல்லோரும் இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது. ஏனெனில் கிட்டத்தட்ட 7000 மணி நேரம் பேசிய அவரின் பேச்சுப் பதிவுகள் வாங்கக் கிடைக்கின்றனவே என்பர். நான் கூறுவேன், காற்றில் அரசமரமும் மூங்கிலும் சவுக்கும் பைன் மரமும் ஓசை எழுப்புவதை அவற்றின் பேச்சென்று கூறமுடியுமா புல்லாங்குழலிலும் நாதஸ்சுவரத்திலும் எழும் இசையை அவை இசைப்பதாகக் கூறமுடியுமா. காற்றின் மோதலும் வாசிப்பவர் தாக்கமும் உள்ளே புகுந்து கிடைப்பது அது. அதுபோலவே நமது தாக்கத்தின் வெளிப்பாடே அவரது பேச்சுக்களே அன்றி, அவர் அவருக்காக, அவரது குடும்பம், விருப்பம், கொள்கை, நிறுவனம், அமைப்பு, ஜாதி, இனம், மதம் என்ற விதத்தில் பேசியது ஏதாவது இருக்கிறதா, இல்லையே, ஆகவேதான் அவர் பேசவேயில்லை என்கிறேன். அவர் ஆழ்ந்த மௌனத்தில் மையம் கொண்டிருக்கிறார். அதுதான் அவர் பகிர்ந்து கொள்ள விரும்புவதும். ஆனால் அதற்கு வழியேதும் இல்லாமல் நடப்பதை அனுமதித்து அமைதி காக்கிறார் – என்பேன்.

ஓஷோ செல்வந்தர்கள் பற்றிக் கூறிய ஒரு புது விஷயம் என்னவென்றால், அவர்களும் கலைஞர்கள் போன்றவர்களே, செல்வத்தை உருவாக்குவதும் ஒரு கலைதான். ஆகவே அவர்கள் கலைஞர்களைப் போல நடத்தப்பட வேண்டும். கம்யூனிசம் சொல்வது போல கொலை செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்களது திறனால் சமூகத்தில் செல்வம் சேரும். எல்லோரும் அதனால் பயன்பெறலாம். அதற்கு ஏற்ற சமூக அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இருக்கும் டாடா, பிர்லாவை ஒழிப்பதால் பயனில்லை, ஊருக்கொரு டாடா, பிர்லா, அம்பானி உருவாக வேண்டும். அப்போதுதான் வறுமை ஒழியும் என்றவர் அவர். இது ஒரு உண்மை, இதை ஓஷோ சொன்னார், அவ்வளவே. மேலும் உண்மையில் இப்போதுள்ள செல்வந்தர்கள் எல்லாம் பயமும், பற்றும், பாதுகாப்பும் தேடும் பிச்சைக்காரர்களின் மனத்தையே கொண்டவர்களாயிருக்கிறார்கள் என்கிறார் ஓஷோ. செல்வம் சேர்த்து வைப்பதல்ல, செலவழித்து சுவைப்பது என்பவர் ஓஷோ. அதை உற்பத்தி செய்யும் திறன் உள்ளவர்கள் அதை பிடித்து வைத்துக் கொள்ளக்கூடாது. பணம் கைமாறிக்கொண்டேயிருப்பதே அதன் பயன்பாடு என்பவர் ஓஷோ.

ஓஷோவின் வாழ்வில் அவரது செயல் என்று சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று அவரது படிப்பு. அவரது பள்ளிப் பருவத்திலேயே அவர் படித்த காடர்வாடா என்ற மத்தியப்பிரதேசத்திலுள்ள டவுனின் லைப்ரரியிலுள்ள 3000 புத்தகங்களையும் ஓஷோ படித்து விட்டதோடு வீட்டில் அறை நிறைய புத்தகங்களோடு இருந்தார். அவரது பூனாவிலுள்ள லா வோட்ஸூ என்றழைக்கப்படும் அவரது தனிமனித லைப்ரரியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் உள்ளன. அவைகள் தத்துவம், மனோதத்துவம், இலக்கியம் வரலாறு, விஞ்ஞானம், கலை, அரசியல், கவிதை ஆகிய தலைப்புகளில் வெளிவந்த புத்தகங்களின் தொகுப்பு. இவை அடுக்கி வைக்கப்பட்டுள்ள கண்ணாடி அலமாரிகளின் மொத்த நீளம் இரண்டு கி.மீ. அவரது பள்ளிப் பருவத்தில் ரவீந்திரநாத் தாகூரையும், கார்ல் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் மற்றும் ஏனைய கம்யூனிச புத்தகங்களை விரும்பிப் படித்தார். தீவிர கம்யூனிஸ்ட் என்பதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் அச்சுறுத்தப்பட்டார். கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பவராகவும் அப்போது அவர் இருந்தார். அந்த நாட்களிலேயே ஒரு சொந்த லைப்ரரியை அவர் தனது அறையில் அமைத்துக் கொண்டார். 

14 முதல் 21 வயது வரையிலான காலத்தில் மிக அதிகமாகப் படித்தார். தியான யுக்திகளையும் பரிசோதித்துப் பார்த்தார். அந்நாட்களில் வருமானத்திற்காக ஹிந்தி பத்திரிக்கைகளில் கதைகள் எழுதினார். உதவி ஆசிரியராகவும், நவ பாரத் பத்திரிக்கை மொழி பெயர்ப்பாளராகவும் பகுதி நேர பணியாற்றினார். அவரது புத்தகத் தொகுப்பைப் பற்றிய ஆராய்ச்சியில் 17 ஆண்டுகள் ஈடுபட்டு அறிக்கை தந்த பிரிரி வால்ட் என்ற ஓஷோவின் இயக்கம் சாராத ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி ஓஷோ 1981 வரையிலான காலத்தில் 1,50,000 முதல் 2,00,000 வரையிலான புக்கங்களைப் படித்துள்ளார். அவரது அதிக அளவு படிக்கும் பழக்கத்தால் போட்டோ எடுப்பது போல நினைவைப் பதிவு செய்யும் ஆற்றலும் அவரிடம் வந்தது. மேலும் அடிக்கோடிடுவதும், கலர் கலரான புள்ளிகள் வைத்து பக்கங்களின் ஓரத்தில் குறியீடு செய்வதும், புத்தகத்தை படித்து முடித்தவுடன் கடைசி பக்கத்தில் கலர்கலராக கையெழுத்திட்டு தேதி போடுவதும், பல சமயங்களில் தனது கையெழுத்தோடு சேர்த்து ஓவியம் தீட்டுவதும், புத்தகத்தின் முக்கிய குறிப்புகளை எழுதுவதும் செய்துள்ளார்.

தனது முதுகலை பட்டபடிப்பை சாகர் பல்கலைக்கழகத்தில் செய்த ஓஷோ அந்த இரண்டாண்டுகளில் பெரும் பகுதியை பல்கலைக்கழக லைப்ரரியிலேயே செலவிட்டார். இந்த புத்தகம் படிக்கும் பழக்கதால் ஓஷோ பள்ளிப்பருவம் முதல் முதுகலை முடிக்கும்வரை வகுப்புகளுக்கு சரியாக சென்றதேயில்லை. பிறகு ஜபல்பூரில் பேராசிரியராக ஏறத்தாழ வேலை செய்த 10 வருடங்களிலும் ஓஷோ அங்கிருந்த ராணி துர்க்காவதி பல்கலைக்கழக நூலகத்தை முழுதாகப் பயன்படுத்துபவராக இருந்தார். வாரம் 50 முதல் 100 புத்தகங்கள் படிப்பார் என்று அவற்றை எடுத்துக் கொடுக்கும் ராம் சந்திர நாயக் என்ற லைப்ரரியன் கூறுகிறார். இது தவிர ஓஷோ ஏராளமான புத்தகங்களை வாங்கியும் படித்து வந்தார்.

ஓஷோ ஜபல்பூரிலும், மும்பையிலும் பழைய புத்தக கடைகளுக்கு தானே சென்று புத்தகங்களை அலசி வாங்குவது வழக்கம். அவரது பக்க ஓரக்குறிப்புகள் 5வது வகுப்பு வரை ஹிந்தியிலும், அதன்பின் ஆங்கிலத்திலும் உள்ளன.

ஓஷோ எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசியுள்ள பேச்சுகளில் தத்துவம், மதம், மனோதத்துவம், தர்க்கம், பக்தி, இலக்கியம், கவிதை, பழமைநூல்கள், புதிய நூல்கள், கிழக்குநாடுகளைச் சேர்ந்தவை, மேற்கு நாடுகளைச் சேர்ந்தவை, கலை, அரசியல், கிரேக்கம், கம்யூனிஸம், சூபியிஸ நூல்கள் இப்படி எல்லாமே விரவிக் கிடக்கின்றன.

ஆனால் ஓஷோ ஒரு புத்தகம்கூட எழுதவில்லை. அவரது இயல்பான முன்னேற்பாடற்ற பேச்சுகளே அவரின் 600 புத்தங்களாக வெளி வந்துள்ளன. ஓஷோ தனது 14 வது வயதில் பிரயாஸ் என்ற கையெழுத்து பத்திரிக்கையை ஆரம்பித்தார். பின் முகுல் என்ற அச்சிட்ட பத்திரிக்கையை கல்லூரி நாட்களில் துவக்கினார். அதிலேயே கலீல் கிப்ரான், காந்தீயம், இயற்கை, தலையங்கம், நகைச்சுவைத்துணுக்குகள், கவிதை என எல்லாம் இருக்கிறது. வந்த அனைத்தும் அவரது படைப்புகளே. இதன்பின் அவரது பேச்சுகள் சிறுசிறு வெளியீடுகளாக 1955 முதல் வர ஆரம்பித்து விட்டன. 

ஓஷோ தான் உலகிலேயே மிகப்பெரிய தனிமனித லைப்ரரியை வைத்து இருந்தார். அவரது பேச்சுகளிலிருந்து தொகுக்கப்பட்ட அவரது புத்தகங்கள் 2004 ஆம் ஆண்டில் 60 இலட்சம் விற்றதாக கணக்கெடுப்பு சொல்கிறது. 2005 வரை மொத்தமாக கணக்கிட்டால் கிட்டத்தட்ட 2,50,00,000 புத்தகங்கள் அவருடையது விற்பனையாகி உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. 46 மொழிகளில் அவரது புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓஷோவின் ஒரிஜனல் பேச்சுக்கள், எம்.ஜி.எம் போன்ற மிகப்பெரிய ஹாலிவுட் கம்பெனிகளின் ஆடியோ மற்றும் படப்பதிவுகள் பாதுகாக்கப்படும் மிகப் பாதுகாப்பான எந்த பாதிப்புக்கும் உள்ளாகாத ஒரு இடத்தில் வட அமெரிக்காவில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.

ஓஷோவின் அனைத்து புத்தகங்களும் அனைத்து ஆடியோ பேச்சுக்களும் பெரும்பாலான வீடியோ பேச்சுக்களும் இன்று இணையதளத்தில் பார்க்கவும் கேட்கவும், புரிந்து கொள்ளவும் கிடைக்கின்றன. 

இந்தியப் பார்லிமெண்ட் லைப்ரரியில் இரண்டு மனிதர்களின் புத்தகத் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒன்று மாகாத்மா காந்தி, மற்றொன்று ஓஷோ. 

ஓஷோவிடம் தேடலுடன் வந்தவர்களில் 95 சதவிகிதம் நடுத்தர வர்க்கத்தினர்தான். படித்த, வாழ்வில் ஆராய்ச்சியும் தேடலும், தன் தனித்தன்மையை உணர்ந்தவர்களும் ஆன தனிமனிதர்கள் இவர்கள். பெரும் பணக்காரர்களும் வசதியற்ற ஏழைகளும் சமுதாயத் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள். சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் என நமது சமூக நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே பதட்டமானவர்கள். ஒருவருக்கு இழப்பு பயம், ஒருவருக்கு எப்படியாவது பணத்தை பெற்றுவிடும் வெறி. இந்த இரு சாரரும் ஓஷோவிடம் வரவில்லை. வர முடியாது. இவர்கள் நமது தவறான சமூக அமைப்பின் பாதிப்பு.

ஓஷோவிடம் வந்தவர்கள், வருபவர்கள் எப்போதுமே சமூகத் தாக்கத்திலிருந்து விலகி தனது வாழ்வை தேடும் சுய மரியாதையும் சுயசிந்தனையும் தன்னுணர்வும் கொண்ட தனி மனிதர்களே.

ஆகவே ஓஷோ பணக்காரர்களின் சாமியாராக என்றுமே இருந்ததில்லை. மேலும் ஓஷோ தனது இறுதி நாட்களில் கம்யூனை இந்தியாவிலேயே அமைத்தார். ஜப்பான், ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் உலகில் இந்தியாவில் எனது கம்யூன் இருப்பதே சரி. ஏனெனில் எனது நண்பர்கள் பணம் படைத்தவர்களல்ல. அவர்கள் வந்து செல்ல இந்திய நாடே ஏற்றது என்றார். என்னை இங்கிருந்து வெளியேற்ற முடியாது, இது நான் பிறந்த நாடு என்பதும், இந்தியாவில் ஒரு ஆழமான ஆன்மீக உணர்வு என்றென்றும் பரவிக்கிடக்கிறது என்பதும் கூட காரணங்கள்தான் என்றாலும் நடைமுறையில் இது பணக்கார நாடு இல்லை வாழ்க்கைச் செலவு குறைவு என்பதும் ஒரு காரணம் என்றார். 

அதேபோல ஓஷோ பூனா கம்யூனின் பின்புறம் ஏற்படுத்தப்பட்டுள்ள – ஓஷோ தீர்த் சோலை – அவரது பணம் பற்றிய அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான கோடிக்கணக்கில் பணமுள்ள ஆசிரமங்கள் கூட மேலும் மேலும் சொத்து சேர்க்கவே ஆசைப்படுகின்றன. கட்டிடங்கள் கட்டுவது, இடம் வாங்குவது, கிளைகள் திறப்பது, கல்லூரிகள் துவங்குவது, பெயர், புகழ், கூட்டம் ஆகியவற்றுக்காக மரம் நடுகிறேன், ஏழைகளுக்கு சேவை செய்கிறேன் என்று விளம்பரம் தேடுவது என்றே இருக்கின்றன. ஆனால் பெரும் பண வசதியோ, வருமானமோ இல்லாத ஓஷோவின் பூனா கம்யூன் அவரது தூண்டுதலால் மண்ணை வளப்படுத்தி சோலையாக்கும் திட்டமாக மாநகராட்சியிடமிருந்து நகரின் சாக்கடைத் தண்ணீர் ஓடும் நீண்ட பாதையை குத்தகைக்கு எடுத்து ஏறத்தாழ 20 கோடி செலவில் அந்த இடத்தை இனிய சோலையாக்கியுள்ளது. சாக்கடை நீரே இயற்கை வழியில் தூய்மைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அந்த இடம் 200 வருடங்களுக்கு முன் இருந்த அளவு வளப்படுத்தப்பட்டுள்ளது இயற்கை முறையில். மக்கள் மகிழும் அடர்ந்த சோலையாக மாறியுள்ளது சாக்கடைக் கால்வாய். உலகம் முழுவதும் பூமியை வளப்படுத்த கூட்டங்களும், தீர்மானங்களும், துவக்க விழாக்களும் மட்டுமே அரசியல், மதத்தலைவர்களால் நடத்தப்பட்டு வரும் சூழலில் 20 வருடங்களுக்கு முன்பே அமைதியாக அதை செயல்படுத்தியவர் ஓஷோ. ஆகவே அவர் பணத்தின் மீது ஈடுபாடு கொண்டவரல்ல. வாழ்வின் மீதும், இயற்கையின் மீதும், வாழ்தலின் பேரிலும் கரைந்து அனுபவித்து வாழ்தலிலும் ஈடுபாடு கொண்டவர். கிடைத்ததை இனிதே ஆனந்திப்பவர் அவர்.

ஓஷோ விலையுயர்ந்த வைரங்கள் பதித்துள்ள தொப்பியும் கைகடிகாரமும் அணிந்துள்ளார் என்பது ஒரு குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல, அவை வெறும் விலைபோகா கற்கள்தான். வைரங்களல்ல. அவரது அன்பர் ஒருவர் ஓஷோவிடம், நீங்கள் இப்படி விலைபோகா சாதாரண கற்களை ஏதோ வைரங்கள் போல அணிந்துகொள்வது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஓஷோ சிரித்துக் கொண்டே இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது. இந்த கற்கள் எனது அன்பன் ஒருவனால் தனது உழைப்பினாலேயே தயாரிக்கப்பட்டு எனக்கு அன்போடு பரிசாக அளிக்கப்பட்டவை. அதனாலேயே நான் அணிகிறேன். அன்போடு அளிக்கப்பட்ட இவைதான் என்னைப் பொருத்தவரை விலைமதிக்க முடியாதவை. என்கிறார்.

மேலும் ஓஷோவை தேடுபவர்கள், நாடுபவர்கள், படிப்பவர்கள், கேட்பவர்கள் நடுத்தர மக்கள்தான். கல்வியும், ஆராய்ச்சியும் உள்ளவர்கள்தான். இதற்கு அத்தாட்சியாக இன்று தேடுபவர்களின் கருவூலமாக இருக்கும் – இணைய தள காகுள் தேடலில் – ஓஷோவைத் தேடினால் 1,73,00,000 இணையதளங்கள் வருகின்றன. அவரது பேஸ்புக் 3,50,000 நபர்களால் தாங்கள்  விரும்பும் இணையதளமாக பதிவுசெய்யப் பட்டுள்ளது. டுவிட்டரில் 28,000 நபர்கள் அவரது இணையதளத்தைத் தொடர்கிறார்கள்.

இவ்வளவு ஏன். நான் ஓஷோ தியான மையம் 1982 முதல் 1995 வரையும், பின்னர் 2008 முதல் இன்றுவரையும் நடத்தி வருகிறேன். பல்லாயிரம் பேர் கடந்து போயிருக்கிறார்கள். இதில் தியானம் செய்ய தயாராய் வந்த செல்வம் படைத்தோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். தாகத்தோடும், தேடுதலோடும் வருபவர்கள் எல்லாம் சமூகத்தின் கூட்டத்தன்மை கடந்த பணம் பெரிதும் அற்ற தனிமனிதர்கள்தான். பணம் படைத்தவர்கள் இந்த – ஓஷோ சாஸ்வதத்தை – பெரிதாக்க, வியாபார ரீதியில் வளர்த்த முதலீடு செய்ய விரும்புபவர்களாகவே இருக்கின்றனர். வசதியை கூட்டி வருபவர்களை ஈர்த்து வருமானம் பார்க்க உங்களிடம் சரக்கு இருக்கிறதே, ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள் என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. 

ஓஷோ வாழ்வியல், ஒரு இயக்கம். அது இயங்குபவர்கள் மத்தியிலேயே இருக்க வேண்டும். நான் என்ற இறுமாப்பில் இறுகிவிட்டவர்களின் கையில் இது போனால் இதுவும் மக்களை சுரண்டும்விதமாய் மாற்றப்பட்டுவிடும். தனிமனிதனாய் மக்கள் கூட்டத்தின் ஆறுதலிலும், போதையிலும் வீழ்ந்துவிடாதவனாய் தேடலுடன் உள்ளவர்களுக்கே உரியவர் ஓஷோ. இப்படி உள்ளவர்களிடம் பணம் வரும், போகும், ஆனால் அவர்கள் பணக்காரனாய் வாழ்வதில்லை. மாறாக வாழ்வை வாழ பணத்தை பயன்படுத்துபவர்களாகவே இருப்பர்.

ஆகவே ஓஷோ பணக்கார சாமியாரோ, பணக்காரர்களின் சாமியாரோ இல்லை. இதயத்தில் வாழும், இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும், துணிவும், சுதந்திரமுமே என்னைப் பொருத்தவரை வாழ்வின் செல்வங்கள் என்று சொல்பவர் ஓஷோ.

வாழ்வை உள்ளும் புறமும் முழுமையாக வாழ்ந்து ஆனந்திப்போம்.

வருக, வருக. 

அன்பு,

சித்.