வணக்கமும் அன்பும்!

அன்பு நண்பர்களே,

ஒரு நண்பர் வந்திருந்தார். ஓஷோவின் கருத்துக்கள் அத்தனையும் உண்மை. அவர் தியானம் செய்யச் சொல்லும் தியானங்களும் உயர்ந்தவைதான். ஆனால் தியானம் மட்டும் என்னால் செய்ய முடிவதில்லை என்றார்.

இது போன்றவர்கள்தான் ஓஷோவைப் படிப்பவர்களில் பெரும்பகுதியினர். இவர்கள் நம்மால் தியானம் செய்ய முடியவில்லையே என்று வருந்துகின்றனர் அல்லது தியானம் செய்யத் தேவையில்லை என்று வாக்குவாதம் செய்கின்றனர்.

முதலில் தியானம் என்று ஓஷோ குறிப்பிடுவது எதை என்பதை பார்ப்போம். அன்பில், படைப்பில், கலையில் என வாழ்வில் கரைந்துவிடத் தெரிந்தவர்களுக்கு தியானப் பயிற்சிகள் தேவையில்லை. அவர்கள் தங்களுக்கு நிகழ்வதைக் குறித்த விழிப்புணர்வோடு இருப்பதே அவர்களை மேலும் மேலும் கரைத்துவிடும் என்கிறார் ஓஷோ.

தியானம் என்பது முதலில் ஒரு செயல் அல்ல. அதைச் செயலாக நினைப்பதுதான், செயலாக செய்ய முயற்சிப்பதுதான் பிரச்சனை. தியானம் ஒரு உணர்வு நிலை. அந்த பிரபஞ்சவுணர்வு நிலை நமது மையம். அது எப்போதும் நமது ஆழத்தில் இருக்கிறது. அதை மறந்து விலகிவிட்ட நாம் திரும்ப அதைத் தொடுகிறோம். அவ்வளவுதான். அதற்கு உதவும் சூழலை ஏற்படுத்தி உதவ முயற்சிப்பவையே தியானப் பயிற்சிகள். ஆகவே தியானப் பயிற்சிகள் தியானமல்ல என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது அதை செய்வதில் உள்ள இறுக்கம், கட்டாயத்தன்மை போய்விடும். அப்போது நீங்கள் விளையாட்டாய், உங்கள் உணர்வுப்படி, உங்களுக்கு பிடித்ததை, ஈடுபாட்டோடு ஆனால் விளையாட்டாக செய்வீர்கள். அப்படிச் செய்யும்போது இது போன்ற தியானப் பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தன்மையோ, செய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சியோ ஏற்படாது.

ஆனால் தியானப் பயிற்சிக்கும் தியானத்திற்க்கும் நேரடித் தொடர்பில்லை என்று தியானவுணர்வுக்கு எந்த வித்திலும் முயற்சி செய்யாமல் இருப்பதும் தவறு. இது எப்படியென்றால், நமக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனை செல்கிறோம். பரிசோதனைகள் பல செய்து பார்த்ததில் நமது உடலின் உள்ளே கேன்சர் கட்டி ஒன்று இருப்பதும் அது தினசரி வளர்ந்து வருவதையும் நாம் கண்டுகொள்கிறோம். மருத்துவர் உடனடியாக ஆபரேஷன் செய்வதே சாலச் சிறந்தது என்கிறார்.

இது நமது இருப்பு நலத்திற்க்கும் பொருந்தும். நமது இருப்பில் அமைதியும் சந்தோஷமும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அன்பும் படைப்பும் கருணையும் காதலும் இல்லை யென்றால் நாம் நலமாக இல்லை. ஓஷோ டாக்டர் உள்ளே வளர்ந்துள்ள வளர்ந்து கொண்டே இருக்கும் மனம் என்னும் பெயரிடப்பட்டுள்ள கட்டியைச் சுட்டிக் காட்டுகிறார். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து இருப்பின் ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டே இருக்கிறது. வன்முறை, கோபம், பொறாமை, சூழ்ச்சி, அரசியல், போலித்தனம், ஏமாற்றல், துரோகம், இப்படி எண்ணற்ற நோய்கள் இதன் பக்க விளைவுகளே. ஆகவே உடனடியாக ஆபரேஷன் அவசியம். அதன்பின்தான் இருப்புணர்வு என்ற ஆரோக்கியம் கிடைக்கும். அப்படி வாழும்போதுதான் பிரபஞ்சவுணர்வை நாம் தொடுவோம் என்கிறார்.

ஆனால் நாம் சுயசிந்தனை இழந்து, சுயவுணர்வும், சுயமரியாதையும் இழந்தவர்களாய் இருக்கிறோம். ஆகவே நாம் ஆபரேஷனை தள்ளிப் போடுகிறோம். பல முக்கிய வேலைகள் இருப்பதாகக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நாளைக்கு…….. நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறோம். கேன்சர் கட்டி உள்ளேயிருப்பது தெரிந்தும் அதோடு வாழ்ந்த பழக்கமே நமக்கு இருப்பதால் அதை எடுத்துவிட்டால் இன்னும் ஆபத்தாகிவிடுமோ என்று பயப்படுகிறோம். அப்படியே இருக்கட்டும், அப்படியே சமாளிக்க ஏதாவது மருந்து கொடுங்கள் என்று கேட்கிறோம். அப்படி மயக்க ஊசிகளாக, ஆறுதல் ஆலோசனை சொல்பவர்களே இன்று ஆன்மீக சந்தையின் வியாபாரப் போட்டியில் கடை விரித்துள்ள சுவாமிகள். ஓஷோ அப்படியல்ல. உள்ளதை உள்ளபடி சொல்லும் மருத்துவர். உயிர் போகும் ஆபத்து இருந்தாலும் ஆபரேஷன் செய்து கொள்ளாமல் நீ வாழ முடியாது என்பவர். அந்த ஆபரேஷன் தியானவுணர்வு அனுபவத்தை தொட்டுப் பார்க்க எடுக்கப்படும் முயற்சிகளே. அவை தனிப்பட்ட தியான பயிற்சிகளாகவோ, வாழ்வியல் நடைமுறையில் கொள்ளும் மாற்றங்களாகவோ, வெறுமனே செயலற்று உணர்வுப் பெருக்கமாக அமர்ந்திருப்பதாகவோ எப்படியும் இருக்கலாம். ஆனால் தானாகவே கேன்சர் கட்டி மறைந்துவிடும் என்று நினைத்து அதை மறந்தும் மறைத்தும் மயக்க ஊசி மந்திரங்களைப் போட்டுக் கொள்வதும், ஆன்மீக ஈகோ போதையில் மூழ்குவதும் எந்த பயனையும் தராது. முழு முயற்சி, நூறு சதம் உயிரைப் பணயம் வைத்து ஆபரேஷன் செய்து கொள்வதே ஒரே வழி என்பவர் ஓஷோ.

ஆகவே நண்பர்களே,

தயக்கத்தையும், உறக்கத்தையும், பயத்தையும் உதறித் தள்ளிவிட்டு தியானம் நிகழ அக ஆபரேஷன் தேவை என்பதை உணருங்கள். ஆபரேஷனில் ஏராளமான வகைகள் உண்டு. அவை அனைத்தையும் பட்டியலிட்டு மெருகேற்றி புதுப்பித்துக் கொடுத்துள்ளவர் ஓஷோ. ஆயிரக் கணக்கான தியான பயிற்சிகள் – நெத்தியடியாக உன்னை வீழ்த்தி ஆபரேஷன் செய்யும் அவரது பேச்சுகள் கூட ஆபரேஷன்தான். அதை தினசரி கேட்பது கூட ஆபரேஷன் நடப்பதுதான். அவரது உடலசைவுகள் கண்கள் என எல்லாவற்றையும் ஆபரேஷன் கருவிகளாக மாற்றிக் கொண்டவர் அவர். ஆனால் நான் சுட்டிக் காட்ட விரும்பும் அடிப்படை விஷயம், நீ ஆபரேஷன் நடக்க அனுமதிப்பவனாக மாற வேண்டும், அதற்குத் தயாராக வேண்டும். அதை விடுத்து பழைய வாழ்க்கையை இழக்க மாட்டேன். என்றால் தியானம் நிகழ வாய்ப்பேதும் இல்லை. நான் இப்படியே நன்றாகத்தான் இருக்கிறேன். கேன்சர் கட்டிக்கு இந்த போதை மருந்தே போதும், வலி காணாமல் போய் விட்டது. ஆபரேஷன் தேவையில்லை என்று நினைத்தால் நீங்கள் ஆன்மீக வியாபாரிகளிடம்தான் மாட்டிக் கொள்வீர்கள்.

ஆரோக்கியத்திற்கு எனது தியானப் பயிற்சிகள் மட்டும் போதாது, அதற்கு உட்படுத்திக் கொண்டு ஆபரேஷன் நிகழ அனுமதிப்பது மட்டும் போதாது, அதன்பின் அது மீண்டும் வராத முறையை கண்டுபிடித்து அதை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும் உன்னுடையதே என்பவர் ஓஷோ.

இரண்டாவதாக உள்ள பிரச்சனை நான் இப்போதே ஓ.கே. தானே. முழு ஆரோக்கியமில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் போல சராசரியாக இருக்கிறேன் தானே. ஏன் தியான அனுபவத்திற்கு முயற்சிக்க வேண்டும் அது வரும்போது வந்து விட்டுப் போகிறது. அதுவரை நான் ஏன் பணம், புகழ், அந்தஸ்து, ஈகோ என அலையக் கூடாது

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது பசியும் செக்ஸூம், இறப்பு பயமும் மட்டுமே மனிதனின் அடிப்படை உணர்ச்சிகள் அல்ல. மனிதனின் உயிர்வாழும் உந்துதலே அவனது அடிப்படை உணர்வு என்ற மேற்கத்திய சித்தாந்தம் உண்மையல்ல.

அவனது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்க்கும் ஒரே காரணம் அவனுள் உள்ள உயிர் வாழும் உந்துதல். பசி என்பதும் அதுதான். அதனால்தான் பசி வந்தவுடன் எல்லாக் கட்டுப்பாடுகளும் கழன்று விடுகிறது. செக்ஸ் கூட ஒரு இனத்தின் உயிர் வாழும் உந்துதல்தான். பசி தனி மனிதத் தேவை, செக்ஸ் ஒரு இனத்தின் தேவை. மேலும் மனிதனிடம் காணப்படும் ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆகிய அனைத்திற்க்கும் காரணம் அவனது பயம்தான். இதுதான் மேற்கத்திய சித்தாந்தம். அவர்களின் மனித வாழ்வைப் பற்றிய கண்டுபிடிப்பு. ஆனால் அது அவ்வளவு உண்மையல்ல. மேம்போக்காகப் பார்த்தால் இது உண்மை போலத் தெரியலாம்.

ஆனால் மனிதனின், ஏன் எல்லா உயிர்களின், ஏன் உயிர்நிலை அடையாதவற்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த முழு பிரபஞ்ச இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியின் வேராக இருக்கும் அடிப்படை உந்துதல் எதுவென்றால் – தேடல். இழந்த நிலையை, இழந்த வீட்டை, இழந்து விட்ட சுகத்தை, தேடுதல். முழுமையிலிருந்து பிரிந்து விட்ட துன்பம். முழுமையில் மீண்டும் சங்கமிக்கும் இன்பத்தின் தேடல். இந்தத் தேடல்தான் இந்த பிரபஞ்ச இயக்கத்தின் சித்தாந்தம். மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாவற்றின் உள் மையத்திலும் பிரபஞ்ச இருப்பு உணர்வே, பிரபஞ்ச தன்னுணர்வே மைய சக்தியாக இருக்கிறது. ஆனால் உருவ மாறுபாட்டில் தோற்ற மயக்கத்தில் தன்னை தனியாக நினைத்து விளையாட ஆரம்பித்து விட்டதன் சிக்கலில் விளைந்ததே இந்த தேடல்.

இதனால்தான் தேடலில் மையத்தைத் தொட்ட ஞானிகள் எல்லோரின் முதல் வெளிப்பாடும் சிரிப்பாகவே இருந்தது. அவர்கள் இந்த தேடலை, இயக்கத்தை லீலை என்றனர். மேலும் இந்த ஆழ்ந்த மையத்தின் ஆற்றலிலேயே அனைத்தும் நடப்பதால் தான் இந்த பிரபஞ்சத்தில் அழகு இருக்கிறது.

சுயகட்டுப்பாடற்ற எதிலும் ஏற்படும் குறைபாடு அதில் அழகு அழிந்து விடும். ஒழுங்கு அதில் இருக்க முடியாது. ஒழுங்கற்ற கியாஸ்தான் இந்த பிரபஞ்சம் என்ற மேற்கத்திய கருத்து அடிப்படையிலேயே தவறு. ஏனெனில் ஒழுங்கற்ற ஒன்றிலிருந்து ஒழுங்கான ஒரு இயக்கம் சாத்தியமில்லை. ஆனால் பிரபஞ்சத்தில் எல்லாமே கணக்கிட்டுப் பார்க்கக் கூடிய துல்லியமான ஒழுங்குப்படி நடக்கிறது. மனிதனின் பல்லாயிரம் கண்டுபிடிப்புகள் இதையே நிரூபிக்கின்றன.

மனிதனின் தர்க்க சிந்தனையில் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது. எப்போதாவது இயற்கையில் ஒழுங்கற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. சுனாமி போல, நிலநடுக்கம் போல. ஆனால் அதுவும் ஒழுங்கு சிதறுவிடாமல் இருக்க இயற்கை செய்து கொள்ளும் சமன் செய்யும் நிகழ்வுதான் என்று விஞ்ஞானிகளே கூறுகின்றனர்.

ஞானிகள் இந்தப் பிரபஞ்சத் தேடலை கடலின் அலைகளில் ஏற்படும் நுரைகளுக்கு ஒப்பிட்டனர். கடலின் நுரை நிறம் மாறி, சூரிய ஒளி ஊடுருவலில் கலர் கலராக கடலின் தண்ணீருக்கு சம்பந்தமில்லா உருவம் எடுக்கிறது. அது தன் உருவத்தோடு தன்னை கற்பனை செய்து கொண்டு தனிப்பட்ட வாழ்க்கை போராட்டத்தை ஆரம்பிப்பதுபோலத்தான் இப் பிரபஞ்ச உருவங்களின் நிலையும். ஆனால் நுரை அடிப்படையில் கடலின் பாகமே. அதை கடல் அறியும். நுரை அறியாது. ஆனால் நுரையின் மையம் கடலின் பாகமாகவே செயலுறும். கடலுணர்வு அங்கு எப்போதும் இருக்கவே செய்கிறது. நுரையின் கற்பனையிலேயே அது தனியாக தன்னை நினைத்து போராடுகிறது. அந்த நினைவிலும் ஒரு தேடல் இருக்கிறது. திரும்பவும் கடலோடு ஐக்கியமாகும் தேடல் இழுக்கிறது. இந்த தேடலுணர்வு, இந்த தாகம்தான் இயக்கத்தின் மைய சக்தியாக இருக்கிறது. இது மனிதனில் மேலோங்கி நிற்கிறது.

மேலும் மறந்து விட்ட பிரபஞ்ச இருப்புணர்வை திரும்பவும் அறியும்போது பேரானந்தம் ஏற்பட காரணம் இதுதான். தேடல் முடிந்து வீடு திரும்பிய சுகம் அது. ஆனால் அது முடிவல்ல. அடுத்த பயணத்தின் ஆரம்பம் இது. ஆகவே ஞானம் ஒரு வாசல். ஞானம் ஒரு வீடு. ஓய்வெடுத்து ஆனந்தித்த பின் முதலில் சென்றதை விட ஒரு நீண்ட பயணம் ஆரம்பமாகும்.

தாயை தொலைத்து விட்ட குழந்தை திரும்ப தாயைக் கண்டுவிட்ட சுகம் இது. மறுபடி குழந்தை விளையாடப் புறப்படும்தான். அதுதான் இயற்கை. ஆனால் இப்போது அழுகை இருக்காது. பதிலாக ஆனந்தமாக இருக்கும். செயலில் பதட்டம் இருக்காது, மாறாக அது விளையாட்டாய் மாறிவிடும். தாய் இருக்கிறாளா என்று மட்டும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொள்ளும். அதுதான் மையவுணர்வு. மையத்தை உணர்ந்துவிட்டால் இந்த வாழ்வு விளையாட்டாய் மாறிவிடும்.

அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தாலும் தேடல் ஆழத்தில் இருக்கும். குழந்தையை என்ன கொடுத்து சமாதானம் செய்தாலும் இது அழுகையை நிறுத்தாது. சாப்பிடும், பொம்மை கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். ஆனால் சிறிது நேரத்தில் மறுபடியும் அழ ஆரம்பத்துவிடும். தாய்க்கு எதுவும் ஈடாகாது. இப்படித்தான் மனிதன் எவ்வளவு போராடிப் பெற்றாலும், எந்த வெற்றியும் நிறைவைத் தருவதில்லை. மேலும் குழந்தை தேடுவதுமட்டுமல்ல, தாயும் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். பிரபஞ்சவுணர்வும் உனக்காகக் காத்திருக்கிறது.

ஆகவே தான் ஓஷோ ஞானமடைவது ஒரு பழைய நிலையின் இறப்பு, புதியதின் துவக்கம் என்கிறார். நீ இப்போது பிரபஞ்ச இருப்புணர்வோடு விளையாட்டை விளையாட்டு என்று தெரிந்தவனாய் வாழ்வின் லீலையில் பங்கெடுப்பாய். உனக்கு இப்போது உன் உடலின் எல்லையும், உன் பகுத்தறிவின் எல்லையும் தெளிவாகத் தெரியும். ஆகவே வீணான முயற்சிகள் செய்யாமல் எல்லைக்குள் இன்பம் துய்ப்பாய். ஏகாந்தத்தில் கரைந்து எல்லை இழப்பாய்.

நண்பர்களே,

வாழ்வு நமது உடலையும் அறிவையும் கடந்து விரிந்து கிடக்கும் மர்மம். அதை வாழ்வது மட்டுமே நம்மை நமது எல்லை தாண்டி எடுத்துச் செல்லும். விதை எப்படி கனியாகும் என்று கேட்காதே. விதை மண்ணில் விழுந்து வாழ்ந்தால் ஆகும். அது இறந்தால் மரம் பிறக்கும். மலர் மலரும், மணம் பரவும், பிரபஞ்சத்தில் ஒரு புதிய மணத்தைச் சேர்க்கும். அதன்பின் கனியும் கொடுக்கும். கனி கனிந்து தனக்குள் விதையை உணரும். இதுதான் விதை விரியும் அதிசயம். நாம் விரியக்கூடிய அதிசயமும் இதுதான். அப்படி வாழத் தேவையான ஆரோக்கியமடைய, தியான உணர்வு நிலை அடைய, ஆபரேஷன் அவசியம். சுயபொறுப்பு அவசியம். அதைத்தான் நாம் தியானமென்றும் அகத்தோடு கூடிய வாழ்க்கையென்றும் சொல்கிறோம். ஜெயகாந்தன் அந்தக் காலத்தில் சுட்டிக்காட்டிய ஆன்மீக சமுதாயப் பார்வை எனும் சுயபொறுப்போடு கூடிய சமுதாயத்திற்கான வழியும் இதுதான்.   

வாழ்க விழிப்புணர்வுடன்,

அன்பு,

சித்.