வணக்கமும் அன்பும்!
அன்பு நண்பர்களே,
ஒரு நண்பர் என்னிடம் கருத்துமுதல் வாழ்விலிருந்து உணர்வுமுதல் வாழ்விற்கு வாருங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இயந்திரத்தனமாய் வாழ்வதாய் சொல்கிறீர்கள். அது எப்படி? எங்களுக்கும் உணர்ச்சிகளும் உணர்வும் இருக்கிறதல்லவா, நீங்கள் சுட்டிக்காட்டுவதை, தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஆம், உண்மைதான். உடல் மரத்துப் போகவில்லை, உணர்வுகள் முற்றிலும் இல்லாமல் போகவில்லை என்பது உண்மைதான். அதனால்தான் உயிர்த்துடிப்போடு உணர்வுப்பெருக்கோடு படைப்பாற்றலோடு வாழும் மனிதனாக மாற வாய்ப்பு இருக்கிறது, வாருங்கள், தியானம் செய்ய என்று அழைக்கிறார் ஓஷோ.
முதலில் நமது நிலை என்ன என்பதை இன்னும் கூர்மையாக பார்ப்போம். நாம் விலங்குணர்ச்சிகளுடன் பிறந்துள்ளோம். பசி, காமம், பயம் போன்ற உடலுணர்ச்சிகள், வன்முறை, கோபம், பொறாமை, ஆளுமை, போட்டி, பேராசை, தந்திரம் போன்ற மிருக குணங்களுடன் பிறந்துள்ளோம். அதோடு அறிவின் பெருக்கத்தால், நினைவுகளை இடையறாது அலசும் இயக்கத்தால் இது என் நினைவுகள் என்றாகி, அதுவே இது ‘நான்’ என்றாகி, அந்த ‘நான்’ பதிவில் சிறப்பானவற்றோடு தன்னைப் பொருத்திக்கொண்டு அதுவே ஈகோ என்றாகி, இந்த தெரிந்த அறிந்த விஷயங்களைக் கொண்டு இந்த உலகில் வாழ முயற்சிக்கும் மனிதன் என்றாகி நாம் இருந்து வருகிறோம். நமது உடலுணர்ச்சிகள் ஒரு பக்கம், நமது மிருக குணங்கள் ஒரு பக்கம், நம்மைப் பற்றிய மற்றவர் கருத்தை சேகரித்து உருவாக்கி, அதை பரிசோதித்து பக்குவப்படுத்தி வளர்த்திக் கொண்டுள்ள நான் என்பதும் அதில் குறைகள் கொண்ட நான், சிறப்பு கொண்ட ‘நான்’ என்ற பிரிவினைகளோடும் கூடிய மன இயக்கம் ஒரு பக்கம், சமூகம் நல்லது கெட்டது என செயல்களை பாகுபடுத்தி உள்ளே புகுத்தியுள்ள மனசாட்சி, கௌரவம், மரியாதை போன்றவை ஒரு பக்கம், காலங்காலமாய் கற்பிக்கப்பட்ட அடிமைத்தனம், கேடு கெட்ட ஜாதிப்பிரிவினைகள், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், கடவுள் பயம், கடமை பயம், குடும்ப பாரம், இப்படி சுயமரியாதை, சுதந்திரம், விழிப்புணர்வு, உள்ளுணர்வுப்படியான செயல்பாடு என்பதை எல்லாம் வளரவிடாமல் கற்பிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனம் ஒரு பக்கம், பாசம், உறவு, வயதுக்கு மரியாதை, சடங்குக்கு மரியாதை, பழமைக்கும் அழுகிப்போனதற்க்கும் மரியாதை என்று போலித்தனமாய் இருந்தாலே வாழமுடியும் என்ற சமூக நிர்ப்பந்தம் ஒரு பக்கம், மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும், கூழுக்குக் கும்பிடுபவர்களாகவுமே இன்னும் சமாளிக்கும் ஏகபோக அரசியல்வாதிகளின் ஆதிக்கம், அடக்குமுறை ஒரு பக்கம், பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும், சாமியார்களும் ஆளும் வர்க்கமாய் கூட்டுக்களவாணிகளாய் மாறி மக்களை ஆட்டுமந்தைகளாய் கற்பித்து சுரண்டும் சமூக அமைப்பின் அவலம் ஒரு பக்கம், – ஆம், பணக்காரனுக்கு பாதுகாப்பு, அரசியல்வாதிக்கு அதிகாரம், அறிவுஜீவிக்கு புகழாரம், சாமியார்க்கு இந்த மூன்றும் என்ற கூட்டே இன்று நடப்பு – அடக்கப்பட்ட செக்ஸ் – பணம், அரசியல், அறிவு, சாமியார் என்ற ஆளும் வர்க்கத்துக்கு இது இல்லை – சுதந்திரமற்ற நிர்பந்திக்கப்பட்ட வேலை, அறிவுஜீவிகளால் ஊட்டப்படும் டிவி, சினிமா போன்ற போதைகள், அரசாங்கமே ஊற்றிவிடும் மது போதை, பணக்காரர்கள் போற்றி வளர்த்தி பாதுகாக்கும் கருப்புப்பணமும் லஞ்சமும், சாமியார்கள் குத்திக் காட்டி குற்றவுணர்வூட்டி விட்டு கூறும் ஆறுதல் அமுதங்கள் இப்படி இன்றைய மனிதன் ஆட்டுவிக்கப்படுகிறான். அடிமைப்பட்டுக் கிடக்கிறான். சிறுமைப்பட்டுக் கிடக்கிறான். பணக்காரனாகவோ, அறிவுஜீவியாகவோ, சாமியாராகவோ, அரசியல்வாதியாகவோ எந்த ஜாதியிலிருந்து ஒருவன் ஆகிவிட்டாலும் அவன் ஆளும் வர்க்கத்தால் ஈர்த்துக் கொள்ளவே படுகிறான். தனது இனத்தையே சுரண்டுபவனாக மாறிப் போகிறான்.
தன்மானம் மிக்க சுயமரியாதைப் பெரியாரின் விடுதலை இயக்கத்தின் வேராக இருந்த ஏழை மக்களின் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை, சங்கராச்சாரியார் ஊர்தோறும் சென்று கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து சாதாரண மக்களை மறுபடியும் ஈர்த்து வேரை வெட்டிச் சாய்த்தார்.
இப்படி பூசாரி வர்க்கம் கடவுளின் தரகராய் செயல்படும் பிராமணீயம் சரித்திரத்தில் பலமுறை எழுச்சிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. புத்தரின் கடவுள் எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, வேள்வி, யாகம், சடங்கு
எதிர்ப்பு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக சந்திக்க முடியாத பிராமணீயம் காத்திருந்து பழி வாங்கியது. புத்தரையும் விஷ்ணுவின் கெட்ட அவதாரமாய் கதை செய்தது.
உருவ வழிபாட்டை எதிர்த்த புத்தருக்கு, விநாயகன் என்ற வடிவில் அவர் ஞானமடைந்த அரசமரத்தின் அடியில், புத்தர் போதித்த தியானமாகிய விபாசனா என்ற உணர்வோடு நடத்தலின் படியான அரசமரத்தை சுற்றிவந்து தியானத்தில் அமரும் வழக்கத்தை புத்தமதம் புத்தர் மறைந்து 500 வருடங்களுக்குப்பின் கொண்டு வந்தது. இதையும் கபளீகரம் செய்து விநாயகனுக்கு ஒரு புராணம் எழுதி மக்களை மடையர்களாக்கியது பிராமணீயம். நான் யார் என்ற ஆன்ம விசாரமே விடுதலை என்று வாழ்ந்து வழிகாட்டிய ரமணரைக் கூட கோவிலுக்குள், பிராமணீய சடங்குகளுக்குள் அடக்கிக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பது பிராமணியம்.
பக்தியிலக்கியங்களில் உள்ள சமண புத்த துறவிகளின் கழுவேற்றங்கள், கல்வெட்டுக்களில் உள்ள சமண புத்த கோவில்கள், பள்ளிகள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகள், புராணத் திருட்டுகள், ஜாதிக்கொரு நீதி என்றும், சூத்திரன், சண்டாளரன், அயோக்கியன், பஞ்சமன் என்றும் மனிதர்களை இழிவு படுத்தி அடிமைப்படுத்தி, கொடுமை செய்த கொள்கையமைப்பு பிராமணீயம்.
வேள்விச்சடங்குகளையும், சாதிமுறைகளையுமே கொண்டிருந்த பிராமணீயம் தத்துவமில்லாதிருந்த தங்கள் மதத்தை காப்பாற்றிக் கொள்ள புத்த மதத்திலிருந்தே அத்வைதத்தை திருடிக் கொண்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஊர்தோறும் விக்கிரக ஆராதனையை ஏற்படுத்தியது. அவர்களைத் தவிர கல்வியறிவு பெற யாரையுமே அனுமதிக்காமல் கட்டிக் காப்பாற்றிய கட்டுதிட்டத்தினாலேயே அது தனது இஷ்டத்திற்கு புராணம் எழுதியது. அந்நியர்களுடன் கைகோர்த்துக்கொண்டது. தனது ஆளும் வர்க்கஉரிமையை நிலைநாட்டிக் கொள்ள அது செய்யாத தகிடுதத்தம் ஏதுமில்லை. தானே தன்னை உயர்த்திக்கொண்டது. அரசனோடும் பெருவியாபாரிகளோடும் கைகோர்த்து காலங்காலமாய் கேவலமான ஜாதி அடிமை முறையை அரங்கேற்றியது.
வாழ்வின் துன்பம் உண்மை, அதை நீக்க ஒரே வழி தூய்மையான வாழ்வு என்று சொன்ன புத்தமதத்தை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட்டது பிராமணீயம்,. புரியாத மொழி, புரியாத சடங்குகள், புரியாத கட்டுக்கதைகள், புரியாத கட்டுப்பாடுகள், புரியாத சொர்க்கம், நரக விளக்கங்கள், வியாக்கியானங்கள், ஒழுக்கம் கெட்ட கடவுள்கள், பேராசையும் பெண்பித்தும் பிடித்த முனிவர்கள், புரியாத நீதிகள் என நமது அடிமைத்தனத்தின் வேர்கள் வெகுகாலம் முன்புவரை நீண்டுகிடக்கின்றன.
காணாத, காணமுடியாத, இல்லாத, இருக்க சாத்தியமற்ற, கடவுளை ஏசிப் பேசக்கூட உன்னால் முடியாது. அந்த அளவு நீ மிரட்டப்பட்டிருக்கிறாய். அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறாய். இதைவிட நமது இயந்திரத்தனத்திற்கு என்ன விளக்கம் வேண்டும்?.
மற்றொன்று நாம் இயந்திரமாய் இருக்கிறோம் என்று நான் சொல்வது, ஊட்டப்பட்ட கருத்துக்களால் நமது உணர்ச்சிகளும் உணர்வுகளும் கட்டுப்படுத்தப் படுகின்றன, வடிவமைக்கப்படுகின்றன, முலாம் பூசப்படுகின்றன. இயல்பான இயற்கையான வாழ்வியல் நெறியில் உயிர்த்துடிப்பில் நமது உள்ளிருந்து எழும் உணர்வுகளின் படி நாம் வாழவில்லை, வாழ விடப் படுவதில்லை, வாழ முடியவில்லை, வாழத் தெரியவில்லை என்பதையே.
உடனே நமது அறிவு ஜீவிகள் மிருகம் போல வாழ்வதா என்று ஆரம்பிக்காதீர்கள். மனிதனின் உள்ளுணர்வில் தன்னுணர்வும் இருக்கிறது. அது மிருகத்துக்கு இல்லை. ஆகவே மனிதன் உள்ளுணர்வுப்படி வாழ்ந்தால் அங்கு அழகும், அமைதியுமே இருக்கும். அராஜகம் இருக்காது. மேலும் மிருகங்கள் அழகாகவும், அமைதியாகவுமே வாழ்கின்றன. இயற்கையின் சமநிலையை இசைவை ஒட்டியே வாழ்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இன்றைய மனிதனின் பசி உண்மையில்லை, செக்ஸ் உண்மையில்லை, கோபம் உண்மையில்லை, பயம் உண்மையில்லை, இவைகளே உண்மையில்லை எனும்போது மற்ற உணர்வுகளைப் பற்றி என்ன சொல்ல? கடிகாரத்தைப் பார்த்து பசி வருகிறது. படத்தைப் பார்த்து செக்ஸ் வருகிறது இடம், பொருள், ஏவல் பார்த்து கோபம் வருகிறது, அந்தஸ்து குறைந்து விடுமோ என்ற பயம் வருகிறது.
ஆகவே நான் சொல்வது மனஇயக்கம் எனும் இயந்திரத்தன எஜமானனால் ஆட்டிப் படைக்கப்படும் போலியான, உயிரோட்டமற்ற மனிதனாய் இன்று நாம் இருக்கிறோம். இதிலிருந்து விடுபட வேண்டும். உயிர்த் துடிப்போடு, உணர்வுக் கூர்மையோடு, புத்தியோடு நடனமாடும் உடலோடு கரைந்து வாழ்வை அனுபவிக்கும் வாழ்வு வாழ வேண்டும். அதற்கு உதவி செய்வது உணர்வுப்படியான வாழ்க்கை, நிஜ வாழ்க்கை. எது நிஜம்,? இந்த உடலும் சுற்றியுள்ள பொருட்களும் உயிர்களும் தாவரங்களும், சூரிய சந்திர பிரபஞ்சமும் வானவில்லும், அருவியும், கடலும், மலையும் என்று விரியும் பூமியும் சார்புண்மைகள். நம் உடல் சார்ந்த உண்மைகள். முதலில் அவைகளை உணர்வோம், வாழ்வோம், சார்புண்மைகள் மாறிக்கொண்டே இருக்கும், மாறா உண்மை என்பதே சத்தியம். இந்த மாறும் உண்மையை முதலில் வாழ்வோம். மன இயக்க கற்பனையிலிருந்து விடுபட்டு மாறும் உண்மையாக உள்ள நம் உடலையும் உலகத்தையும் வாழ்வோம். கரைந்து வாழ்வோம். வாழ்வில் கரைவோம். இயற்கை வளர்த்தும். மேலும் ஆழத்தை உணர்வோம். இந்த மாறும் உலகத்தின் மையமாக உள்ள சத்தியத்தையும் நாம் உணர முடியும்.
இப்படி நாம் மனஇயக்கத்திலிருந்து, இந்த நோயிலிருந்து விடுபட உதவும் மருந்தே தியானம். குணமாகிவிட்டால் தேவையில்லை இது. இந்த உடலும் உலகமும் ஒரு வாழும் வாய்ப்பு. வளரும் வாய்ப்பு. இதை விட்டுவிட்டு மனஇயக்க இயந்திரத்தன அடிமையாயிருத்தலும் இல்லாவிட்டால் போதையில் விழுதலுமாக வாழ்வை வீணாக்காதீர்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், ஆனால் அறிவாளி ஆகாதீர்கள், பகுத்தறிய மட்டுமே பயன்படுத்துங்கள். இறப்பே என்றும் இருப்பது. எனவே அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல் தட்டிக் கேளுங்கள். உங்கள் கன்னத்தில் நீங்களே அறைந்து கொண்டு விழித்தெழுங்கள். உங்கள் முகத்தை நீங்களே குளிர்ந்த நீரால் கழுவிக் கொண்டு விழித்தெழுங்கள். தியான யுக்திகளை புத்திசாலித்தனத்தோடும், பகுத்தறிவோடும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க விழிப்புணர்வுடன்,
அன்பு,
சித்.