அன்பு நண்பர்களே, 

வணக்கமும் வாழ்த்தும்……

ஒரு நண்பர் இருக்கிறார். சமூக அந்தஸ்து, அதிகாரம், பணம், புகழ், அலங்காரம், ஆடம்பரம், பிறர் கவனம் என எதிலும் அக்கறையில்லாதவர். ஓஷோவால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டவர். தியானமும் ஞானமும் அவர் விரும்பும் சங்கதிகள்.

இப்படி நான் சொல்லும்போது இது ஓஷோவின் பல சந்நியாசிகளுக்கு பொருந்துவதைப் பார்க்கிறேன். ஓஷோவிடம் வரும் இளைஞர்கள் பலருக்கும் இந்த மனநிலை இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இவர்கள் சமூகத்தை குறை கூறுபவர்களாக, அடுத்தவர்களின் மீது பழி போடுபவர்களாக, சோம்பேறித்தனம் உடலில் படிந்துவிட்டவர்களாக, ஆன்மீக அனுபவ கற்பனையில் விழுந்து விடுபவர்களாக ஆகிவிடுவதை பலரிடம் நான் காண்கிறேன். ஆகவே இதை நான் இப்படிப்பட்ட ஒருவரிடம் உடைத்துப் பேசிப் புரிதலைக் கொண்டு வந்த உரையாடலை எழுதுகிறேன்.

வாயினால் ஏற்படுத்தப்படும் ஒலி அல்லது சத்தம் ஒரு உணர்வின் வெளிப்பாடு. உள்ளுணர்வோடு தொடர்புடையது. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த குரங்கு தன் கைகளை சுதந்திரமாகப் பயன்படுத்தத் துவங்கியது. அதன் விளைவாக தனது அனுபவங்களை குகை சித்திரங்களாக வடிக்க ஆரம்பித்தான். இதிலிருந்து வளர்ந்து வாயினால் உணர்வுகளை ஏற்படுத்தும் ஒலிகளை வரிவடிவ எழுத்துக்களாக்கினான். இப்படி உணர்வின் விளைவுகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள ஒரு புதிய வழி மனிதனுக்குக் கிடைத்தது. மிருகங்களுக்கு அது சாத்தியமில்லை. எழுத்துக்கள் பின்னால் சொற்களாகின. சொற்களை இணைத்து வார்த்தைகளாக்கி பயன்படுத்தினான். பின் வார்த்தைகளின் கோர்வையில் கருத்துக்களை உருவாக்கினான். கருத்துக்களின் அடிப்படையில் தன் உணர்வு அனுபவங்களை ஆராய ஆரம்பித்ததில் சிந்தனைகள் எழுந்தன. சிறிது சிறிதாக மனம் வளர்ந்தது. வேகமடைந்தது. இப்போது உணர்வுகளின் தொடர்பு அறுந்து போய் மன இயக்கமே எஜமானனாகிவிட்டது. மனமே நான் என்றாகி விட்டது. அதன் எண்ண ஓட்டங்களும் அதன் கற்பனை பிடிப்புகளுமே உலகமாகிவிட்டது.

ஒரு குழந்தையை ஆறு மாதத்திற்குள் உணர்வுகளிலிருந்து பிரித்து மன இயக்கமே நான் என்று அது எண்ணுமாரு செய்துவிடுகிறோம் இன்று. மன இயக்கம் தூண்டும் உணர்வுகளே உடலையும் இன்று ஆட்சி செய்கிறது.

இப்படிப்பட்ட மனஇயக்கத்திற்கு அடிப்படையாக விதைக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஒட்டி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனஇயக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். நல்ல மனம், கெட்ட மனம், தாழ்வு மனம், உயர்வு மனம், சமூக மனம், ஆன்மீக மனம், கொள்கை மனம், அரசியல்
மனம், அதிகார மனம், பண மனம், குழந்தை மனம், ஒழுக்க மனம், பய மனம், தைரிய மனம், ஒழுக்கமிழந்த மனம்,கூட்ட மனம், கவனம்
தேடும் மனம், கௌரவ மனம், குற்றவுணர்வு கொண்ட மனம், வியாபார மனம், திறமை மனம், பகுத்தறிவு மனம் இது போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், கருத்துக்குள், உறவுக்குள் தன்னை கற்பனை செய்து கொண்டு அதற்காக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது மனம். இவற்றுள் விஞ்ஞான மனம் அல்லது பகுத்தறிய முயன்றுகொண்டே இருக்கும் மனமே பரவாயில்லை.

ஏனெனில் இது தன் எல்லைகளை தனது கற்பனைக் கோட்டையை விரைவில் அறிந்து கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மற்ற எந்த மனதின் படி வாழ்பவரும் அதை நியாயப்படுத்தவும், உண்மையாக்கவுமே கடைசி வரை போராடி வீணே இறக்கின்றனர்.

ஆனால் உண்மை வாழ்வு உணர்வுமயமானது. உணர்வுப்படி வாழக் கருவியாய் மனதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனஇயக்கம் நிறுத்த முடியாதபடி ஆகி அது எஜமானனாய் உணர்வையும் சேர்த்து ஆட்டி வைக்கும் இன்றைய மனிதனின் நிலை பரிதாபதிற்குரியதாய் உள்ளது. உறக்கத்திலும் கனவாய் அது ஆட்டுவிக்கிறது. விழித்த நிலையில் உணர்வற்ற கருத்துக்களின் ஆதிக்கத்தால் ஏற்படுத்திக்கொண்ட கற்பனை நான் மற்றும் எனது உலகம் என்ற வட்டத்திற்காக மனிதன் வாழ்ந்து மடிகிறான். உண்மையான உணர்வுபூர்வமான உலகத் தொடர்பிழந்து பயத்தில் அமிழ்ந்தவனாய், சமூக போதைகள், சூதாட்ட போதைகள், உண்ணும் போதைகள் என ஏதோ ஒரு போதையில் காலம் கழிக்கின்றான்.

ஆகவே சமூக மனம் அதாவது சமூகம் போற்றும் போதைகளான புகழ், அந்தஸ்து, கௌரவம், அதிகாரம், பலம், ஆடம்பரம் ஆகியனவற்றில் சிக்காத மனம் இருப்பது மட்டுமே போதாது. எந்தவித மனதிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்காமல் விழிப்புணர்வை, தன்னுணர்வை, உள்ளுணர்வை நாடுபவனாக இருப்பது முக்கியம். தனது உள்ளுணர்வுப்படியான வாழ்விற்கு மன இயக்கத்தைப் பயன்படுத்துபவனாக, குறிப்பிட்ட இயந்திரத்தனமான மனதால் கட்டுப்படுத்தப்படுபவனாக இல்லாமல் இருப்பதே முக்கியம். மனம் ஒரு கருவியாக இருக்க வேண்டும்.

நடக்க வேண்டியபோது தேவைக்கு தகுந்தாற்போல் காலை நாம் பயன்படுத்த முடிவதுபோல மனமும் இருக்க வேண்டும். மனம் கடந்த தன்னுணர்வு வாழ்வை வாழ வேண்டும். அதுதான் ஓஷோ கூறும் வாழ்க்கை முறை.

இந்த உடல், மனம், உலகம் அனைத்தையும் வாய்ப்பாக பயன்படுத்தி தன்னுணர்வை வாழும் வாழ்வே ஜோர்புத்தா.

ஆகவே நண்பர்களே

ஆன்மீக மனதினால் பயனேதுமில்லை.

உண்மையில் சமூக மனதை விட இது அதிக கெடுதல் விளைவிக்கக் கூடியது. சமூக மனதின் பொய்மையை வாழ்வில் உணர்ந்தே ஆக வேண்டும். உடலில் நோய் வரும்போது, உறக்கத்தின் போது, உற்றவர் இறக்கும்போது, நம்பிக்கைகள் உடையும்போது, விபத்துக்கள் நிகழும்போது இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில், அவமானம், தோல்வி, ஏமாற்றம், துரோகம் இப்படிப்பட்டவைகளை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் சமூக மனதின் போதையும் மாயையும் கண நேரமாவது தெளியும்.

ஆனால் இந்த ஆன்மீக மனம், தாழ்வு மனம், ஒழுக்க மனம், கௌரவ மனம் இப்படி வெளி உலகத் தொடர்பில்லாத மன இயக்கத்தில் மாட்டிக் கொள்பவர்கள் மீள்வது மிகவும் கடினம். இவர்கள் ஒரு வித மனநோய்க்கு ஆட்பட்டவர்களாகவே ஆகிவிடுவர். சமூக மனம் ஒரு கணமாவது உடைவதுபோலக்கூட இவர்களது மனம் உடையாது.

மேலும் மேலும் வெளி உலகத்திலிருந்து விலகி கிணற்றுத் தவளையாய் இவர்களுக்குள் அமிழ்ந்துவிடும் சாத்தியமே இவர்களுக்கு அதிகம்.

இதனால்தான் ஓஷோ ஜோர்புத்தா வாழ்க்கை முறையை, குரு அற்ற, கொள்கைகள் அற்ற, கடவுள் அற்ற, போலி கடமைகள் அற்ற, பிடிப்புகள்
அற்ற, கணத்துக்குக் கணம் உணர்வாய் உள்ளுணர்விலிருந்து விழிப்புணர்வோடும் தன்னுணர்வோடும் இந்த உடலை, மனதை, உலகத்தை. ஆனந்தித்து வாழும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டுகிறார். இதுவே மனஇயக்கம் வலிமை பெற்று சிறிது சிறிதாக உனது சக்தி முழுவதையும் உறிஞ்சி விடாமலிருக்கும்படி உன்னை காத்து வளர்த்துக் கொள்ளும் வழி.

இதனால்தான் ஓஷோ ஒவ்வொரு மனிதனும் தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் முழு சாத்தியக்கூறையும் வாழும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிறார். அதுவே தலையாய பொறுப்பு. அதுவே உனது சுதந்திரம். அதுவே உனது உள்ளுணர்வை, தனித்தன்மையை மலர்விக்கும். அந்த மலர்ச்சியே, அந்த மலர்ச்சியில் பரவும் மணமே உன் வாழ்வு. அதுவே நிறைவையும் உண்மையையும் ஆனந்தத்தையும் தரவல்லது. அதுவே இந்த உலகை அழகூட்டக்கூடியது. அதுவே முழு வாழ்வு. அர்த்தமுள்ள வாழ்வு. பரவச வாழ்வு.

அதற்கு இந்த மன இயக்க பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஓஷோ பல தியான யுக்திகளை ஆய்ந்து பார்த்து கண்டுபிடித்து கொடுத்துள்ளார். அவை மருந்து போன்றவை. நோயறிந்து அதற்கேற்றவாறு மருந்தருந்தி மனநோயிலிருந்து விடுபட்டு உணர்வு வாழ்க்கைக்கு திரும்பும் பொறுப்பெடுத்துக் கொள்வோம். முயல்வோம்.

மனதை நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ அமைதிப்படுத்தவோ போராடாதீர்கள். ஏனெனில் அதுவும் மனம்தான் என்பது ஒன்று, இரண்டாவது அப்படி செய்ய முடியாது. மனதை அமுக்கி வைக்கவே முடியும். அப்போது அது சாக்கடையாய் மாறி அதிக பலம் பெற்று ஆங்காரத்துடன் வெளிவரும் வாய்ப்புக்கே காத்திருக்கும். பிறகு என்ன செய்வது,  மனம் ஒரு இயக்கம். அதன் மையத்திலுள்ள பிடிப்புக்களே அதன் வேர். ஆகவே நுட்பமாகப் பார்த்து வேர்களை, பிடிப்புக்களை, வெட்டுவதே செய்ய வேண்டியது. பிறகு விதைகளையும் அகற்ற வேண்டும். உதாரணமாக கார் வாங்க உங்களுக்கு ஆசை இல்லையென்றால் எத்தனை கார்களை நீங்கள் பார்த்தாலும் கார் பற்றிய எண்ணமோ, சிந்தனையோ, கனவோ வருவதில்லை. கார் பற்றிய விவரங்களை நீங்கள் சேகரிப்பதில்லை. சிந்திப்பதில்லை.

எனவே உங்களது மன இயக்கம் உங்களது ஆசைகளை, பிடிப்புக்களை ஒட்டியே உள்ளது. அதை நிறுத்தவோ, அமைதிப்படுத்தவோ நேரடியாக முயற்சிப்பது மடத்தனம். பிடிப்புக்கள் அகல, அகல, மன இயக்கம் தானாகவே குறைந்து கொண்டே வரும். ஆகவே தான் தியானம் நோக்கிய பயணம் ஒரு வாழ்க்கை முறை, ஜோர்புத்தா வாழ்க்கை முறை என்று நான் வலியுறுத்துகிறேன்.

ஓஷோவின் தியான யுக்திகள் மனம் கடந்த ஒரு கண நேர அனுபவம் பெற உதவும். அது உனது சாத்தியத்தை நீ அறிந்து கொள்ள, நீ விழிப்புணர்வு கொள்ள உதவும். ஆனால் ஒரு மணிநேர தியான பயிற்சி மட்டுமே போதாது. ஜோர்புத்தா வாழ்க்கை முறைக்கு மாறுதல் அவசியம்.

ஆகவே நண்பர்களே

உங்கள் மனஇயக்கம் எந்த வடிவிலிருந்தாலும் வெளிவர முயற்சி செய்யுங்கள்

அதற்காக ஓஷோ தியான யுக்திகளை பயன்படுத்துங்கள்.

ஜோர்புத்தா வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்

அன்பு கொள்ளுங்கள், அது ஆசைகளை அழித்துவிடும்.

விழிப்புணர்வோடு இருங்கள், அது மனதை விலக்கிவிடும்.

வாழ்க விழிப்புணர்வுடன்

சித்.