அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

தியானிப்பவர்களுக்கு, மெய்ஞ்ஞானத்தை நாடுபவர்களுக்கு, இவ்வுலகம் எல்லைகுட்பட்டதாயிருக்கிறது, இந்த எல்லையை கடந்து வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா என்று தேடுபவர்களுக்கு, மிரட்டும் இறப்பு எனும் உணர்விலிருந்து மீள வழி தேடுபவர்களுக்கு, தூக்கத்தில் என்ன ஆகிறோம் என்று ஆராய்பவர்களுக்கு என்று இப்படி விஞ்ஞானத்தைத் தாண்டி தன்னையே பரிசோதனைக்குள்ளாக்கி ஆராய விரும்புவர்கள் அனைவருக்கும் உதவுபவைதான் தியான யுக்திகள்.

தியான யுக்திகளை செய்கையில், அவற்றில் ஈடுபடுகையில் பலருக்கும் பல்வேறு அனுபவங்கள். அந்த அனுபவங்களால் பல கேள்விகள். நான் சரியான வழியில் செல்கிறேனா என்ற சந்தேகங்கள், அந்த அனுபவத்தை புரிந்து கொள்ள ஏற்படும் விருப்பம், இப்படி பலவற்றையும் பார்க்கிறேன்.

ஓஷோ உன்னுடைய தியானபாதை சரியானதா என்பதை கவனிக்க ஒரு எளிய வழி சொல்கிறார். அது உன்னுடைய தியானம் அன்பையும் புத்துணர்வையும் உற்சாகத்தையும் எழுச்சியையும் கொடுத்தால் நீ சரியான பாதையில் பயணிக்கிறாய். சோர்வையும் சோம்பேறி தனத்தையும் பதுங்குதலையும் பயத்தையும் மதிப்பீட்டையும் குறை சொல்வதையும் கொடுத்தால் நீ செல்லும் பாதையும், புரிந்து கொண்ட விதமும், செய்யும் முறையும் சரியல்ல. ஏனெனில் இது எதைக் காட்டுகிறது என்றால் உனது மனம் தியான யுக்தியைப் பயன்படுத்திக் கொள்வதையே காட்டுகிறது. சிலர் ஏதோ அற்புதமும், ஆற்றலும், அதிசியமும் தியானத்தில் அடைவதாக பெருமை அடைந்தாலோ எந்த ஒரு அனுபவத்தையும் பிடித்துக் கொண்டு அதிலேயே நின்று விட்டாலோ அதுவும் மனதின் பிடியில் தியானயுக்தி சிக்கிவிட்டதன் அடையாளம்தான்.

தியானத்தின் விளைவு விழிப்புணர்வு அதிகரித்தலாய் இருந்தால் மட்டுமே அது சரி.

தியானயுக்தி என்பது மனம் கடந்த நிலை அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கருவி, ஒரு சூழலை ஏற்படுத்துதல் அவ்வளவே. அந்த அனுபவங்கள் விழிப்புணர்வாய் வளர்ந்து வாழ்வில் மலர வேண்டும், வாழ்வை ஆனந்த நடனமாக்க வேண்டும், அப்படி இல்லாமல் தியானம் செய்வது தனியாகவும், நடைமுறை வாழ்வு தனியாகவும் நடத்தி வந்தால் அது மெய்ஞ்ஞானப் பாதையில் செல்வதாகாது. மாறாக அது தியானத்தை மனம் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமாகவே அமையும். ஆனால் ஓஷோ வாழ்வை தியானத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவே சொல்கிறார். தியானத்தை உள் அகங்கார வாழ்வின் வளர்ச்சிக்கும், ஆறுதலுக்கும், மனம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்க்குமாக பயன்படுத்திக் கொள்ளச் சொல்வதில்லை. ஏனெனில் அது ஆங்கில மருந்துபோல இடைக்கால நிவாரணம் தரும், அதே சமயம் உணர்ச்சிகளை அடக்கி உன்னை புரையோடிய நோயாளியே ஆக்கும். ஆகவேதான் ஓஷோ விழிப்புணர்வும், அன்பும் நேசமும், ஆனந்தமும், கொண்டாட்டமும், அமைதியும் வெளிப்படுவதை நமது தியானத்தின் அளவுகோலாக வைத்துள்ளார்.

இப்படி தியானயுக்திகளில் சறுக்கி விழாமல் இருக்க நான் மூன்று வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்கிறேன். அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.

1. இற…………யோகியே……………..இற…..

2. அதுவுமல்ல…….. இதுவுமல்ல……..

3. போ, போ, போ, போய்க்கொண்டேயிரு……

ஆம், இறப்பினுள் ஆழுங்கள். அப்போது மனம் நம்மை ஏமாற்ற முடியாது. ஆழ்ந்த தூக்கத்திலேயே மனம் இல்லாமல் போய் விடுகிறது. ஆகவே இறப்பில் அது இயங்க வாய்ப்பே இல்லை. அதே போல புலனுணர்ச்சிகளும் மங்கி மறைந்து போய்விடும். அப்போது வெளி உலகம் காணாமல் போய் விடுகிறது. ஆக புலனுணர்ச்சியும் அதன் வழியாக நாம் உணரும் வெளி உலகம் முதலில், அடுத்து நான் என்ற அடையாளத்தில் இயங்கும் மன இயக்கம், இந்த இரண்டும் இறப்பில் கரைந்து மறைந்து விடும். ஆகவே தியான யுக்தியில் வெளிச்சத்தம் போன்ற வெளி உலகம் வருகையில் புலனுணர்ச்சிகளுக்கு இற என்பதும், மன இயக்கம் வருகையில் மனதிற்கு இற என்பதும், எஞ்சியுள்ள சாட்சிபாவத்தை, விழிப்புணர்வை நோக்கிய நமது பயணத்தை எளிதாக்கும். திசை தவறாமல் காப்பாற்றும். ஆகவே ஓஷோ சொல்வது – இற, கடந்த காலம் எதுவாய் இருந்தபோதும் அது இப்போது இல்லை, ஆகவே கடந்த காலத்திற்கு இறந்துவிடு. இந்தக் கணம் புதிது. இதற்கு எப்போதும் புதிதாய் பிற..

அடுத்து உடலுணர்வு அனுபவங்கள்.  உடலுணர்வு அனுபவங்கள் அற்புதமானவையாகத் தெரியும். அவற்றை மனம் பிடித்துக் கொள்ளும், நாம் அங்கேயே நின்று விடுவோம். உடலுணர்வு மனித குலத்திற்க்கே குறைந்து விட்டது. ஏனெனில் மனிதன் மனதை, அறிவைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விட்டான். அதிலும் இந்தியா போன்று உடலை அனுபவிக்க, நேசிக்க, சிறிதும் அனுமதிக்காமல் அதை பாவம் என்று கண்டனம் செய்து வந்துள்ள நிலையில் வாழும் நம் போன்ற மக்களுக்கு உடலுணர்வு அனுபவங்கள் மிகப் பெரிய அற்புதமாகத் தெரியலாம். ஆனால் அவை மிக இயல்பானவை. மன இயக்கத்திலிருந்து சக்தி விடுபடுகையில் உடல் உணர்வுகள் தன் முழு திறனை அடைகின்றன. அப்போது நம்மால் இயற்கையின் பல்வேறு கூறுகளை அறிய முடிகிறது.

நமது உடலிருப்பின் அனுபவமே புதியதாக மாறுகிறது. ஆனால் இதோடு நின்று விடக் கூடாது. இவைகளை பிடித்துக் கொள்ளக் கூடாது. இதை நான் ஏன் வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் என்னிடம் வரும் பலரும் தங்கள் ஆன்மீக அனுபவமாக ஒரு சில உடலுணர்வு அனுபவங்களை பெருமையாகப் பேசுகிறார்கள். மேலும் பலப்பல ஆண்டுகளாக வளராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் நான் இந்த வார்த்தைகளை வலியுறுத்துகிறேன். அது உடலின் அடுத்தடுத்த அடுக்குகளின்

அனுபவங்களாய் இருந்தாலும் சரி, தொடர்ந்து பிறவி பிறவியாகத் தொடர்வதாய் இருந்தாலும் சரி, நீ பிடியாய் பிடித்துக்கொள்ளும் அனுபவங்கள் தடைகள்தான். ஏனெனில் அவை அகங்காரத்தின் அங்கமாகி விடுகின்றன. அவை வந்தவாறே ஒருநாள் போகும், அப்போது நீ உன் அகங்காரத்தை விட முடியாமல், மற்றவர்களை ஏமாற்ற ஆரம்பிப்பாய். மேலும் அப்போது ஏற்படும் வீழ்ச்சியும் உன்னை அதலபாதாளத்திற்கே கொண்டுபோய்விடும்.  ஆகவே அதுவுமல்ல, இதுவுமல்ல என்று உன் பயணத்தைத் தொடரு.. மாறும் உண்மைகள் எல்லாவற்றையும் தாண்டி நிலைபெற்றிருக்கும் சாசுவத உண்மை, சத்தியம், சாட்சிபாவம், விழிப்புணர்வு, பரவசம், சூன்யம், தன்ணுணர்வு, பேரின்பம், இப்படியெல்லாம் பலவாறாக அழைக்கப்படுவதை நோக்கி செல்வதற்காக நீ தொடரு.. ஒவ்வொரு கணமும் கடந்தகாலத்திற்கு இறந்து காலமற்றதில் கரையும் பயணம் தொடரட்டும்.

ஆம், எங்கும் நிற்காதீர்கள். ஓஷோ கூறுவதைப் போல – பயணமே இலக்கு, சென்றடையும் இடம் ஏதுமில்லை – என்பதை நினைவில் வையுங்கள். ஆம், இதுவுமல்ல, அதுவுமல்ல, எதுவுமல்ல என்று எல்லாவற்றையும் கடந்து கடந்து தாண்டித் தாண்டி போங்கள். போவதில், போய்க் கொண்டிருக்கிறோமா என்பதில் மட்டும் கவனம் வையுங்கள். எல்லாவற்றிற்கும் சாட்சிபாவமாக மாறிக் கொண்டே வருவதை உணருங்கள். வேடிக்கை பார்ப்பது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும். நடப்பது எதனோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது. இப்படியே போய்க்கொண்டேயிருந்தால், கணத்திற்குக் கணம் இறந்துகொண்டேயிருந்தால், எதையும் பிடிக்காமல் விட்டுக் கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்?

எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். நிச்சயமாக நடக்கும். அப்படி நிச்சயம் நடக்கப்போகிறது என்பதன் அறிகுறிகளை நீ பார்ப்பாய். நீ இல்லாமல் போகும், கேள்வி கேட்கவும், அனுபவப்படவும் ஆளில்லாமல் போவது நடக்கும். பயணத்தின் போதே அது நடக்கும். அது நடக்கையில் வந்து சேர்ந்து விட்டாய். ஆனால் நீ இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் கரைவதுதான் பயணம். நானற்ற நிலைதான் இலக்கு. ஆகவே இலக்கை அடையும் எந்த முயற்சியும் வேண்டாம், ஏனெனில் முயற்சியில் நீ வலிமையடைவதுதான் நடக்கும், நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடும் என்கிறார் ஓஷோ.

மாறாக ஆடலோடு, பாடலோடு, இலகுவாக, விளையாட்டாக, சிரித்துக் கொண்டு, கொண்டாடிக்கொண்டு, சாட்சிபாவம் மேலும் மேலும் பெருகுவதைக் கொண்டாடுபவனாக பயணத்தில் ஆழ்ந்துவிடு என்கிறார் ஓஷோ.

இப்படி தியானயுக்தியின் போது பெருகும் சாட்சிபாவத்தை இழக்காமல் வாழ்வில் கொண்டுவந்து கொண்டாடி வாழும் வாழ்க்கைமுறைதான் ஜோர்புத்தா. தானே பெருகும் சாட்சிபாவம், விழிப்புணர்வு போன்றவற்றைத் தவிர மற்றபடி அடையும் எதையும் பிடித்துக் கொள்ளாதே, அது எதுவானாலும் சரிதான் என்கிறார் ஓஷோ.

அதனால்தான் ஜோர்புத்தா வாழ்க்கைமுறையில் வெளிவாழ்வையோ, மனதையோ, உடலுணர்வின் அனுபவங்களையோ பற்றி நாம் கவலைப்படுவதில்லை. மாறாக உள்ளே சாட்சிபாவம் அதிகரித்து வருகிறதா என்றே பார்க்க வேண்டும். அப்படி அது அதிகரித்து வருகிறதென்றால் நமக்கு பிடிப்புகள் தானே குறையும். இறுக்கமும் விறைப்பும் தானே நீங்கும். கோபமும் குரோதமும் நமக்கு வராது. அன்பும் நட்பும் கொண்டாட்டமும், சிரிப்பும் நம்மில் வெளிப்படும். வாழ்வை சமாளிக்க மாட்டோம். வாழ்விலே போராட மாட்டோம், மாறாக வாழ்வில் கரைந்து அனுபவிப்போம். ஏனெனில் என்றும் நிலையான சாட்சிபாவத்தை உணர்ந்து விட்டோம். ஆகவே கரைய பயம் போய்விடும். வாழ்வு, கரைந்து அனுபவிக்கும் விளையாட்டாகிவிடும்.

அதை நோக்கி தியானிப்போம் தியானயுக்திகளை விழிப்புணர்வோடு கையாளுவோம் பயணமே இலக்காய் கொண்டாடுவோம். ஆகவே தியானிப்போம், கரைந்து அனுபவிப்போம். இப்படிக் கொண்டாடுவோம் வாழ்வை.  

வாழ்க விழிப்புணர்வுடன்

அன்பு

சித்.