வணக்கமும் அன்பும்!

அன்பு நண்பர்களே,

இம்மாதம் தவறான முதலீடும் தடுமாறும் வாழ்க்கையும் பற்றி கூறப் போகிறேன்.

நான் பொருளாதார முதலீட்டைப் பற்றி பேசப் போவதில்லை. நான் பேசப் போவது நமது வாழ்வின் இருப்பை, நமது அறிவை, நமது உடலை, நமது உணர்வுகளை, நமது இயக்கத்தை எதில் நாம் முதலீடு செய்கிறோம் என்பதைக் குறித்துத்தான்.

இது குறித்து நான் ஒரு நண்பருடன் நீண்ட உரையாடலில் ஈடுபட்டேன். அந்த நண்பர் ஒஷோவின் அன்பர். ஓஷோவால் ஈர்க்கப்பட்டவர், ஓஷோவின் பிரமிக்க வைக்கும் அறிவுக் கூர்மையால் ஆழ்ந்த பார்வையால் மட்டுமல்ல, அதைத்தாண்டி அடுத்த நிலைக்கு ஓஷோவிடம் நெருங்கி வந்தவர். ஆம், ஓஷோவின் தியானம், ஓஷோவின் புது மனிதன் என்பதை எல்லாம் ருசித்துப் பார்க்க தயாரானவர். மனதின் திட்டப்படி வாழ்வதை விட்டுவிட்டு விழிப்புணர்வு வெளிச்சத்தில், இயற்கையோடு இணைப்புணர்வு கொண்டவனாய், கணத்துக்கணம் உன் இயல்பிலிருந்து உன் நடவடிக்கைகள் நிகழ்வதாய் வாழும் ஒரு வாழ்வு முறையை புரிந்து கொண்டவர். தியானம் என்பது ஒரு செயல் என்று நினைத்து அதைச் செய்யச் சொல்பவர்களுக்கும், அது ஒரு செயல் என்று நினைத்து அதை வாழ்ந்து பார்க்காமல் தியானத்தை விடு என்று சொல்பவர்களுக்கும் இடையில் தியானம் ஒரு இருப்பு நிலை என்று உணர்ந்து கொள்ள ஓஷோ கொடுத்துள்ள யுக்திகளை முயன்று பார்ப்பவர் அவர்.

தியானம் என்பது தியான் என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ்வடிவம். சமஸ்கிருதத்தைப் போன்ற பழமை வாய்ந்த தமிழில் தியான் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு நிகரான ‘தான்’ என்ற சொல் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்தது. இடையில் அதன் பயன்பாட்டை இழந்து இப்போது ‘தியானம்’ என்று ஏதோ ஒரு செயலைக் குறிப்பது போன்ற தவறான பொருள் கொண்ட சொல் வழக்கு உருவாகிவிட்டது. ‘தான்’ என்று சொல்லும்போது ‘அதைச் செய்’ அல்லது ‘அதைச் செய்யாதே’ என்று சொல்வது சாத்தியமில்லை. தான்  தானாயிருத்தல், ‘தன்னுணர்வு’ என்பது இருப்பு நிலை, உன் உண்மையான இயல்பு நிலை தவிர வேறொன்றுமில்லை.

ஓஷோ தியானத்தைப் பற்றிப் பேசுகையில் அந்த உன் ‘தானாயிருக்கும்’ நிலையிலிருந்தே நீ வாழ வேண்டும், செயல்பட வேண்டும். அப்போது எல்லாமே ஒரு இசைவுக்குள், இயற்கையின் லயத்திற்குள் விழும் என்கிறார்.

அதை இப்போது நீ இழந்து விட்டாய், இயந்திரமாய், கட்டாயமாய், ஒரு திணிப்பில், ஒரு இறுக்கத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறாய், இதிலிருந்து வெளியே வர யுக்திகளைச் சொல்கிறேன் என்கிறார். இதற்கு ஓஷோ ஒரு கதை சொல்வார். வீட்டில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென வீடு தீப்பிடித்து விட்டது. தந்தை குழந்தைகளிடம் வந்து, வாருங்கள் வெளியே ஓடிவிடலாம் என்றார். ஆனால் குழந்தைகளோ வெகு ஆர்வமாய் விளையாட்டில் தன்னை மறந்து போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. தந்தையின் குரலே அவைகளுக்கு கேட்கவில்லை. தந்தை உடனே குழந்தைகளிடம், வெளியே வந்து பாருங்கள், நீங்கள் விளையாட புது கால்பந்துகள், கிரிக்கெட் மட்டை, பந்து எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் என்றார். உடனே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பழைய விளையாட்டை விட்டுவிட்டு வெளியே ஓடி வந்தன. வெளியே வந்து பார்த்தால் தந்தை சொன்னது பொய். ஆனால் இப்போது வீடு தீப்பற்றி எரிவதை குழந்தைகளால் பார்க்க முடிந்தது. தங்களை காப்பாற்றிய தந்தைக்கு நன்றி கூறின.

இதுபோலத்தான் தியான யுக்திகள். உன்னை இந்த மனதின் விளையாட்டிலிருந்து விடுவிக்க சொல்லும் தந்திரம்தான். தியானயுக்திகளுக்கும் தியான நிலைக்கும் தொடர்பில்லை. நேரடியாக இல்லை, ஆனால் தியான யுக்திகள் உனக்குத் தேவை. இல்லையென்றால் நீ மனதின் விளையாட்டையே உண்மையென எண்ணி மாய்ந்து போவாய். வீடே உலகமென எண்ணி மனப்பொந்திலேயே வாழ்ந்து விடுவாய். வெளியே இருக்கும் விரிந்த உலகம், உண்மை உலகம், தன்னுணர்வு உலகம் உனக்குத் தெரியாமலேயே போய்விடும்.

ஏன், எதற்காக இப்படி பல குறிப்புக்களை, யுக்திகளை, உபாயங்களை கையாளச் சொல்கிறார் ஓஷோ என்று அவரே விளக்குகிறார். அப்படியிருந்தும் சமூக மனதின் தாக்கத்திலிருந்து, சமூக மதிப்பீட்டுகளிருந்து, அதிகாரமும், பெயரும், புகழும் என உள்ள சமூக போதைகளைத் தேடுவதிலிருந்து வெளியே வர முடியாத தடுமாற்றம் ஏற்படுகிறது. தேவையில்லை, உண்மையில்லை வெறும் சமூக போதைதான் வெறும் ஈகோ விளையாட்டுத்தான் என்று பல சமயங்களில் தெரிந்தும் அதை விட முடியாத நிலை இருக்கிறது. இது இவருக்கு மட்டுமல்ல. ஓஷோவின் அன்பர்கள் பலரும் படும் பாடு இது. நல்ல சம்பளம், நல்ல அரசாங்க உத்தியோகம், அதே சமயம் அது சித்திரவதையாக இருக்கிறது. தனக்குப் பொருந்தாததாக இருக்கிறது. ஓஷோ சொல்வது புரிகிறது, பிடிக்கிறது, ஈர்க்கிறது. தனித்தன்மையை வாழ்வது, தன்னுணர்வோடு வாழ்வது, தன்னியல்பு படி வாழ்வதுதான் சரி என்று தெரிகிறது. ஆனால் மாறமுடியவில்லை. இப்படி பொருந்தாத இடத்தில் வெற்றிகரமான வியாபாரிகளாக, டாக்டர்களாக, வக்கீல்களாக, அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களாக என ஏகப்பட்ட இடங்களில் சிக்கித் தவிப்பவர்கள் பலர். இவர்களின் பொதுவான அம்சம் என்னவென்றால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பாதுகாப்பும் ஆதரவும் அதிகாரமும் போராடிப் பெற்று விட்டார்கள். ஆனால் அந்த வாழ்க்கை நிறைவைத் தரவில்லை. அமைதியைத் தரவில்லை, ஆரோக்கியத்தைத் தரவில்லை என்பதுதான்.

இவர்களுக்கு ஓஷோ சொல்வது இதுதான். முதலில் உங்களைப் புரிந்துணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நிலை இருதலைக் கொள்ளியாய் இருக்கிறது. – இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் – இதுதான் வெற்றியின் விளைவு. வெற்றி உள் வெற்றிடத்தை நிரப்பாது. அதிகப்படுத்தியே காண்பிக்கும். ராஜா வேஷம் போட்டு நடித்தாலும் நீ பிச்சைக்காரன் என்பது உனக்குத் தெரியும்தானே. இன்னும் சொல்லப்போனால் எல்லோரும் உன்னை ராஜாவாகவே நினைத்துப் பாராட்டும்போதுதான் தான் இன்னும் பிச்சைக்காரனாகவே இருப்பதைக் குறித்த உள்ளுணர்வு உனக்கு அதிகரிக்கும். இது ஒரு புறம், மற்றொரு புறம் பல வருட உழைப்பு, பல வருட சிந்தனை, பலப் பல போட்டிகள், ஏகப்பட்ட தந்திரங்கள், இப்படி இந்த வேஷத்தை அடைய, இந்த சமூக நிலையை அடைய, நீ பட்ட கஷ்டங்கள், கொடுத்த விலையாக உள்ள உன் கடந்த கால வாழ்க்கை, அதாவது உன் வாழ்க்கை முதலீடு, அது உன்னை மிரட்டுகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைத்ததை இழப்பதா, அதுவும் இன்னும் எத்தனையோ பேர் இதற்காக போட்டிப் போட்டுக் கொண்டிருக்கையில், போராடிக் கொண்டிருக்கையில் இதை எப்படி இழப்பது. நான் சிரமப்படுவதும் எனக்கு இது பொருந்தாமலிருப்பதும் உண்மைதான். ஓஷோ கூறும் வாழ்க்கை முறைதான் உகந்ததாயும், நிறைவாயும், உள்ளுணர்வுப்படி வாழ்வதாயும் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக கஷ்டப்பட்டு போராடி அதிர்ஷ்டமும் அடித்து கூடிவந்ததை இழக்க முடியுமா என்ற மனதின் கோழைத்தனம்தான் பிரச்னை. தவறான முதலீடுதான் செய்து விட்டோம், தவறான பாதையில், கருத்தில்தான் பலகாலம் வாழ்ந்துவிட்டோம் என்று தெரிந்தாலும், அதை உதறிவிட்டு புதிதாக துவங்கும் தைரியம் வருவதில்லை. தவறான திசையில் வெகுதூரம் பயணித்துவிட்டோம் என்பதும், சரியான திசை எது என்பதும் தெரிந்து பிறகும் கூட, பாதை மாற மனம் படும் சிரமம் இது. பின்னால் இந்தப் பாதையில் வரும் கூட்டமும், இத்தனை பேரை ஜெயித்து இப்போது முன்னால் செல்லும் நிலையும், அது கொடுக்கும் பொய்யான ஈகோவும்….., இவைகளை உதறுவது கடினம்தான்.

இதனால்தான் ஓஷோ இளைய சமுதாயமே என்னால் ஈர்க்கப்படும் என்று சொன்னார். அது உண்மை என்பதை தினமும் நான் பார்க்கிறேன்.

நாற்பது வயதைத் தாண்டியவர்கள் இனி நாம் பாதை மாறமுடியாது என்று நினைக்கிறார்கள். தவறான திசையில் பயணித்து விட்டோம் என்று உணர்ந்தாலும் அதை மூடி மறைத்து ஆறுதல் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

ஆனால் நண்பர்களே,

வாழ்வை நீண்ட-காலக்கோடாக நினைத்துப்பார்த்து முற்றுப்புள்ளிக்கு பயப்படாதீர்கள். வாழ்வின் உண்மையான பரிமாணம் நீண்ட-காலக்கோடு அல்ல. பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் இடையே உள்ள ஆண்டுகள் அல்ல.

அது ஒரு செங்குத்துக் கோடு. அடியும் முடியும் இல்லாத செங்குத்துக் கோடே வாழ்வின் உண்மை அனுபவம். உணர்வு அனுபவம். நீங்கள் காதலில் விழுந்த கணத்தின் உணர்வு, காலத்தைக் கடந்த செங்குத்துக் கோடாக இருக்கிறதல்லவா? இப்படி ஒரு காதல், ஒரு நண்பனின் சந்திப்பு, ஒரு குழந்தையின் பிறப்பு, கடலையும், மலையையும், அருவியையும் ரசித்த கணங்கள் அல்லது ஒரு விபத்து, ஒரு வலி, ஒரு இறப்பு என நாம் வாழும் மறக்க முடியாத கணங்கள் எல்லோருக்கும் இருக்கும். அது போல ஒவ்வொரு கணமும் வாழ்வின் ஆழமும் ஆகாயமும் தொடும் உணர்வுக்கணங்களே.! அப்படி வாழும் கணங்களே வாழ்க்கை, சாறுள்ள வாழ்க்கை. அப்படி ஒவ்வோரு கணத்தையும் ஆழமான கணங்களாக வாழ்வின் சாறைப்பிழிந்து சுவைப்பவர்களாக நம்மால் வாழ முடியும். ஒரு குழந்தை இப்படித்தான் பிறக்கையில் இருக்கிறது. அப்படி வாழ்வது நமது பிறப்புரிமை. எதற்கும், யாருக்கும் அடிமைப்பட்டு கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமில்லை.

பிச்சை வாங்கி உன்னும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே

இச்சகத்துலோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே

என்று பாரதி முழங்கியது இதைத்தான்.

ஆகவே இழந்த காலம் ஒரு பொருட்டல்ல. இன்னும் இருக்கிறோம், வாழ்வு இருக்கிறது, உணர்வோடு வாழும் வாய்ப்பு இருக்கிறது என்பதே உணரவேண்டியது. வாழ்வு காலமற்றது. ஆழமும் ஆகாயமும் கொண்டது. ஆகவே கடந்துபோன வீணான காலங்களுக்காக இன்னுமிருக்கும் வாழ்வை ஆழமாக வாழும் வாய்ப்புக்களை ஏன் தவற விட வேண்டும்? இறக்கும் ஒரு கணம் வாழ்ந்தாலும் போதும், வாழ்வின் நிறைவு வந்துவிடும். பரவசம் கிட்டிவிடும். ஆகவே கடந்தகாலச் சுமையாக உள்ள முதலீட்டை உதறிவிடுங்கள். அவரை குருவாக ஏற்று இருந்து விட்டேன், அதுவே கொள்கையாக இருந்து விட்டேன், அந்த நம்பிக்கையோடே வாழ்ந்து விட்டேன் என்று மாறவும் உதறவும் தைரியமில்லாமல் இருக்காதீர்கள்.

சரியெனப்படுவது இறக்கும் கடைசிக் கணத்தில் தெரிந்தாலும் புதிதாய் உணர்வு இருக்கும் அனுபவத்தை வாழப் புறப்படுங்கள். மேலும் நான் உதறுங்கள், இழந்து விடுங்கள், மாறுங்கள் என்று சொல்வதன் பொருள் வெளி வாழ்வை உதறுங்கள் என்பதல்ல.

உள்ளே உங்கள் பிடிப்பை, முதலீட்டை உதறுங்கள், சுதந்திரமாக ஆழமான உணர்வோடு பரவசமாக வாழ ஆரம்பியுங்கள், வெளி வாழ்க்கையில் அதனால் என்ன மாறுதல் நடந்தாலும் நடக்கட்டும், அதை தைரியமாக நேர் கொள்ளுங்கள் என்றே நான் சொல்கிறேன். இந்தக் கணம், இங்குள்ளதுதான் வாழ்வு. வாழ்வின் நிறைவும், ஆனந்தமும், பரவசமும் எதிர் காலத்தில் எங்கோ இல்லை, அடையக்கூடிய காலக்கணக்கு எல்லைக்கு உட்பட்ட பொருளுலகில் அது இல்லை. உணர்வின் ஆழம்தான் அடைய வேண்டியது. அப்படி ஆழம் அடைவதற்கு பதிலாக, பிறக்கும் போது இருந்த உணர்வுகளையும் இழந்து நிற்கிறோம் நாம். ஆகவே இறந்த காலத்திற்கு இறந்து விடுங்கள். கணத்திற்கு கணம் புதிதாய் உணர்வில் ஆழம் கொண்டு வாழ்வை சுவையுங்கள், பருகுங்கள். பொருளுலகத்தைப் பிரித்து வையுங்கள். பொருள் தேவைதான், ஆனால் எதற்குத் தேவை என்று யோசித்துப் பாருங்கள். வாழத்தான் பொருள் தேடுகிறோம். அப்படியிருக்க வாழ்வையிழந்து, உணர்வையிழந்து பொருள் பின்னால் ஓடி என்ன பயனடையப் போகிறோம். உணர்வோடு வாழ்ந்து, இயல்புப்படி வாழ்ந்து, அப்படி ரசித்து, ருசித்து வாழும் வாழ்வில் பிறக்கும் உழைப்பில், படைப்பில் கிடைக்கும் பொருளில் வாழ்ந்து மகிழ்வதே வாழ்க்கை.

வாழ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை உனக்கு தன்னுணர்வுச் சுவை கொடுக்க, உணர்வின் உச்சத்தைத் தொட்டுக்காட்ட. ஆகவே ஓஷோ சொல்வது போல – முழு தைரியம் கொள்ளுங்கள், எழுச்சியடையுங்கள், படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். அதற்கு சுவைத்து வாழுங்கள், கரைந்து வாழுங்கள். அப்படியல்லாத கணங்கள் வாழ வாய்ப்பிருந்தும் நாம் தவறவிடும் கணங்களே என்பதை உணருங்கள்.  

வாழ்க விழிப்புணர்வுடன்,

அன்பு,

சித்.