இருப்பு நிலைக்கு வர உதவும் தியான முறைகள்.
1. நீ இருக்கிறாயா
எப்போது எப்போதெல்லாம் தூக்கத்தை உணர்கிறாயோ அப்போது,
முதல் படி உன்னையே கேட்டுக் கொள்
நீ இங்கிருக்கிறாயா என உன்னையே நீ கேட்டுக்கொள். திடீரென உன் எண்ணங்கள் நிற்கும்.
இரண்டாவது படி நீயே பதில் கூறு
ஆம் என பதில் கூறு. இது உன்னை கவனத்திற்குள் கொண்டுவரும். எண்ணங்கள் நின்றுவிடும்போது நீ கவனமடைவாய். இந்த கணத்தில் இருப்பாய்.
மூன்றாம் படி தூங்கப் போகும் போது கூட……..
தூக்கத்தில் விழப் போகும்போது கூட திடீரென நீ இருக்கிறாயா என கேள். பதிலும் கூறு.
இருளில் நீ விழிப்புணர்வு ஜோதியாக மாறுவாய்.
மேலும் இது உன்னுடைய சொந்த இருப்பை நினைவு கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் காலையில் உனது வாழ்வில் சூரியன் உதிப்பதை, மலர்கள் மலர்வதை பார்க்க கிடைத்ததற்காக நன்றி கூறி, மதிப்பு தருவதாகும். தியான தன்மையுள்ள, மனதிலிருந்து செயல்படாத ஒரு மனிதன் வாழ்க்கை அவனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்றியோடு இருப்பான். நீ அதற்கு தகுதியானவனல்ல. யாருக்குமே தகுதியில்லை. ஆனாலும் காரணமேயின்றி வாழ்க்கை பரிசளிக்கிறது. உன்னுடைய வாழ்க்கையை மேலும் ஒரே ஒரு வினாடி கூட அதிகமாக கேட்க முடியாது. நான் தகுதியானவன், எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் சில வருடங்கள் எனக்குத் தாருங்கள் என கேட்க முடியாது. யாருக்கும் உரிமையில்லை. ஆனால் வாழ்க்கை அதனுடைய அளப்பரிய தன்மையினால் உன்மேல் வாழ்வைச் சொரிகிறது.
2. நிறுத்து
எப்போது குறைந்தபட்சம் ஒருநாளில் 6 தடவை. அதிக பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால் திடீரெனத்தான் செய்யப்பட வேண்டும்.
தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, எதையாவது செய்து கொண்டிருக்கும் போது, திடீரென சுய உணர்வு வரும்போது, நிறுத்து – முழுமையாக நிறுத்து, அசைவுகள் இன்றி இரு. என்ன நிகழ்கிறது என்ற உணர்வோடு இரு. பின் நகர ஆரம்பி.
திடீரென நீ தன்னிலை அடையும்போது, சக்தி முழுமையாக மாற்றமடைகிறது. மனதில் ஓடிக் கொண்டிருப்பது நின்று விடும். அவ்வளவு விரைவாக மனதால் உடனே வேறொரு சிந்தனையை உருவாக்க முடியாது. அதற்கு சிறிது நேரம் பிடிக்கும், மனம் முட்டாள் தனமானது, அதற்கு உடனே செயல்பட தெரியாது. அதனால் நீ திடீரென செய்யும்போது…….. அந்த நிறுத்து எனும்போது மனம் நிற்கிறது, ஒரு வினாடி எல்லாமும் தெளிவாகிறது. எல்லா எண்ணங்களும் மறைந்து விடும் – அங்கே வெறுமை. அந்த வெறுமையில் ஒரு தெளிவு. நிறுத்தும்போது அதை அதிக நேரம் செய்யாதே. ஏனெனில் அரை நிமிடத்தில் மனம் திரும்ப உயிர் பெற்று அந்த தெளிவை அழித்து விடும்.
மையம் கொள்ளுதல் அல்லது நிலை பெறுதல்.
3. ஹரா தியானம் அல்லது நாபி தியானம்
எப்போதெல்லாம் செய்வதற்கு எந்த வேலையும் இன்றி ஓய்வாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் அமைதியாக அமர்ந்து தொப்புளுக்கு இரண்டு விரற்கடை கீழே உள்ள இடத்திற்கு சென்று அங்கேயே இரு. இதுதான் ஹரா மையம், நாபிக்கமலம்.
இந்த மையத்தைக் குறித்து விழிப்புணர்வு கொள்வது உனக்கு பேருதவியாக இருக்கப் போகிறது. அதனால் அங்கே எவ்வளவு நேரம் தங்கி இருந்தாலும் அந்தளவு நல்லது. அது உனது வாழ்வுச் சக்திகளுக்கு ஒரு மகத்தான மையத்தை உருவாக்கும். நீ அதை வெறுமனே பார்க்க ஆரம்பித்தால் போதும், அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். அந்த மையத்தை சுற்றியே வாழ்க்கை சுழலுவதை நீ உணர ஆரம்பிப்பாய். ஹராவிலிருந்துதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது, அந்த ஹராவில்தான் வாழ்வு முடிகிறது. நமது உடலிலுள்ள மற்ற மையங்கள் எல்லாம் விலகி உள்ளன. நாபிக் கமலம் மட்டும் மிகச் சரியாக நடுவில் உள்ளது. – அங்கேதான் நாம் வேர் கொண்டு நிலை பெறுகிறோம். அதனால் ஒருவர் அந்த மையத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டால் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
உதாரணமாக, எண்ணங்கள் குறையும், ஏனெனில் சக்தி தலைக்கு செல்வதில்லை, அது நாபிக்கு செல்கிறது.
நீ நாபியை பற்றி நினைக்க நினைக்க நீ நாபியில் நிலை பெற,பெற உன்னுள் ஒரு ஒழுங்கு வரும். அது வற்புறுத்தலால் வருவதல்ல, தானே இயற்கையாக வரும். உனக்கு நாபியை பற்றிய விழிப்புணர்வு அதிகமாகுமளவு வாழ்வையும் இறப்பையும் பற்றிய பயம் குறையும் – ஏனெனில் இதுதான் பிறப்பு இறப்பின் மையம். ஒருமுறை நீ நாபி கமலத்துடன் லயப்பட்டு விட்டால், பின் வாழ்வை துணிச்சலுடன் வாழ முடியும். தைரியம் அதிலிருந்துதான் எழுகிறது. மேலும் நிதானமற்ற கணங்கள் குறைதல், எண்ணங்கள் குறைதல், அதிக மௌனம், இயல்பான ஒழுக்கம், துணிச்சல், நிலைபெற்றல், ஆழமாய் இருத்தல் ஆகியன நிகழும்.
தளர்த்திக்கொள்ளும் முறைகள்
4. உன்னை ஏற்றுக் கொள்ளுதல்
நீ போட்டிக்கு நடுவே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. நீ இடைவிடாது ஒப்பிட்ட படியே வாழ்கிறாய். அது பதட்டத்தை உண்டாக்குகிறது.
நீ ஒன்று இறந்தகாலத்தை பற்றி நினைக்கிறாய், அல்லது எதிர்காலத்தை பற்றி நினைக்கிறாய். அதனால் நிகழ்காலத்தை தவற விடுகிறாய். ஆனால் இதுதான் இருக்கும் ஒரே உண்மை. இது பதட்டத்தை உண்டாக்குகிறது.
உன்னுடைய திறமையை கண்டுகொள். இயற்கை யாரையும் தனிப்பட்ட திறமையை பரிசாக அளிக்காமல் பூமிக்கு அனுப்புவதில்லை, ஒரு சிறிய தேடல்தான் தேவை……. உன்னுடைய குணங்களை, உன்னிடமுள்ள தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடித்து அவற்றை முழுமையாக உபயோகப்படுத்து. பதட்டத்தில் குவிந்திருந்த சக்திகள் எல்லாம் உன்னுடைய மேன்மையாக, உன்னுடைய அழகாக மிளிர ஆரம்பிக்கும்.
5. ஒரு இறகு தொடுவதை போல தொடுதல்
ஒரு நாளைக்கு பல முறை செய்யவும்.
ஒரு வினாடி உணர்தல் கூட நல்லதுதான்.
ஆனால் தியானமாக செய்ய 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் படி ஒரு நாற்காலியில் அல்லது ரயிலில் அல்லது வேறு எங்கோ தளர்வாக உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி உள்ளங்கையை கண்களின் கருவிழிமேல் மெதுவாக அழுத்தாமல் இறகு தொடுவதைப்போல வைக்க வேண்டும்.
ஒரு ஓய்வான மனதில் எண்ணங்கள் ஓடாது, அவை உறைந்து விடும். அவை பதட்டத்தின் மூலம்தான் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் கண்கள் அசைவற்று நிலை பெற்ற நிலையில் சக்தி உள் நோக்கி செல்கையில், எண்ணங்கள் நின்றுவிடுகின்றன. நீ உள்மனதில் அளவற்ற சந்தோஷத்தை உணர்வாய். நாள்தோறும் செய்ய செய்ய அந்த சந்தோஷம் ஆழமாகும்.