1.எண்ணங்களின் உணர்வுகளின் ஆளுமையை உடைத்தல்

உங்களுடைய உணர்வுகளுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள்.

உங்களுடைய மனத்தின் ஆளுமையை வீசியெறிய வேண்டுமெனில் அதனுடன் நீங்கள் கொண்டுள்ள அனைத்து தொடர்புகளையும் அழித்து விடுங்கள். உங்களுக்குள் ஒரு எண்ணம் எழுகிறது, – அதனுடன் ஒன்றாகி விடாதீர்கள். நீங்கள் அதனுடன் ஒன்றாவதுதான் அதற்கு வலிமையை கொடுக்கிறது. தனித்து நில்லுங்கள். சாலையோரம் நின்றுகொண்டு கடந்து மக்களை வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். வானத்தில் உள்ள மேகங்களை கீழே உள்ள பூமியில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள். இது என்னுடைய எண்ணம் என்று சொல்லாதீர்கள். என்னுடைய என்று சொல்லும் அந்த கணமே நீங்கள் தொடர்பு கொண்டு விடுகிறீர்கள். தொடர்பு ஏற்பட்ட அந்த வினாடியே உங்களுடைய அனைத்து சக்திகளும் அந்த எண்ணத்துக்கு போய் விடுகிறது. அந்த சக்திதான் உங்களை அடிமை படுத்துகிறது – அது உங்களது சக்திதான்.

உங்களது எண்ணங்களிடமிருந்து நீங்கள் விலகி நின்று பார்க்கும்போது அவை சக்தி இழந்து போகிறது, வாழ்விழக்கிறது. ஏனெனில் அவைகளிடம் எந்த சக்தியும் கிடையாது. நீ ஒரு பக்கம் விளக்கை அணைக்க விரும்புகிறாய், இன்னொரு பக்கம் அதற்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கிறாய். கையால் எண்ணை ஊற்றிக் கொண்டே வாயால் அதை ஊதுகிறாய். இதுதான் உன் பிரச்னை. புதிதாக எந்த எண்ணையும் ஊற்றாதே. இருக்கும் எண்ணை வெகு நேரம் எரியாது.

எண்ணம் என்பது என்ன? எப்போதெல்லாம் ஒரு எண்ணம் உன்னை பிடித்துக் கொள்கிறதோ, – உதாரணமாக எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ – நீ உடனடியாக அதனுடன் ஒன்றாகி விடுகிறாய். நீ நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்கிறாய். நீ அந்த கோபத்துடன் உன்னை மிகவும் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டதால் உனது சக்தி முழுவதும் அதற்கு சென்று விட்டது. இதுதான் உண்மை. நீ நிழலாகி விட்டாய். கோபம் எஜமானனாகி விட்டது. கோபம் வரும்போது தனியாக நின்று அதைப் பார், கவனி. கோபம் பொங்கி எழட்டும். அது உன் உடலை முழுவதுமாக ஆக்ரமிக்கட்டும். அது எல்லா திசைகளிருந்தும் சூழட்டும். நடக்கட்டும். நீ நான் கோபமல்ல என்ற ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும். கோபத்தினுள் குதிக்க அவசரம் காட்டாதே, ஏனெனில் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

இடைவெளிக்காக காத்திரு.

உனது கோபத்தை கவனி. ஆனால் அதற்காக எதுவும் செய்யாதே. உன்னை அவமதித்த மனிதனை நீ ஏதாவது செய்ய வேண்டுமானால், கோபம் வடியும் வரை காத்திரு. அதற்கு முன் எந்த சூழ்நிலையிலும் அதற்கு பதிலளிக்காதே.

ஆரம்பத்தில் அது மிகவும் கடினமானதாக இருக்கும். மிகவும் கடினமானதாக தான் இருக்கும். நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன்னை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், போக, போக அது சுலபமானதாகிவிடும். கோபம் இருக்கும் வரை உன் வாயை மூடிக் கொண்டிரு. கோபம் வடிந்த பிறகு பதில் சொல். இதுதான் ஒரே சரியான வழி. அமைதியான தருணங்களில்தான் சரியான பதில் வரும். கோபத்தில் பதில் சொல்வது போதையில் பதில் சொல்வதைப் போன்றது. உனக்கும் உனது எண்ணங்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இடைவெளி உண்டாக்கிக் கொள்கிறாயோ அவ்வளவு உனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்கிறாய். நீ உனது ஆசைகளுக்கு மிக அருகில் இருப்பதால் அதற்கும் உனக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்பதையே நீ மறந்து போய் விடுகிறாய். இரண்டிற்கும் இடையே இடைவெளியே இருப்பதில்லை.

பலன் உடனே கிடைக்காது. ஏனெனில் உனது நெருக்கம், அதனுடன் உனது தொடர்பு கணக்கற்ற பிறவிகளாக தொடர்ந்து வருகிறது. அந்த தொடர்பை ஒரு நாளில் உடைக்க முடியாது. அதற்கு காலம் பிடிக்கும். ஆனால் உன் பக்கத்திலிருந்து கிடைக்கும் சிறு முயற்சி பலனை கொடுக்கும், ஏனெனில் இது தவறான அடையாளம். அது உண்மையென்றால் அதை உன்னால் உடைக்கவே முடியாது.

ஆனால் உன்னுடைய எண்ணங்களோடு நீ கொண்டுள்ள இந்த அடையாளம் உன்னுடைய ஒப்புதலேயன்றி வேறல்ல. இருப்பினும் இதுதான் உன் எல்லா பிரச்னைகளையும் உருவாக்குகிறது.

பசி வரும்போது நான் பசியாயிருக்கிறேன் என்று சொல்லாதே. பதிலாக இந்த உடல் பசியாக உணருவதை நான் பார்க்கிறேன் என்று சொல்.

இதுதான் உண்மை. நீ பார்ப்பவன்தான். உடல்தான் பசியை உணருகிறது. தன்னுணர்வு ஒருபோதும் பசியாக இருப்பதில்லை. உணவு உடலுக்குள்  தான் செல்கிறது. உடலுக்கு, தசைக்கு, இரத்ததிற்கு தான் தேவை இருக்கிறது. இந்த உடல்தான் சோர்வடைகிறது. தன்னுணர்வு சோர்வடையாது. திரியும் எண்ணையும் இல்லாமல் எரியும் தீபம்தான் தன்னுணர்வு. அதற்கு எரிபொருளும் தேவையில்லை, உணவும் தேவையில்லை. அதற்கு எதுவுமே தேவையில்லை.

உடலுக்குத்தான் எரிபொருளும், உணவும் தேவை. உடல் ஒரு மெஷின், உயிர் மெஷினல்ல.

உடலுக்கு உணவு தேவை எனும்போதெல்லாம் அதற்கு உணவளி. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள். உடல்தான் பசியோடு இருக்கிறது, நான் அதை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு தாகமாக இருக்கும்போது தண்ணீர் கொடு.

உடல், உணவும் தண்ணீரும் தேவைப்படும் ஒரு இயந்திரம். நான் உடலல்ல, அதனால் அதற்கு உணவும் தண்ணீரும் தர மாட்டேன் எனக் கூறும் மனிதன் ஒரு முட்டாள். காருக்கு பெட்ரோல் போட வில்லையென்றால் எப்படி காரை ஓட்ட முடியும்?  நீ அதற்குள் உட்கார்ந்து இருக்கலாம், ஆனால் அது ஓடாது…… காருக்கு பெட்ரோல் போட வேண்டும். அப்போதுதான் அது ஓடும். காருடன் ஒன்றி விடாதே. ஒரு முதலாளியாக இருந்து அதன் தேவைகளை நிறைவேற்று.

உடலின் தேவைகள் நிறைவேற்றப் பட வேண்டும். அது நீ உபயோகப்படுத்தக் கூடிய ஒரு இயந்திரம். அது மிகப் பயனுள்ள ஒரு சாதனம். அதுதான் முக்தி நிலைக்கு நாம் செல்ல உதவும் ஒரு ஏணி. இந்த உடல் ஒரு இயந்திரம், ஒரு சுமந்து செல்லும் மெஷின். அதை கவனமாக பராமரி, அதை கெடுத்து விடாதே. உன்னுடைய வேலைக்காரனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய், அதற்காக அவனையே முதலாளி என்று எண்ண வேண்டியதில்லை.

மனதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் உண்மையை உணரலாம். மனது உனது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீ மெதுமெதுவாக சாட்சியாளனாக மாறி விடுவாய், உனக்கு உண்மை புரியும், உனது உயிர், உனது உண்மையான இருப்பு விழிப்புணர்வு நிலையை அடைய ஆரம்பிக்கும்.

Source : The Great Path Ch. #6

2.

உரிமையாளனை நினைவு கொள்ளுதல்

எனக்கு வலிக்கிறது, எனக்கு வலியாக இருக்கிறது, நான் வலியை உணருகிறேன், இவைதான் மூன்று நிலைகள், முற்றிலும் வேறு விதமான நிலைகள். ஞானமடைந்த ஒருவர் கூறுகையில், நான் வலியை உணருகிறேன் என்றுதான் கூறுவார். இந்த அளவு கூறுலாம். ஏனெனில் இப்போது நீ வலியை கடந்து போகிறாய். விழிப்புணர்வு நிலைமாற்றுகிறது. – நீ வலியிலிருந்து வேறுபட்டவன். அங்கே ஆழமான பிரிவினை இருக்கிறது. உண்மையில் அங்கு சம்பந்தமே இல்லை. அருகாமையில் இருப்பதால், உன்னுடைய தன்னுணர்வு நெருக்கமாக அங்கு இருப்பதால் அங்கே உறவு இருப்பது போல தோன்றுகிறது.

நீ வலியை உணரும்போது தன்னுணர்வு வெகு நெருக்கமாக இருக்கும்  – அது அங்கேயே அருகிலேயே இருக்கும். அது அங்கேதான் இருக்கமுடியும். இல்லாவிடில் வலி குணமாகாது. அதை தெரிந்து கொள்ள, அதை புரிந்து கொள்ள, அதை பற்றி விழிப்பு அடைய அதன் அருகிலேயே இருந்தாக வேண்டும். ஆனால் இந்த அருகாமையால் நீ அதனுடன் ஒன்றி விடுகிறாய். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு, ஒரு இயற்கையான காவல். ஒரு வலி வரும்போது உன்னுடைய தன்னுணர்வு அங்கே விரைந்து வந்தாக வேண்டும் – வலியை உணர, அதற்கு ஏதாவது செய்ய, அங்கே வரும். அந்த நெருக்கத்தினால் இந்த ஐக்கியப் படுதல் ஏற்படுகிறது.

நீ உணரக் கூடிய எதுவும் நீயல்ல. வந்து போகும் பல உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைவன். விருந்தாளிகளுக்கிடையில் தொலைந்து போய் விடாதே. உன்னுடைய நிலையை நினைவில் கொள்.

விருந்தாளி வரும்போது உரிமையாளரை நினைவில் கொள். பல விதமான விருந்தாளிகள் வருவர். சந்தோஷமானவர்கள், கவலையோடு இருப்பவர்கள், என பலர். நீ விரும்பும் வகையினர் விருந்தினராக வருவர், நீ யாருடன் இருக்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், யாரை நீ தவிர்க்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், ஆனால் அனைவரும் விருந்தாளிகள்தான்.

தொடர்ந்து உரிமையாளரை நினைவில் கொள், உரிமையாளராகவே இரு. அப்போது அங்கே ஒரு பிரிவினை இருக்கும், ஒரு இடைவெளி, நடுவில் ஒரு இடம் இருக்கும் – பாலம் உடைந்து போகும். அப்போது நீ அதில் இருப்பாய், ஆனாலும் அதனுடன் இருக்க மாட்டாய். அப்போது நீ அங்கிருப்பாய், விருந்தாளிகளுடன் இருந்தாலும் உரிமையாளராக இருப்பாய். விருந்தாளிகளை விட்டு ஓடிப் போக வேண்டிய அவசியமில்லை, தேவையுமில்லை.

Source : That Art Thou Ch. #16 

3,

கடந்து போதல் 

1.அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிரு. துயரம் வரும்போது அதை அடையாளம் கண்டு கொள். அது நல்லது கெட்டது என்றோ இது எனக்கு வந்திருக்கக் கூடாது என்றோ வந்திருக்க வேண்டும் என்றோ மதிப்பீடு செய்யாதே. துன்பம் வந்திருப்பதை பற்றி மட்டும் விழிப்போடு இரு. அதை உணர்ந்திரு.

2.மகிழ்ச்சியை உண்டாக்க முயற்சி செய்யாதே. செய்தால் அடுத்த பக்கமும் சேர்ந்தே வரும். மகிழ்ச்சி வந்தால் அதை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதே. இல்லாவிடில் மற்றொரு பக்கத்தையும் சேர்ந்தே அனுபவிக்க நேரிடும். திரும்பவும் துயரம் வந்து சேரும்

3.நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் துன்பம், மகிழ்ச்சி  இரண்டையும்  பார்த்துக் கொண்டே இருந்தால் திடீரென ஒரு நாள் நீ தனித்து இருப்பதை இரண்டிலிருந்தும் தனியாக பிரிந்து இருப்பதை, உணருவாய். இந்த விஷயங்கள் அனைத்தும் உன்னைச் சுற்றி நடப்பவை மட்டும்தான். நீ அவற்றிற்க்கு அப்பாற் பட்டவன் என்பது உனக்கு தெரிய வரும். இந்த தனித்து இருத்தல்தான் பிரபஞ்ச ஆன்மா. அப்பாற் பட்டு இருத்தலின் நடப்பு, இரண்டையும் கவனித்து பார்த்தாலும் இரண்டையும் தாண்டி இருக்கும் இந்த இருப்பு, என்ற இந்த கணம்தான் நீ முழுமையானதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும் நேரம். நீ வெறுமையாகவும் இல்லை, அல்லது நிரம்பி வழிபவனாகவும் இல்லை.   

ஏனெனில் நீ மகிழ்வும் அல்ல துயரமும் அல்ல என்பதை நீ  உணர்ந்திருக்கிறாய்.

Source : The Great Secret Ch. #2