1. கதவும் சுவரும்

மூடியவனாக இருப்பது இறந்தவனாக இருப்பதாகும். இது முழு வானமும் உனக்குரியதாக இருக்கும்போது நீ சாவி துவாரத்தின் வழியாக வானத்தை பார்ப்பதைப் போன்றது. சாவி துவாரத்தின் வழியாக பார்த்தாலும் ஒரு
சிறிய அளவு வானத்தை பார்க்கலாம். சூரிய கதிர் ஒரு சமயம் பிரதிபலிக்கலாம், ஒரு நட்சத்திரம் ஜொலிப்பதை பார்க்கலாம். ஆனால் இது தேவையில்லாத சிரமம், தேவையில்லாமல் ஏழையாகவே இருப்பது.

இந்த கீழ்கண்ட எளிய பயிற்சி இதை மாற்ற உதவலாம்.

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப்போவதற்கு முன்

நேரம் – 20 நிமிடங்கள்.

முதல்படி – சுவராக மாறு

அறையின் நடுவில் நின்றுகொண்டு 10 நிமிடங்கள் சுவற்றையே பார். சுவரின் மேல்
கவனத்தை வை. கதவின் மீது அல்ல, சுவர்மீது. உன்னை நீயே ஒரு சுவர்போல எந்த திறப்பும் இல்லாத முழுமையாக மூடிய ஒரு சுவர் போல நினைத்துக்கொள். யாரும் உன்னுள் நுழைய முடியாது, நீயும் எங்கும் வெளியே வரமுடியாது.
சிறைபட்டதுபோல. மனதளவில் ஒரு சுவர்போல மாறு. உனது முழு சக்தியும் ஒரு சுவர் போல
ஒரு சீனச் பெருஞ்சுவர் போலாகட்டும். சுவராக மாறு எவ்வளவு இறுக்கமாக இருக்கமுடியுமோ
அவ்வளவு இறுக்கமாக, எல்லா திறப்புகளையும் விட்டுவிட்டு முழுமையாக மூடிக்கொள். லிப்நாட்ஸ் கூறியதுபோல ஒரு மோனாடாக, ஒரு திறப்பற்ற அணுபோல மாறு. உனக்குள் முழுமையாக மூடிக்கொள். உனக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கும், நீ நடுங்க ஆரம்பிப்பாய். வேதனை எழும். நீ இறக்கபோவது போல உணர்வாய். கவலைப்படாதே. அந்த உணர்வினுள் போ. அந்த இறுக்கத்தை, அந்த கவனத்தை, அந்த சுருங்குதலை உச்சகட்டத்திற்கு கொண்டு வா.

இரண்டாவது படி – கதவாக இரு

இப்போது திரும்பி நின்று கதவைப் பார்த்து 10 நிமிடங்களுக்கு நில். கதவை திறந்து வைத்துக் கொள், கதவாக மாறு. இப்போது நீ சுவராக அல்ல, கதவாக இரு. யார் வேண்டுமானாலும் உன்னுள் வரலாம் – தட்டவேண்டிய அவசியம் கூட இல்லை. நீயும் வெளியே போகலாம். தடை ஏதும் இல்லை. தளர்வு கொள். . . முழு உடலும் தளர்வடையட்டும்.
விரிவடை. அங்கேயே நில் ஆனால் விரிவடை. விரிவாகு. நீ அந்த முழு அறையையும்
நிறைப்பதைப் போல உணரு. . . உனது சக்தி அந்த கதவின் வழியே தோட்டத்திற்குள் பாய்ந்தோடி
செல்லட்டும். அந்த சக்தி வெளியே செல்வதற்கு அனுமதி, அதே சமயம் வெளி உலகம் உன்னுள் வருவதை
உணரு.

மூன்றாவது படி – அப்படியே தூங்க செல்.

இதை குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய். மூன்றாவது வாரத்திற்கு பிறகு நீ திறந்திருப்பவனாக
உணர்வாய், ஆனால் இந்த முரண்பாட்டை அதிக வலிமையாக உணர விரும்பினால் தொடர்ந்து செய். ஒருமுறை உன்னுடைய சக்தியை – சுவராகவோ, கதவாகவோ மாறும் அந்த சக்தியை நீ புரிந்துகொண்டுவிட்டால் பின் மிக அழகானதொரு பரிமாணத்தை பற்றிய உணர்வை நீ பெறுவாய்.
உன்னால் மற்றவர்களின் சக்தியையும் உணர முடியும். நீ தெருவில் ஒருவரை கடந்து
செல்கிறாய், அவர் சுவராக இருக்கிறாரா, கதவாக இருக்கிறாரா என்று உன்னால் உணரமுடியும்.
இப்போது அதைப் பற்றிய உள்முக புரிதல் உனக்கு இருக்கும். நீ அவருடன் தொடர்புகொள்ள
விரும்பினால் அவரை நீ சுவராக உணரும்பொழுது அவருடன் தொடர்பு கொள்ளாதே ஏனெனில்
எதுவும் வெற்றியடையாது. அவர் கதவாக இருக்கிறார் என நீ உணரும்போது தொடர்பு கொள்.

உறவுகளில் பல தடவைகள் இது நிகழும்போது ஒரு ஆழமான அனுபவமாக இருக்கும். இதை நீ கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. மக்கள் தங்களது சொந்த சக்தியை பற்றிய விழிப்புணர்வு பெற்றால்
அவர்களது வாழ்வு முழுமையும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். பின் அவர்கள் யார்
கதவாக இருக்கிறார்களோ அவர்களுடன் நேசம் கொள்வர். சுவராக இருப்பவர்களுடன் நேசம்
கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் மக்கள் எப்போதெல்லாம் கதவாக இருக்கிறார்கள்
என்பதையும் தெரிந்துகொள்வார்கள். ஏனெனில் மனிதர்களின் மனநிலை மாறிக்கொண்டேயிருக்கிறது.

ஒருவர் காலையில் கதவாக இருக்கலாம், மாலையில் அவரே சுவராக மாறலாம் – ஏனெனில் நாள் முழுவதும் போராட்டமும் சண்டையும் பதட்டமும், இறுக்கமும் வேதனையும் ஏற்படும் போது மூடிக்கொள்ளத்தான் தோன்றும். அதனால் ஒருவர் கதவாக இருக்கும்போது அவரை அணுகினால் அவர் வேறுபட்ட மனிதராக இருப்பார். உனது குழந்தையை அது கதவாக இருக்கும்போது அணுகு. அப்போது அவன் நீ சொல்வதை கேட்பான், நீ கூறுவதை கிரகித்துகொள்ள தயாராக இருப்பான். இல்லாவிடில் நீ கத்திக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அவன் செவிடனாக இருப்பான். அவன் சுவராக இருப்பான். உன் மனைவி கதவாக இருக்கும்போது அவளிடம் பேசு. அவள் கதவாக இருக்கும்போது அவளுடன் கூட முயற்சி செய். அவள் சுவர் போல இருக்கும் போது அவளை
தொந்தரவு செய்யாமலிருப்பது நல்லது. ஆனால் ஒருமுறை உனது உள்முக உணர்வை பற்றி உனக்கு
தெரிந்துவிட்டால், பின் நீ அதை எங்கேயும் உணரலாம்.

மூலம்: THE PASSION FOR THE IMPOSSIBLE

2. ஓடுதல்

ஓடுதல் எப்படி வேலை செய்கிறது. . .

உள்ளே பயம் இருக்கிறது, பயத்திற்கு கீழே கோபம் இருக்கிறது,  கோபத்திற்கு கீழே அன்பிருக்கிறது. இவையனைத்திற்கும் கீழே உள்ளதை கண்டுபிடிக்கவேண்டும். அதனால் இந்த அடுக்குகளுக்கு
கீழே உள்ளதை காண முயலவேண்டும். இதற்கான எளிய வழி இதுதான்.

மனித குலத்தின் ஆழமான அடுக்கு வேட்டையாடுதல். நமது
மூளை செல்களில் ஓடுவதற்கு தேவையான ஆற்றல் பொதிந்திருக்கிறது. நீச்சல் ஒரு ஆழமான
விஷயமல்ல – அது கற்றுக்கொள்ள வேண்டியது – ஆனால் ஓட்டம் உண்மையிலேயே ஆழமானது.

அதனால் ஒரு தியானிப்பவன் பெறும் தியான சக்தியை விட அதிக
தியான சக்தியை ஒரு ஓடுபவன் பெறுவது நிகழ்ந்திருக்கிறது. தியானத்தில் அது பத்து
சதவிகிதம்தான், ஓடுதலில் அது எண்பது சதவிகிதம். இன்னும் சிறப்பான உலகத்தில்
ஓடுதல் மிக முக்கியமான தியானத்தில் ஒன்றாக இருக்கும். ஏனெனில் நீ வேகமாக ஓடும்போது
ஆழமாக மூச்செடுக்கிறாய், மெதுமெதுவாக முதல் கிலோமீட்டர் ஓடியபின் உனக்கும் உன் உடலுக்கும்
இடையே வேறுபாடு இருக்காது. மனதிற்கும் உடலுக்கும் இடையேயான பிளவு மறைந்துவிடுகிறது.
மனோரீதியாக ஒன்றாகிவிடுகிறாய், நீ ஒன்றாக, முழுமையாகிவிடுகிறாய். முதல் கிலோ மீட்டர் ஓடியபின் நீ
தொடர்ந்து ஓடும்போது, சுவாசம் உன்னை எடுத்துக்கொள்கிறது, உண்மையிலேயே
ஆழ்ந்து செல்கிறது – அது ஆழமாக சென்றாக வேண்டும், உள்ளே வெளியே
இரண்டு மூச்சுமே ஆழ்ந்து செல்கிறது – உனது இரத்தம் முழுமையும் சுத்தப்படுத்தபடுகிறது, காற்று உன்னுள் செல்கிறது,  சூரிய கதிர்கள் உன்னுள் செல்கிறது.

நீ திரும்பவும் இயற்கையின் பாகமாகிவிடுகிறாய், நீ திரும்பவும்
ஒரு விலங்கு போலாகிவிடுகிறாய்- வீணாகிப்போன ஒரு நாகரீகமடைந்த மனிதனாக இல்லாமல் போகிறாய்.
நீ திரும்பவும் ஒரு விலங்கு போலாகும்போது திடீரென எல்லா கவலைகளும் மறைந்துவிடும், கவலைப்படுபவனால் ஓடமுடியாது, இரண்டும் ஒன்று சேர்வது சாத்தியமில்லை. ஓடுதல் உனது ஆழ்ந்த
மையத்தை தொடும்போது வேட்டையாடுதல் அங்கிருக்கும். நீ அதை இன்னும் உனது மூளையின்
செல்களில் சுமந்துகொண்டிருக்கிறாய், அதை திரும்பவும் தொட்டு, உயிரூட்டி, உயிர்பிக்க
செய்ய வேண்டும் – அது உனக்கு அளவற்ற சந்தோஷத்தை கொடுக்கும். அந்த
சந்தோஷத்தில் பயம் மறைந்துவிடும். அந்த சந்தோஷத்தில் கோபம் மறைந்துவிடும். அன்பு
பெருகி ஓட ஆரம்பிக்கும்.

மூலம்: THIS IS IT.