தியான யுக்தி – 1

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல்

நீ உனது சொந்த விருப்பத்தின் மூலமாக செயல்பட முடிந்தால், உனது உள்ளுணர்வு சொல்வதை தேர்ந்தெடுக்கமுடிந்தால். . . . ! உனது உள்ளுணர்வு குழந்தை பருவத்தில் மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் வளர வளர மெதுமெதுவாக அது
வலிமையிழந்துவிடுகிறது. பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமுதாயத்தின், குருமார்களின் குரல் வலுத்து
ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. நீ உனது குரலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்.

முதல்படி:

உள்ளே கவனி – இது யாருடைய குரல் ?

சில நேரங்களில் அது உனது தந்தையினுடையதாக சில சமயங்களில் அது உனது தாயினுடையதாக, சில நேரங்களில் தாத்தாவினுடையதாக, சில நேரங்களில் உனது ஆசிரியருடையதாக இருக்கலாம்.
இவையனைத்தும் வேறு வேறு விதமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாத ஒரே
விஷயம்- உனது சொந்த குரல். அது எப்போதும் அடக்கி வைக்கபட்டிருக்கும். பெரியவர்கள்
சொல்வதை, குருமார்கள் சொல்வதை, ஆசிரியர்கள் சொல்வதை, கேட்கவேண்டும் என்று உனக்கு
சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உன்னுடைய சொந்த குரலை கவனி, அது கூறுவதை கேள் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்காது.

உன்னுடைய சொந்த குரல் மெலிதானதாக, கேட்கப்படாமல், இந்த கூட்ட நெரிசலில் கேட்க
முடியாதபடி அழுந்தி இருக்கும்.
அதை கேட்பது கிட்டதட்ட இயலாத செயல். முதலில் நீ இந்த குரல்களிலிருந்து வெளியேற வேண்டும், ஒரு விதமான அமைதியை, மெளனத்தை, நிசப்த்த்தை அடையவேண்டும். அப்போதுதான் அது கேட்கும், உனக்கே சொந்தமான குரல் உண்டு
என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உனக்கு தெரியும். அது அங்கே ஒரு ஆழ்நீரோட்டமாக, அடி நீரோட்டமாக இருந்துகொண்டேயிருக்கும்.

நீ உனது சொந்த விருப்பத்தை காணமுடியாவிடில், உனது வாழ்க்கை கருவறையிலிருந்து கல்லறை வரை மிக
நீண்ட ஒரு சோகமாகத் தான் இருக்கும். தன்மீது பிறர் திணிக்கும் அவர்களது
கருத்துகளை எதிர்த்து புரட்சி செய்து தங்களது விருப்பத்தின்படி வாழும் மக்களே
இந்த உலகில் ஆனந்தமாக வாழும் மக்கள். மற்றவர்களது கருத்துகள் எவ்வளவு சிறப்பானதாக
இருந்தாலும் அவை உன்னுடையதாக இல்லாதபோது அவை பயனற்றவையே. உன்னுள் உதயமாகும், உன்னுள் வளரும், உன்னுள் மலரும் கருத்துகளே அர்த்தமுள்ள கருத்துகளாகும்.

இரண்டாம்படி:

யார் பேசுவது என கவனிப்பது !

நீ என்ன பேசினாலும் செய்தாலும் நினைத்தாலும் முடிவு செய்தாலும் உன்னை நீயே கேட்டுக்கொள் : இது உன்னிடமிருந்து வருகிறதா அல்லது வேறு யாராவது பேசுகிறார்களா ?

உன்னுடைய சொந்த குரலை கண்டுபிடித்துவிட்டால் நீ ஆச்சர்யபடுவாய். உன்னுடைய தாயின் குரலை நீ திரும்பவும் கேட்பாய். தந்தையின் குரலை திரும்பவும் கேட்பாய்- அதை கண்டுபிடிப்பது கடினமானதல்ல. முதன்முறை உனக்கு கொடுக்கப்பட்ட சமயத்தில் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த
அறிவுரை, கட்டளை, ஒழுக்கம், ஆகிய எல்லாமும் – நீ குருமார்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சொந்தகாரர்கள், மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிய பலரையும் நீ அங்கே காணலாம். சண்டையிட வேண்டிய அவசியமில்லை. அது உன்னுடைய குரலல்ல, வேறு யாருடையதோ – யாராயிருந்தாலும் சரி, வேறு யாரோ தான்- என்று தெரிந்துகொள், அதுவே போதும். நீ அதை
பின்பற்றமாட்டாய். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்மையோ, தீமையோ- நீ இப்போது உன் வழியே
செல்ல முடிவெடுத்துவிடுவாய். நீ
பக்குவப்பட, பண்பட ஆரம்பித்துவிடுவாய்.நீ குழந்தையாக இருந்தது போதும், நீ சார்ந்திருப்பவனாக இருந்தது
போதும். நீ இந்த குரல்களை கேட்டு கேட்டு அதை பின்பற்றுபவனாக இருந்தது
போதும்.அவா உனக்கு கொடுத்தது என்ன ? குழப்பம்தான்.

மூன்றாம் படி:

நன்றி. . . . வணக்கம்.

ஒருமுறை அது யாருடைய குரல் என்பதை நீ கண்டு கொண்டு விட்டால்
அந்த குரலுக்குரியவருக்கு நன்றி சொல், பின் உன்னை விட்டு போகச் சொல், பின் அந்த குரலுக்கு, அந்த குரல் சொல்லும் விஷயத்திற்கு வணக்கம் சொல். உனக்கு அந்த குரலை கொடுத்த
நபர் உனது விரோதியல்ல. அவருடைய குறிக்கோள் தீமை செய்வதல்ல, ஆனால் அவரது குறிக்கோள் என்ன
என்பதல்ல கேள்வி. உனது உள் மையத்திலிருந்து வராத ஏதோ ஒன்றை அவர் உன்னிடம்
பதிய வைக்கிறார் என்பதுதான் பிரச்சனை, மேலும் வெளியிலிருந்து வந்து பதியும்
எதுவுமே உன்னை மனரீதியாக அடிமைப்படுத்தும்.

ஒருமுறை அந்த குரலிடம் என்னை விட்டுவிடு என்று உறுதியாக கூறிவிட்டால், பின் நீ அதனுடன் கொண்டுள்ள தொடர்பு, நீ அதனுடன் கொண்டுள்ள அடையாளம் உடைந்துவிடும். அது உன்னுடைய குரல் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும்
வரைதான் அது உன்னை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். அந்த அடையாளம்
தான் முழு பிரச்சனையே. அது உனது எண்ணமல்ல, உனது குரலல்ல, என இப்போது உனக்கு தெரியும். அது
உனது இயல்புக்கு அன்னியமானது. அதை தெரிந்துகொள்வதே போதுமானது. உன்னுள் உள்ள
அந்த குரல்களிலிருந்து நீ விடுபட்டவுடன் நீ இதுவரை கேட்டிராத மெலிதான, சிறிய குரலை கேட்கும்போது
வியப்படைவாய். . . . பின் நீ அதுதான் உனது குரல் என்று தெளிவாக
அறிந்துகொள்வாய்.

அது எப்போதுமே அங்கிருக்கிறது, ஆனால் மெலியதாக, சன்னமாக கேட்கும் ஏனெனில் அது
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும்போது அந்த குரல் மெல்லியதாக இருக்கும், ஒரு விதை முளைவிட்டதைபோல, ஆனால் மற்ற செடிகள் அதை மறைத்து
மூடிவிட்டன. நீ இப்போது அந்த செடிகளை பார்த்து கவனித்துகொண்டிருக்கிறாய், அந்த சிறிய முளைதான் உனது வாழ்க்கை, அது இன்னும் உயிரோடு இருக்கிறது, நீ அதை கண்டுபிடிப்பதற்காக அது காத்திருக்கிறது என்பதை நீ
முற்றிலுமாக மறந்துவிட்டாய். உனது சொந்த குரலை கண்டுபிடி, பின் எந்தவித பயமும் இல்லாமல் அதை
பின்பற்று.

அது உன்னை எங்கே வழிகாட்டி கூட்டி சென்றாலும் அதுதான் உன் வாழ்வின் இலட்சியம், அதுதான் உனது இறுதிப்பாடு. அங்கே மட்டுமே நீ நிறைவடையமுடியும், திருப்தியடையமுடியும். அங்கேதான் நீ மலர்ச்சியடைவாய்- அந்த
மலர்தலில்தான் அறிதல் நிகழும்.

Source: THE REBEL

 

தியான யுக்தி – 2

தலையாய குணங்கள்

முதல்படி :

உனது சக்தியை எடுத்துகொள்வது எது. உனது விசேஷ குணாதிசயம் எது என கண்டுபிடிப்பது மிக எளிது – சில தினங்களுக்கு உனது மனதை கவனித்துக் கொண்டிரு- ஒரு டைரி எடுத்து விஷயங்களை குறித்து வைக்கலாம் – உனது சக்தியை, அதிகபட்சமாக எடுத்துக் கொள்வது எது ? உனது கற்பனையை செலுத்துவது எது ?

பொறாமை ? அதிகாரத்திற்கான ஆவல் ? ஆணவம் ? இவைதான் உனது முதல் எதிரி.

ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான விஷயங்களை கண்டுபிடிப்பர் – கோபம், பாலுணர்வை அடக்கி வைத்தல் – இதுபோல. அது என்ன என்று கண்டுபிடித்தலே பாதி வெற்றியடைந்தது போலத் தான். ஏனெனில் நீ மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியும்.

குருட்ஜிப் தனது சீடர்கள் இதை கண்டுபிடிக்க பலவேறு விதமான வழிகள் வைத்திருந்தார். ஒரு மன நல மருத்துவர்
உன்னுடைய கனவுகள் மூலமாக இதை கண்டுபிடித்துவிடுவார். ஆனால் அவர் எந்த
பள்ளியில் இருந்து கற்றுக்கொண்டு வந்தாரோ அந்த வழிமுறை மூலமாக அதை பொருள்
கொண்டுவிடுவார்.

இரண்டாவதுபடி:

எதிர்வினை புரியாதே. அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அந்த எதிரி வரும்போது எதிர்வினை புரியாதே. அமைதியாக இருந்து அது திரையில் கடந்து செல்வதை கவனிப்பதுபோல கவனி. நீ அதனுடன் பிணைப்பு கொள்ளாவிடில்
திடீரென உனது எதிரி எடுத்துக் கொண்டிருந்த ஒரு அளவற்ற சக்தி விடுதலை பெறும். நீ
புத்துணர்வடைவாய். உநது முழு இருப்பும் திடீரென புதுமையாக இளமையாக மாறும்.

மூன்றாவதுபடி:

மற்றவைகளையும் கண்டுபிடி. பின் இரண்டாவது மூன்றாவது எதிரிகளை கண்டுபிடி. உனக்கு உன்னிடம் உனது சக்தியை எடுத்துக் கொள்ளும் எதிரிகளே இல்லாத போது உன்னிடம் ஒரு அழகு, சாந்தம், அளவற்ற சக்தி ஆயிரம் தாமரை
மலர்களாக உன்னிடம் மலரும்.

Source: THE TRANSMISSION OF THE LAMP