இடைவெளியை உணர்ந்து பார் – ஓஷோ

பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில்தான் உள்ளது. இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில்தான் உள்ளது. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்டவேளையில் உள்ளது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது. அன்பு வெறுப்பாக மாறும்போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை அந்த இடைப்பட்ட நேரம் – கடந்தகாலம் எதிர்காலமாக மாறும்போது இடைவெளி – அது அன்பாக இல்லை, ஆனால் எதிர்காலம் இன்னும் வரவில்லை, அந்த இடைவெளி, மிகச் சிறிய இடைவெளி அதுதான் நிகழ்காலம் அதுதான் இப்போது. அது மிகச் சிறியது எனவே நீ அதை ஒரு காலத்தின் நேரமாக அழைக்க முடியாது. அது பார்க்க முடியாத அளவு சிறியது. அதை பிரிக்கமுடியாது. அந்த கணநேரம் காணமுடியாதது. அது ஒவ்வொரு கணமும் ஆயிரத்தோரு வழிகளில் வருகிறது.

உனது மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது, நீ அவற்றின் ஊடே செல்கிறாய். இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீ பலமுறை தெய்வீகத்தை கடந்து வருகிறாய், ஆனாலும் எப்படி நீ தொடர்ந்து தவற விடுகிறாய் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் நாம் இடைவெளியை பார்ப்பதேயில்லை, இடைவெளியை பார்க்காமல் இருக்கும் தந்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம். அது மிகச் சிறியது, ஆகவே அது வந்து போவதே நமக்கு தெரிவதில்லை. அதைப் பற்றிய உணர்வே நமக்கு இல்லை. ஏதாவது ஒரு விஷயம் நம்மிடமிருந்து போய், அது கடந்தகாலம் என ஆன பின் அல்லது எதிர்காலமாக இருக்கிறது இன்னும் வந்து சேரவில்லை எனும் போது நமக்கு அதைப்பற்றிய உணர்வு வருகிறது. ஆனால் அது நம்மிடம் இங்கிருக்கும்போது எப்படியோ அதை பார்க்காமல் நாம் சமாளித்துக் கொள்கிறோம்.

நீ கோபமாக இருக்கும்போது நீ அதைப் பார்ப்பதேயில்லை, பின் செய்த பிழைக்காக வருந்துகிறாய். பின் அதுவே திரும்பவும் நடக்கிறது, பின் திரும்பவும் நீ வருத்தப்படுகிறாய், மேலும் அது திரும்ப திரும்ப நடப்பதால் நீ சஞ்சலப்படுகிறாய். ஆனால் அது வரும்போது நீ குருடாக, செவிடாக, தன்னுணர்வற்றவனாக, விழிப்புணர்வின்றி திடீரென ஆகி விடுகிறாய். அந்த இடைநேரம் மிகச் சிறியதாக இருப்பதால் அதை தவற விடும் கவனம் உனக்கு இருப்பதில்லை. அது நுண்ணியது, அதை முழுமையான விழிப்புணர்வினால் மட்டுமே கைப்பற்ற முடியும். முழுமையாக இருக்கும் போது மட்டுமே உன்னால் அதை பார்க்க முடியும். உயிர்ப்பிலிருந்து ஒரு எண்ணம் வெளியேறும், வேறொரு எண்ணம் உயிர்ப்புக்குள் வரும், இந்த இரண்டு செயல்களுக்கு நடுவே ஒரு எண்ணமற்ற இடைநேரம் இருக்கும். இதுதான் தெய்வீகம்.
………….நான் உனக்கு திறவுகோலை முழுமையாக கொடுத்து விட்டேன். இப்போது நீ இந்த திறவுகோலினால் உனது இருப்பினுள் செயல்பட ஆரம்பிக்கலாம்.

தியான யுக்தி – 1

இடைநேரத்தை பார்.

தூங்கப் போகும் நேரம் விழிப்புமல்லாத ஆனால் இன்னும் தூக்கம் வராத அந்த இடைநேரத்தை பார்க்க முயற்சி செய். ஒரு கணம், மிக நுண்ணிய கணம் வரும். ஆனால் அது அதிக நேரம் இருக்காது. அது ஒரு தென்றல் போல, சின்ன காற்றுப் போல வரும். அது அங்கிருக்கும், பார்க்கும்முன் போய்விடும். ஆனால் உன்னால் அதை பிடிக்க முடிந்தால் நீ மிகவும் ஆச்சரியமடைவாய். வாழ்க்கையின் மிகச் சிறந்த பொக்கிஷத்தின் மீது மோதிக் கொண்டதை நீ உணர்வாய்.

…………இந்த இடைநேரத்தை விழிப்புணர்வின்றி கடந்தால்கூட நீ பலனடைவாய். அதன் மணத்தின் ஏதோ சில பகுதி, ஏதோ கொஞ்சம், நீ அறியாமலேயே உனது இருப்பினுள் சென்று விட்டால்கூட அது அங்கே நெடுநேரமிருக்கும். ஆனால் அந்த கணத்தில் இருந்து எச்சரிக்கையாக இரு. மெது மெதுவாக அந்த சாமர்த்தியம் வந்துவிடும்.

Source: LET GO

தியான யுக்தி – 2

இயல்பாயிருக்கும் கலை

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்

முதல் படி – உடலிலிருந்து ஆரம்பி
உடல்தான் ஆரம்பமாயிருக்க வேண்டும். படுக்கையில் படுத்துக் கொள்…..தூக்கம் வருவதற்கு முன், மூடிய கண்களுடன் காலிலிருந்து கவனிக்க தொடங்கு. அங்கிருந்து ஆரம்பி – உள்ளே கவனி, ஏதாவது பதட்டம் எங்காவது இருக்கிறதா, காலில், தொடையில், வயிற்றில் பதட்டம் இருக்கிறதா எங்காவது இடையூறு, ஏதாவது பதட்டம் உள்ளதா

இரண்டாவது படி – அந்த பதட்ட முடிச்சை தளர்வடையச் செய்
எங்காவது பதட்டமாக ஏதாவது இருப்பின், அதை தளர்வடையச் செய். அங்கே தளர்வை நீ உணரும்வரை அந்த இடத்திலிருந்து நீ நகராதே.

மூன்றாவது படி – கைகளிலிருந்து தொடங்கு
கைகள் முழுவதையும் உணரு. – ஏனெனில் உனது கைகள்தான் உனது மனம். அவை உனது மனதுடன் இணைந்துள்ளன. உனது வலது கரம் பதட்டமாக இருந்தால் உனது இடது மூளை பதட்டமாக இருக்கும். உனது இடது கரம் பதட்டமாக இருந்தால் உனது வலது மூளை பதட்டமாக இருக்கும். அதனால் முதலில் உனது கைகளை உணரு. அவை கிட்டத்தட்ட உனது மூளையின் கிளைகள் போன்றவை. பின் கடைசியாக மனதை சென்றடை.

நான்காவது படி – கடைசியாக மனம்
முழு உடலும் தளர்வாக இருக்கும்போது உனது மனம் கிட்டத்தட்ட 90 சதவீதம் தளர்வாக இருக்கும், ஏனெனில் உடல் என்பது மனதின் ஒரு நீட்டிப்புதான். இப்போது ஒரு 10 சதவீத பதட்டம் உனது மனதில் இருக்கும் – வெறுமனே அதை கவனி. அதை கவனிப்பதாலே அந்த மேகம் மறைந்துபோகும்.

இதற்கு சில நாட்கள் பிடிக்கும், இது ஒரு உபாயம். நீ மிகவும் தளர்வாக இருப்பது உனது குழந்தைபருவ அனுபவத்தை திரும்ப கொண்டுவரும். எப்படி ஓய்வாக இருப்பது என்ற ரகசியத்தை யாரும் உனக்கு கற்றுக் கொடுக்கமுடியாது, நீயேதான் அதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒரு முறை தெரிந்துகொண்டு விட்டால் பின் பகலில்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீ உன்னை தளர்த்திக் கொள்ளலாம். தளர்த்திக் கொள்வதில் ஆற்றல் படைத்தவனாக இருப்பது இந்த உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த அனுபவங்களில் ஒன்றானதாகும்.

Source : SATYAM, SIVAM, SUNDERAM