தியான யுக்திகள்
தியான யுக்தி – 1
இதயத்துடனான இணைப்பை இழந்து விடாதே.
உணர்வுதான் உண்மையான வாழ்க்கை. நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல. மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது. மதுதான் உனக்கு போதையை கொடுப்பது. நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது. நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்.
நினைப்பு ஒரு போலியான செயல், ஒரு பதிலான செயல். அது உனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியை தரும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. அதனால் நினைப்பிலிருந்து உணர்வுக்கு நிலைமாறு. அதற்கு சிறந்த வழி இதயத்திலிருந்து சுவாசிக்க ஆரம்பிப்பதுதான்.
பகலில், எவ்வளவு முறை நினைவு வருகிறதோ அவ்வளவு முறை ஒரு ஆழமான மூச்சு எடு. அது உனது இதயத்தின் மையத்தை சென்று அடைவதாக உணரு. முழு இயற்கையும் உன் இதயமையம் எதுவோ அங்கே உன்னுள் சொரிவதாக உணர்ந்து பார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அது சாதாரணமாக வலது பக்கத்தில் இருக்கும். அதற்கும் உடல்ரீதியான இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது முற்றிலும் வித்தியாசமான விஷயம். அது நுண் உடலை சேர்ந்தது.
ஆழமாக மூச்செடு. நீ என்ன செய்தாலும் ஆழமான மூச்செடுத்து ஐந்து தடவைகள் செய். மூச்சை இழுத்து இதயத்தை நிரப்பு. இயற்கை இதயத்தின் மூலமாக நிரம்புவதாக இதயத்தின் நடுவே உணர்ந்து பார். வாழ்வு, தெய்வீகம், இயற்கை, துடிப்பு எல்லாமும் சொரிவதாக உணர். பின் அழுத்தமாக மூச்சை வெளியே விடு. இதயத்திலிருந்து உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் திரும்ப இயற்கைக்கு, தெய்வீகத்திற்கு கொடுப்பதாக உணர்ந்து கொடு.
ஒரு நாளைக்கு இதை பல தடவைகள் செய். ஆனால் எப்போது இதை செய்தாலும் முதலில் ஐந்து தடவைகள் ஆழமான மூச்செடு. அது தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாற உனக்கு உதவி புரியும்.
நீ மேலும் மேலும் உண்ர்வுள்ளவனாக மாறுவாய். நீ விழிப்படையாத பல விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ அதிக சுவை அறிபவனாக, அதிக வாசனை உணர்வுள்ளவனாக, தொடு உணர்ச்சி அதிகம் உள்ளவனாக மாறுவாய். உன்னால் அதிகம் கேட்க முடியும், அதிகமாக பார்க்க முடியும். எல்லாமும் அதிக ஆழமானதாக மாறும். தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாறு, திடீரென உனது புலன்கள் ஜொலிப்பதை நீ உணர்வாய். வாழ்வு உன்னுள் துடிப்பதை, உன் மூலம் பாய்ந்தோட தயாராக இருப்பதை, உன் மூலம் பொங்கி வருவதை நீ உணர்வாய்.
தியான யுக்தி – 2
உணர்வோடு சுவையறிதல்
நாம் சுயஉணர்வின்றி, இயந்திரதனமாக, அவசரமாக சாப்பிடுகிறோம். சுவையை அறியாமல் ருசித்து உணராமல் சாப்பிடும்போது நாம் உணவை அடைக்கிறோம், அவ்வளவுதான். மிகவும் மெதுவாக சாப்பிடு, சுவையை ருசி. பொருட்களை விழுங்காதே. அவசரமின்றி ருசித்து சுவையாகவே மாறி விடு. இனிப்பை உணரும்போது இனிப்பாகவே மாறு. அப்போது அதை உனது உடல் முழுவதும் உணர முடியும். வாயில் மட்டுமின்றி. நாக்கில் மட்டுமின்றி அலை போல உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும்.
நீ எதை சாப்பிட்டாலும் அந்த சுவையை உணரு, அந்த சுவையாகவே மாறு. சுவையறியாவிட்டால் உனது புலன்கள் இறந்தவையாகி விடும். அவை மேலும் மேலும் உணர்விழந்துவிடும். உணர்விழந்து இருக்கும்போது உனது உடலை உன்னால் உணர முடியாது. உனது உணர்ச்சிகளை உன்னால் உணர முடியாது. அப்போது நீ உனது தலையில் மட்டும்தான் இருப்பாய்.
தண்ணீர் குடிக்கும்போது அதன் குளிர்ச்சியை உணரு. கண்களை மூடி, மெதுவாக உணர்ந்து குடி. குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்து அந்த குளிர்ச்சியாகவே நீ மாறு. ஏனெனில் தண்ணீரில் இருந்த அந்த குளிர்ச்சி இப்போது உனது உடலுக்கு மாற்றப்பட்டு விட்டது. அது உனது உடலின் பாகமாகி விட்டது. தண்ணீரில் இருந்த குளிர்ச்சி இப்போது உன் வாயில், உனது நாக்கில் உள்ளது. அது உனது உடல் முழுவதும் நிகழ அனுமதி. அதன் குணம் உடல் பூராவும் பரவ அனுமதித்தால் உனது உடலில் குளிர்ச்சியை நீ உணரலாம். இந்த முறையில் உனது புலனுணர்வு வளரும், நீ மேலும் மேலும் உயிர்துடிப்போடும், நிறைவாகவும் மாறுவாய்.
தியான யுக்தி 3
மனதை உபயோகிக்காமல் பார்த்தல்
நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.
அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?
மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.
முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.
எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.