தளர்வு மற்றும் விடுவிப்பதன் மூலமாக பதட்டத்தை வெளியே விடுவது. இதுவே தியானத்திற்கு முதல்படி.

இதற்கான தியான யுக்தி – 1

கவசத்தை களையுங்கள்.

உங்களை சுற்றி ஒரு கவசத்தை அணிந்து கொண்டிருக்கீறீர்கள். அது ஒரு கவசம்தான்- அது உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள்தான் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கீறீர்கள். அதைபற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் அதை உதறிவிடலாம். கவசம் இறந்து போனது, நீங்கள் அதை சுமந்து கொண்டிருக்காவிட்டால்,
அது மறைந்துவிடும். நீங்கள் அதை சுமப்பது மட்டுமில்லாமல், அதற்கு போஷாக்கூட்டி,
அதற்கு தொடர்ந்து சோறுபோட்டு கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு குழந்தையும் திரவமாகவே இருக்கிறது. அதற்குள்
உறைந்து கிடக்கும் பகுதி எதுவுமே இல்லை. முழுஉடலுமே ஒன்றிணைந்த ஒரேகூறுதான். தலை முக்கியமானதுமில்லை. கால் முக்கியமற்றதுமில்லை. உண்மையில், பிரிவுகள் என்பதே கிடையாது. அங்கே பகுதிகளே இல்லை. ஆனால் வரவர பகுதிகள் உருவாகின்றன. பிறகு தலை எஜமானர், முதலாளி ஆகிறது. முழுஉடலுமே பாகங்களாக பிரிக்கப்படுகிறது.
சில பாகங்களை சமூகம் ஏற்றுக் கொள்கிறது.சிலபாகங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
சிலபாகங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவை அவற்றை கிட்டதட்ட முழுமையாக
அழித்துவிட வேண்டும். என்று இருப்பதுதான் முழுபிரச்னைக்குமே காரணம்.

அதனால் உடலில் நீ எங்கே கட்டுபாடுகளை உணருகிறாய் என்பதை கவனிக்க வேண்டும்.

மூன்று விஷயங்களை செய்யுங்கள்.

முதல்விஷயம். நீங்கள் நடக்கும்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது நீங்கள் எதையுமே செய்யாமலிருக்கும்போது, ஆழமாக மூச்சுவிடுங்கள். மூச்சை விடுவதில்தான் அதிககவனம் இருக்கவேண்டும், உள்ளே இழுப்பதிலல்ல. அதனால் ஆழமாக மூச்சுவிடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே தூக்கி எறியுங்கள். வாய் வழியாக மூச்சுவிடுங்கள். ஆனால் அதற்கு நேரம் பிடிக்கும் அதனால் மெதுவாக செய்யுங்கள்.
நேரம் அதிகம் எடுப்பது நல்லது, காரணம் அப்போதுதான் அது ஆழமாக இருக்கும்.  உடலில் இருக்கும் காற்று முழுமையாக தூக்கிஎறியப் பட்டபிறகு உடல் மூச்சை உள்ளிழுக்கும்;
நீங்கள் உள்ளிழுப்பதில்லை. மூச்சு வெளியேற்றம் மெதுவாகவும், உள்ளிழப்பது வேகமாகவும்
இருக்கவேண்டும். அது மார்பிலிருக்கும் கவசத்தை மாற்றும்.

இரண்டாவது. நீங்கள் சிறிது ஓடத் தொடங்கினால், அது பயனுள்ளதாக இருக்கும். பல மைல்கள் அல்ல. ஒரு மைல்போதும். காலிலிருந்து ஒரு சுமை மறைவதாக கற்பனை செய்துபாருங்கள். அங்கிருந்து தானாகவே அது விழுந்து விடுவதைப்போல. உங்கள் இயல்புகள் கட்டுபடுத்த படுகிறபோது, கால்கள் ஒரு கவசத்தை சுமக்கிறது. இதைச்செய் அதைச்செய்யாதே, இப்படிஇரு அப்படிஇருக்காதே; இங்கே போ அங்கே போகாதே என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் ஓடத் துவங்குங்கள், ஓடும்போது, மூச்சுவிடுவதில் அதிககவனம் செலுத்துங்கள். உங்கள் கால்களின் இயல்பான ஓட்டத்தை நீங்கள் திரும்ப பெறும்போது உங்களுக்குள் பேராற்றலான ஒரு பலம் ஓடும்.

மூன்றாவது விஷயம்:
இரவில் நீங்கள் தூங்கப் போகும்போது, உங்கள் ஆடைகள் முழுவதையும் எடுத்துவிடுங்கள்.
அப்படி களையும்போது, நீங்கள் உங்கள் உடைகளை மட்டும் களைந்து கொள்ளவில்லை,
உங்கள் கவசத்தையும் கழட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நிஜமாகவே செய்யுங்கள். அதை எடுத்துவிட்டு, ஆழமாக நன்றாக மூச்சுவிடுங்கள். கவசமற்று, உடலில் எதுவுமேயில்லாமல் எந்த கட்டுபாடுமில்லாதது போல தூங்கச்
செல்லுங்கள்.